Thursday, August 12, 2010

சில‌ துரோக‌ங்க‌ள்_ஜெனி அக்கா-2

இத‌ன் முத‌ல் பாக‌ம் ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் கீழே சொடுக்கி ப‌டித்துவிட்டு தொட‌ர‌வும்.

முத‌ல் பாக‌ம்

அடுத்த‌ நான்கு ம‌ணி நேர‌த்தில் க‌ட‌லூரில் இருந்து பெரிய‌ப்பாவும், பெரிய‌ம்மாவும், சில‌ சொந்த‌ காரர்க‌ளும் ஒரு காரில் வ‌ந்தார்க‌ள்‌. அழுகைக‌ள் தான் பிர‌தான‌மாக‌ இருந்த‌து. ஜெனி அக்காவின் முக‌த்தை அருகில் சென்று பார்க்கும் தைரிய‌ம் என‌க்கு வ‌ர‌வில்லை. தூர‌த்தில் நின்று பார்த்தேன். முக‌த்தில் எந்த‌வொரு மாற்ற‌மும் தெரிய‌வில்லை. சிறிது ப‌க்க‌த்தில் சென்று பார்த்தேன். க‌ழுத்தில் ம‌ட்டும் ஒரு சிறிய‌ இர‌த்த‌க் க‌ட்டு போல் இருந்த‌து.

ஒவ்வொருவ‌ரும் வ‌ர‌ வ‌ர‌, க‌ட்டிலில் ப‌டுக்க‌ வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ ஜெனி அக்காவின் ப‌க்க‌த்தில் சுற்றிலும் அம‌ர்ந்திருந்த‌ கூட்ட‌த்தின் அழுகை அதிக‌மாக‌ இருந்த‌து. அத‌ற்கு மேல் அங்கு நிற்ப‌த‌ற்கு ம‌ன‌ம் ஒப்ப‌வில்லை. அங்கிருந்து ந‌க‌ர்ந்து சிறிது தூர‌த்தில் ஒரு வேப்ப‌ம் ம‌ர‌ம் இருந்த‌து. அத‌ன் அருகில் வீடு வேலை செய்வ‌த‌ற்க்காக‌ கொட்ட‌ப்ப‌ட்ட‌ ம‌ண‌ல் குவிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அத‌ன் மேல் சென்று அம‌ர்ந்து கொண்டேன். சிறிது நேர‌த்தில் சித்த‌ப்பாவும் வ‌ந்து சேர்ந்து கொண்டார்.

ஜெனி அக்காவை வைத்திருந்த கூட்டத்தில் இருந்து சிறிது நேரத்தில் பெரியப்பாவும், அப்பாவும் வெளியே வந்தார்கள். பெரியப்பா விழியில் வழிந்த நீரை துடைத்து கொண்டு எங்களை நோக்கி நடந்தார்கள்.

அருகில் வந்து "என்னடே!!! பண்ணலாம்" என்று இறுக்கமான குரலில் கேட்டார்.

"எதுக்கும் போலிசில் ஒரு கம்பிளைன்ட் கொடுக்கலாம்" என்று சித்தப்பா சொன்னார்கள்.

அவனுளுட்ட மட்டும் சொன்ன, என்னடே பண்ணிட போறானுவ?. போன என் மகளை கூட்டிட்டா வந்திட போறானுவ?. என்று கண்ணில் ததும்பிய நீரை துடைத்தார் பெரியப்பா.

கம்பிளைண்ட் கொடுத்தா போஸ்ட் மார்டம் பண்ணாமல் பாடியை தரமாட்டார்கள். காலையிலேயே நடந்தது, மணி மூணு ஆகி போச்சி என்ன பண்ணலாமுனு சொன்னா தான் அடுத்த விசயத்தை பார்க்க முடியும். என்று எங்களுடைய கூட்டத்தில் நுழைந்தார் ஒருவர்.

