Friday, February 19, 2010

அம்மா(விற்கு)வின் பரிசு..

அதிகாலை வேளை!. கண் மூடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்த லட்சுமி ஏதோ திடுக்கிட்டவள் போல் படுக்கையில் இருந்து எழுந்தாள். பக்கத்து அறையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருப்பது அரைகுறையாக மூடப்பட்டிருந்த கதவு வழியே தெரிந்தது. உடனே ஏதோ யோசனை செய்தவள் போல் எழுந்து படுக்கையறையை விட்டு வந்து சமையலறைக்கு சென்றாள். முகத்தை கழுவி விட்டு ஏற்கன‌வே திரிப் போடப்பட்டு வைக்கப்பட்டிருந்த திரி ஸ்டவ்வில் ஒரு தீக்குச்சியை கொளுத்திப் போட்டாள். தீசுவாலையானது எல்லா திரிகளிலும் பற்றி எரிவது வரை காத்திருந்து பின்பு அதன் மேல் உருளை வடிவ அலுமினிய பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வைத்தாள். சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. அதில் இரண்டு மேஜைகரண்டி தேயிலை தூள் போட்டு அடுப்பில் இருந்து இறக்கி, ஏற்கன‌வே
சக்கரைப் போடப்பட்டு தயாராய் இருந்த‌ இரண்டு கப்பில் தேயிலை நீரை ஊற்றினாள்.

ஒரு கப்பை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியே வந்து மின்விளக்கு எரிந்த அறையை நோக்கி நடந்தாள். அதுவரை மர நாற்காலியில் அம‌ர்ந்து குனிந்து புத்தகத்தை பார்த்திருந்த செல்வனின் தலையானது அருகில் காலடி சப்தம் கேட்கவே தலை நிமிர்ந்து பார்த்தான். அருகில் லட்சுமி கப்பில் தேயிலைநீருடன் நின்றாள். நான் தான் படிக்க வேண்டும் என்று காலையிலேயே எழுந்திருக்கிறேன். உனக்கு என்னம்மா வந்தது இவ்வளவு சீக்கிரமாய் எழுந்து தேயிலை போட வேண்டுமா?. என்று பொய் கோபத்துடன் அம்மாவை நோக்கினான். அதற்கு வழக்கமான புன்னகையை மட்டும் பதிலாக‌ உதிர்த்து விட்டு தேயிலை கப்பை செல்வன் கையில் திணித்து விட்டு அவன் தலைமுடியை கையால் கோதி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

முந்தினம் இரவும் அதிக நேரம் கண் முழித்து படித்து தூங்கிவிட்டு இன்றைக்கும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து படிப்பதால் செல்வத்துக்கும் அப்போது தேயிலை தேவையான ஒன்றாகவே இருந்தது. ஆனாலும் அவனுக்காக அம்மா கஷ்டபடுவதை விரும்பாததால் தான் லட்சுமியிடம் அவ்வாறு பேச நேர்ந்தது. கப்பில் இருந்த தேயிலை நீரை அருந்திக்கொண்டே பார்வை புத்தகத்தின் மீது திருப்பினான். பக்கங்களை புரட்டிய படியே புத்தகத்தில் தீவிரமாக‌ஆழ்ந்து போனான். தீடிரென ஏதோ ஞாபகம் வந்தது போல் அருகில் இருந்த கடிகார‌த்தை பார்த்து விட்டு "அய்யோ" என்று கத்திவிட்டு குளிக்க ஓடினான். கொல்லை புறத்தில் லட்சுமி தண்ணீர் நிரப்பியிருந்த தொட்டியில் இருந்து மொண்டு குளிக்க தொடங்கினான். குளித்து முடித்துவிட்டு வீட்டிற்குள் வந்தான். அதற்குள் லட்சுமி காலை உணவுக்கு ஆவிபறக்க இட்லியும். மதியம் கல்லூரிக்கு செல்வம் எடுத்து செல்ல தக்காளி சாதமும் கட்டி ரெடியாக வைத்திருந்தாள். துணிமாற்றிவிட்டு வந்தவன் அம்மாவிடம் "அப்பா இன்னைக்கு வந்து விடுவார் இல்லையா அம்மா?" என்று கேட்டான். ஆமாப்பா இன்னைக்கு வந்து விடுவேன் என்று தான் மகேஷ் அப்பாவிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார், என்று மறுமொழி கூறினாள். இல்ல‌ அம்மா நாளைக்கு தான் பரிட்சைக்கு பணம் கட்ட கடைசி நாள், அதனால தான் கேட்டேன் என்று கூறிக்கொண்டே எடுத்து வைத்திருந்த இட்லியை சாப்பிட்டான். நீ ஒண்ணும் கவலை படாம கலேஜ்க்கு போ, நாளைக்கு கண்டிப்பா கட்டிவிடலாம் என்றாள் லட்சுமி. பாதிசாப்பிட்டும் சாப்பிடமலும் கட்டிவைத்திருந்த தக்காளி சாதத்தை பேக்க்குள் திணித்து விட்டு வீட்டிற்கு வெளியே நடந்தான். லட்சுமி வாசலில் நின்று மகன் போன பாதையை பார்த்து கொண்டே யாரையோ எதிர்பார்த்து காத்து நின்றாள்.

