Showing posts with label கன்னியாகுமரி. Show all posts
Showing posts with label கன்னியாகுமரி. Show all posts

Wednesday, June 22, 2016

நாகர்கோவில்_ஜாக்கி ஜட்டி கிடைக்குமிடம்?

சமீபத்தில் லங்கோடு போடுவதிலும், வாங்குவதில் உள்ள பிரச்சனைகளை பற்றித் தான் தற்போதைய இலக்கிய உலகம் பர பரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் நமது மாவட்ட இலக்கிய பிதாமகர் வெளியூர் பயணத்திற்கு தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்ற போது எங்கும், எதிலும் நீக்க மற போலிகள் நிறைந்திருப்பது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையை தொடர்ந்து முகநூலிலும், வலைத்தளத்திலும் யாரெல்லாம் பிராண்டட் ஜட்டி போடுகிறார்கள்/லோக்கல் உபயோகிக்கிறார்கள் என்ற முக்கியமான ஆய்வுகளில் நம்மவர்கள் திளைக்கிறார்கள். அந்தக் கட்டுரையில் குறிப்பாக தனக்கு ஜாக்கி ஜட்டி கிடைக்கவில்லையென்றும், நாகர்கோவிலில் மிகப் பெரிய ரெடிமேட் ஷாப் "டவர் ரெடிமேட்" கடையில் கூட அந்த பிராண்ட் ஜட்டி கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் எழுதியிருந்தார். நாகர்கோவிலில் எங்குத் தேடியும் டியூரோ செல் பேட்டரி கிடைக்கவில்லை என்ற ஒரு புகார் வேறு அந்தக் கட்டுரையில் இருக்கிறது.

ஜெயமோகன் அவர்கள் தனக்கு நேர்ந்த அனுபவத்தை எழுதியிருக்கிறார் என்று எடுத்துக்கொண்டாலும், அந்தக் கட்டுரைக்கும் வரும் வாசகர் கடிதத்தை பார்க்கும் போது இன்னும் கொடுமையாக இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள், ஜட்டியே போடுவது இல்லை போலவும், இப்போதும் பழைய வேட்டியைக் கிழித்து கோவணமாகச் சுற்றி கொண்டிருப்பவர்கள் போலவும், ஒரிஜினல் பிராண்டுக்கும், டூப்பிளிகேட் பிராண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குபவர்கள் போலவும் ஒரு தோற்றம் அந்தக் கட்டுரையில் தென்படுகிறது. அதிலும் இங்குள்ள எந்தக் கடையிலும் ஒரிஜினல் பொருட்கள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு ஒன்றையும் முன் வைக்கிறார்.

எங்கள் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளுக்குப் பல வேலைகளுக்குச் சென்றவர்கள். இப்போதும் பெரும்பான்மையான குடும்பத்தில் ஒருவராவது வளைகுடா நாடுகளில் வேலையில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் பெரும்பாலும் பிராண்டட் எலக்ட்ரானிக் பொருட்களை தான் வாங்கி வைத்திருப்பார்கள். சொந்தக்காரனிடம் கூட வெளிநாட்டிலிருந்து உனக்காகக் கொண்டு வந்தேன் என்று ஏதாவது ஒரு பொருளை நீட்டினால், சோனியா, மேட் இன் ஜப்பானா என்று கேட்டு தான் வாங்கிக் கொள்கிறார்கள், அப்படியான ஊரில் நமது ஜெயமோகன் அவர்கள் சொல்வது போல் டூப்பிளிகேட் பொருட்களை மட்டுமே நம்பி ஒருவர் கடையை திறந்தால், அவர் சீக்கிரம் அந்தக் கடையை மூடி விட்டு போக வேண்டியது தான். அதற்காக எனது மாவட்டத்தில் போலி பிராண்டட் பொருட்களே இல்லை என்று சொல்ல மாட்டேன். எத்தனை டூப்பிளிகேட் பிராண்டட் இருக்கிறதே, அதே அளவு ஒரிஜினல் பிராண்டும் இருக்கிறது என்பது தான் நான் கூற வருவது.

ஜாக்கி ஜட்டி பற்றி சொல்லவே வேண்டாம், இப்போது கல்லூரியில் படிக்கும் அனைத்து இளைய பட்டாளங்களும் அந்த பிராண்டட் ஜட்டியின் ரோப் வெளியில் தெரியும் அளவிற்கு தான் ஜீன்ஸ் பேண்ட் வாங்கி அணிகிறார்கள். அதனால் இலக்கியம் படைக்கும் பெருசுகள் எல்லாம் ஜாக்கி ஜட்டியை வாங்கி தன்னுடைய வேட்டி, மற்றும் பேண்டுக்கும் மறைவாகப் போட்டுவிட்டு நாங்களும் பிராண்டட் ஜட்டி தான் போடுகிறோம் என்று இளசுகளின் முன்னால் மார் தட்டிட முடியாது, வேண்டுமானால் ஒன்று பண்ணலாம், சூப்பர் மேன் போல் ஜட்டியை வாங்கி பேண்டுக்கு மேல் போட்டு கொள்ளலாம்.

நமது எழுத்தாளர், நாகர்கோவில் முழுவதும் ஒரு ஜாக்கி ஜட்டி வாங்க அலைந்தேன், எங்கும் கிடைக்கவில்லை என்று எழுதியிருப்பது தான் என்னை இந்தக் கட்டுரையை எழுத வைத்தது. கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாவிற்கு பெயர் பெற்றது, மிகப் பெரிய எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களின் கட்டுரையை படித்த அவருடைய வாசகர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தால் ஒரு பிராண்டட் லங்கோடு கூட வாங்க முடியாது போல! என்ற முன் முடிவுக்கு வரக்கூடும். அதற்குத் தினமும் அவரது இணையதளத்தில் ஜாக்கி ஜட்டி கட்டுரைக்கு வந்து கொண்டிருக்கும் வாசகர் கடிதங்களே சாட்சி!

அவர் வீடு இருக்கும் பார்வதிபுரத்திலிருந்து அப்படியே செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி நடந்தால், பால் பண்ணை பஸ் ஸ்டாப் வரும், அந்த சிக்கனலில் இருக்கும் ஹோண்டா டூவீலர் ஷோரூம் பக்கத்தில் ஒரு மெகா மார்ட் இருக்கிறது, அங்குப் போனால் வித விதமான ஜாக்கி ஜட்டிகள் வாங்கலாம், இந்த ஜட்டியில் என்ன வித விதமான என்று கேட்கிறீர்களா? இருக்கிறது, இந்தமுறை நான் வாங்கிய கிளாசிக் டைப் ஜாக்கி ஜட்டி, காலேஜ் பசங்க போடுற ஜீன்ஸ் பேண்டு போல் பிருஷ்டத்திற்கு கீழாக நிற்கிறது, எவ்வளவு தான் முயற்சித்தாலும் பாதி பிருஷ்டத்திற்கு மேல் ஏற மாட்டேன் என்கிறது, உன்னோட பிருஷ்டம் பெருசு ஆனதற்குக் கடைக்காரன் என்ன செய்வான் என்று நீங்கள் கேட்பது புரிகிறது, ஆனால் என்னுடைய பிருஷ்டம் பெரிதானதால் வந்த பிரச்சனை இல்லை, அந்த வகையான மாடலின் வடிவமைப்பே அப்படி தான் இருக்கிறது, என்னென்ன வகை இருக்கிறது என்று தெரிய வேண்டுமானால் குகூள் செய்து பாருங்கள் ஒரு பெரிய லிஸ்டே வருகிறது. அதனால் ஜாக்கி ஜட்டி வாங்குபவர்கள் இதையும் கவனத்தில் வைத்து வாங்குங்கள். இந்தமுறை நான் வாங்கிய நான்கு செட் ஜாக்கி ஜட்டியை போடாமல் ஓரம் கட்டி வைத்திருக்கிறேன். ஏன்டா! ஒரு எதிர்வினை கட்டுரையில் கூட அட்வைஸ், மெசேஜ் என்ற மொக்கைகள் இல்லாமல் எழுதத் தெரியவில்லை. நீயெல்லாம் அதுக்கு சரி பட்டு வர மாட்டே! என்று சொல்லும் உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது..ஹி.. ஹி..

அப்படியே நமது எழுத்தாளர் ஜாக்கி ஜட்டி வாங்கிக் கொண்டு, மீண்டும் செட்டிக்குளம் செல்லும் சாலையை நோக்கி முன்நோக்கி நடந்து அடுத்த பஸ் ஸ்டாப் ஆன மத்தியாஸ் வார்டு வந்தால் அங்கு டெரிக் சூப்பர் மார்கெட் இருக்கிறது. இவருக்கு டூயூரோ செல் பேட்டரி என்ன, பிலிப்ஸ் மற்றும் சானியோ பிராண்ட் பேட்டரி வகைகள் வரைக் கிடைக்கும். நமது எழுத்தாளர் இன்னும் திருவிதாங்கோடு பக்கம் இருக்கும் கடைகளுக்கு போனது இல்லை என்று நினைக்கிறேன், வளைகுடா நாடுகளில் கிடைக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல் சாக்லெட் வரை அனைத்துப் பொருட்களும் அங்குக் கிடைக்கிறது, அப்படி அந்தக் கடைகளில் இல்லையென்றால், என்ன பொருள் வேண்டும் என்பதை நாம் அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தால் ஒரு வாரக் காலத்தில் நமக்கு வாங்கி வந்து தருகிறார்கள்.

இந்த பிராண்டட் பொருட்கள், நான் சொல்லிய இரண்டு இடங்கள் தவிர வேறு எங்கும் கிடைக்காதா என்றால், இல்லை வேறு பல இடங்களில் இருக்கும் கடைகள் பற்றியும் என்னால் ஒரு பெரிய லிஸ்ட் கொடுக்க முடியும், ஆனால் நமது எழுத்தாளரின் வசதிக்காக அவர் வசிக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிடைக்கும் கடைகளை மட்டும் எழுதியிருக்கிறேன்.