ஆள் பார்ப்பதற்கு ஜெனி அக்காவின் வீட்டுகாரர் சாயலில் இருந்ததால், அவருடைய தம்பியாக இருக்கும் என்று முடிவு செய்து கொண்டேன்.

அவளை கூறு போட்டு பார்க்கும் அளவுக்கு என்னுடைய மனதில் தெம்பு இல்லடே, அதனால அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை பாருங்கள். என்று சொல்லிவிட்டு பெரியப்பா பக்கத்தில் இருந்த மரத்தின் மீது சாய்ந்தார். அவருடைய கண்கள் குறும்பாட்டின் இரத்தம் போல் கலங்கி நின்றது.

உடனடியாக எங்கள் கூட்டத்தில் இருந்து சென்றவர் அங்கு கூடியிருந்த பெண்களிடம் குளிப்பாட்டுவதற்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் கையில் வெள்ளை டவலுடன் வாயை பொத்தி அழும் அண்ணனிடம் காதில் ஏதோ சொன்னார்.

அதுவரையிலும் அமைதியாக அழுது கொண்டிருந்தவர், ஐயோ என் மவனுவ ரெண்டு பேரையும் அனாதையா விட்டுட்டு போய்ட்டியே சண்டாளி!!!

உனக்கு நான் என்ன குறைவெச்சேன், இப்படி தவிக்கவிட்டு போய்ட்டியே!!! போய்ட்டியே!!! என்று தலையில் அடித்து கொண்டு சத்தம் போட்டு மண்ணில் புரண்டு அழுதார்.

இவர் கதறி அழுவதை பார்த்ததும் எல்லாருடைய கவனமும் இவரை தேற்றுவதிலும் வேடிக்கை பார்ப்பதிலுமே இருந்தது.

அதற்க்குள் அவசர அவசரமாக ஜெனி அக்காவை கொண்டு போய் குளிப்பாட்டுவதில் சில பெண்கள் மும்முரமாக இருந்தனர்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் குளிப்பாட்டி, பவுடர் போட்டு, புது துணி உடுத்தி கட்டிலில் கிடத்தினார்கள்.

ஏம்பா!! சவப்பெட்டி எடுக்க ஆள் அனுப்புனீங்களா? இல்லையா? அதுக்குள்ள யாருப்பா குளிப்பாட்டுனது? குளிப்பாட்டி திரும்பவும் கட்டிலில் காக்க வைக்க கூடாது என்று கத்தினார் என்னுடைய அப்பா.

கூட்டத்தில் இருந்த சித்தி, வெளியே வந்து சித்தப்பாவை சைகை காட்டினார், சித்தப்பா சித்தியின் அருகில் சென்றார். சித்தி சித்தப்பாவின் காதில் ஏதோ சொன்னார். உடனே சித்தப்பா அப்பாவின் கையை பிடித்து கொண்டு எங்களை நோக்கி வந்தார்கள்.

கோபமாக வந்த சித்தப்பா, பெரியப்பாவிடம் "ஜெனியோட முதுகு பக்கத்துல அடிப்பட்டது போல காயம் இருக்காம், என் வீட்டுக்காரி குளிப்பாட்டும் போது பார்த்திருக்கா, பக்கத்துல இருந்த பொம்பளைங்க அவளை தொடவிடலியாம்" என்றார்.

ஆமடே.. இரண்டு நாளைக்கு முன்னாடி மருமவன் எனக்கு போன் பண்ணியிருந்தான், ஏதோ மாடி படியில இருந்து கீழ விழுந்திட்டாளாம், அப்ப அடிப் பட்டிருக்கும் என்றார் பெரியப்பா.