லட்சுமி வாசலில் எதிர்பார்த்திருப்பது அவளுடைய புருசன் முருகேசனுக்காகத் தான். இவர்களுக்கு செல்வம் ஒரே பையன். முருகேசன் ஒரு கட்டிடத் தொழிலாளி. லட்சுமி மற்றும் முருகேசனின் நெடுநாளைய கனவு செல்வத்தை எப்படியாவது இன்சினீயர் படிப்பு படிக்க வைப்பது. அதற்கு ஏற்றபடி செல்வமும் படிப்பில் வெகு கெட்டியாக இருந்தான். பத்தாம் வகுப்பில் அந்த பள்ளியில் முதல் மாணவனாகவும், பனிரென்டாம் வகுப்பில் ஆயிரத்தி இருநூறு மதிப்பெண்ணுக்கு ஆயிரத்தி நூற்றி முப்பது மதிப்பெண்களும் எடுத்து பொறியியல் கல்லூரில் இடம் வாங்கி விட்டான். செல்வத்தை பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்க ஆகும் செலவு தொகையை முருகேசன் கையில் வைத்திருக்க வில்லை. ஏனென்றால் சில‌வருடம் முன்பு தான், இது வரை சம்பாதித்தப் பண‌த்தைக் கொண்டு இரண்டு அறைகள் கொண்ட வீட்டை கட்டிமுடித்திருந்தான். முருகேசன் வீடு கட்டும் வரை உள்ளூரில் தான் வேலை செய்து வந்தான். ஆனால் வீடுகட்டி முடிந்த‌ பிறகு உள்ளுரில் தினமும் வேலை கிடைப்பதில்லை. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே கிடைத்தன. எனவே தனக்கு தெரிந்த நண்பன் மூலமாக கேரளாவில் ஒரு கண்டிராக்கிடம்(தென்பகுதி நடைமுறை சொல்) வேலையில் சேர்ந்தான். மாதத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வருவான். கேரள வேலையில் சம்பாதித்த பணத்தையும் மற்றும் லட்சுமியின் சில நகைகளையும் கொண்டு செல்வத்தை பொறியியல் படிப்பில் மூன்று வருடங்கள் படிக்க வைத்துவிட்டான். தற்போது செல்வம் படிப்பது இறுதி ஆண்டு. இந்த வருடம் படிப்புக்கு கட்ட வேண்டிய கட்டண‌த்தை பற்றிதான் இன்று காலையில் லட்சுமிடம் செல்வம் கேட்டிருந்தான். லட்சுமி போன மாதம் முருகேசன் வந்த போதே பணத்தை பற்றி சொல்லியிருந்தாள். அதற்கு முருகேசன் தன்னுடைய கண்டிராக்கிடம் முன்பணம் கேட்டு வாங்கி வருவதாக சொல்லியிருந்தான்.