ஜட்டி பற்றிய கதை வந்ததால், எனது நண்பருடைய அனுபவத்தையும் சேர்த்து எழுதுகிறேன், இந்த அனுபவம் வட இந்தியா போன போது எனக்கும் ஒருமுறை நடந்து இருக்கிறது. சவுதியில் நண்பர் ஒருவரை ஒரு புது ப்ரொஜெக்ட் விசயமாக, ஒரு நாள் மீட்டிங் போய் வரலாம் என்று மேனேஜர் அழைத்துக் கொண்டு போயிருந்தார். அந்த ப்ரொஜெக்ட் பண்ண வேண்டிய சைட் கொஞ்சம் ரிமோட் ஏரியா, பெரிதாக டெவலப் ஆகாத சிட்டி. நண்பரும் ஒரு நாள் தானே, என்று அதிகமான துணிகள் எடுத்துப் போகவில்லை, இரண்டு செட் துணிகள் மட்டும் கைப் பையில் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார். ப்ரொஜெக்ட் மீட்டிங் முடிந்தவுடன், உங்கள் நிறுவனத்திலிருந்து ஒரு ஆள் இன்றிலிருந்தே வேலையைத் தொடங்க வேண்டும், உங்கள் ப்ரொஜெக்டுக்கு தேவையான அனைத்தும் டாக்குமெண்டுகளும் வரத் துவங்கி விட்டது என்று கிளைண்ட் வற்புறுத்தியிருக்கிறான். அப்புறம் என்ன, ப்ரொஜெக்டில் கிளைன்ட் சொன்னால் தட்ட முடியுமா? ஒரு வாரம் "நீ சமாளித்துக் கொள்!" என்று நண்பரை அடகு வைத்துவிட்டு மேனேஜர் வந்து விட்டார்.

ஒரு வாரம் என்று நினைத்து, ஒரு மாதம் அந்த நண்பர் ப்ரொஜெக்டில் தனியாக இருக்க வேண்டி வந்தது, அதன் பிறகு தான் என்னுடன் சேர்ந்து மூன்று பேர் வந்தோம். ஒரு மாதம் நண்பர் தங்கியிருந்த ஹோட்டலில் தான் நாங்களும் தங்க வைக்கப் பட்டோம், நண்பரின் ரூமில் ஒரு மூலையில் கசங்கிய ஜட்டி குவியாக கிடந்தது, என்ன என்று விசாரித்த போது, ஹோட்டலில் துணி துவைப்பதற்கு வாய்ப்பு இல்லையென்றும், வெளியில் லாண்டரியில் தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கும் ஜட்டி குவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், இங்கிருக்கும் லாண்டரி கடையில் ஒரு ஜட்டி துவைப்பதற்கு கூட இரண்டு ரியால் கேட்கிறான், இரண்டு முறைத் துவைக்க கொடுத்தால் நான்கு ரியால் ஆகிறது, புதிதாகக் கடையில் விற்கும் பத்து ஜட்டிகள் இருக்கும் பாக்கெட் முப்பது ரியால் தான் சொல்கிறான், அதனால் நான் இரண்டு பாக்கெட் வாங்கி உபயோகித்து வருகிறேன் என்று சொன்னார்.


.


.

Monday, May 23, 2016

தேர்தலில் வாக்களிக்காதவர்கள் அயோக்கியர்களா?

தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிந்துவிட்டது. இந்தத் தேர்தல் வாக்கிற்கு அதிகம் பணம் கொடுத்தவர்கள் அரியணையை ஏறுபவர்களாகவும், குறைவாக பணம் கொடுத்தவர்கள் மண்டப படிகளில் இருப்பவர்களாகவும், பணம் கொடுக்காதவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது. தேர்தலில் வாக்களித்தவர்கள் அனைவரும் ஜனநாயக பரிசுத்தவான்கள் போலவும், வாக்களிக்காதவர்கள் அனைவரும் ஜனநாயக நாட்டில் பாவிகள் என்பது போலவும் ஊடகங்கள் கட்டியெழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக, வாக்கு சதவீதம் குறைவாகப் பதிவான கன்னியாகுமரி மற்றும் சென்னையை குறிவைத்து, படித்தவர்களுக்கு ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து என்று அமிலத்தை வீசுகிறார்கள். எது நம்முடைய ஜனநாயகத்தில் கேலிக்கூத்து என்பதைக் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.



தேர்தல் பரப்புரைகள் தொடங்கிய நாள் முதல், தினந்தோறும் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி ஒரு சிறு விசாரணையாவது நடத்தப்பட்டதா? எவருடைய பணம்? எந்தக் கட்சி வேட்பாளரால் கொண்டுவரப்பட்டது? அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்பது பற்றி முழுமையான தகவல்களை இந்த மக்களுக்குக் கொண்டு சென்றனவா? இன்றைக்குத் தேர்தல் ஜனநாயகம் பற்றி பேசும் ஊடகங்கள். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பணம் இந்தமுறை தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது.

யாரால், எந்தத் தொகுதிக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற புள்ளிவிவரம் உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கே தெரிகிறது என்றால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் கொண்டு நடத்தப்படும் தேர்தல் ஆணையத்திற்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். பணம் பட்டுவாடா, லாட்ஜில் மூட்டை மூட்டையாய் பணம், கண்டெய்னரில் பிடிபட்ட பணம், லாரியில் கொண்டுசென்ற பணம் என்று தேர்தலே அம்மணமாய் கிழிந்து தொங்கும் போது, இரண்டு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து! என்று அறிவித்து ஒட்டு போடும் வேலையைத் தேர்தல் ஆணையம் செய்யும் போது வராத கோபம் வாக்களிக்காதவன் மீது வருவது வியப்பே!



ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்று வந்துவிட்டது, எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தமுறை ஆறுமுனை போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் நீட்டி முழங்க வேண்டுமானால் இந்தக் கட்சிகள் உதவும், ஆனால் மக்களின் நலன் சார்ந்து உண்மையில் முழுமையான மாற்றம் கொண்டுவர ஏதேனும் கட்சிகள் வந்ததா? என்றால் ஏமாற்றமே!, நான்கு கட்சிகள் சேர்ந்து ஒரு அணியாகத் திரண்டு முழுமையாக ஒரு வருடங்கள் முழுமையடையவில்லை, இந்த நால்வரும் முந்தைய தேர்தல்களில் இரண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தவர்கள். அதனுடன் ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பேரம் பேசிய விஜயகாந்த் கட்சி மற்றும் பெரிய கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமாக(வாசன்) இவர்கள் தான் மூன்றாவது அணி. மதவாதம் பேசும் தேசிய கட்சி, சாதி வெறியை வளர்க்கும் மாற்றம் முன்னேற்றம் கட்சி மற்றும் இனவாதத்தைத் தூண்டும் தமிழர் கட்சி இவர்கள் தான் உங்களுக்குத் தேர்தலில் மாற்றத்தை முன்வைத்தவர்கள். இருக்கிற கொள்ளியில் நல்ல கொள்ளியை எடுத்து தலையில் வைத்துக்கொள் என்பது போல் தான் இந்த மாற்றுக் கட்சிகள், அப்படி வைக்காதவனைக் காறி உமிழ்வது அபத்தத்தின் உச்சம்.

இவ்வளவு வக்கணையாய் பேசுகிறவன் வந்து நோட்டாவிற்கு ஒட்டு போட வேண்டியது தானே என்று நீங்கள் கேட்டால் அதைவிட நகைச்சுவை எதுவும் இல்லை. இந்த நோட்டாவிற்கான முழுமையான அதிகாரம் என்ன என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையம் 100 சதவீத ஓட்டுப் போட சொல்லி மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து விளம்பரம் செய்கிறது, ஆனால் தகுதியான வேட்பாளரை மக்கள் முன் நிறுத்துவதற்கு எந்தவித சட்டத்தையும் கடைப்பிடிப்பது இல்லை.

எதற்காக நான் ஒட்டு அளிக்கிறேன், என்னுடைய சார்பாக என்னுடைய தேவைகளையும், கருத்துக்களைச் சட்டசபையில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க நினைத்து நான் ஒட்டு அளிக்கிறேன். அவ்வாறு நான் ஒட்டு போடும் வேட்பாளர் தேர்தலில் தோற்றால் என்னுடைய வாக்கு சீட்டிற்க்கான அங்கீகாரம் எங்கே? என்னுடைய குரலை சட்டசபையில் பேசுபவர் யார்? தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு அளித்த மக்களின் குரல்கள் வெற்றி பெற்ற வேட்பாளரின் குரலால் நசுக்கப்படும், வெற்றி பெற்றவர் பெரும்பான்மை பலம் பெற்றவர்களின் குரல் என்றால், சிறுபான்மை பலம் பெற்ற ஒடுக்கப்பட்டோரின் குரல் மவுனிக்க வேண்டியது தானா? இது தான் ஜனநாயகமா? இதற்குத் தான் நான் வாக்களிக்க வேண்டுமா?

உதாரணமாக இந்தத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவுகிறார். வெற்றி பெற்றவருக்கு இணையாகச் சதவீதத்தில் இவரும் வாக்குகள் வாங்குகிறார், இவருக்கு ஓட்டுப் போட்ட மக்களின் குரல்கள் சட்டசபையில் ஒலிக்காது, அதற்குக் காரணம் அவர் வெற்றி பெறவில்லை. இதில் இருக்கும் சிக்கல் ஜனநாயக மாண்புக்கு உட்பட்டது தானா?

என்னுடைய வாக்குக்கான மதிப்பு, நான் வாக்களிக்கும் அந்த வேட்பாளர் வெற்றி பெறவில்லை என்றால் குப்பைக்கு சமம் என்றால், நான் எதற்காக வாக்களிக்க வேண்டும்? இப்படி என்னுடைய வாக்குக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் நடைபெறும் ஒரு ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்க‌படும் மக்களாட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்.

மக்கள் அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரத்தை கொடுப்பதற்கான ஜனநாயக‌ வழியை வகுத்துக் கொடுத்துவிட்டு வாக்களிக்காதவர்களைக் குறை சொன்னால் பரவாயில்லை, ஆனால் நீ செலுத்தும் வாக்கு வெற்றி பெற்றவருக்கு என்றால் மதிப்பு, இல்லையென்றால் அது வெறும் "கைவிரல் மை" என்றால் எவருக்கும் அழியாத கைவிரல் மையைப் போட்டு அழகுப்பார்க்க‌ விரும்புவது இல்லை. வாங்கும் வாக்குகள் சதவீத அடிப்படையில் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பிரதிநித்துவம் கொடுக்கவேண்டும் என்ற முழக்கம் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


.

Wednesday, June 25, 2014

எங்கள் ஊர் ஓணப்பந்தாட்டம்_யாருக்குத் தெரியும்?