இவர்கள் இப்படி பேசிட்டு இருக்கும் போதே எங்கள் கூட்டதில் நுழைந்த ஜெனி அக்காவின் வீட்டுகாரரின் தம்பி, "எங்க அண்ணனும் எங்க குடும்பத்துல தலைச்சன் பிள்ளை, உங்க பொண்ணும் தலைச்சன் பிள்ளை. இவா வேற நான்டிட்டு நின்னு செத்து போயிருக்கா. அதனால பேசாம அடக்கம் பண்ணுறதுக்கு பதிலா எரிச்சுட்டாத்தான் எல்லோருக்கும் நல்லதுனு எங்க ஊரு சாமியாடி சொல்லுறாரு" என்று பெரியப்பாவிடம் சொன்னார்.

அதற்கு அப்பா, அதெல்லாம் முடியாது, எங்க சம்பிரதாயத்தில் நாங்கள் அடக்கம் தான் பண்ணுவோம், எரிக்க முடியாது என்றார்.

இல்ல நான் இரண்டு குழந்தைகளின் நல்லதுக்கு சொல்லுறேன், அப்புறம் அதுகளுக்கு இதனால பிரச்சனைனா? யாரு என்ன பண்ண முடியும் என்றார்.

சரி, உங்க சம்பிரதாய படியே நடத்துங்க என்று சொல்லிவிட்டு தலைகவிழ்ந்தார் பெரியப்பா.

அப்பாவும் சித்தப்பாவும், பெரியப்பாவின் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு பதில் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

தூரத்தில் இவருடைய பதிலுக்காக காத்திருந்தது போல், கையில் டவலுடன் வாயை பொத்தி கொண்டிருந்த ஜெனி அக்கா வீட்டுகாரர் "ஹஓஓஓ" என்று கதறி அழுதார்.

========================================================

நேற்று இரவு நடந்த அண்ணன் தம்பியின் உரையாடல்:

லேய்... கிறுக்கு பயலே என்னல பண்ணி வைச்சிருக்க.

சாந்தி வீட்டுக்கு போயிட்டு வந்தேன், காட்டுகத்து கத்தினா, ரெண்டு அடிதான் அடிச்சேன், இப்படி ஆகி போச்சி..

சீ...த்தூ...உனக்கு கூத்தியா வீட்டுக்கு போறதுதான் பொளப்பா, _மவனே திருந்த மாட்டியா? செத்துட்டாளா!!

ஆமா தம்பி!!!! செத்து போயிட்டா...

என்னாது போயிட்டாளா, நாளைக்கு அவா குடும்ப காரங்க வந்து கேட்டா என்னல சொல்லுறது..

நீதான் ஏதாவது பண்ணனும்..

இதை மறைச்சி தொலைக்கலனா உன்னோட சேர்ந்து நாங்களும் இல்லா, போலிஸ் ஸ்டேசன் கம்பி எண்ணனும்......

குறிப்பு: சில‌துரோக‌ங்க‌ள் என்ற‌ அத்தியாய‌த்தில் ஜெனி அக்காவின் க‌தையை இன்றைய‌ ப‌குதியுட‌ன் முடித்து விட்டேன். இனி அடுத்த‌ ஒரு க‌தையுட‌ன் சில‌ துரோ‌க‌ங்க‌ள் தொட‌ரும். மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌து உண்மை க‌தை இல்லை. நான் பார்த்த‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அடிப்ப‌டையாக‌ வைத்து எழுதிய‌து. அத‌னால் யாரும் உண்மை என்று சிலாய்க்க‌ வேண்டாம்.

.

.

.

26 comments:

Ahamed irshad said...

ஆஹா சூப்பர் ஸ்டீபன்.. அசத்துங்க தொடர்ந்து..

vasu balaji said...

சொன்ன விதம் விறுவிறுப்பு.

Unknown said...

கதையின் சுவாரஸ்யம் கூடும்போது முடித்து விட்டீர்கள் .. தொடர முடியாது ஏதோ ஒரு விசயம் தடுத்து விட்டது என நினைக்கிறேன்...

துளசி கோபால் said...

