Thursday, February 20, 2014

தரி.. கிட.. தோம்.. போடுகிறோம்

கல்வி, மருத்துவம் இவை இரண்டும் மனித வாழ்க்கையில் இன்றியமையாதவை. இன்றைய சூழலில் எத்தகைய கல்லூரிகளில் உயர் கல்வி கற்கலாம், எந்தப் பாடப்பிரிவு சார்ந்த துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது பற்றிய விழிப்புண‌ர்வுகளும் மற்றும் நமது உடலில் இருக்கும் நோய்களுக்குத் தரமான மருத்துவம் எங்குக் கிடைக்கும் என்பது குறித்தும் நாம் அன்றாடம் தரி கிட தோம் போடுகிறோம்.



நான் பனிரென்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது கூட, அடுத்த வருடம் எந்த‌ கல்லூரியில் படிக்க போகிறோம்? எந்தத் துறை சார்ந்த படிப்புகளைத் தேர்தெடுக்கப் போகிறோம்? என்பது பற்றிய முழுமையான புரிதல் என்னிடம் இல்லை. எனக்குப் பனிரென்டாம் வகுப்பில் எண்பது விழுக்காடுக்கு மேல் மதிப்பெண்கள் உண்டு. அந்த மதிப்பெண்களுக்குக் கண்டிப்பாகப் பி.இ பட்டயப் படிப்புப் படித்திருக்க முடியும். ஆனால் நான் என்ட்ரன்ஸ் தேர்வு எழுதவில்லை. என்ட்ரன்ஸ் தேர்வு எழுதவில்லை என்று சொல்லுவதை விட அதைப் பற்றிய அறிதல் மற்றும் முழுமையான‌ புரிதல் என்னிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கும் என்னிடம் என்று சொல்லுவதை விட என்னுடைய குடும்பதில் உள்ளவர்களையும் சேர்த்து தான் சொல்ல வேண்டும். உறவினர்கள் சிலருக்கு தெரியும், அவர்களிடம் அப்பா கேட்டாலும் "அது படிக்க வைக்க ரெம்பச் செல‌வாகும், படிப்பும் மிகக் கடினமாக இருக்கும், உன் பிள்ளையால் படிக்க முடியாது" என்று ஏதாவது அப்பா முன்னால் சொல்லிவிடுவார்கள். அவர்கள் ஏதோ, என் மீதோ அல்லது அப்பாவின் மீதோ உள்ள அக்கறையில் சொன்னதாக எடுத்துக் கொள்ள முடியாது, எங்கே இவனுடைய பையன் எல்லாம் பி.இ படிப்பதா என்பது தான் மேலோங்கி இருந்தது.

இப்பொழுதும் கிராமங்களில் படிக்கும் மாணவர்களும் எதிர்காலம் குறித்த முழுமையான புரிதலுடம் எந்தத் துறையையும், கல்லூரியையும் தேர்ந்தெடுப்பது இல்லை. அந்தக் கிராமத்தில் முன்பு படித்து முடித்து இப்போது வேலையில் சேர்ந்து அதிகமாகச் சம்பளம் வாங்குபவர்கள் என்று பேசப்படுகிற நபர்கள் படித்த‌ படிப்பையே அதிகமாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அப்படித் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதாகச் சொல்லும் நபரிடம் கூட அந்தப் படிப்பை பற்றியோ அதற்கு இருக்கும் எதிர்காலம் பற்றியோ கேட்பது இல்லை. உண்மை என்னவெனில் அதிகம் சம்பளம் வாங்குவதாகச் சொல்லப் படும் நபர் மெக்கானிக்கல் படித்து விட்டு நண்பர்களின் உதவியுடன் ஐடி துறையில் வேலை பார்பவராக இருப்பார்.

சமீபத்தில் என்னுடைய அலுவலகத்திற்குத் துறை வாரியாக இஞ்சினியரிங்கள் முடித்தவர்கள் தேவை பட்டார்கள். வந்த ரெஸ்யூம்களில் அதிக அளவில் எலக்ட்ரானிக் மற்றும் கம்யுனிக்கேசன் படித்தவர்கள். மிகக் குறைந்த அளவே இன்ஸ்ட்ருமென்ட் படித்தவர்களில் ரெஸ்யூம் வந்தது. எங்களுக்கோ அதிக அளவில் இன்ஸ்ட்ருமென்ட் படித்தவர்கள் தேவைப் பட்டார்க்ள், பலரிடம் சொல்லியும் போதுமான அளவு கிடைக்கவில்லை. நான் பாலிடெக்னிக்னில் படித்துக் கொண்டிருக்கும் போது தான் இரண்டு மூன்று கல்லூரிகளில் இந்த இரண்டு துறைகளும் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டது, அப்போது பலரும் ஆர்வமாக அதில் சேர்ந்தார்கள். அந்த‌ கல்லூரிகளில் இன்ஸ்ட்ருமென்ட் படித்தவர்களின் ரெஸ்யூம் கேட்ட போது வருடா வருடம் மாணவர்களில் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அந்தத் துறையை இரண்டு வருடத்திற்கு முன்பே எடுத்துவிட்டோம் என்றார்கள். ஆனால் இந்த எலக்ட்ரானிக் மற்றும் கம்யுனிக்கேசன் துறையில் அதிகம் பேர் விரும்பி தேர்ந்தெடுத்துப் படிப்பதனால் இரண்டு பிரிவுகளாக வைத்து வகுப்புகள் நடத்துவதாகத் தெரிவித்தனர். நான் அறிந்த வரையில் இந்தத் துறைக்கு என்று தனியாக வேலை வாய்ப்பு என்பது குறைவு. இந்தத் துறையில் படித்தவர்கள் பெரும்பாலோர் ஐடி துறையில் தான் பணி செய்கிறார்கள். எலக்ட்ரானிக் மற்றும் கம்யுனிக்கேசன் துறையைத் தேர்ந்தெடுத்து படித்த பலரும் படிப்பிற்குச் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு வேலையில் இருப்பதைப் பார்க்க முடியும். பெரும்பாலும் கால் சென்டர்களிலும், மார்கெட்டிங்களிலும் இவர்களை அதிகமாகப் பார்க்கலாம். இவர்களிடம் எதனால் இந்தத் துறையைத் தேர்தெடுத்துப் படித்தீர்கள்? என்று கேட்டால் சிலர், நான் மேலே சொன்னது போல் யாரவது ஒரு நபரை கையைக் காட்டுகிறார்கள், இன்னும் சிலர் கல்லூரியில் நல்ல எதிர்காலம் இருப்பதாகச் சொல்லியதால் படித்ததாகச் சொல்லுகிறார்கள்.