நான் படித்துக்கொண்டிருக்கும் போது எங்கள் ஊரில் உள்ள இளைஞர்களால் மிகவும் ஆக்ரோசமாக விளையாடிய இரண்டு விளையாட்டுகளில் ஒன்று கபடி இன்னொன்று ஓணப்பந்தாட்டம். இந்த இரண்டு விளையாட்டுகளும் மிகவும் வெறித்தனமாக விளையாடப்படும். இவைகளுக்குத் தீனிப் போடும் வகையில் ஊரில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும் இந்த இரண்டு விளையாட்டுப் போட்டிகளும் பக்கத்து ஊர்களில் இருந்து அணிகள் வரவழைக்கப்பட்டு அதிகமான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு நடத்தப்படும். சும்மா ஊருக்குள்ள இருக்கிறவன் இரண்டு அணிப்பிரித்து விளையாடினாலே பந்தயம் அனல் பறக்கும். இதில் வெளியூரில் இருந்து அணிகள் வந்து விளையாடினால் சொல்லவே வேண்டாம். ஊர்களில் பண்டிகையின் போது நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், இந்த இரண்டு விளையாட்டுகள் மட்டும் தனியாகக் கவனம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில், எல்லா விளையாட்டுப் போட்டிகளும் முடிந்தபிறகு இறுதியில் தான் இந்தக் கபடியையும் ஓணப்பந்தாட்டத்தையும் ந‌டத்துவார்கள்.

கபடி விளையாட்டின் சுவாரஸ்யத்தைப் பற்றி நான் ஒன்றும் பெரிதாக விளக்க வேண்டியதில்லை. அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த ஓணப்பந்தாட்டம் என்ற பெயரே பலருக்குப் புதிதாக இருக்கலாம். எனது மாவட்டத்தில் உள்ள சில ஊர்களைத் தவிர வேறு எங்கும் நான் இந்த விளையாட்டை, விளையாடியதாகக் கேள்விப்பட்டது இல்லை. ஓணம் + பந்தாட்டம் என்று பிரித்து வைத்துப் பார்த்தால் தமிழருக்கான விளையாட்டாகத் தெரியவில்லை, கேரளாவின் விளையாட்டாகத் தெரிகிறது. ஆனால் நான் இணையத்தில் இந்த விளையாட்டில் உபயோகப்படுத்தும் சில வார்த்தைகளை வைத்துத் தேடியப் போது கேரளாவில் ஓணப் பண்டிகையின் போது விளையாடப்படும் ஒரு விளையாட்டுடன் சில விதிமுறைகளும் ஒத்துப் போகிறது. அந்த விளையாட்டின் பெயர் தலைப்பந்துகழி. கேரளாவில் கிராமங்களில் விளையாடும் நடன் பந்துகழி என்ற‌ இன்னொரு விளையாட்டும் இந்த ஓணப்பந்தாட்டத்துடன் ஒத்து போகிறது. அதன் யூ‍_டியூப் வீடியோவை இணைத்துள்ளேன்.



கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் சேர்ந்திருந்ததாலோ என்னவோ, அவர்களின் வழக்குச் சொற்கள், விளையாட்டு மற்றும் கலாச்சாரம் சிலவற்றை இங்குப் பார்க்கமுடியும். மேலும் எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள் பெரும்பாலனவர்கள் கட்டிடவேலையில் சிறப்பாகச் செய்யும் திறன் பெற்றவர்கள். இவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வேலைச் செய்வதற்கு முன்பு கேரளாவில் தான் வேலைச் செய்து வந்தார்கள். இப்போதும் எங்கள் ஊரிலிருந்து பலர் கேரளாவில் கட்டிடவேலைகளைக் காண்டிராக்ட் எடுத்துச் செய்து வருகிறார்கள். இவ்வாறு கேரளாவில் காண்டிராக்ட் எடுத்து வேலைச் செய்பவர்கள் பெரும்பாலும் எங்கள் ஊர்களில் இருந்து தான் ஆட்களைக் கொண்டு சென்று வேலையை முடித்துக் கொடுப்பார்கள். கட்டிடவேலைச் செய்பவர்களில் மகன்கள் பள்ளியில் கிடைக்கும் இரண்டு மாத கோடைவிடுமுறையில் அப்பாவுடன் கேரளாவிற்குச் சென்று கையாள் வேலைச் செய்து அடுத்த வருடத்திற்குத் தேவையான புத்தகங்கள் வாங்குமளவிற்குச் சம்பாதித்துவிடுவார்கள். பல இளைஞர்களின் பால்யகாலம் கேரளாவில் தான் கழிந்திருக்கிறது. அவர்கள் தான் இந்த ஓணப்பந்தாட்டத்தை எங்கள் ஊருக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. விளையாட்டைப் பற்றிய வரலாற்று ஊகத் தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன். இனி இந்த‌ விளையாட்டுமுறை பற்றிச் சிலவற்றை எழுதுகிறேன்.

இந்த விளையாட்டு இரண்டு அணிகளாகப் பிரித்து விளையாட வேண்டும். ஓர் அணிக்கு ஆறு முதல் ஏழு பேர் இருப்பார்கள். முதல் அணியானது பந்தை அடித்தாடும் போது எதிர் அணியானது தடுத்தாட வேண்டும். இந்த விளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் பந்து மெல்லிய‌ காட்டன் துணியால் வலுவாகச் சுற்றப்பட்டு வெளியில் நூலால் பின்னப்படும். கைக்கு அடக்கமான அளவில் இருக்கும். இந்தப் பந்தை எவர் உருவாக்கினாலும் அவரது வீட்டில் உள்ள காட்டன் லுங்கி ஒன்று கண்டிப்பாகக் காணாமல் போகும். இந்த விளையாட்டுக்கு என்று அளவுகளை வரையறைச் செய்து களம் அமைப்பது இல்லை. இருக்கும் இடத்தில் நீள, அகலமாகக் கோடுகள் போட்டு இரண்டாகப் பிரிக்கப்படும். ஒரு பக்கம் அடித்தாடும் அணியும், மறுபக்கம் தடுத்தாடும் அணியும் நிற்கும். நீள‌ வாக்கில் இரு புறங்களிலும் ஒன்றரை அடி விட்டு பவுள் கோடுகள் போடப்பட்டிருக்கும்.

எந்த அணி அடித்தாட வேண்டும்? தடுத்தாட வேண்டும் என்பதை முதலில் டாஷ் போட்டுதான் முடிவுச் செய்யப்ப‌டும். அடித்தாடும் அணியில் உள்ள முதல் வீரர் களத்தின் ஒரு முனையில் நின்று, பந்தைத் தனது கையால் ஓங்கி அடித்து மறுபக்கம் இருக்கும் தடுத்தாடும் அணியின் பக்கம் அனுப்புவார். தடுத்தாடும் அணியில் உள்ள வீரர்கள் அதைக் காலால் மிதித்து எதிர் அணியின் பக்கம் திருப்புவார்கள். எவர் ஒருவர் பவுள் கோட்டிற்கு வெளியில் அடிக்கிறாரோ அல்லது எதிர் அணியால் அடிக்கும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் விட்டாலோ அவுட் என்று அறிவிக்கப்படும். அடித்தாடும் அணியில் உள்ள வீரர் பந்தை அவுட் பண்ணினால் தடுத்தாடும் அணி இப்போது அடித்தாடும் அணியாக இருந்து பந்தை கையால் அடித்து எதிர் அணிக்கு செலுத்தும். அடித்தாடும் அணியால் மூன்று முறை நேர்த்தியாக அடித்து எதிர் அணியின் தடுப்பாட்டத்தைச் ச‌மாளித்து வெற்றிகரமாக முடித்தால் அது ஒரு கழி என்று அழைக்கப்படும். மொத்தமாக ஏழு கழிகள் உண்டு.

1) ஒற்றை
2) இரட்டை
3) முறுக்கி
4) தாளம்
5) காவடி
6) நிலை (இது மட்டும் காலால் உதைத்து அடிக்கப்படும்)
7) பட்டம்

எந்த அணி முதலில் இந்த ஏழு கழிகளையும் முடிக்கிறதோ, அந்த அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டில் உள்ள சில சுவரஸ்யங்கள்: 

#அடித்தாடும் அணியால் அடிக்கப்பட்ட பந்தைத் தடுத்தாடும் அணி வீரர்கள் காலால் எதிர் கொள்ள மூன்று வகையான உத்திகளைக் கையாளுவார்கள். 

மடக்கை: காலை மடக்கிப் பந்தை உதைப்பது. இந்த முறையில் பந்தை எதிர் கொண்டால் கண்டிப்பாக எதிர் அணியால் அந்தப் பந்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது மிகக் கடினமாகக் காரியம்.(வாலிபாலில் கட்‍ ஷாட் அடிப்பது போல) 

குத்து: எதிர்வரும் பத்தை முன்னங்காலால் குத்து/கோரி விடுவது(இவ்வாறுச் செய்வதால் பந்து மேலே எழுப்பும். எதிர் அணியினர் அதைக் கேட்ச் பண்ணாமல் பார்த்துக் கொள்ளவேண்டும், கேட்ச் பண்ணிவிட்டால் அவுட் என்று அறிவிக்கப்படும்) 

சேப்பை: காலை ஒருகளித்துத் தட்டிவிடுவது(கட்டுக்குள் அடங்காத தாக்குதலைச் ச‌மாளிக்க இந்த உத்தியைப் பயன்படுத்துவார்கள்)

#காலால் உதைக்கும் போதோ அல்லது கையால் அடிக்கும் போதோ பந்து மேல் எழும்பி எதிர் அணியினரால் பிடிக்கப்பட்டால் அவுட் என்று எடுத்துக்கொள்ளப்படும். 

#இவ்வாறு எதிர் அணியில் உள்ள வீரரால் பிடிக்கப்படும் போது மற்ற வீரர்களில் கைகள் முட்டிக்குக் கீழ் தான் இருக்க வேண்டும். வேறு எந்த வீரரும் கையை உயர்த்திப் பிடிப்பதற்கு முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு கைகளை உயர்த்தினால் பிடித்த பந்து செல்லுபடியாகாமல் அடுத்த அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும். 

#அதேபோல் காலால் ஒருவர் பந்தை உதைக்கும் போது அந்த அணியில் உள்ள வேறு எவரும் கால்களைக் கொண்டு சென்று முயற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் எதிர் அணிக்குச் சாதகமாக அறிவிக்கப்படும்.