நல்லா கோர்வையாதான் நடை இருக்கு. ஆனால் அந்த உரையாடல் மட்டும் தனியா........... அதுதான் உண்மையைச் சொல்லுதுன்னாலும் ...
ஒட்டாமத் தனியா நிக்குதுங்களே!

கதை ஓட்டத்துலேயே அதையும் சேர்த்துருங்க

அருண் பிரசாத் said...

திடீருனு முடிச்சிடீங்க. நல்லா இருந்தது

ஜெய்லானி said...

@@@கே.ஆர்.பி.செந்தில்--//கதையின் சுவாரஸ்யம் கூடும்போது முடித்து விட்டீர்கள் .. தொடர முடியாது ஏதோ ஒரு விசயம் தடுத்து விட்டது என நினைக்கிறேன்...//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்

நாடோடி said...

@அஹமது இர்ஷாத் said...
//ஆஹா சூப்பர் ஸ்டீபன்.. அசத்துங்க தொடர்ந்து..//

வாங்க‌ இர்ஷாத்.. ஊருக்கு போயிட்டு வ‌ந்தாச்சா?.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@வானம்பாடிகள் said...
//சொன்ன விதம் விறுவிறுப்பு.//

வாங்க‌ பாலா சார்... க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@கே.ஆர்.பி.செந்தில் said...
//கதையின் சுவாரஸ்யம் கூடும்போது முடித்து விட்டீர்கள் .. தொடர முடியாது ஏதோ ஒரு விசயம் தடுத்து விட்டது என நினைக்கிறேன்...//

வாங்க‌ செந்தில் அண்ணே.. ரெம்ப‌ இழுக்க‌ வேண்டாம் என்று தான் முடித்தேன்.. அடுத்த‌ க‌தையில் பூர்த்தி செய்ய‌ முய‌ற்ச்சிக்கிறேன்.

நாடோடி said...

@துளசி கோபால் said...
//நல்லா கோர்வையாதான் நடை இருக்கு. ஆனால் அந்த உரையாடல் மட்டும் தனியா........... அதுதான் உண்மையைச் சொல்லுதுன்னாலும் ...
ஒட்டாமத் தனியா நிக்குதுங்களே!

கதை ஓட்டத்துலேயே அதையும் சேர்த்துருங்க//

நான் க‌தை எழுதும் போதே இப்ப‌டித்தான் முடிக்க‌ வேண்டும் என்று நினைத்து எழுதி விட்டேன், நீங்க‌ள் சொல்வ‌து போல் க‌டைசியில் உள்ள் நிக‌ழ்வை இடையில் சொருக‌ வேண்டுமானால், முழு க‌தையையும் திரும்ப‌ எழுத‌ வேண்டும்.. க‌ண்டிப்பா அடுத்த‌ க‌தையில் இது போல் இல்லாம‌ல் பார்த்து கொள்கிறேன்.

@அருண் பிரசாத் said...
//திடீருனு முடிச்சிடீங்க. நல்லா இருந்தது//

வாங்க‌ அருண் ரெம்ப‌ ஜ‌வ்வு போல் இழுக்க‌ விருப்ப‌ம் இல்லாம‌ல் தான் முடித்து விட்டேன்.. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@ஜெய்லானி said...
@@@கே.ஆர்.பி.செந்தில்--//கதையின் சுவாரஸ்யம் கூடும்போது முடித்து விட்டீர்கள் .. தொடர முடியாது ஏதோ ஒரு விசயம் தடுத்து விட்டது என நினைக்கிறேன்...//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்//

வாங்க ஜெய்லானி .. அடுத்த‌ க‌தையில் பூர்த்தி செய்கிறேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

கொலை போலவே கதையையும் அமைதியா முடிச்சுட்டீங்க..

நல்லா எழுதியிருந்தீங்க...!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"


இடுகைக்கு

// நாடோடி said...