மணி பத்தாயிற்று, முருகேசன் இன்னும் வரவில்லை. வாசலில் நின்ற லட்சுமி கவலையுடன், சமையலறை வந்தாள். வழ‌க்கமான வேலைகளில் மனம் செல்ல வில்லை. ஏதோ வேண்டா வெறுப்பாய் சிதறி கிடந்த பாத்திரங்களை கழுவினாள். சற்று நேரத்தில் வெளியே நாய் குரைக்கவே வீட்டு வாசலில் வந்து பார்த்தாள். அவள் எதிர் பார்த்தது போல முருகேசன் வழக்கமாக கொண்டுவரும் தோள்பையுடன் வந்து கொண்டிருந்தான். வீட்டில் உள்ள ஆட்களுக்கும் வெளியாட்களுக்கும் உனக்கு இன்னும் வித்தியாசம் தெரியவில்லை என்று நாயை கடிந்து கொண்டு முருகேசனை வாங்க! என்று சொல்லி சிரித்துவிட்டு கையில் இருந்த பையை வாங்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். முருகேசனின் வழக்கமான புன்னகை முகத்தில் இல்லை என்பதை வழியில் வ‌ரும் போதே லட்சுமி கண்டு கொண்டாள். செல்வம் கலேஜ்க்கு போய்விட்டானா? என்று கேட்டு கொண்டே வீட்டில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் முருகேசன். அவன் அப்பவே போய் விட்டான் என்று சொல்லிக்கொண்டு கையில் கொண்டு வந்த தண்ணீரை முருகேசனிடம் கொடுத்தாள். காலையில் எங்கு சாப்பிட்டீர்கள்? என்ன சாப்பிட்டீர்கள் என்ற விசாரிப்புகளை எல்லாம் விசாரித்து விட்டு மெதுவாக பணத்தைப் பற்றி கேட்டாள் லட்சுமி. நான் ஒரு வாரத்திற்கு முன்னமே கண்டிராக்கிடம் கேட்டு வைத்திருந்தேன், அவரும் தருவதாக சொல்லி இருந்தார். ஆனால் இரண்டு நாள் முன்னதாக கண்டிராக் வீட்டில் இருந்து அவருடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று அவருடைய மனைவி போன் பண்ணினதா என்னிடம் சொல்லி விட்டு போனவர் திரும்ப வரவில்லை என்று கவலையுடன் பதில் சொன்னான் முருகேசன். இதை கேட்ட லட்சுமி சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, அப்புறம் "ஒண்ணும் கவலை பட வேண்டாம்" எப்படியும் இன்னைக்கு புரட்டி விடலாம் என்று முருகேசனுக்கு ஆறுதல் கூறினாள். அதன் மர்மம் என்ன என்று அவள் முகத்தை பார்த்தான் முருகேசன்.

