Thursday, June 9, 2016

நாம் தான் உணவிற்குக் கையேந்தும் தலைமுறைகள்!!

இன்றைக்கு நம்முடைய உணவு பழக்கவழக்கம் எப்படி இருக்கிறது என்பதை நம்முடைய வீட்டில் சமையல் அறையில் இருக்கும் குளிர்சாதன பெட்டியைத் திறந்து பார்த்தாலே தெரிந்துவிடும். குறைந்தது மூன்று பாத்திரங்களாவது எப்போதும் அந்தப் பெட்டியில் இருக்கும், நேற்று வைத்த சாம்பார், இரண்டு நாட்கள் முன்பு வைத்த காரக் குழம்பு, ஒரு வாரத்திற்கு முன்பு வைத்த ரசம் என்று ஏதாவது ஒன்றை மாற்றி மாற்றி தேதி வாரியாக பிரித்து வைத்திருப்போம். இவையில்லாமல் பாதி எடுத்துவிட்டு மீதம் வைத்திக்கும் தயிர் பாக்கெட், ரெடிமேடாக கடைகளில் வெட்டிக் கிடைக்கும் ப்ரோசன் காய்கறிகள் என்று பட்டியல் நீளும்.

"விரைவாகச் சமைக்க முடிகிறது" என்று சொல்லிக்கொண்டு, நாம் சமைக்கும் உணவுகள் நம் உடலை எந்தளவிற்கு மாற்றத்திற்கு உட்படுத்துகிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறோம். காலையிலேயே பிரட் ஆம்லெட், நூடுல்ஸ் போன்ற வெளிநாட்டு  உணவு வகைகளை நம்முடைய குழந்தை களின் தட்டில் பரிமாற தொடங்கிவிட்டோம், நமது பாரம்பரிய உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட மாவுகள் மூலம் தயாரிக்க தொடங்கிவிட்டோம். இன்ஸ்டன்ட் உப்புமா முதல் இன்ஸ்டன்ட் பரோட்டா வரை வாங்கி குளிர்சாதன பெட்டியில் அடுக்கி விடுகிறோம்.

இன்றைய அவசர உலகில் எல்லாவற்றிற்கும் சுலபமான வழியைத் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய நாம் உணவுப் பொருட்கள் சமைப்பதற்கும் குறுக்கு வழிகளை நாடத் தொடங்கிவிட்டோம், பதப்படுத்தப் பட்ட உணவுப்பொருட்களுக்கு நாம் அடிமையாக மாறிவிட்டோம். அதனால் தான் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருட்களின் குவியல்கள் பெரிய பெரிய சூப்பர் மார்கெட்களில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உள்ளது. சிலர் வீட்டில் சமைக்கும் சிக்கன் குழம்பு பிடிக்கவில்லை என்று ஓரம் தள்ளுகிறார்கள், ஆனால் கடைகளில் வாங்கும் புரோஸ்டடு சிக்கன் ஒரு பக்கெட்டை காலி செய்கிறார்கள், குழந்தைகளும் பழங்கள் சாப்பிட பிடிக்கவில்லை, ஆனால் பாட்டில்களில் வைத்திருக்கும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளை வாங்கித் தாருங்கள் என்றும் சொல்லுகிறார்கள். முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் எல்லாம் வயோதிகர்களும், நோயாளிகளும் உண்ணும் உணவாக இன்றைய தலைமுறைகள் எண்ணுகிறார்கள். அதற்கு மாற்றாகப் பன்னாட்டு நிறுவனங்களால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குப்பை உணவுகளின் சுவைகளுக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கு இப்போது இருக்கும் நிறுவனங்கள் போதாது என்று, இன்றைக்குப் பல கார்பரேட் சாமியார்களும் களத்திற்கு குதித்துள்ளார்கள். "ஐந்தே நொடியில் ஆரோக்கியமான உணவு தயார்!" என்று நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் விளம்பரங்கள் தான் இன்றைக்கு நமது வீட்டுத் தொலைக்காட்சியை நிறைக்கிறது. இப்போது நமது சமையல் அறையில் நிறைந்திருக்கும் பொருட்கள் அனைத்தும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் தான். நாம் எதை உண்ண வேண்டும் என்பதைக் கூட இன்றைக்குப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. அத்தகையை உணவு பழக்க வழக்கத்திற்கு நாமும் அடிமையாகி, நம்முடைய அடுத்த தலைமுறையையும் அதற்கு பழக்கப் படுத்தி விட்டோம்.

காலையில் எழுந்து பல் துலக்குவதற்கு உபயோகிக்கும் பற்பசையில் ஆரம்பித்து, இரவு தூங்குவதற்கு முன்னால் உபயோகப்படுத்தும் மவுத் வாஷ் வரைக்கும் சந்தை படுத்துவதில் பல பன்னாட்டு நிறுவனங்கள் அனைவரின் கவனத்தை விளம்பரங்கள் மூலமாக ஈர்ப்பதில் போட்டி போடுகின்றன. இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தாமல் எவரும் வாழவே முடியாது என்ற ஒரு மாயத் தோற்றத்தை நிறுவ முயலுகிறார்கள்.