ந‌ல்ல‌ விழிப்புண‌ர்வு இடுகை.. ப‌கிர்விற்கு ந‌ன்றி ந‌ன்ப‌ரே..//

பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.

தூயவனின் அடிமை said...

ஸ்டீபன் இது உங்களோட கருப்பனை கதையாக இருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் உலகில்
நடந்த வண்ணம் தான் உள்ளது.இதை ஒரு விழிப்புணர்வு கதையாக கூட எடுத்து கொள்ளலாம்.

சாந்தி மாரியப்பன் said...

கதை நல்லாருக்கு..

Prathap Kumar S. said...

கதை நல்ல விறுவிறுப்பு ஸ்டீபன். துளசி மேடம் சொன்னாமாதிரி அந்த கடைசி உரையாடல் கதையோட சேரலை..அதைகதையோட்டத்துல பொருத்தியிருக்கனும் ஸ்டீபன்.:))

Unknown said...

அன்பிற்கினிய நண்பரே..,

** மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌து உண்மை க‌தை இல்லை. நான் பார்த்த‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அடிப்ப‌டையாக‌ வைத்து எழுதிய‌து. அத‌னால் யாரும் உண்மை என்று சிலாய்க்க‌ வேண்டாம்.**

இந்த கதை நன்றாக உள்ளது.

** கதையின் சுவாரஸ்யம் கூடும்போது முடித்து விட்டீர்கள் .. தொடர முடியாது ஏதோ ஒரு விசயம் தடுத்து விட்டது என நினைக்கிறேன்...**

இதுதான் எனது கருத்தும்.(நன்றி - கே.ஆர்.பி.செந்தில்.)

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன் ச.ரமேஷ்.

Menaka said...

super....
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

தமிழ் உதயம் said...

கதை நல்லா இருந்தது.

நான் க‌தை எழுதும் போதே இப்ப‌டித்தான் முடிக்க‌ வேண்டும் என்று நினைத்து எழுதி விட்டேன், நீங்க‌ள் சொல்வ‌து போல் க‌டைசியில் உள்ள் நிக‌ழ்வை இடையில் சொருக‌ வேண்டுமானால், முழு க‌தையையும் திரும்ப‌ எழுத‌ வேண்டும்.. க‌ண்டிப்பா அடுத்த‌ க‌தையில் இது போல் இல்லாம‌ல் பார்த்து கொள்கிறேன்.


சிறுகதை கருவை முழுவதுமா உள்வாங்கி எழுதும் போது இந்த பிரச்சனை வராது.

செ.சரவணக்குமார் said...

ஜெனி அக்காவின் கதை மனதை உலுக்குகிறது.. ஆனால் பல சம்பவங்களை சொல்லாமல் தவிர்த்துவிட்டீர்கள் எனத் தெரிகிறது. பரவாயில்லை எதுவரை சொல்லலாம் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.

இந்தத் தலைப்பில் இன்னும் நிறைய எழுதுங்கள் ஸ்டீபன்.

எம் அப்துல் காதர் said...

அருமையான கதை ஸ்டீபன். ம்ம்ம் இன்னும் தொடர்ந்து எழுதி அசத்துங்க பாஸ்!!

நாடோடி said...

@ப்ரியமுடன் வசந்த் said...
//கொலை போலவே கதையையும் அமைதியா முடிச்சுட்டீங்க..

நல்லா எழுதியிருந்தீங்க...!//

வாங்க‌ வ‌ச‌ந்த்... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@SUREஷ் (பழனியிலிருந்து) said...
"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"


இடுகைக்கு

// நாடோடி said...

ந‌ல்ல‌ விழிப்புண‌ர்வு இடுகை.. ப‌கிர்விற்கு ந‌ன்றி ந‌ன்ப‌ரே..//

பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.//

உங்க‌ளுடைய் த‌க‌வ‌லுக்கு ரெம்ப‌ ந‌ன்றி சுரேஷ் அவ‌ர்க‌ளே.. டாக்ட‌ர் புரூனே எழுதியிருப்ப‌து ப‌ற்றி நான் ஏற்க‌ன‌வே ப‌டித்துவிட்டேன்...

