Thursday, May 1, 2014

ரியல் எஸ்டேட் தொழில் எனும் நீர்குமிழி!!!

ஊரில் பெற்றோர்கள் சம்பாதித்து வைத்த பணத்தைப் படிக்கும் போதே ஊதாரித்தனமாகச் செலவு செய்துகொண்டும், படித்து முடித்த பிறகும் உருப்படியாக எந்த வேலைக்கும் செல்லாமல் பொறுக்கித் தனமாக ஊரை சுற்றிக் கொண்டிருந்த சிலர், திடிரென வெள்ளையும் சொள்ளையுமாக ஊரில் வலம் வந்தார்கள். இவர்களின் கெட்டப்பே தலைக்கீழாக மாறியிருந்தது. காலையில் குளிக்கிறார்களோ, இல்லையோ, நம்மருகில் வந்தால், உடல் முழுவதும் சென்டின் வாசம். கழுத்தை சுற்றி ஒரு பெரிய‌ முறுக்கு செயின், இந்த முறுக்கு செயின் கழுத்தில் போட்டிருப்பது வெளியில் தெரியுமளவிற்குச் சட்டையின் மேல் இரண்டு பட்டன்கள் எப்போதும் திறந்தே வைத்திருப்பார்கள்.

வலதுகையில் ஒரு விரல் தடிமனுள்ள சங்கிலியை பிரேஸ்லெடாகச் சிலர் போட்டிருப்பார்கள். இன்னும் சிலர் தங்கத்தால் செய்த‌ குறுங்வளையத்தைக் கையில் அணிந்து சுற்றிக்கொண்டிருந்தார்கள். புதிதாகப் பார்த்த எவரும் "இவன் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டான்" என்று சொல்லிவிடக்கூடாது என்பதற்காக‌வே மீசையும் பெரிதாக வைத்திருப்பார்கள். இப்படிக் கெட்டப் போட்டு சொந்த ஊரில் சுற்றுபவர்கள் சொல்லிக்கொண்டிருந்தது ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணுகிறேன் என்பது தான். இதேப்போல் சுற்றியவர்களில் சிலர் என்னுடன் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள்.

நான் வெளிநாட்டிலிருந்து எப்போது ஊருக்கு வந்தாலும் என்னிடம் வந்து ஊரில் விலைக்காக இருக்கும் வீடுகளையும், நிலங்களையும் பற்றிப் பேசத் தொடங்கிவிடுவார்கள். நான் இப்போது சொத்துகள் ஏதும் வாங்கும் நிலையில் இல்லை என்று சொன்னாலும், முழுதாகப் பணம் இப்போது கொடுக்க வேண்டாம், உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அவ்வளவு பணத்தை இப்போது கொடுக்கலாம், மீதம் பின்புகொடுத்து சொத்தை எழுதி வாங்கலாம் என்று தவணை முறை எல்லாம் சொல்லுவார்கள். நானும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்தமுறை பார்க்கலாம் என்று எஸ்கேப் ஆகிவிடுவேன்.

வீட்ல உள்ளவங்களுக்கு என்ன டவுட்டுனா... எப்படி இவ்வளவு பொருட்களை கொடுக்க முடியுமுன்னு!!! எனக்கு என்ன டவுட்டுனா... எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்கனு!!!

ஊரில் இருக்கும் சொத்துக்களுக்கு விலையை நிர்ணயம் செய்பவர்கள் இந்த ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுபவர்கள் என்று ஆகிபோனார்கள். எப்படியென்றால், எவரும் தன்னுடைய‌ வீட்டில் கஷ்டமான சூழ்நிலை வரும் போது தான் பெரும்பாலும் சொத்துக்களை விலைக்குப் பேசுவார்கள். அவர்களில் தற்போதைய பணத்தேவை என்ன என்பதை அவர்களிடம் பேசும்போதே இந்தப் புரோக்கர்கள் பல்ஸ் பார்த்துவிடுவார்கள். அந்தச் சொத்துக்கான அடிமட்ட‌ விலையைப் பேசி, உரிமையாளருக்கு உட‌னடியாக‌ தேவைப்படும் தொகையை இவர்கள் தங்கள் கைகளிலிருந்து அட்வான்ஸாகக் கொடுத்து எழுதி வாங்கிக் கொள்வார்கள். முழுமையான பணத்தைக் கொடுத்து அந்த‌சொத்தை தங்கள் பெய‌ருக்கு எழுதி வாங்காமல், மறுவிலைக்கும் ஆட்களைத் தேடுவார்கள். என்னைப்போல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களைத் தான் முதலில் இவர்கள் குறிவைப்பார்கள்.