நான் படிக்கும் காலத்தில் இருந்தது போல் அல்லாமல், இப்போது ஊடகங்களின் வாயிலாகவும், இணையத்தில் மூலமாகவும் அதிகமான பல புதிய துறை சார்ந்த‌ படிப்புகள் பற்றிய தகவல்கள் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனாலும் கிராமங்களில் படிக்கும் பலரும் புது விதமான துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது போல் தெரியவில்லை.

மேலே சொன்னது போல் உயர் கல்வி கற்பதில் தடுமாறுவது போல் சமீப காலமாக நடுத்தர மக்கள் தடுமாறும் இன்னொரு இடம் மருத்துவ மனை மற்றும் மருத்துவர்கள். எந்த நோய்க்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்பதும் அவர்கள் தரும் மருத்துவத் தீர்வுகள் எந்தளவு நமக்குப் பயனளிக்கிறது என்பதும் அனைவருக்கும் சொந்த அனுபவங்கள் இருக்கும். பெரும்பாலான மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்குச் செய்யச் சொல்லும் லேப் டெஸ்ட்கள் எல்லாம், அவர்களிடம் அந்த லேப் எக்கீயுப்மென்ட் இருக்கிறது என்பதற்காகவே சொல்ல படுபவைகளாக இருக்கும்.

எந்த ஒரு நோய் என்று மருத்துமனைகளுக்குச் சென்றாலும், சாதரணமாக இரத்தம், சிறு நீர் டெஸ்ட் மற்றும் ஒரு ஸ்கேன் அல்லது எக்ஸ்-ரே எடுத்து பரிசோதித்த பின்பு தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கிறார்கள். இதில் கொடுமையான விசயம், ஒரு மருத்துவ மனையில் எடுத்த ரிப்போர்ட்களை அடுத்த மருத்துவ மனைகள் ஏற்றுக் கொள்வதில்லை. புதிதாக அனைத்து டெஸ்ட்களும் அந்த மருத்துவ மனையில் எடுக்க வேண்டும். எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்களையும் பார்த்து விட்டு உங்கள் உடம்புக்கு ஒன்றும் இல்லை, இந்த மாத்திரையை ஒரு வாரம் சாப்பிடுங்கள் சரியாகிடும் என்கிறார்கள். நோயிக்கான மருந்து செலவு 100 ரூபாய் என்றால், இந்த டெஸ்ட்களுக்கும் ஆகும் செலவு 1000 முதல் 2000 வரை. சிலர் கேட்கலாம் "இந்த டெஸ்ட்களை எடுத்து உடலில் வேறு ஏதும் பிரச்சனை இல்லை என்று அறிந்து கொள்வது நல்லது தானே என்று!!" என்னுடைய எண்ணம் முதலில் அந்த நோயிக்கான மாத்திரையைக் கொடுத்து ஒரு வார காலம் உண்ண செய்து குறைய வில்லை என்றால் இந்த டெஸ்ட்களைப் பரிந்துரைக்கலாமே!!

பெரும்பாலான மருத்துமனைகளில் இப்போது எல்லா நோயிகளுக்கும் சர்வ லோக நிவாரணியாக‌ அறுவை சிகிச்சையைப் பரிந்துரை செய்வது இன்னும் ஒரு கொடுமையாக இருக்கிறது.

மருத்துவ மனைகளில் எனக்கு நடந்த அனுபவங்களை இந்தப் பதிவில் பகிர்ந்தால் இது மிகப் பெரிய பதிவாக மாறிவிடும். வரும் பதிவுகளில் அவைகளைப் பகிருகிறேன்.


.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கிராமங்களில் முன்பை விட இப்போது எவ்வளவோ முன்னேற்றம் வந்துள்ளது... இன்னும் வளரும்... வளர வேண்டும்...

மருத்துவம் என்றே தொழில் ஆகி விட்டது... வேறு எதுவும் சொல்வதற்கில்லை...

Related Posts with Thumbnails