இந்த விளையாட்டு மிகவும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியது தான். நான் இங்கு எழுதியிருப்பதைப் படித்துக் குழப்பமடைந்தால், அந்தக் குழப்பம் என்னுடைய எழுத்தினால் விளைந்தக் குழப்பமே அல்லாமல் விளையாட்டின் குழப்பம் அல்ல. கண்டிப்பாக உடல்வலிமையும், உத்திகளைக் கையாளும் முறையும் இதற்குத் தேவை. துணியால் பந்து இறுகச் சுற்றப்படுவதால், அதை அடிக்கும் போது காலும் கையும் வலி எடுக்கும். தரையில் கால் மோதி நகங்கள் சிதைவதும் உண்டு.

இந்த விளையாட்டை நான் ஊரில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது மிகவும் விரும்பி விளையாடுவேன். எங்களுக்கு என்று ஒரு மைதானம் இருந்தது. கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று ஒரு டீம் எப்போதும் இருக்கும். கிரிக்கெட் போர் அடிக்கும் போது இரு அணியாகப் பிரித்து இந்த ஓணப்பந்தாட்டத்தை விளையாடுவோம். இந்த விளையாட்டை மிகவும் அனுபவித்து விளையாடுவோம். பண்டிகைகளிலும், திருவிழாக்களிலும் இந்த விளையாட்டைப் போட்டியாக நடத்துவதால் இன்னும் ஆர்வம் அதிகமாக இருந்தது. இன்றைய நிலையில் எங்கள் ஊரில் இப்படி ஒரு விளையாட்டு இருந்தது என்று பள்ளிப் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் கூடத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. எனக்கே இந்த விளையாட்டின் பல விதிமுறைகள் மறந்துவிட்டது. அப்போது என்னுடன் விளையாடிய நண்பர்களிடம் கேட்டுதான் இந்தப் பதிவை எழுதி இங்குப் பதிந்துவைக்கிறேன்.

அவனவன் வாழ்க்கையே தொலைந்துவிட்டது! என்பதற்கே கவலைப்படவில்லை, இதில் விளையாட்டுத் தொலைந்துவிட்டது என்று வந்துவிட்டான் என்று நீங்கள் புலம்புவது எனது காதுகளுக்குக் கேட்கிறது.

.

.

Monday, June 16, 2014

டீசல் விலை பத்து ரூபாய்க்கு மேல் குறைவு!! யாருக்கு?

க‌டந்தமுறை ஊருக்கு வருவதற்கு ரெயில் பயணத்தைத் தான் தேர்வு செய்திருந்தேன். ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஹைதிராபாத்திலிருந்து சென்னை எழும்பூருக்கான பயணத்தின் முன்பதிவையும், அதைத் தொடர்ந்து காலையில் உடனடியாகக் கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கும் முன்பதிவு செய்திருந்தேன். எப்படியோ முந்தின நாள் மாலை ஹைதிராபாத்திலிருந்து நான்கு மணிக்கெல்லாம் கிள‌ம்பிய நாங்கள் வெற்றிகரமாகப் பதினைந்து மணிநேரம் பயணத்தைத் தூங்கியே கழித்துச் சென்னை எழும்பூர் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து உடனடியாகக் கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸையும் பிடித்தாகிவிட்டது. மீண்டும் ஒரு பதினாங்கு மணிநேரப் பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் அவ்வளவு எளித‌ல்ல, காரணம் பகல் பயணம். தூங்கிக் கழித்துவிடலாம் என்றாலும் முடியாது. முந்தினம் செய்த‌ப் பயணக் களைப்பு வேறு உங்களைப் பாடாய்படுத்திக்கொண்டிருக்கும். காலையில் புதிதாகப் பயணத்தைத் துவங்குபவர்களுக்கு, இந்தக் குருவாயூர் ரெயில் பயணம் செய்வது சுகமாக அனுபவம் தான். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் வண்டி நிற்கும் போது, அந்த நிலையத்தில் உள்ள பிரசித்திபெற்ற உணவுப்பொருட்கள் உங்களைத் தேடி வந்துகொண்டேயிருக்கும். கையில் உங்களுக்குப் பிடித்த புத்தகத்துடனோ அல்லது வாக்மேனில் பிடித்த படல்களையோ ரசித்துக்கொண்டே கிடைக்கும் உணவுகளை வாங்கி அசைப்போட்டுக் கொண்டிருந்தால் நேரம் போவது உங்களுக்கு தெரிவதில்லை. குழுவாகப் பயணம் செய்தால், சொல்லவே வேண்டாம், உங்கள் உற்சாகம் இரண்டு மடங்காக இருக்கும்.

ஆனால் எங்களின் பயணம் முந்தின நாள் இரவே தொடங்கி விடுவதால் இன்றைய பகல் பயணத்தை ரசித்துப் பயணிக்க முடிவதில்லை . ஒவ்வொரு நிலையத்திலும் ரயில் நிற்கும்போதும், அடுத்த நிலையம் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்க்கும். மாலையில் ஆறு மணிக்கெல்லாம் பயணத்தை முடித்துவிட்டு இறங்கிவிடலாம் என்றால் கூட மன‌தை ஓரளவிற்குச் சமாளித்துவிடலாம். ஆனால் ஒன்பது மணியையும் தாண்டிப் பயணம் செய்ய வேண்டும். மாலை ஆறுமணிக்கு மேல் ரெயிலானது ஒவ்வொரு சிக்னலிலும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் நின்றுச் செல்வது இன்னும் கடுப்பை அதிகமாகக் கிளப்பும். எப்படா! வீட்டிற்குப் போவோம்! எனற எண்ணத்தில் தான் பயணிக்க வேண்டிவரும்.

ஒவ்வொரு முறையும் நானும் மனைவியும் ரயிலில் ஊருக்கு வருகிறோம் என்றால், அப்பா! ரயில் நிலையத்திற்கு வாடகை ஆட்டோவுடன் வந்துவிடுவார்கள். இந்தமுறையும் அப்பா, ரயில்வே நிலையத்தில் ஒன்பது மணிக்கெல்லாம் வந்து, எங்களுக்காகக் காத்திருந்தார்கள். நாங்கள் வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் அரை மணிநேரம் தாமதமாக ஒன்பது முப்பதுக்கு நாகர்கோவில் நிலைய‌த்திற்குள் நுழைந்தது. ரெயில் வண்டி நிலையத்தில் நின்றவுடன், எங்களை விட்டால் போதும்! என்ற மனநிலையில் தான் லக்கேஜை எடுத்துக்கொண்டு ஓடிவந்து, நானும் மனைவியும் ஆட்டோவில் ஏறிக்கொண்டோம்.

அப்பாவுடன் பேசிக்கொண்டே ரயில் நிலைய‌த்திலிருந்து வெளியே வரும் சாலையில் ஆட்டோவில் வ‌ந்தோம். ரயில் நிலையத்திலிருந்து கோட்டார் மார்கெட்டுக்கு வரும் சாலையை நானும் பல வருடங்களாகப் பார்க்கிறேன், ஒருமுறை கூடச் சரியாகச் செப்பனிடப்பட்டதில்லை. எப்போது பார்த்தாலும் பிரசவச் சாலையாகத் தான் காட்சியளிக்கும். இன்னும் போதாக் குறைக்குக் கால்நடைகளின் ஒதுக்கிடமாக அந்தச் சாலையும், அதையொட்டிய குளமும் காட்சியளிக்கும். பகலாக இருந்தால் நாய், பன்றி, ஆடு, மாடு என்று எல்லாவகையான கால்ந‌டைகளும் மக்களோடு, மக்களாக அலைவதையும் நீங்கள் பார்க்கலாம். இப்போது மணியானது பத்தை நெருங்கியிருந்ததால் சாலையின் இருமருங்கிலும் மாடுகள் மட்டும் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

ஆட்டோவானது கோட்டார் மார்கெட்டைக் கடந்து, பார்வதிபுரத்தை ரெம்பச் சீக்கிரமாகவே நெருங்கியிருந்தது. வீட்டிலிருந்து அம்மா போனில் என்னை அழைத்து எங்கு இருக்கிறாய் என்று கேட்டார்கள். நான் அம்மாவிடம் பார்வதிபுரம் வந்துவிட்டேன், இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று சொல்லி மொபைல் அழைப்பைத் துண்டித்தேன். என்ன வாய் முகூர்த்தத்தில் சொன்னேன் என்று தெரியவில்லை. பார்வதிபுரம் சிக்னல் தாண்டிச் சாலையின் இடதுபக்கம் வண்டிகள் லைன் கட்டிக் காத்து நின்றது. வலதுபக்கத்திலிருந்து மட்டும் அவ்வப்போது ஒவ்வொரு வண்டிகள் எங்களுக்கு எதிராகச் சென்று கொண்டிருந்தது. இடதுபக்கம் நிற்கும் வண்டிகள் ஒருஅடி கூட நகரவில்லை. எல்லோரும் வண்டியை ஆப் செய்துவிட்டிருந்தார்கள். வலதுபக்கம் வண்டிகள் பெரிய அளவில் வரவில்லை, ஆனாலும் எவரும் தங்கள் வண்டியை வலது பக்கமாக எடுத்துச் செல்லாமல் காத்துக்கொண்டிருந்தார்கள். டூவீலர் வண்டி ஓட்டிச் செல்பவர்கள் மட்டும் சாலையில் இருக்கும் சந்துகளில் வழியாக நுழைந்து கொண்டிருந்தார்கள்.

என்ன பிரச்சனை என்று அப்பாவிடமும், ஆட்டோ டிரைவரிடமும் கேட்டேன். அரசுப் பேருந்துகள் அனைத்திற்கும் டீசல் இப்போது தனியார் பங்குகளில் தான் போடுகிறார்கள் என்பது உனக்குத் தெரியும் தானே!. முன்னாடி ஒதுக்குபுறமாக இருந்த பங்குகளில் போட்டுகொண்டிருந்தார்கள். அந்தப் பங்குகளுக்குச் சரியாகப் பணம் கொடுக்கவில்லை என்று பிரச்சனையில், ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டேயிருந்தார்கள் . இப்போது கடைசியாக எல்லாப் பேருந்துகளுக்கும் சுங்காங்கடைக்கும் பார்வதிபுரத்திற்கும் இடைப்பட்ட இடத்திலிருக்கும் ஒரு தனியார் பங்கில் தான் டீசல் போடுகிறார்கள். பேருந்துகளைப் பணிமனையில் கொண்டு விடுவதற்கு முன்பு எல்லா டிரைவரும் இந்த‌ தனியார் பங்கில் சென்று நாளைக்குத் தேவையான‌ டீசல்களை நிரப்பிவிட்டு தான் பேருந்துகளைப் பணிமனையில் கொண்டு விடுகிறார்கள். இரவு ஒன்பது மணியிலிருந்து இந்தச் சாலையானது பெரும்பாலும் இப்படிதான் மாட்டிமுழிக்கிறது என்று அப்பா சொல்லி முடித்தார்கள்.