நம்முடைய நுகர்வு கலாச்சாரத்தை உரம் போட்டு வளர்ப்பதற்கு "விளம்பரம்" என்னும் உத்தியை இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றன. தொலைக்காட்சி, பத்திரிக்கை மற்றும் இணையம் என்று எந்தப் பக்கம் நீங்கள் நுழைந்தாலும் வலுக்கட்டாயமாக அவர்களின் விளம்பரங்களைப் பார்க்க வைத்துவிடுகிறார்கள். ஏதோ ஒரு தேவைக்காக ஒருமுறை வாங்கும் பொருட்களை, மறுமுறை நாடிச்சென்று வாங்க வைத்து, பின்னர் அதற்கு நாம் அடிமையாகும் யுத்தியைப் பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பாக செய்கின்றன. கடைகளுக்குச் சென்றுதான் வாங்க முடியும் என்றிருந்த பொருட்களை வீடுத் தேடிவந்து கொடுக்கும் ஆன் லைன் வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதிகப்படியான நுகர்வு கலாச்சாரம் நம்முடைய சுயச் சார்பை அழித்திருக்கிறது. நம்முடைய சுயச் சார்பை அழித்ததில் தான் பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றிகள் அடங்கியிருக்கிறது, உதாரணமாக என்னுடைய பால்ய வயது வாழ்க்கையை எடுத்துக்கொள்ளலாம். எனது வீட்டைச் சுற்றி ஒரு இருபது சென்ட் நிலம் உண்டு. அந்த நிலத்தைச் சுற்றியிருந்த வேலியில் அப்பா அன்னாசி செடி நட்டு வைத்திருந்தார்கள், அதிலிருந்து வீட்டிற்குத் தேவையான அன்னாசிப் பழம் கிடைக்கும். மேலும் அதில் ஒரு நான்கு வகையான மாமரங்கள் மற்றும் இரண்டு பலாமரம், இரண்டு கொல்லாமரம்(முந்திரி மரம்) மற்றும் ஒரு புளிய மரமும் உண்டு. இந்த மரங்களை எல்லாம் என்னுடைய தாத்தா நட்டு வளர்த்தாக அப்பா சொல்லுவர்கள். சிறிய மரங்களாக மூன்று நாட்டுக் கொய்யா மரம், இரண்டு சீத்தாப்பழம் மரம் மற்றும் ஒரு பப்பாளி என்று அப்பா நட்டு வைத்திருந்தார்கள்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டில் பசு மாடு ஒன்று எப்போதும் இருக்கும். நான் பள்ளிப் படிக்கும் போது வீட்டில் சாண எரிவாயுவைப் பயன் படுத்தித்தான் சமையல் செய்வார்கள். அதிலிருந்து கிடைக்கும் கழிவு உரத்தைக் கொண்டு வீட்டில் தோட்டங்கள் போடுவது தான் எங்களுடைய பொழுதுபோக்காக இருந்தது. அக்கா பூச்செடிகள் வளர்ப்பதில் ஆர்வமாக இருப்பாள், நானும் எனது அண்ணனும் கீரை, அவரை, கத்தரி, தக்காளி போன்ற காய்கறிகளை நட்டு வளர்ப்போம். வீட்டின் கொல்லைப்புறத்தில் பாத்திரங்கள் கழுவும் கழிவு நீர் பாயும் இடத்தில் எப்போதும் இரண்டு வாழைமரங்கள் நிற்கும். வீட்டின் அருகில் உள்ள நிலம் அல்லாமல் ஊருக்கு வெளியில் ஒரு வயலும், சிறிய தென்னம் தோப்பும் எங்களுக்கு உண்டு.

நான் மேலே சொல்லியிருக்கும் அனைத்துமே எங்கள் வீட்டிற்குத் தேவையான உணவு பொருட்களில் 75 சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்துவிடும். நெல்லிருந்து கிடைக்கும் அரிசியிலிருந்து மதியத்திற்கும் இரவிற்கும் தேவையான சோறு மற்றும் காலை உணவான புட்டு, இடியாப்பம், ஆப்பம் செய்து கொள்ளலாம். இரண்டுமுறை நெல் பயிரிட்டால் ஒருமுறை உளுந்து, சிறுபயிறு என்று வயலில் விதைப்போம், எனவே தோசை இட்லிக்குத் தேவையான உளுந்து கிடைத்துவிடும். வீட்டில் பசு மாடு இருப்பதால் சுத்தமான பாலுக்குப் பஞ்சம் இல்லை எனவே காப்பி, டீ போன்றவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. முக்கனிகளான மா, பலா, வாழை இவை மூன்றும் எங்கள் வீட்டு தோட்டத்தில் இருப்பதால், எங்களின் உணவு தேவைக்கான பழங்கள் வீட்டு நிலத்தில் நடப்பட்டிருக்கும் மரங்களிலிருந்தே கிடைத்துவிடும்.

எனது வீட்டின் முன் நிற்கும் மிளகு கொடி


நாங்க! கன்னியாகுமரி ஆளுங்க! தேங்காய் இல்லாமல் குழம்பு என்பது எங்கள் அகராதியில் கிடையாது, தினமும் ஒரு அரைமுறி தேங்காயாவது காலி செய்துவிடுவோம். தென்னந் தோப்பிலிருந்து கிடைக்கும் தேங்காயும், அதிலிருந்து செக்கில் ஆட்டப்பட்டுக் கிடைக்கும் எண்ணெயும் சமையலுக்கு தாராளமாக போதும். குழம்பு வைப்பதற்கான புளி வீட்டில் இருக்கும் மரத்திலிருந்து கிடைத்துவிடும். எனது அம்மா மாதம் ஒருமுறை வத்தல், மல்லி, மஞ்சள் என்று ஒரு ஒன்பது வகையான மளிகைப் பொருட்களை கடையிலிருந்து வாங்கிப் பக்குவப்படுத்தி பொடி செய்து வைத்துக்கொள்வார்கள். இந்தப் பொருட்களுடன் சோப்புகள் மற்றும் சிறிய வெங்காயம் போன்றவை தான் பெரும்பாலும் நாங்கள் கடைகளிலிருந்து வாங்கும் பொருளாக இருக்கும்.

அம்மா பொடிச் செய்து வைத்திருக்கும் குழம்பு தூளைத் தான் மீன் குழம்பு வைப்பது முதல் மட்டன் குழம்பு வைப்பது வரை உபயோகப்படுத்துவார்கள். வீட்டில் எப்போதும் பத்து நாட்டுக் கோழிகளுக்கு குறையாமல் வளரும், அதனால் முட்டைகளுக்கும் வீட்டில் பஞ்சம் இல்லை. ஊரில் திருவிழா மற்றும் வேறு விசேசம் என்றால் வெடைக் கோழியும் அடிக்கலாம். வாரத்தில் ஆறு நாட்களும் என் வீட்டில் மீன் குழம்பு இருக்கும், அதோடு கூட வீட்டில் விளையும் கீரைகள் மற்றும் அவரைப் போன்றவற்றால் செய்யப்பட்ட பொரியல்களும் இருக்கும், வார இறுதி நாளில் மட்டும் மட்டன் அல்லது சிக்கன் இருக்கும். இவ்வாறு நாங்கள் உண்ணும் உணவுப் பொருளில் பெரும்பகுதி ரசாயனங்களின் கலப்பு இல்லாமல் நம்முடைய நிலத்தில் விளைந்தவையாக இருந்தது.

வணிகர்களின் போராட்டம் காரணமாக ஒரு வாரம், இரண்டு வாரம் எல்லாம் கடைகள் திறக்கப்படவில்லையென்றாலும் அந்த காலத்தில் என்னுடைய அம்மா உட்பட எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள், காரணம் சுயச் சார்பு, இன்றைக்கு ஒரு நாள் கடைகள் அடைத்தாலே என்ன நிலமை என்பதை நீங்களே தெரிந்து வைத்திருப்பீர்கள். பால் கிடைக்கவில்லை, குடி தண்ணி கிடைக்கவில்லை என்ற குரல்களை தான் எங்கும் கேட்க முடியும். எப்படி நாம் கையேந்தி நிற்கிறோம் என்பதை இதைவிடத் தெளிவாக விளக்கிவிட முடியாது.

சமீபத்தில் விகடனில் வந்த ஒரு கட்டுரையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த திரு.பெலிக்ஸ் அவர்களின் விவசாய முறையைப் பற்றி படித்தேன். அவர் தன்னுடைய சாப்ட்வேர் வேலையை உதறித் தள்ளிவிட்டு ஊரில் வந்து தனக்கு சொந்தமான 34 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செய்து வெற்றி கண்டுள்ளார். அவருடைய நிலத்திலிருந்து கிடைக்கும் விளைபொருட்கள் அவருடைய குடும்பத்தின் 80 சதவீத உணவு தேவையை நிவர்த்தி செய்வதாக சொல்லுகிறார்.இவரிடம் ஒரு பேட்டியில் உங்களின் உணவு தேவையை நீங்களே பூர்த்தி செய்து கொள்வது பற்றி அருகில் இருப்பவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டும் போது, அவர் சொல்லியது அருகில் இருப்பவர்களை விட நம்மை ஆளும் அரசு என்னை எப்படிப் பார்க்க போகிறது என்பது தான்!

இவரின் விகடன் கட்டுரை படிக்க:

34 சென்ட்...

இவரின் இனையதளதிற்கு செல்ல:

சுதந்திரமான வாழ்க்கை

உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் என்று எல்லா ஆக்கங்களையும் நம்மை ஆளும் அரசுகளே முன்னின்று விரிவாக்கம் செய்யும் போது சுயச் சார்புடன் ஒருவன் வாழ்கின்றான் என்றால் அவனை இந்த அரசுகள் எப்படிப் பார்க்கும்?.


.

0 comments:

Related Posts with Thumbnails