@இளம் தூயவன் said...
//ஸ்டீபன் இது உங்களோட கருப்பனை கதையாக இருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் உலகில்
நடந்த வண்ணம் தான் உள்ளது.இதை ஒரு விழிப்புணர்வு கதையாக கூட எடுத்து கொள்ளலாம்.//

வாங்க‌ இள‌ம்தூய‌வ‌ன்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@அமைதிச்சாரல் said...
//கதை நல்லாருக்கு..//

வாங்க‌ ச‌கோ.. ரெம்ப‌ ந‌ன்றி.

@நாஞ்சில் பிரதாப் said...
//கதை நல்ல விறுவிறுப்பு ஸ்டீபன். துளசி மேடம் சொன்னாமாதிரி அந்த கடைசி உரையாடல் கதையோட சேரலை..அதைகதையோட்டத்துல பொருத்தியிருக்கனும் ஸ்டீபன்.:))//

வாங்க‌ பிர‌தாப்.. அடுத்த‌ க‌தையில‌ நீங்க‌ சொன்ன‌தை பாலோ ப‌ண்ணுறேன் த‌ல‌. :)

நாடோடி said...

@S.ரமேஷ். said...
அன்பிற்கினிய நண்பரே..,

** மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌து உண்மை க‌தை இல்லை. நான் பார்த்த‌ சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அடிப்ப‌டையாக‌ வைத்து எழுதிய‌து. அத‌னால் யாரும் உண்மை என்று சிலாய்க்க‌ வேண்டாம்.**

இந்த கதை நன்றாக உள்ளது.

** கதையின் சுவாரஸ்யம் கூடும்போது முடித்து விட்டீர்கள் .. தொடர முடியாது ஏதோ ஒரு விசயம் தடுத்து விட்டது என நினைக்கிறேன்...**

இதுதான் எனது கருத்தும்.(நன்றி - கே.ஆர்.பி.செந்தில்.)

நன்றி..,

மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன் ச.ரமேஷ்.//

வாங்க‌ ர‌மேஷ் சார்.. க‌தைக்க‌ள‌ம் ஊருக்கு போயிருக்கிறேன் என்று என்னுடைய‌ போன‌ ப‌திவில் சொல்லியிருந்தீர்க‌ள். அந்த‌ ஊரின் அழ‌கு க‌ண்டிப்பாக‌ உங்க‌ளை க‌வ‌ர்ந்திருக்கும்.. உங்க‌ளில் க‌ருத்துக்க‌ளை ப‌கிர்த‌மைக்கு ரெம்ப‌ ந‌ன்றி.. தொட‌ர்ந்து வ‌ர‌வும்.

@Menaka said...
super....
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?//

வாங்க‌ மேன‌கா... வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி

@தமிழ் உதயம் said...
கதை நல்லா இருந்தது.

நான் க‌தை எழுதும் போதே இப்ப‌டித்தான் முடிக்க‌ வேண்டும் என்று நினைத்து எழுதி விட்டேன், நீங்க‌ள் சொல்வ‌து போல் க‌டைசியில் உள்ள் நிக‌ழ்வை இடையில் சொருக‌ வேண்டுமானால், முழு க‌தையையும் திரும்ப‌ எழுத‌ வேண்டும்.. க‌ண்டிப்பா அடுத்த‌ க‌தையில் இது போல் இல்லாம‌ல் பார்த்து கொள்கிறேன்.