ஒரு பேருந்து உள்ளே சென்று டீசல் நிரப்பிய பின்புதான் அடுத்தப் பேருந்து அந்தப் ப‌ங்கிற்குள் நுழைய முடியும். நெடுங்சாலையில் இருக்கும் அந்த டீசல் பங்கானது மிகச் சிறயளவு இடவசதிக் கொண்டது. பணிமனைக்குச் செல்லும் எல்லாப் பேருந்துகளும் ஒரே நேரத்தில் டீசல் நிரப்புவதற்கு இந்தச் சாலையில் வந்து கூடுவதால், நெரிசல் அதிகமாகவிடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடும் பேருந்துகள் நிலைமையைப் பற்றி ஏகப்பட்ட செய்திகளும், புகைப்படங்களும் தினந்தோறும் ஊடகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லாம் தலைமுறை தாண்டியவையாகத் தான் இருக்கும். ஏதாவது ஒன்று வழியில் மண்டையைப் போட்டால் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும். நான் வந்த அன்றும் அப்ப‌டி ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்.


ஒரு மணிநேரம் வண்டிகள் ஆமை போல் ஊர்ந்தது, எங்கள் ஆட்டோவும் அதன் பின்னே நகர்ந்து ஒரு வழியாக அந்தப் பெட்ரோல் பங்கை கடந்தோம். முப்பது மணிநேரம் ரயில் பயணம் முடித்து ஒரு வழியாக வீட்டை அடையலாம் என்றால் வழியில் நடந்த இந்தச் சோதனை எனக்கும், எனது மனைவிக்கும் கொடூர அனுபவமாக இருந்தது. வழி நெடுகிலும் புலம்பிக் கொண்டுதான் வீடு வந்து சேர்ந்தேன். என்றைக்கோ, ஒருநாள் ஊருக்கு வரும் போது இத்தைகைய போக்குவரத்து நெரிசல்களில் மாட்டும் எனக்கே இவ்வளவு கோபம் என்றால், தினமும் இந்த அவஸ்தைகளைச் சந்திக்கும் மக்களின் கதி! பணியை முடித்துவிட்டு வீட்டிற்குப் போகலாம் என்று இருக்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பாடுகள்!.

இப்படித் தனியார் பங்குகளில் டீசல் போடுவதால் ஒரு லிட்டரில் பத்திலிருந்து பதினொரு ரூபாய் அரசானது சேமிக்கிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்லுகிறது. இவ்வாறு சேமிக்கிறேன் என்ற வழியில் இவர்கள் பண‌த்தை இழக்கவும் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.

# பத்திலிருந்து பதினைத்துக் கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று தனியார் பங்குகளில் டீசல் போடுகிறார்கள். இவ்வளவு தூரம் ஓட்டிச் செல்லுவதற்கு ஆகும் டீசல் செல‌வை எந்தக் கணக்கில் ஏற்றுவது?

# ஒரு வழித்தடத்தில் நான்கு முறையாவது பேருந்துச் சென்றுவர வேண்டும் என்று இருந்தால், டிரைவர்கள் இந்த டீசல் போடுவதற்கு ஆகும் நேரத்தைக் கணக்கிட்டு மூன்று முறையாகக் குறைத்துக் கொள்ளுகிறார்கள். இதனால் ஏற்படும் இழப்பை எவருடைய கணக்கில் ஏற்றுவது?

# சில தனியார் பங்குகளில் நாம் சென்று ஒரு லிட்டர் பெட்ரோலை பிளாஸ்டிக் பாட்டிலில் கேட்டால் கூடக் கொடுப்பதற்குத் தயங்கும் இத்தகைய பரிசுத்தவான்கள், அரசுப் பேருந்துகளுக்கு மட்டும் எப்படிச் சரியான அளவில் அளந்துக் கொடுப்பார்கள்?. இதனால் ஏற்படும் இழப்பை எவருடைய தலையில் ஏற்றுவது?. 

# ஒவ்வொரு நாளும் புதிது புதிதாகத் தனியார் பங்குகளை மாற்றுவதிலும்,பல முறைக்கேடுகள் நடக்கின்றது என்றும் சொல்லப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்றால் மத்திய அரசு மட்டும் தான் என்று எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்து இருக்கிறது. உண்மையில் மாநில அரசுக்கும் தொடர்பு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான, மாநில அரசின் வரியின் வீதத்தைச் சும்மா ஒருமுறை இணையத்தில் தேடிப் பாருங்கள்.
.

Thursday, March 20, 2014

பயண அனுபவமும், தொ(ல்)லைக்காட்சித் தொடர்களும்..

எத்தனை வாட்டி ஊருக்கு வந்தாலும் ஒரு முறை கூடக் கன்னியாகுமரிக்கு போக முடியல. தம்பி டேய் நீயும் இந்த வாட்டி இங்க தானே இருக்கிற நாம் எல்லோரும் கன்னியாகுமரிக்கு போய்ட்டு வந்திடலாம். ஸ்கூல் படிக்கும் போது அங்க போனது, அதுக்க அப்புறம் இன்னும் ஒரு தடவ கூடப் போகல. சென்னையில இருக்கேன் தான் பேரு, ஆனா பாப்பாவை இன்னும் ஒரு தடவை கூடப் பீச்சுக்கு கூட்டிட்டு போகல. கொஞ்சம் பெருசா வளர்ந்த பிறகு போகலாம் என்று சொல்லியே நாட்கள் ஓடிவிட்டது என்று அக்கா என்னிடம் அவளுடைய ஆதங்கத்தை வைத்தாள்.

நானும் இங்க தான் இருக்கிறேன் என்று தான் சொல்லிக்கணும், கல்யாணம் முடிஞ்ச அப்புறம், ஒரு தடவையாவது கன்னியாகுமரிக்கு போகனும் என்று நினைப்பேன், ஆனா அதுக்கான வாய்ப்பு அமையவே இல்லை. தம்பி உனக்கு ஒரு வாரம் லீவு இருக்கு தானே, இந்த வாட்டி நாம குடும்பத்தோட கன்னியாகுமரிக்கு போயிட்டு வந்திடலாம் என்று அண்ணனும் தன்னுடைய ஆசையையும் என்னிடம் வைத்தான்.

அண்ணனும், அக்காவும் அவங்களுடைய ஆசைகளை என்னிடம் சொல்லியாயிற்று, இனி அதைச் செயல்ப்படுத்த வேண்டிய பொறுப்பு என்னுடையது மட்டும் தான். இவங்க எல்லோரையும் வீட்ல இருந்து நேரத்திற்குக் கிளப்பி, பார்க்க வேண்டிய இடம் எல்லாம் பார்த்துவிட்டு பொழுது சாய்வதுக்கு முன்பு கூட்டி வர முடியுமா? என்பது தான் என்னுடைய மனதில் தோன்றியது. மூணு புராஜெக்டை ஒரே நேரத்தில் தந்து மூணையும் நீ தான் பார்க்கணும் என்று ஆபிஸில் சொன்னா கூடப் பார்த்து விடலாம். ஆன அக்கா, அண்ணன், என்னுடையது என்று மூன்று குடும்பத்தையும் வெளியில் கூட்டி போயிட்டு வார்றதுனா சும்மாவா. ஒரு துணிக்கடைக்குப் போனாலே ஒம்பது மணி நேரம் ஆக்குறவங்க, இப்ப என்ன செய்யப் பொறாங்களோ என்று அடிவயிறு கலங்க ஆரம்பிச்சுது.

மனதில் இருந்ததை ஒரு பக்கம் ஓரம் கட்டி வச்சுட்டு, அதுக்கு இப்ப என்ன? நளைக்கே போயிடலாம் என்றேன்.

அம்மா, அப்பா நீங்களும் எங்க கூட வாங்க என்று அக்கா கூப்பிட்டது தான் தாமதம், என்னால ரெம்ப நேரம் வண்டியில உக்கார முடியாது, எனக்கு முதுகு வலிக்கும் என்று அம்மா ஒதுங்கி அப்பாவை பார்த்து சிரிக்க, அப்பாவும் இங்க இருக்கிறா ஆடு, கோழி எல்லாம் யாரு பாக்குறது, நீங்க போயிட்டு வாங்க என்று அப்பாவும் மெல்ல நகர்ந்தார்.

காலையில வீட்ல சாப்பிட்டு விட்டே கிளம்பலாம், மதிய சாப்பாட்டிற்கு வீட்டில் இருந்து ஏதாவது பண்ணி சாப்பிட‌ கொண்டு போனால் நல்லா இருக்கும் என்று அத்தான் ஆரம்பித்தார்கள்.

அதுக்கென்ன "பிரியாணி" பண்ணிட்டால் போச்சு என்று அண்ணி சொல்ல, நானும் பண்ணுறதே பண்ணிறீங்க மட்டன் பிரியாணியாய்ப் பண்ணினால் நல்லா இருக்கும் என்று ச‌ப்பு கொட்டினேன்.

ஆமா, காலையில எழுந்து பாப்பாக்களை ரெடி பண்ணுறதே பெரிய வேலை, இதுல மட்டன் பிரியாணியாம் மட்டன் பிரியாணி. வேணும்னா தயிர் சாதமும், புளி சாதமும் கிண்டலாம் என்று சொல்லி சிரித்தார் அக்கா.

நீங்க கிண்டுற தயிர் சாதமும், புளி சாதமும் சாப்பிடுவதற்கு, அங்க ரோட்டோரத்துல இருக்குற க‌டையிலேயே சாப்பிட்டுவிடலாம், அதனால காலையிலே சீக்கிரமா கிளம்புறதுக்குள்ள வழிய பாருங்க, ஒன்பது மணிக்கு எல்லாம் கார் வீட்ல நிற்கும் என்றான் அண்ணன்.

மறுநாள் காலை ஒன்பது மணி! 

என் வீட்டு அம்ம‌ணி அதுவரையிலும் அயன் பண்ணி கொண்டிருந்த‌ சுடிதாரை தூக்கி கொண்டு அவசர அவசரமாகப் பாத்ரூம்க்கு ஓடினார். குளிச்ச தலையுடன் ஒரு பக்க தோளில் தொங்க‌ போட்டிருந்த சட்டையை எடுத்து மெதுவாக அயன் பாக்ஸில் வைத்து தேய்க்க தொடங்கினார் அத்தான்.

வீட்டின் ஹாலில், தான் முழுவதும் கிளம்பி கையில் இட்லி தட்டுடன் அம்மணாம ஓடும் பாப்பாவை துரத்தி கொண்டு ஓடினார் அண்ணி. வீட்டின் கொல்லை புறத்தில், குத்த வைத்து உக்காந்திருக்கும் பாப்பாவை "சீக்கிரம் சீ போ" இல்லைனா உன்னை விட்டுட்டு நாங்க ம‌ட்டும் கார்ல போயிடுவோம் என்று மிரட்டி கொண்டிருந்தார் அக்கா.

இப்பவே மணி ஒன்பது தாண்டியாச்சி, இதுக்குத் தான் நான் நேத்தே வர மாட்டேன் என்று சொன்னேன், ஓர் இடத்துக்கு நேரத்துக்குப் போனாமா வந்தமானு இருக்கணும், ஆனா இவங்களைக் கூட்டிட்டு சொன்ன நேரத்திற்கு வரவும் முடியாது, போகவும் முடியாது என்ற முனகலுடன் கையில் இரண்டாவது காப்பியை கொண்டு தந்தார் அம்மா.

பெரிய கார்ல தானே போறீங்க, பக்கத்து வீட்டு பெரியப்பாவையும், பெரியாம்மாவையும் உங்க கூட வர சொல்லியிருக்கேன். அவங்க கரெட்டா கிளம்பி திண்ணையில் உக்காந்து இருப்பாங்க, காப்பியை குடிச்சுட்டு, நீ போய் அவங்களை வெயிட் பண்ண சொல்லு என்றார் அப்பா.

வீட்டில் நடக்கும் வேலைகளைப் பார்த்தால் இப்ப எல்லாம் இவர்கள் கிளம்ப மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டே,கையில் இருந்த‌ காப்பியை குடித்து விட்டுப் பக்கத்தில் இருந்த பெரியப்பா வீடு நோக்கி நடந்தேன். அப்பா சொன்னது போல் அவர்கள் இருவரும் கிளம்பி தான் இருந்தார்கள். என்னப்பா எல்லோரும் கிளம்பியாச்சா?. கீழ ரோட்ல கார் வந்து நிற்குது என்று பெரியப்பா என்னை நோக்கினார். இல்லை பெரியப்பா நம்ம வீட்டுப் பொம்பளைகள் எல்லாம் கிளம்ப எவ்வளவு நேரம் ஆகுமுனு உங்களுக்குத் தெரியாதா என்று பெரியப்பாவை பார்த்தேன். அவருடைய முகத்தில் புன்னகையைத் தவிர வேறு பதில் இல்லை.

நம்ம வீட்டு பொம்பளங்க‌ எல்லாம் ஓர் இடத்திற்குக் கிளம்பனும் என்றால் பெரும் பாடு தான், ஆமா, நாம‌ போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள வந்திடலாம் இல்ல என்று பெரியம்மா கேள்வியைக் கேட்டு என் முகத்தைப் பார்த்தார். ஏதும் வேலை இருக்கா பெரியம்மா என்று அவரிடம் கேட்டேன். இல்ல சும்மா தான் கேட்டேன் என்றார் பெரியம்மா. அதெல்லாம் ஆறு மணிக்குள்ள வந்திடாலாம் என்றேன். பெரியம்மா முகத்தில் சந்தோச புன்னகை தெரிந்தது. சரி பெரியம்மா நீங்க இங்க உக்காந்திருங்க, நான் போய் அவங்களைச் சீக்கிரம் கிளம்பச் சொல்லுறேன் என்று சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தேன்.

வீட்டில் வந்து பார்த்தால் எல்லோரும் பரபரப்பாய் கிளம்பி கொண்டிருந்தார்கள், அப்போதே மணி பத்தை தாண்டியிருந்தது. ஒருவர் சிலேடை காணவில்லை என்றும் இன்னொருவர் ஸ்டிக்கர் பொட்டை இங்க தான் வச்சிருந்தேன் நீங்க பாத்தீங்களானு என்னிடம் கேட்க, நானே என்னோட சட்டை பாக்கெட்ல இருக்கு என்று சொல்லிவிட்டு அண்ணனை தேடினேன். நேத்து பூ வாங்க சொல்ல மறந்திட்டாங்களாம், அதான் இப்ப பூ வாங்க அவன் டூவீலரை எடுத்திட்டு ரோட்டுக்குப் போயிருக்கிறான் என்று அம்மா மெல்லிய புன்னகையுடன் என்னிடம் சொன்னார்.

எப்படியோ எல்லோரும் ஒரு வழியா கிளம்பி, வீட்டை விட்டு வெளியில் வரும் போது மணி பதினொன்று. வீட்டில் இருந்து நடந்து கீழே நிற்கும் வண்டியின் அருகில் நெருங்கும் போது, அண்ணி மட்டும் வீட்டை நோக்கி திரும்பவும் ஓடினார். ஏன்னு கேட்டால், பாப்பாவின் பால் பாட்டிலை மறந்து விட்டாராம் என்று அண்ணன் தலையில் அடித்தான். வண்டி கிளம்பி கன்னியாகுமரி போகிறதுக்குள்ள பாப்பாக்கள் இரண்டு பேரும் இரண்டு இடங்களில் இறங்க வைத்து விட்டார்கள். எப்படியோ கன்னியாகுமரிக்கு போயி இறங்கும் போது மணி பனிரென்டு முப்பது.

கடல் உள்ள போனா நீங்க திரும்ப‌ வர்றதுக்கு ரெம்ப நேரம் ஆகும். அதனால சாப்பிட்டு விட்டுப் போங்கள் என்று சொன்ன டிரைவரின் ஆலோசனையின் படி ஹோட்டலை நோக்கி நடந்தோம்.

வந்ததோ இடங்களைச் சுற்றிப் பார்க்க, ஆனா முதல் வேலையே சாப்பாடு தான் நடந்தது. நான் நினைச்ச மட்டன் பிரியாணியையும் ஆர்ட‌ர் பண்ணிட்டேன், சாப்பாடும் ஒரு வழியாக முடிந்து விட்டது.

இப்போது ஒவ்வொரு இடமாகச் சுற்ற தொடங்கினோம், முதலில் போனது விவேகானந்தர் பாறைக்கு, கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் பாறையில் இருந்து திரும்ப வர்றதுக்கு விசைப்படகிற்காக‌ ரெம்ப நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இங்கு ரெம்ப நேரம் கால் கடுக்க‌ நின்னதாலோ, என்னவோ எல்லோரும் ஒன்றாகத் திருவள்ளுவர் சிலைக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள். சூரியனும் மேற்கு நோக்கி விரைவாக‌ நகரத் தொடங்கி விட்டான்.



இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சென்றதை விட, கோவிலை சுற்றி இப்போது அதிகமான புதுக் கடைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பொருட்களைப் பேரம் பேசி வாங்குவதற்குள் நேரம் போய்க் கொண்டே இருந்தது. பெண்கள் ஒவ்வொருவரையும் மிரட்டி ஒவ்வொரு கடையில் இருந்தும் வெளியேற்றியது பெரியம்மா தான். அதனால் ஆண்கள் எங்களுக்குப் பெரிய அளவில் கஷ்டம் இல்லை.

ஒவ்வொரு மணி நேரம் ஆகும் போதும், மணி நான்கு ஆகிவிட்டது, ஐந்து மணி ஆகிவிட்டது சீக்கிரம் வாங்க, வீட்டிற்கு ஆறு மணிக்குள்ள போகனும் என்று கோபமாகக் கத்தி கொண்டே பெரியம்மா இருந்தார்கள். ஒரு ஸ்டிக்கர் பொட்டு வாங்கவே நாலு கடை பார்க்கும் நம்ம ஆளுங்க இதற்கு எல்லாம் அசருவாங்களா என்ன. சவகாசமா கேட்டால் சங்குமுகம் வரும் போது மணி ஆறு. பெரியம்மாவின் கண்கள் கோபத்தில் கொப்பளித்தது. ஆனால் வெளியில் ஏதும் சொல்லாமல் இருந்தார்.

இருந்ததே இருந்தோம், அப்படியே சூரியன் மறையுறதையும் பார்த்து விட்டு போவோம் என்றார்கள். சூரியனும் ஒரு வழியாகக் கடலில் விழுந்து விட்டான். தண்ணீரில் விளையாட போன நம்ம‌ ஆட்களுக்குக் கடலை விட்டு வர மனம் ஒப்பவில்லை.

கடலை விட்டு வெளியில் வந்து பிளாட்பாரம் கடைகளையும் பார்க்க வேண்டும் என்று அங்கேயும் சுற்ற தொடங்கினார்கள்.

எப்படியோ ஒரு வழியாக எல்லோரும் வண்டியில் வந்து ஏறும் போது மணி எட்டு. பெரியம்மாவின் முகம் மட்டும் கொடுரமாக இருந்தது. அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது, ஆறு மணிக்குள்ள வீட்டிற்கு வரலாமா என்று பெரியம்மா கேட்டது.

வண்டியில் அம‌ரும் போது, கொஞ்சம் தள்ளி தான் இருக்கிறது என்ற பெரியப்பாவின் குரலுக்கு, அனல் பறக்கும் பார்வையுடன் கூடிய கோபம் பெரியம்மாவின் கண்ணில் தெறித்தது. அனைவரும் வண்டியில் ஏறியவுடன், வண்டி கிளம்பத் தொடங்கியது. கடலில் ரெம்ப நேரம் ஆட்டம் போட்டதனால் பாப்பா இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்தார்கள். பயணக் களைப்பும், வண்டியின் ஜன்னல் வழியாக வீசிய‌ இயற்கை காற்றும் எல்லோரின் கண்களையும் சுழற்றியது.

