Friday, July 20, 2012

சமச்சீர் கல்வி_மக்களின் மனம் மாறியதா?


கடந்த‌ கல்வியாண்டு முதல் பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. முன்பு அரசு பள்ளிகளில் ஒரு பாட முறையும், தனியார்களால் நடத்தப்படும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்குத் தனியான பாட முறையும் இருந்து வந்தது. சமச்சீர் கல்வி கொள்கையின் படி எல்லாத் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு ஒரே சீரான கல்வி முறையைக் கொண்டு வந்தது தமிழக அரசு.

சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வருவதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அவைகளில் ஒன்று, அரசு பாடத்திட்டத்திற்கும், தனியார் பாடத்திட்டத்திற்கும் உள்ள இடைவெளி மற்றும் தரம் என்று சொல்லப்பட்டது. தனியார்களால் நடத்தப்படும் பள்ளிகளில் உள்ள பாடத்திட்டம் தரமானதாக இருக்கிறது. அதனால் தான் பெற்றோர்கள் குழந்தைகளை அதிகமாக மெட்ரிக் பள்ளிகளில் சேர்கிறார்கள். இவைகளில் படிக்கும் குழந்தைகள் மத்திய அரசுகளால் நடத்தப்படும் பணிக்கான‌ தேர்வுகளில் எளிதாகத் தேர்ச்சிப் பெறுகிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

இப்போது சமச்சீர் கல்வி கொள்கையின் மூலம் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் ஒரே சீரான பாடத்திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. சமச்சீர் கல்வி தரமாக இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி நான் இங்குப் பேச வரவில்லை. ஆனால் இந்தப் பாடத்திட்டம் தான் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இப்போது பயிற்றுவிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது இந்தக் கல்வியாண்டில் குழந்தைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ சேர்ப்பதில் மக்கள் அதிகமாக‌ ஆர்வம் காட்டியிருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமையோ தலைகீழ்.

வருடத்திற்கு வருடம் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாக நடைபெறுவதைப் போலத் தான், இந்த வருடமும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகமாகியிருகிறது என்று தனியார் பள்ளியில் வேலைப்பார்க்கும் ஆசிரியர் ஒருவர் என்னிடம் கூறியிருக்கிறார். "அந்த பள்ளியில் அதிகமாக டோனேசன் வாங்குகிறார்கள்", "இந்த பள்ளியில் அரசு நிர்ணயித்த தொகையை விடப் பல மடங்கு அதிகமாக வசூலிக்கிறார்கள்", "நோட்டு, புத்தகங்களை அவர்களே விற்கிறார்கள்", "அவர்களிடம் இருந்து தான் யூனிபார்ம் வாங்க வேண்டும் என்று கட்டாயபடுத்துகிறார்கள்" என்று புலம்பும் பெற்றோர்களைத் தான் அதிகமாகச் செய்திகளிலும், விமர்சனங்களிலும் பார்க்க முடிகிறது. எந்தப் பெற்றோருக்கும் தனது குழந்தைகளை அரசு பள்ளியிலோ அல்லது அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலோ படிக்க வைக்க விரும்பவில்லை.

இன்னும் நமது மக்களுக்கு ஆங்கில மொழியின் மீது உள்ள மோகம் குறையவில்லை. தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு இந்த ஆங்கில மொழியின் மோகமும் ஒரு காரணம். "ஆங்கிலம் என்பது அறிவு இல்லை, அதுவும் ஒரு மொழி" என்று யார் புலம்பினாலும் இந்த மக்கள் சாட்டைச் செய்வது இல்லை. இப்போது அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வர இருப்பதாகச் செய்திகளில் படித்தேன். ஒரு வேளை ஆங்கில மொழி கல்வி அரசு பள்ளிகளில் கொண்டு வந்தாலும், எல்லாப் பெற்றோரும் தனது குழந்தையைகளைக் கூட்டி வந்து உடனடியாக அரசு பள்ளியில் சேர்த்து விடுவார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அப்போதும் தனியார் பள்ளியில் தான் எனது பிள்ளைக்கு "டை" கட்டி "சூ" போட சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

"எங்கள் பள்ளியின் பாடத்திட்டம் உலகத் தரத்தில் உள்ளது" என்று சொல்லி வந்த தனியார் பள்ளிகளை நடத்தும் நிர்வாகிகளுக்குச் சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதாக அரசு அறிவித்தவுடன், அடிவயிற்றில் சிறிதுப் பயம் இருக்கத் தான் செய்தது, எங்கே நமது பள்ளிகளில் கூட்டம் குறைந்து விடுமோ என்று. ஆனால் இந்த வருடம் குழந்தைகளின் சேர்க்கைகளைப் பார்த்த பின்பு அவர்களுக்கு மகிழ்ச்சியே.

மக்களின் மனநிலையும் மாற வேண்டும். அதற்கு இந்த அரசும் தேவையான விழிப்புணர்வை மக்களிடம் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகள் நவீனமய‌மாக்க பட வேண்டும். தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே கல்வியின் பெயரால் அடிக்கும் கொள்ளைகள் தடுக்கப்படும்.

குறிப்பு: பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம். இந்த வருடம் எனது வாழ்க்கையில் பல நல்ல விசயங்கள் நடந்துள்ளது. அதனால் தான் என்னால் தொடர்ச்சியாக‌ எழுத முடியவில்லை. நல்ல நிகழ்வில் ஒன்று என‌து திருமணம். இந்த வருட தொடக்கத்தில் நல்ல படியாக நடந்தது. எனது மனைவி அவர்கள் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர். அவருடைய தகவல்களும் இந்தப் பதிவில் உள்ளது.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு... மக்கள் மனம் மாறியதாக எனக்கென்னவோ தெரியவில்லை...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

சாந்தி மாரியப்பன் said...