சிறுகதை கருவை முழுவதுமா உள்வாங்கி எழுதும் போது இந்த பிரச்சனை வராது.///

வாங்க‌ த‌மிழ் சார்.. உங்க‌ள் க‌ருத்தை க‌வ‌ன‌த்தில் கொள்கிறேன்.. அடுத்த‌முறை நீங்க‌ள் சொல்வ‌து போல் முய‌ற்ச்சி செய்கிறேன். க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

@செ.சரவணக்குமார் said...
//ஜெனி அக்காவின் கதை மனதை உலுக்குகிறது.. ஆனால் பல சம்பவங்களை சொல்லாமல் தவிர்த்துவிட்டீர்கள் எனத் தெரிகிறது. பரவாயில்லை எதுவரை சொல்லலாம் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.

இந்தத் தலைப்பில் இன்னும் நிறைய எழுதுங்கள் ஸ்டீபன்.///

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன் அண்ணா.. இது ஒரு தொட‌க்க‌ம் தான். க‌ண்டிப்பாக‌ இதில் டிங்க‌ரிங், ப‌ஞ்ச‌ர் வேலைக‌ள் இருப்ப‌து என‌க்கு தெரிகிற‌து... தொட‌ர்ச்சியான‌ எழுத்தில் தான் கொண்டு வ‌ர‌வேண்டும்.. :) க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி

@எம் அப்துல் காதர் said...
//அருமையான கதை ஸ்டீபன். ம்ம்ம் இன்னும் தொடர்ந்து எழுதி அசத்துங்க பாஸ்!!//

வாங்க‌ அப்துல் .. நீங்க‌ ப‌டிக்க‌ இருக்கும் போது என‌க்கு என்ன‌ க‌வ‌லை.. :).. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

r.v.saravanan said...

ஸ்டீபன் தொடர்ந்து..
அசத்துங்க

vanathy said...

நாடோடி, அதெப்படி போலீஸில் மாட்டாமல் தப்பித்து விட்டார்கள். இது நல்லாவே இல்லை! கதை நல்லா இருக்கு..முடிவு சரியில்லை ( சும்மா டமாஷ்).

நாடோடி said...

@r.v.saravanan said...
//ஸ்டீபன் தொடர்ந்து..
அசத்துங்க//

வாங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ரெம்ப‌ ந‌ன்றி.

@vanathy said...
//நாடோடி, அதெப்படி போலீஸில் மாட்டாமல் தப்பித்து விட்டார்கள். இது நல்லாவே இல்லை! கதை நல்லா இருக்கு..முடிவு சரியில்லை ( சும்மா டமாஷ்).//

வாங்க‌ வான‌தி ச‌கோ.. நீங்க‌ள் கேட்ட‌ கேள்விக்காக‌ தான் பிண‌த்தை புதைக்காம‌ல் எரிக்கிற‌வ‌ரை எழுதினேன். எல்லாமே அந்த‌ இருவ‌ரின் பிளான் ப‌டி ந‌ட‌ந்த‌து. போலிஸில் போகும் ப‌டி எவ‌ருக்கும் ட‌வுட் வ‌ர‌வில்லை. க‌ருத்துக்கு ரெம்ப‌ ந‌ன்றி.

கமலேஷ் said...

கதைக்குள்ள ஒன்றி போற மாதிரி எழுதி இருக்கீங்க...
ரொம்ப நல்லா இருக்கு...
முடிவை தனியா பேசி இருக்க வேண்டாம் என்று தோன்றியது.

Asiya Omar said...

ஜெனி அக்காவிற்கு நடந்த மாதிரி யாருக்கும் நடக்ககூடாது.கற்பனை என்றாலும் இது மாதிரி எத்தனையோ சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.ஜெனி அக்கா கண்களை குளமாக்கிட்டா.

சிநேகிதன் அக்பர் said...

மிக நுணுக்கமாக எழுதியிருக்கிறீர்கள் ஸ்டீபன்.

காட்சிகளை கண்முன் விவரிப்பது போல் இருந்தது. தொடருங்கள்

சுதந்திர தின வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails