Tuesday, May 4, 2010

என்னுடைய‌ சென்னை ப‌ய‌ண‌ம்_2

என்னுடைய‌ சென்னை ப‌ய‌ண‌ம்_1

இத‌ன் முத‌ல் ப‌குதியை ப‌டிக்க‌விரும்புவோர் மேலே உள்ள‌ லிங்கை சொடுக்க‌வும்

க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் அத‌ற்கு மேல் பேச‌ விருப்ப‌ம் இல்லாம‌ல் தான் நான் பஸ்சை விட்டு இற‌ங்கினேனே த‌விர‌ ம‌ன‌ம் முழுவ‌தும் சூட்கேசை ப‌ற்றிதான் சிந்த‌னை செய்த‌து. கார‌ண‌ம் அதில் இருந்த‌ முக்கியாமான‌ சில‌ பொருட்க‌ள்.

நான் அப்போது சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த‌தால் சென்ட்ர‌ல் க‌வ‌ர்மென்ட் எக்ஸாம் ஒன்றும் விடுவ‌தில்லை. ரெயில்வே, நேவி, ஏர்போர்ஸ் என்று ஏதாவ‌து ஒன்று எழுதுவேன். என‌வே என்னுடைய‌ ப‌டிப்பு சான்றித‌ழ் அனைத்தும் என்னுட‌ம் அந்த‌ சூட்கேசில் தான் எப்போதும் இருக்கும். அது ம‌ட்டும‌ல்லாது நான் ஊருக்கு போன‌த‌ற்கு முக்கிய‌ கார‌ண‌ம் என்னுடைய‌ பாஸ்போர்ட் வ‌ந்திருக்கிற‌து என்ற‌ செய்தி கேட்டுத்தான். என‌வே அந்த‌ சூட்கேசில் என்னுடைய‌ பாஸ்போர்ட்டும் இருந்த‌து. மேலும் அவ‌ச‌ர‌ தேவைக்காக‌ அந்த‌ சூட்கேசில் எப்போதும் ஒரு 500 ரூபாய் நோட்டு ஒன்றும் இருக்கும். அப்புற‌ம் என்னுடைய‌ துணிக‌ள் கொஞ்ச‌ம்.



அது எப்ப‌டிய்யா? நீ ச‌ர்டிபிக்கேட் எல்லாம் சூட்கேசில் வைத்துவிட்டு தூங்க‌லாம் என்று நீங்க‌ள் கேட்ப‌து என‌க்கு புரிகிற‌து. அத‌ற்கு கார‌ண‌ம் நான் சென்னைக்கு வ‌ருவ‌தும், ஊருக்கு போவ‌தும் ஒரு பெரிய‌ விச‌ய‌மாக‌வே என‌க்கு தெரிய‌வில்லை. கார‌ண‌ம் ச‌னிக்கிழ‌மை நினைத்தால் ஊருக்கு வ‌ண்டி ஏறுவேன், திங்க‌ள்கிழ‌மை திரும்ப‌வும் சென்னையில் இருப்பேன். என‌வே இந்த‌ ப‌ஸ் ப‌ய‌ண‌ம் என‌க்கு பெரிய‌ விச‌ய‌மாக‌ ப‌ட‌வில்லை.

ப‌ல்ல‌வ‌ர‌த்தில் ப‌ஸ்சை விட்டு இற‌ங்கிய‌தும் முன்னால் பார்த்த‌து போலிஸ் ஸ்டேச‌னைத்தான். ச‌ரி போலிஸ் ஸ்டேச‌னில் சொல்ல‌லாம் என்று ம‌ன‌திற்குள் நினைத்துவிட்டு. திரும்பி எதிர்த்த‌ சாலையில் பார்த்தேன், அங்கு அத்தான்(மாமா) காருட‌ன் நின்றார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் ந‌ட‌ந்த‌ விச‌ய‌த்தை சொன்னேன். அவ‌ங்க‌ளுக்கு ஆபிஸ் போக‌வேண்டும் என்ப‌து என‌க்கு தெரியும் என‌வே அவ‌ர்க‌ளிட‌ம் "நீங்க‌ வீட்டுக்கு போங்க‌ நான் இந்த‌‌ போலிஸ் ஸ்டேச‌னுக்கு போய்விட்டு வ‌ருகி‌றேன்" என்று சொன்னேன். அத்தானும் கிள‌ம்பி விட்டார்க‌ள்.

ஊர்ல‌ இருக்கும் போதே போலிஸ் ஸ்டேச‌ன் வாச‌லை மிதித்த‌து இல்லை. எப்ப‌டி இருக்கும் என்றும் என‌க்கு தெரியாது. ந‌ம்ம‌ த‌மிழ் சினிமாவில் பார்த்த‌தோட‌ ச‌ரி. முத‌ல் முறையாக‌ போலிஸ் ஸ்டேச‌னுக்குள்ள‌ கால‌டி எடுத்து வைச்சாச்சி. யாரை பார்க்க‌னும், யாரிட‌ம் சொல்ல‌ வேண்டும் என்ப‌து ஒன்றும் தெரியாது. உள்ள‌ போன‌வுட‌ன் இரு வேறு திசைக‌ளில் போட‌ப்ப‌ட்ட‌ மேஜை, நாற்காலியில் இருவ‌ர் இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ரிட‌ம் சென்று சூட்கேசை தொலைத்த‌ விச‌ய‌த்தை சொன்னேன்.

ப‌க்க‌த்து டேபிளில் இருந்த‌வ‌ர், உட‌னே திரும்பி என்னை பார்த்து "வாங்க‌ சார்... இப்ப‌டி உக்காருங்க‌... சூட்கேசு தானே அடுத்த‌ வ‌ண்டியில் நான் போய் எடுத்துட்டு வ‌ந்துடுறேன். நீங்க‌ இப்ப‌ போய் அந்த‌ செய‌ரில் உக்காருங்க‌" என்றார். அப்ப‌டியே ப‌க்க‌த்தில் இருந்த‌ போலிஸ்கார‌ரிட‌ம் "பாருய்யா!!!! இவ‌ரு ப‌ஸ்ல‌ தூங்குவாராம், அந்த‌ நேர‌த்துல‌ எவ‌னோ ஒருத்த‌ன் சூட்கேசை அடிச்சுட்டு போவானாம், இவ‌ரு தூக்க‌ம் முழிச்ச‌தும் வ‌ண்டியை விட்டு இற‌ங்கி முன்னாடி எந்த‌ போலிஸ் ஸ்டேச‌ன் இருக்கோ அங்க‌ வ‌ந்து க‌ம்பிளைண்ட் ப‌ண்ணுவார‌ம், நாம‌ போய் க‌ண்டுபிடிக்க‌னுமாம்" என்று ந‌க்க‌லாக‌ சிரித்தார். ஆஹா ந‌ம்ம‌ த‌மிழ் சினிமாவில் காட்டும் போலிஸ் ஸ்டேச‌னுக்கு தான் வ‌ந்துவிட்டோம் போல. கொஞ்ச‌ம் கூட‌ இவ‌ர்க‌ள் மாற‌வே இல்லை என்று நினைத்து கொண்டு கிள‌ம்பிவிட்டேன். அவ‌ர்க‌ளும் தொல்லை முடிந்த‌து என்று க‌ண்டுக்க‌வில்லை.

இதுக்கு மேல் சூட்கேசை தேட‌ என‌க்கு விருப்ப‌மில்லை. உட‌னே வீட்டுக்கு போனை போட்டு ந‌ட‌ந்த‌ விச‌ய‌த்தை சொல்லிவிட்டு ச‌ர்ட்டிபிக்கேட்டுக்காக‌ என்னுடைய‌ க‌ல்லூரியின் பிரின்ஸ்பாலிட‌ம் பேச‌ சொன்னேன். ம‌றுநாள் அப்பாவும் க‌ல்லூரிக்கு சென்று விச‌ய‌த்தை விள‌க்கியிருக்கிறார். என்னுடைய‌ துறைத‌லைவ‌ருக்கு(HOD) என்னை ந‌ன்றாக‌ தெரியும். இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ப்ப‌த‌ற்கு இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு முன்புதான் சுனாமி வ‌ந்திருந்த‌து. எங்க‌ள் ஊரில் சுனாமி பாதிப்பு அதிக‌ம். அதில் ச‌ர்ட்டிபிக்கேட் தொலைத்த‌வ‌ர்க‌ள் அதிக‌ம், என்னுடைய‌ துறைத‌லைவ‌ர் என் அப்பாவிட‌ம் "ஒண்ணும் பிர‌ச்ச‌னையில்லை ஸ்டீபனுடைய‌ ச‌ர்டிபிக்கேட் மேட்ட‌ரையும் சுனாமி லிஸ்டில் சேர்த்து விடுகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.

நான் வ‌ழ‌க்க‌ம் போல் என்னுடைய‌ ஆபிஸ் வேலைக‌ளில் பிஸியாகிவிட்டேன். ச‌ரியாக‌ இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து மூன்று நாட்க‌ள் க‌ழித்து ம‌திய‌ வேளையில் என‌து வீட்டில் இருந்து போன் வ‌ருகின்ற‌து. என்ன‌வென்று கேட்டால் கிருஷ்ண‌மூர்த்தி என்ற‌ பேர் கொண்ட‌ ந‌ப‌ர் ஒருவ‌ர் எங்க‌ள் வீட்டிற்கு வ‌ந்து என்னுடைய‌ ச‌ர்ட்டிபிக்கேட் ம‌ற்றும் பாஸ்போட்டை ம‌ட்டும் கொண்டு வ‌ந்து கொடுத்திருக்கிறார். அவ‌ர் ம‌துரை டிப்போவில் வேலை செய்வ‌தாக‌வும், என்னுடைய‌ சூட்கேஸ் ம‌துரை ப‌ஸ் ஸ்டாண்டில் உடைக்க‌ப்ப‌ட்டு கிட‌ந்த‌தாக‌வும் இவ‌ர் அதை எடுத்து ப‌த்திர‌ ப‌டுத்திவிட்டு, பாஸ்போட்டில் இருந்த‌ அட்ர‌ஸ் வைத்து தேடி வ‌ந்த‌தாக‌வும் கூறியிருக்கிறார். அதோடு த‌ன‌க்கு ஏதாவ‌து ப‌ண‌ம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். அப்பா உட‌னே ஆயிர‌ம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். அத‌ற்கு அவ‌ர் இது போதாது சார், இன்னும் கொஞ்ச‌ம் கொடுங்க‌ என்ற‌வுட‌ன், அப்பா திரும்ப‌வும் ஒரு ஆயிர‌ம் ரூபாய் கொடுத்திருக்கிறார்க‌ள்.

அதை வாங்கிகொண்டு சும்மா போய் இருந்தால‌ ப‌ர‌வாயில்லை. என் அப்பாவிட‌ம் அந்த‌ சூட்கேசில் உள்ள‌ பொருட்க‌ள்(துணி, பேனா, கொஞ்ச‌ம் ம‌ருந்து பொருட்க‌ள்) எல்லாம் அப்ப‌டியே என்னுடைய‌ ஆபிஸ் டிப்போவில் உள்ள‌து யார‌வ‌து வ‌ந்து பெற்றுக் கொள்ளுங்க‌ள். என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அப்ப‌டியே ஒரு அட்ர‌ஸ்சும் எழுதி கொடுத்திருக்கிறார். என்று என்னிட‌ம் அப்பா போனில் சொன்னார். நான் உட‌னே அப்பாவிட‌ம் "என்னுடைய‌ பிரெண்டு ராஜ‌னை வ‌ர‌ சொல்லுகிறேன், அவ‌னிட‌ம் ப‌ண‌ம் கொடுத்து அனுப்புங்க‌ள்" என்று சொல்லிவிட்டு போனை க‌ட் செய்தேன்.

ம‌றுநாள் ராஜ‌ன் ம‌துரைக்கு சென்று அங்கிருந்து என‌க்கு போன் செய்தான், கிருஷ்ண‌மூர்த்தி என்ற‌ பெய‌ரில் ம‌துரை டிப்போவில் யாரும் வேலை செய்ய‌வில்லை என்றும், அவ‌ன் கொடுத்த‌ அட்ர‌ஸ் த‌வ‌று என்றும் சொன்னான்.

குறிப்பு: அப்புற‌ம் விசாரித்த‌தில் தெரிந்த‌து எங்க‌ள் வீட்டிற்கு ச‌ர்டிபிக்கேட் கொண்டு வ‌ந்த‌ அந்த‌ ஆள் தான் திருட‌னாக‌ இருக்க‌ முடியும் என்று சொன்னார்க‌ள். இது போல் ஒரு கும்ப‌லே இருக்கின்ற‌தாம். அவ‌ர்க‌ளுக்கு இது தான் தொழிலாம். "எப்ப‌டியோ த‌லைக்கு வ‌ந்த‌து த‌லைப்ப‌கையோடு போன‌து" என்றுதான் சொல்ல‌ வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு ச‌ர்டிபிக்கேட் டூப்பிளிகேட் வாங்க‌ அலைவ‌தே என‌க்கு பொழ‌ப்பா போயிருக்கும்.