//மக்களின் மனநிலையும் மாற வேண்டும். அதற்கு இந்த அரசும் தேவையான விழிப்புணர்வை மக்களிடம் கொடுக்க வேண்டும். அரசு பள்ளிகள் நவீனமய‌மாக்க பட வேண்டும். தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே கல்வியின் பெயரால் அடிக்கும் கொள்ளைகள் தடுக்கப்படும்.//

மிகச்சரியான வார்த்தைகள். ஆங்கில மோகம் இருக்கும் வரைக்கும் தனியார் பள்ளிகளையும் அவர்கள் அடிக்கும் கொட்டங்களையும் ஒண்ணும் செய்ய முடியாது.

புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்துகள்..

நாடோடி said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//நல்ல பகிர்வு... மக்கள் மனம் மாறியதாக எனக்கென்னவோ தெரியவில்லை...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...//

வாங்க தனபாலன்.

உண்மைதான் மக்களின் மனம் மாறினால் தான், மாற்றங்கள் வரும்..

நாடோடி said...

@அமைதிச்சாரல் said...
//மிகச்சரியான வார்த்தைகள். ஆங்கில மோகம் இருக்கும் வரைக்கும் தனியார் பள்ளிகளையும் அவர்கள் அடிக்கும் கொட்டங்களையும் ஒண்ணும் செய்ய முடியாது.

புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்துகள்..//

வாங்க சகோ..

இதில் அரசின் முயற்ச்சியும் இருக்கிறது.. ஆனால் இந்த அரசும் அதை செய்வது இல்லை.

வாழ்த்துக்கு ரெம்ப நன்றி :))..

ஹுஸைனம்மா said...

இனிய வாழ்த்துகள் இருவருக்கும்!!

மேடம் ஸ்கூல் டீச்சரா, நல்லது. அப்ப நிறைய பதிவுகளுக்கு மேட்டர் கிடைக்கும்!! :-))))

//ஒரு வேளை ஆங்கில மொழி கல்வி அரசு பள்ளிகளில் கொண்டு வந்தாலும்,//
இப்பவும் சில பள்ளிகளில் இருக்குன்னுதான் நினைக்கிறேன், இல்லியா?

எல்லாப் பள்ளிகளுக்கும் இதை நடைமுறைப்படுத்தினா ஒருவேளை சிறிதளவு மாற்றம் இருக்கலாம். இதோடு, தரம், ஆசிரியர் திறமை, வசதிகள் எல்லாமும் மேம்படுத்த வேண்டும். எல்லாம் செய்தபின், மக்கள் தனியார் பள்ளிகளுக்குப் போவது சிறிதேனும் குறையலாம்.

அரசு மருத்துவமனைகளிம் தரம்தானே, மக்களைத் தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வைக்கிறது?

r.v.saravanan said...

புது மண தம்பதிக்கு வாழ்த்துக்கள்

என்னதிதுநெடு நாட்களாக ஒன்றும் பதிவு வெளியிடவில்லையே என்று நினைத்து கொண்டிருந்தேன்

வாழ்த்துக்கள் நாடோடி

வெற்றிவேல் said...

என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய நாடோடி நண்பனுக்கும், வலைச்சரத்திற்கும் எனது மட்டற்ற நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் என் வலையுலக பயணத்தை ஆரம்பித்த பின் சில நாள்களிலே வலைச்சரத்தை அறிந்து கொண்டேன். அப்படி ஆரம்பித்த பிறகு தினமும் வலைச்சரத்தைப் பார்வை இடுவேன், எங்கேனும் நமது பதிவும் அறிமுகப் படுத்தப்பட்டு இருக்கிறதா என்று பார்ப்பேன். அப்பொழுதெல்லாம் ஏமாற்றம் தான் மிஞ்சும், இன்று நான் தற்ச்செயலாக தங்கள் அறிமுகம் செய்தியைப் பார்த்தபிறகு மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் நண்பா.

எனது நண்பர்களான எத்தனம், சிகரம் பாரதி, வரிக்குதிரை, பாலாஜி பதிவுகள் தொடர்ந்து வலைச்சரத்தில் தொடர்ந்து அறிமுகமான போது எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது, அப்போது எனது தளம் இன்னும் அறிமுகப் படுத்தப் படவில்லை என சிறு வருத்தமும் இருந்தது, தற்போது எனக்கு தங்கள் அறிமுகம் மிகுந்த மகிழ்ச்சியையும், இன்னும் ஊக்கத்தையும் அளித்துள்ளது நண்பா. மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி.

தங்கள் அறிமுகம் எனக்கு புது வாசகர்களையும், புது தெம்பையும் அளித்துள்ளது நண்பா. மிக்க நன்றி...


எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் வலைச்சரம் தான் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....நண்பா

நான் எழுதிய பதிவுகளான மரணத்திற்குப் பின் ஓர் அலசல்
http://iravinpunnagai.blogspot.in/2012/07/blog-post_18.html
மரணத்திற்குப் பின் மறுபிறப்பா?
http://iravinpunnagai.blogspot.in/2012/07/blog-post_26.html
அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்
http://iravinpunnagai.blogspot.in/2012/08/blog-post.html

போன்ற பதிவுகை எதிர்பார்த்தேன், ஆனால் எதிர்பார்க்காத அந்த தன்னம்பிக்கைப் பதிவிற்கு அங்கீகாரம் கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

vimalanperali said...

கல்வி இங்கு வியாபாரம் ஆகிப்போன பின் ஏதும் நிலையாகவில்லை,

கவியாழி said...

மக்களுக்காக மாறவில்லை அரசியலுக்காகவே மாறியதோ?

Related Posts with Thumbnails