பக்கத்தில் இருந்த என்னுடைய மனைவியிடம், ஆமா, பெரியம்மா ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள்?, ஆறு மணிக்கும் யாரையும் வீட்டிற்கு வர சொல்லி இருப்பார்களோ என்று கிசுகிசுத்தேன். அதற்கு என் மனைவியோ புன்சிரிப்புடன் அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ஆறு மணியில் இருந்து பெரியம்மா தொலைக்காட்சி தொடர்கள் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னைக்கு நம்ம கூட வந்ததால் எல்லாத் தொடரும் அவங்களால பார்க்க முடியாம போச்சு, அதான் இவ்வளவு கோபமாக இருக்காங்க‌ என்றார். இவ்வளவு தானா, நானோ ஏதோ பெரிய விசயமாக இருக்குமோ என்று நினைத்தேன் என்றேன். உங்களுக்கு என்ன தெரியும் அந்தத் தொடர்களை ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கதையோட தொடர்ச்சி போயிடும் என்றார். என்ன பெரிய கதை மாடி படியில இருந்து இறங்கி வந்து கிச்சனுக்குப் போய் ஒரு கப் தண்ணி குடிச்சுட்டு, திரும்பவும் மாடி படி ஏறி பெட்ரூம் கதைவை திறக்கும் போது "தொடரும்" என்று போடுவான் என்றேன். ரெம்பச் சத்தம் போட்டு பேசாதீங்க, பெரியம்மா காதில் கேட்டுவிடப் போகிறது என்றார்.

பெரியம்மாவிற்குத் தொலைக்காட்சி தொடர் தானே பார்க்க முடியல, வீட்டுக்குப் போய்த் திரும்பவும் போட சொல்லி, நான் அவங்களுக்குக் காட்டுறேன் என்றேன். ஆமா, நீங்க சொன்ன உடன் போடுவதற்குத் தொலைக்காட்சி தொடர் என்ன உங்க வீட்டு டிவிடி பிளேயரில் உள்ள படமா? என்றார். சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தேன்.

வண்டி எங்கள் ஊர் எல்லையைத் தொடும் போது, இரவு மணி ஒன்பதை தாண்டியிருந்தது. பயணக் களைப்புடன் வண்டியில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தோம். பெரியம்மா அவங்க வீட்டிற்குக் கிளம்பினார். அவர்கள் சென்ற பின்னாடியே நானும் வீட்டில் இருந்த‌ என்னுடைய லேப்டாப்பை தூக்கி கொண்டு அவர்கள் பின்னால் போனேன். என்னுடைய யுஎஸ்பி மோடத்தை லேப்டாப்பில் கனெக்ட் செய்து, இணையத்தில் இருந்து பெரியம்மா சொன்ன அனைத்துத் தொலைக்காட்சி தொடர்களையும் அவர்களுக்குப் போட்டு காட்டினேன். "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தில் விஜய் சேதுபதி, தாதாவாக நடித்திருக்கும் பசுபதி அவர்களிடம் "குமுதா ஹேப்பி அண்ணாச்சி" என்று சொல்வது போல் நானும் "பெரியம்மா ஹேப்பி அண்ணாச்சி" என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வந்தேன்.

வீட்டிற்கு வந்தவுடன் என்னோட மனைவி என்னிடம் வந்து, நீங்க இணையத்தில் தொலைக்காட்சி தொடர் பார்க்கலாம் என்பதை எனக்குச் சொல்லி தரவே இல்லியே என்றார். நீ தான் தொலைக்காட்சி தொடரே பார்க்க மாட்டியே என்றேன். இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டா பார்ப்பாங்க, சரி சரி அந்த விஜய் டிவியில் போடும் "உறவுகள் தொடர்கதை" சீரியலை லேப்டாப்பில் எனக்குப் போட்டு தாங்க என்றார்.

.

Sunday, March 9, 2014

சாலையைப் போடுங்க‌, ஆனா மண்டை உடையாம போடுங்க!!!

சாலைகளைப் போடுவதற்கு அரசு எப்படி ஒப்பந்தங்கள் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதைக் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றிருந்தேன். பல போரட்டங்களுக்குப் பிறகு மீண்டும் நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரையிலான சாலையைப் போட தொடங்கியிருந்தார்கள். இவர்கள் ஒரு பகுதியில் இருந்து போட்டு மறுபுறத்தில் முடிப்பதற்குள் முதலில் போட பட்டிருக்கும் சாலைகள் பல்லை காட்ட தொடங்கியிருக்கும். இது தான் இவர்கள் போடும் சாலையின் லட்சணம். இவை ஒருபுறம் இருக்க நான் கேட்ட முதல் கேள்விக்கான அவசியம் இதுதான். நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரையிலான நெடுஞ்சாலை ஒருவழிச்சாலை, இரண்டு புறமும் வாகனம் போவதும், வருவதுமாக இருக்கும்.

இவர்கள் சீரமைக்கும் சாலையில் முதல் முதலாக எந்த அளவில் சாலையில் தார் போட்டு இருப்பார்களோ, அதே அளவில் தான் திரும்பவும் அதன் மேல் சல்லியை கொட்டி தார் ஊற்றுகிறார்கள். எல்லோருக்கும் தெரியும் தார் சாலை என்பது சாதரணத் தரையில் இருந்து சற்று உயரமாக இருக்கும். இப்படி உயரமாக இருக்கும் சாலையில் ஒவ்வொரு முறையும் சீரமைக்கும் போது ஒர் அங்குலம் முதல் இரண்டு அங்குலம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு இரண்டு அல்லது முன்று முறை செய்யும் போது சாலையின் உயரம் தரையின் சமதளத்தில் இருந்து ஒர் அடிவரை உயர்ந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் சாலைப்போடுபவர்கள் இந்த இரண்டு ஓரங்ளையும் சிறுது சல்லிக் கொட்டி மழித்து விடுவது இல்லை. அவ்வாறு செய்தால் ஒப்பந்த தாரர்களுக்குக் கொஞ்சம் சல்லியும் சிறிது தாரும் செலவு ஆகும். அதனால் இவர்கள் செய்வது இல்லை, இன்னும் சில ஒப்பந்த தாரர்கள் சாலையின் இரண்டு ஓரங்களிலும் மண்ணைக் கொட்டி மறைத்து விடுவார்கள். சாலைப் போட்ட நான்கு நாட்கள் நன்றாக இருக்கும், ஒரு மழை வந்தால் காணமல் போகும்.

இதைப் போன்ற‌ ஒரு வழிச் சாலையில் இருச்சக்கர‌ வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், இரண்டு பெரிய பேருந்தோ அல்லது கனரக வண்டியோ நேர் எதிராக வந்தால் இவர்கள் முதலில் ஓரங்கட்டுவது ஓரத்தில் செல்லும் இருச்சக்கர‌ வாகனத்தைத் தான். சாலையில் இருந்து ஒர் அடி பள்ளத்தில் இருக்கும் தரையில் இருச்சக்கர‌ வண்டியை அனுபவம் இல்லாமலோ அல்லது கைத் தவறியோ விட்டால் என்ன ஆகும் வண்டியின் சக்கரத்தை சுழற்றி ஆளை கிழே தள்ளும். பெரும்பாலன விபத்துக்கள் இப்படித்தான் நடக்கின்றன்.

இந்த நெடுஞ்சாலை ஒரு வழிச்சலையாக இருப்பதால் ஒரு வண்டி முன்னால் போகும் போது இரண்டாவது வண்டி முதல் வண்டியை முந்த வேண்டும் என்று நினைக்கும் போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஓரங்கட்டுவது இருச்சக்கர வாகனத்தைத் தான். இருச்சக்கர வண்டியை ஓட்டும் நீங்கள் வலுக்க‌ட்டாயமாகப் பள்ளத்தில் இறக்க‌ நிர்பந்திக்கப் படுவீர்கள். உங்களால் வண்டியைக் கட்டுப்படுத்தி ஓர் அடிக்கு மேல் இருக்கும் பள்ளத்தில் இறக்க‌ முடியாவிட்டால் கீழே விழ வேண்டியது தான்.



இன்றைக்கு நமது நாட்டில் சாலைகள் ஒழுங்காக இல்லை, சாலை விதிகளும் ஒழுங்காக இல்லை, அப்படியே இருந்தாலும் அதை மதிப்பதற்கு மக்களும் தயாரில்லை. ஆனால் 200 சி.சி, 250 சி.சி என்று இருச்சக்கர‌ வாகனங்களைக் கல்லூரி படிக்கும் இளைஞர்களைக் குறி வைத்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். அந்த வண்டியை ஓட்டுவதற்கான சாலை வசதி இருக்கிறதா என்று வண்டி வாங்குபவனே கவலை படாத போது, வண்டியை விற்பவன் எங்கே கவலைப்படப் போகிறான். சி.சி அதிகமான‌ வண்டிகளை இப்போது பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் பார்க்க முடிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் அதிகம். அதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கைகளில் சி.சி அதிகமாக உள்ள வண்டிகளைத் தான் பார்க்க முடிகிறது. ஒரு வண்டியில் இரண்டு, முன்று பேர் என்று சிட்டாகப் பறக்கிறார்கள். இப்படி வண்டியில் போகும் என்று சொல்ல முடியாது பறக்கும் கல்லூரி மாணவர்கள் வண்டியை கொண்டு சாலையின் ஓரத்தில் இருக்கும் பள்ளத்தில் விட்டால் என்ன ஆகும், மண்டை தான் உடையும்.

கன்னியாகுமரி மாவட்ட செய்திதாள்களை என்றைக்குப் புரட்டினாலும் பக்கத்திற்குப் பக்கம் இருச்சக்கர வாகன விபத்துக்களைப் படிக்க‌ முடியும். எனது நட்பு வட்டம் மற்றும் உறவுகளில் கூடச் சமீக காலங்களில் நடந்த விபத்துகள் மட்டும் மூன்று. இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள், இன்னொருவர் ஆசிரியர். நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் அதிகமாக விபத்துக்கள் நடைப்பெறும் இடங்கள் எது என்று எவரிடம் கேட்டலும் கீழே உள்ளவற்றைப் பட்டியல் இடுவார்கள். பார்வதி புரத்தை அடுத்த உள்ள‌ களியங்காடு, சுங்கான்கடையை அடுத்து உள்ள‌ கருப்புக்கோடு, தோட்டியோடு, வில்லுக்குறி பாலம் மற்றும் குமாரகோவிலை ஒட்டியுள்ள தென்கரை பாலம். இந்த இடங்களில் தான் அதிகமான இருச்சக்கர வாகன விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த இடங்களில் முறையான அறிவிப்புப் பலகைகள் கூட இல்லை, அப்படியே சில இடங்களில் இருந்தாலும் அவை கண்ணுக்கு தெரியாதவாறு மிகச் சிறியதாக ஓரத்தில் எங்காவது நட்டு வைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் ஊள்ள சாலைகளைப் பற்றிப் பேசும் போது நமது கண் முன் வந்து நிற்கும் முக்கியமான ஒரு சாலை கோட்டார் ரயில்வே நிலையத்திற்குச் செல்லும் சாலை. எனக்குத் தெரிந்து இந்தச் சாலை ஒரு நாளும் மேடு பள்ளம் இல்லாமல் இருப்பது இல்லை. பிரசவத்திற்கான சாலை என்று விளையாட்டிற்குச் சொல்லும் சாலையைப் பார்க்க வேண்டும் என்றால் இது தான். தினமும் ஆயிரகணக்கானோர் வந்து செல்லும் இந்தச் சாலையின் நிலைமை ரெம்ப மோசம்.