மாலை கல்லூரி முடிந்து செல்வம் வீட்டிற்கு வரும் போதே வீட்டு முற்ற‌தில் அப்பா அமர்திருப்பதை பார்த்தான். அப்பாவிடம் நலன் விசாரிப்புகள் எல்லாம் முடித்து விட்டு அடுத்த மாதம் தன‌து கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியு நடக்க போகிறது என்று உற்சாகத்துடன் சொல்லி விட்டு அம்மா? என்று அழைத்த வாறு வீட்டிற்குள் நுழைந்தான். சமையலறையில் இருந்து சிரித்துக் கொண்டே இரண்டு கப்பில் காப்பியுடன் வெளியே வந்தாள் லட்சுமி. அம்மாவின் கழுத்தை பார்த்தவுடன் செல்வத்தின் முகம் மாறியது. அம்மா உன் கழுத்தில் இருந்த செயின் எங்கே? என்று கேட்டான். அதை விடுடா என்று சமாளித்தாள் லட்சுமி. அவன் விடவில்லை எங்கே என்று திரும்பவும் கேட்டான். அது உன்னுடைய கழுத்தில் இல்லாமல் உன் முகம் எப்படியே இருக்கிறது என்று சொன்னான். அப்பா கேட்ட இடத்தில் பணம் கிடைக்கவில்லையாம், உனக்கு பரிட்சைக்கு பணம் கட்ட வேற வழி தெரியவில்லை அதனால் செயினை விற்று தான் பணம் வாங்கி வைத்திருக்கிறேன் என்று பதில் சொன்னாள் லட்சுமி. ஏற்கனவே நிறையா பவுனை என்னுடைய படிப்புக்காக வித்தாச்சி..இது ஒண்ணு தான் உன்னிடம் இருந்தது அதையும் போய் ..எல்லாம் நான் இஞ்சினியரிங் படிக்க ஆசைப் பட்டதால் தான் என்று புலம்பினான் செல்வம். அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அடுத்த வருசம் நீ படிச்சி முடிச்சி நல்ல வேலைக்கு போய் வரும் போது இது போல் ஒண்ணு என்ன? ஒன்பது கூட வாங்கலாம் என்று மகனுக்கு ஆறுதல் கூறினாள். சொல்லிவிட்டு அப்படியே கண்ணாடி அருகில் சென்று அதன் அருகில் இருந்த ஒரு நீல கலர் பாசி மாலையை எடுத்து கழுத்தில் மாட்டி விட்டு இது கூட நல்லா தான் இருக்கு என்று செல்வத்தை பார்த்து சிரித்தாள்.
மாதங்கள் உருண்டோடின. அன்று மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமை, அன்று காலையிலையே லட்சுமி மிக சந்தோசமாக இருந்தாள். காரணம் சென்னைக்கு வேலைக்கு சென்ற செல்வம் அன்றைக்கு வருவதாக பக்கத்து வீட்டு பூர்ணம் மாமியிடம் போனில் சொல்லிருந்தான். காலையில் இருந்து பத்து முறை வாசலை வந்து பார்த்து விட்டாள். இது போதாது என்று முருகேசனை காலையிலேயே பேருந்து நிலையத்துக்கும் அனுப்பி விட்டாள். செல்வம் கலேஜில் நடந்த கேம்பஸ் இண்டர்வியுலேயே சென்னையில் உள்ள ஒரு முன்னனி நிறுவனத்தில் வேலைக்கு தேர்வாகி இருந்தான். தொடக்கத்திலேயே ஐந்திலக்கத்தில் சம்பளம் கொடுப்பதாக சொல்லி இருந்தார்கள். படிப்பை முடித்து விட்டு செல்வம் வேலைக்கு சென்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அந்த மூன்று மாதத்தில் இப்போது தான் முதல் முறையாக ஊருக்கு வருகிறான். வாசலில் காலடி சத்தம் கேட்கவே லட்சுமி ஓடி வந்து வாசலை பார்த்தாள். அங்கு செல்வமும், முருகேசனும் நின்று இருந்தார்கள். மகனை கண்டவுடன் இப்படி மெலிந்து போய்விட்டயே! என்று சொல்லிக்கொண்டு கன்னத்தை தடவினாள். அவன் சிரித்துக் கொண்டே போம்மா!. நானே உடம்பு போட்டு விட்டது என்று கவலையாய் இருக்கிறேன் என்று கூறினான். பின்பு வீட்டிற்குள் வந்த செல்வம் கொண்டு வந்த பேக்கில் எதையே தேடினான். இதை லட்சுமியும், முருகேசனும் பார்த்து கொண்டு நின்றனர். பேக்கில் இருந்து ஒரு பாக்சை எடுத்து அதனுள் இருந்த தங்க‌ செயினை அம்மாவின் கையில் கொடுத்தான். இது என்னுடைய முதல் ஆசை பரிசு என்று கூறி சிரித்தான். அதை பெருமையுடன் வாங்கி பார்த்து விட்டு அப்படியே செல்வத்தின் கழுத்தில் மாட்டி விட்டு பின்வறுமாறு லட்சுமி கூறினாள். "வீட்டிற்குள் இருக்க போகிற எனக்கு எதுக்கு இது. இனி நீ தான் நாலு இடம் போகனும், நாலுபேரை பார்த்து பேச வேண்டும்". இதை அமைதியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து பதில் பேச முடியாமல் நின்று கொண்டிருந்தான் முருகேசன்.

7 comments:

Chitra said...

தலைப்பு, கதைக்கு மிகவும் பொருத்தம். அன்னையின் அன்பை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

gulf-tamilan said...

நல்லாயிருக்கு.

நாஞ்சில் பிரதாப் said...

நல்லாருக்கு ஸ்டீபன்...
அம்மான்னா சும்மாவா...

Anonymous said...

well said ste... thai pasathil uruga vaithu vittai

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ரைட்டு..:) அப்படியே எழுதிக்கிட்டே இருங்க.. ஒரு ஸ்டைல் வந்திடும்..:)

தமிழ் உதயம் said...

அம்மாவை தவிர, வேறு யாருக்கு இத்தனை ப்ரியங்கள் இருக்க முடியும்

நாடோடி said...

@Chitra

வாங்க மேடம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

@gulf-tamilan

வாங்க ,,கல்ப் தமிழன்

@நாஞ்சில் பிரதாப்

கரெக்டா சொன்னீங்க தல..

@Evans

Thanku Sir

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

உங்கள் ஆதரவுகள் இருந்தா கண்டிப்பா எழுதுவேன்..வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

@தமிழ் உதயம்

உண்மைதான்.. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

Related Posts with Thumbnails