.

.

24 comments:

Paleo God said...

அடேங்கப்பா! பயங்கரமா இருக்கே ஸ்டீபன்!

செ.சரவணக்குமார் said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு ஸ்டீபன். நானும்கூட சென்னை டு சிவகாசி பயணத்தை அத்தனை முக்கியமானதாக நினைத்ததில்லை. நினைத்தால் சனி இரவு கிளம்பி ஊருக்குச் செல்வதும், ஞாயிறு இரவு அங்கிருந்து கிளம்பி சென்னை செல்வதும் வழக்கமாக இருந்தது. லட்சக்கணக்கான பணத்தைக்கூட‌ கூலாக மேலே வைத்துவிட்டுத் தூங்குவதும் வழக்கமானதுதான். இதுவரை இந்த மாதிரி நடக்காமல் தப்பித்தேன்.

ஆமா ஸ்டீபன், சுனாமி எப்படியெல்லாம் யூஸ் ஆகியிருக்குது!!

ஜில்தண்ணி said...

அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

Chitra said...

புளப்புக்கு, எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்க! நல்ல வேளை, அட்ரஸ் வச்சு வீட்டுக்கு வந்து கொள்ளை அடிக்காம விட்டாங்களே.

தமிழ் உதயம் said...

பயணங்கள் பல விதம. இந்தளவுக்காவது கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல வேளை!! ஸ்டீபன் உங்க பாஸ்போர்ட், சர்ட்பிகேட் கிடைத்ததே..

எல் கே said...

நல்ல பதிவு.

@சரவணன்
பொதுவா பணம் எடுத்துகிட்டு போனால் நான் ஒரே இடத்தில பணத்தை வைக்க மாட்டேன். எப்பொழுதும் பிரித்து வைத்துக் கொள்ளுவேன். ஆபத்துக் காலத்தில் உதவும்

Unknown said...

நான் ஒரு முறை கேமிராவை பஸ்ஸில் தொலைத்த போது இதே போலத்தான் போலிஸ் ஸ்டேசனில் நடந்து கொண்டார்கள்..

malar said...

'''இருந்த‌ போலிஸ்கார‌ரிட‌ம் "பாருய்யா!!!! இவ‌ரு ப‌ஸ்ல‌ தூங்குவாராம், அந்த‌ நேர‌த்துல‌ எவ‌னோ ஒருத்த‌ன் சூட்கேசை அடிச்சுட்டு போவானாம், இவ‌ரு தூக்க‌ம் முழிச்ச‌தும் வ‌ண்டியை விட்டு இற‌ங்கி முன்னாடி எந்த‌ போலிஸ் ஸ்டேச‌ன் இருக்கோ அங்க‌ வ‌ந்து க‌ம்பிளைண்ட் ப‌ண்ணுவார‌ம், நாம‌ போய் க‌ண்டுபிடிக்க‌னுமாம்" என்று ந‌க்க‌லாக‌ சிரித்தார்.'''
ஆஹா ந‌ம்ம‌ த‌மிழ் சினிமாவில் காட்டும் போலிஸ் ஸ்டேச‌னுக்கு தான் வ‌ந்துவிட்டோம் போல.

இதை படிக்கும் போது கோபம் வந்தது .

ஆஹா ந‌ம்ம‌ த‌மிழ் சினிமாவில் காட்டும் போலிஸ் ஸ்டேச‌னுக்கு தான் வ‌ந்துவிட்டோம் போல.

இந்த வரிகளில் நல்ல சிரிப்பு..

நொந்து நூடிஸ் தான் போங்க...

பயணம் என்றால் ஒரு வித பயம் தான்...

malar said...

பயணதின் போது பாஸ்போட் ,பணம் போன்ற முக்கிய சாதங்களை மடியில் பௌச்சில் வத்து கட்டுவதே சிறந்து...

vanathy said...

சூட்கேஸ் கிடைத்ததே பெரிய காரியம். அட! போலீஸ் இன்னும் திருந்தவே இல்லை.

ஜெய்லானி said...

பாஸ்போர்ட், சர்டிஃபிகேட் கிடைத்தவரை சந்தோஷம். இல்லாட்டி நாய் அலைச்சல் ,பேய் அலைச்சலாக இருந்திருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு ஸ்டீபன்.

வேண்டும் வேண்டும் விழிப்புணர்வு வேண்டும். மிகவும் நல்ல பதிவு

ஹுஸைனம்மா said...

சர்டிஃபிகேட்டும், பாஸ்போர்ட்டும் தொலைஞ்சா என்ன கஷ்டம்னு தெரியாம விளையாட்டுப் பிள்ளையா இருந்திருக்கீங்க போல!! என்னதான் வழக்கமான பயணங்கள்னு நீங்களும், சரவணக்குமாரும் காரணம் சொன்னாலும், இவ்வளவு நாளும் அதிர்ஷடவசமாத் தப்பிச்சிருக்கீங்கன்னுதான் தோணுது. மலரக்கா சொல்வதுபோல pouch பயன்படுத்துவதே நல்லது.

சிநேகிதன் அக்பர் said...

இந்த காலத்துல இப்படி ஒரு திருடனா.

நியாயப்படி அந்த திருடனுக்கு நீங்க நன்றி சொல்லணுமாக்கும்.

பணத்துக்கு ஆசைப்பட்டாலும் புத்திசாலித்தனமா யோசிச்சு. அந்த சர்டிஃபிகேட்டை உரியவரிடமே ஒப்படைத்து அதற்கு பணமும் கற‌ந்துவிட்டான் என்றால் அவன் படித்த திருடனாகதான் இருக்கவேண்டும்.

எப்படியோ சான்றிதழ்களும் , பாஸ் போர்ட்டும் கிடைத்தது பெரிய விசயம்.

அந்த சம்பவத்திற்கு பிறகு கவனம் கூடியிருக்கும் இல்லையா ஸ்டீபன்.

அந்த போலீஸ் ஸ்டேஷன் சம்பவம் செம காமெடி.

Romeoboy said...

பிளான் பண்ணி திருடுறாங்கப்பா ,,

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கஷ்டம் தான். முடிஞ்ச வரை suitcase எல்லாம் மடில வெச்சுக்கறது தான் safe . கெடச்சது புண்ணியம் தான் போங்க

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கஷ்டம் தான். முடிஞ்ச வரை suitcase எல்லாம் மடில வெச்சுக்கறது தான் safe . கெடச்சது புண்ணியம் தான் போங்க

DREAMER said...

வித்தியாசமான நூதனமான திருட்டுங்க... இது உண்மையிலேயே பல பேருக்கு உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை...! அருமையான பகிர்வுங்க! பணம் போனாலும், சர்டிஃபிகேட் திரும்ப கிடைத்தது பெரிய ஆறுதல்தான்..!

-
DREAMER

ஸ்ரீராம். said...

அஜாக்கிரதையின் விலை...!!

Ramesh said...

ஆயிரம் ரூபா போதாதுன்னு சொன்னதுமே திருடன்னு புரிஞ்சிட்டு நாலு சாத்து சாத்தியிருக்கனும்.

Asiya Omar said...

இதுக்குன்னு ஒரு கூட்டமே அலையுது போல,எங்க குடும்பத்திலும் இருவருக்கு சென்னையில் சூட்கேஸ் திருடு போய் கரெக்டாக சர்டிபிகேட்,பாஸ்போர்ட் மட்டும் போஸ்டில் அனுப்பி விட்டார்கள்,அப்பாடா .இதே மாதிரி பதிவு அவசியம்,அனுபவ படாதவங்க உஷாராக இருப்பாங்க.

Ahamed irshad said...

எதிர்பார்க்காத விஷயங்கள் வாழ்வில் நிறையவே நடக்கும்..அதில் இதுவும் ஒன்று. சான்றிதழ் கிடைத்தவரை நிம்மதி..

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா!! ஒரு மர்ம நாவல் படிச்ச
மாதிரியில்ல இருக்கு. இது ஒரு தொழிலாவே
நடக்குதா!! அவ்வ்.............
பகிர்வுக்கு நன்றி ஸ்டீபன்.

Related Posts with Thumbnails