வாஜ்பாய் அவர்கள் பிரதமாக இருக்கும் போது கொண்டு வந்த தங்க நாற்கரச் சாலையைப் பற்றிக் கருத்து விவாதங்களிலும், மேடையெங்கும் நாங்கள் கொண்டு வந்த அருமையான திட்டம் என்று முழங்கும் பொன்னார் அவர்கள், அவரது சொந்த தொகுதியில் அத்திட்டம் நடைமுறை ப‌டுத்தாது பற்றி வாயே திறப்பது இல்லை. காவல் கிணறுடன் இத்திட்டம் முடக்கப்பட்டு நிற்கின்றது. சாலை விரிவாக்கம் செய்தால் பல முதலாளிகளில் கடைகள் தகர்க்கப்படும். அரசியல்வாதிகளுக்குத் தான் முதலாளிகளுக்கு நஷ்டம் என்றால் இரத்த கண்ணீரே வருமே..

.

Monday, February 15, 2010

வாழைப்பழம்_வகைகளும் நானும்..

பழங்கள் என்றால் அது ஆப்பிள், ஆரஞ்சி, திராட்சை என்று ஆகிவிட்ட காலத்தில் நமது முக்கனிகளில் ஒன்றாகிய வாழைப்பழத்தை பற்றி எனக்கு தெரிந்த சில விசயங்களை எழுதுகிறேன். பழங்களில் இதற்கு தான் வகைகள் அதிகம். சுமார் எழுபதிற்கும் அதிகமான வகைகள் காணப்படுகின்றன. மேலும் மற்ற பழங்களை ஒப்பிடும் போது இதன் விலையும் குறைவு. விலை குறைவான உணவு பொருட்களின் தரம் எதுவும் நன்றாக இருக்காது என்று சில மேல்தட்டு அறிவு ஜீவிகள் சுற்றி வருகிறார்கள். அவர்களுடைய வழியை இப்போது உள்ள நாகரீக கோமாளிகளும் பின்பற்றுவதால் தான் வாழைப்பழத்தின் பெருமைகள் மங்கி விட்டதாக நான் நினைக்கின்றேன். மேலும் நகரங்களில் வாழைப்பழத்தில் இரண்டு மூன்று வகைகளை தவிர மற்றவைகள் கிடைக்காததும் மற்றும் ஒரு காரணம்.



என‌க்கு தெரிந்த சில வாழைப்பழங்களின் வகைகளை எனக்கு அறிமுகமான பெயரிலேயே கூறுகிறேன்.

(1) செந்த்துழுவன்(செவ்வாழை)

(2)வெள்ளைத்துழுவன்

(3)பாளையங்கொட்டை(மஞ்சள்)

(4)மோரிஸ்(பச்சை)

(5)ஏத்தன்(நேந்திரன்)

(6)இரசகதலி

(7)பூங்கதலி

(8)கற்பூரவல்லி

(9)மொந்தன்

(10)சிங்கன்

(11)பேயன்

(12)மட்டி(ஏலரிசி)

(13)மலை வாழை



இதில் உள்ள அனைத்து வாழைப்பழங்களும் பல மருத்துவ குணங்களை கொண்டவை. மேலே கூறப்பட்ட செந்த்துழுவனும், வெள்ளைத்துழுவனும் ஒரே இனத்தை சார்ந்தவை. இவற்றின் சுவை தித்திப்பாக மாவு போன்று இருக்கும். பாளையங்கொட்டை(மஞ்சள்)என்று அழைக்கப் படும் இந்த வாழைப்பழமானது சிறிது புளிப்பு சுவையுடையது. மற்ற ரகங்களை பார்க்கும் போது இதன் விலை ச‌ற்று குறைவாக இருக்கும். மோரிஸ்(பச்சை) பெரும்பாலும் இந்த ஒரு ரகத்தை தான் நகரங்களில் பார்க்க முடிகிறது. கிராமத்தில் இருந்து வந்தவர்கள் இதன் விலையை கேட்டால் கண்டிப்பாக‌ வாங்க மாட்டார்கள். இதுவும் இனிப்பு தன்மையுடையது. ஏத்தன்(நேந்திரன்) இது ஏதோ கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். அதுவல்ல உண்மை. தமிழ் நாட்டிலும் விளைவிக்கப் படுகிறது. மற்ற ரகங்களை விட இதன் சுவைத் தனிச்சிறப்பு. இதில் ஒரு வாழைப் பழத்தை முழுமையாக சாப்பிடுவது என்பது அனைவராலும் முடியாத காரியம். அவ்வளவு பெரிதாக இருக்கும். இதில் இருந்து தாயரிக்கப் படும் சீவல்(Banana Chips) அனைவரும் அறிந்ததே. இரசகதலி, பூங்கதலி மற்றும் கற்பூரவல்லி இந்த மூன்றும் நல்ல இனிப்புச் சுவையைக் கொண்டவை. இதன் அளவும் பார்பதற்கு சிறிதாக இருக்கும். மொந்தன் இது பார்பதற்கு நேந்திரன் போல் தோற்றம் அளித்தாலும் இதன் சுவையில் இனிப்பு தன்மை குறைவாக இருக்கும். சிங்கன் இது அரிதாக கிடைக்க கூடியது. இது பல மருத்துவ குணம் கொண்டது. இது பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போல் இருக்கும். இது தென்பகுதிகளில் சமைக்கப் படும் அவியலில் பச்சை காய்கறியாக சேர்க்கப் படுவது இதன் சிறப்பு. பேயன் இது தான் நமது ஊரில் பஜ்ஜி போடுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப் படுக்கிறது. இதன் சுவையும் தித்திப்பே. மட்டி இது வாழைப்பழ ரகங்களில் மிக சிறியது. ஆனால் இதன் சுவைப் பல மடங்கு இனிப்பானது. இதில் மாவுத் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுக்கப்ப‌டும். இந்த பழத்திலும் ம‌ருத்துவ குணம் அதிகம். மலை வாழை இதன் சுவை தனி. இதுவும் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை.



வாழைப் பழத்தில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வாழைப் பழத்தில் எழுபதிற்கும் அதிகமான வகைகள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உள்ளன. வாழைப்பழத்தில் கர்போஹைடிரேட், புரதம், கொழுப்பு முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சிறிய அளவில் செம்புச்சத்தும் அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. வாழைப் பழத்தில் இருந்து தாயரிக்கப் படும் எண்ணெய் ஆனது சரும அழகை பாதுகாக்கப் பயன்படுகிறது. இதய நோய் உடையவர்களும் வாழைப் பழ‌த்தை உண்ணலாம்.



வாழைப் பழ சாகுபடியில் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்களுக்கு கூறுவதில் பெருமை அடைகிறேன். நான் மேலே சொன்ன வாழைப் பழ வகைகளை பல பேர் கண்ணால் பார்த்து கூட இருக்க மாட்டார்கள். நான் அனைத்து பழ‌ங்களையும் ஒரே இடத்தில் பார்த்தும் இருக்கிறேன். சாப்பிட்டும் இருக்கிறேன். எனது மாவட்டத்தில் தக்கலை என்ற இடத்தை அனைவரும் அறிந்ததே. அதன் அருகில் உள்ள ஒரு சந்தையின் பெயர் "பேட்டை சந்தை". வாழைத் தார்கள் மட்டுமே விற்பதற்க்காக அமைக்கப் பட்ட சந்தை. இங்கு வேறு எந்த பொருட்களும் கிடைக்காது. வாரத்தில் புதன் மற்றும் ஞாயிறு மட்டுமே கூடுகின்றது. இந்த இரண்டு நாட்களும் வாழைத் தார்கள் மலைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளையும், ஏற்றுமதியாளர்களையும் அன்றய தினம் பார்க்க முடியும். அனைத்து வாழைப் பழ ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்தவரிடமே எந்த வித இடைத்தரகர்கள் இல்லாமல் வாங்க முடிவது இந்த பேட்டை சந்தையின் சிறப்பு. இங்கு இருந்து வெளிநாடுகளுக்கும் வாழைத் தார்கள் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. இப்போது இந்த சந்தையானது “தக்கலை வாழைக்குலை சந்தை” என்று அழைக்கப்பட்டு வருகிறதாம். மேலும் இந்த சந்தையானது காங்கிரிட் தளம் போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாம். வாரத்தின் புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காய்கறி சந்தையாகவும் செயல் படுகிறதாம்.





மேலும் நான் எனது ஊரில் பார்த்த ஒன்று வாழைத் தார்களின் அளவு. கோவில் திருவிழாக்களில் இதற்காகவே போட்டிகள் நடத்துவார்கள். அதாவது கோவில் திருவிழாக்களின் முதல் நாளில் அவரவர் தோட்ட‌ங்களில் விளைந்த வாழைத் தார்களில் பெரிய தாரை ம‌ரத்துடன் வெட்டி கொண்டு வந்து நட்டு விடுவார்கள். திருவிழா முற்றம் முழுவதும் வாழை மரங்களின் அணிவகுப்பை தான் பார்க்க முடியும். திருவிழாவின் இறுதி நாளில் கோவில் நிர்வாகத்தின் நடுவர்களால் பார்வையிடப் பட்டு மிகப் பெரிய அளவு வாழைத் தாருக்கு பரிசும் பணமும் வழங்கப்படும். இங்கு நான் வாழை மரத்தின் உயரத்திற்கு வாழைத் தாரை பார்த்ததுண்டு. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு என்று ஒவ்வொரு தோட்டத்திலும் வாழை மரங்கள் வளர்ப்பது உண்டு. அந்த வாழைத் தார்களை "பந்தயகுலை" என்று அழைப்பார்கள்.




குறிப்பு: வாழைப் பழத்தின் மருத்துவ குணங்களும், அதில் உள்ள சத்துக்களும், விட்டமீன்களின் விளக்கங்களும் அதன் அளவுகளும் இணைய தளங்களில் விரவி கிடப்பதால் அதைப் பற்றி அதிகம் எழுதவில்லை.
Related Posts with Thumbnails