சொத்து உரிமையாளரிடம் பேசி வைத்திருக்கும் விலையை விட, அப்போது அந்தச் சொத்திற்கு இருக்கும் மார்கெட் நிலவரத்தைப் பொறுத்து, ஐம்பதில் இருந்து நூறு சதவீதம் வரை அதிக விலை வைத்துதான் மறுவிலைக்கு ஆட்களைத் தேடுவார்கள். இவர்களுடைய தொழில் நெட்வொர்க் பெரியளவில் இருப்பதால் வெளியூரிலிருந்தும் ஆட்களைக் கொண்டுவந்தும் சொத்துக்களை விற்றுவிடுவார்கள். தனியாக எவரும் இந்த ரியல் எஸ்டேட் தொழில் பண்ணுவது இல்லை. இரண்டு அல்லது மூன்றுபேர் சேர்ந்துதான் இந்தத் தொழிலைச் செய்தார்கள். ஒரு சொத்தை முடித்தாலே பல லட்சங்கள் இவர்களுக்கு லாபமாக வரும். ரியல் எஸ்டேட் தொழில் பண்ணும் சிலர் முதலில் சொத்து உரிமையாளர்களுக்குக் கொடுக்கும் தொகையும் பெரும்பாலும் தங்கள் கைகளிருந்து கொடுப்பது கிடையாது, வெளிநாட்டில் பணிசெய்யும் சிலரை தங்கள் கைகளில் போட்டுக் கொண்டு அவர்களுடைய பணத்தைக் கொண்டு வாங்கி விற்கும் வேலையையும் செய்தார்கள். கிடைக்கும் லாபத்தில் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள்.

வெளிநாடுகளில் பணிசெய்து கொண்டிருப்பவர்கள், விடுமுறையில் ஊருக்கு வரும்போது, இந்த ரியல் எஸ்டேட் பண்ணுவர்களின் சம்பாத்தியத்தைப் பார்த்து தாங்களும் இதைப்போல் செய்யலாம் என்று வெளிநாட்டிற்கு முழுக்கு போட்டவர்களும் உண்டு. ஒரு பதினைத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு சென்ட் மனையின் விலை சில‌ ஆயிரங்களாக‌ இருந்தது, அதே மனைகள் இன்று பல லட்சங்களில் விலை போகிறது. எனது அப்பாவின் தலைமுறையில் இருந்தவர்களுக்கு மூன்று குழந்தைகளுக்கு மிகாமல் எல்லோருக்கும் இருந்தது. அவர்களின் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தேவையான அளவு சொத்துக்களை அவர்கள் சம்பாதித்து வைக்கவில்லை. எனவே அவர்களின் பிள்ளைகள் தாங்களாகவே படித்து, வேலைக்கு சென்று சம்பாதித்து அவர்களுக்குத் தேவையான சொத்துக்களை வாங்க ஆரம்பித்தார்கள், இந்தச் சூழ்நிலையில் தான் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஒன்றுக்கும் உதவாத நிலங்கள் கூடப் பல லட்சம் கொடுத்து வாங்கும் அளவுக்கு விலையானது விண்ணை முட்டி நின்றது.

சரியாக‌ ஐந்து வருடங்களில் அவரவருக்குத் தேவையான சொத்துக்களை வாங்கியவுடன், ரியல் எஸ்டேட் தொழில் என்ற நீர்குமிழி உடைய தொடங்கியது. இன்றைய சூழ்நிலையில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் எவரும் பெற்றுக்கொள்வது இல்லை. அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான சொத்துக்கள் தனது தந்தையால் சம்பாதித்தும் வைக்கப்படுள்ளது. இப்போது சொத்துக்கள் வாங்குபவர்கள் தனது அடிப்படைத் தேவைகளுக்கு வாங்குவதில்லை, லாபம் சம்பாதிப்பதிப்பது மட்டுமே குறிக்கோளாகயிருக்கிறது. கடந்த சில வருடங்களாக‌ ரியஸ் எஸ்டேட் தொழில் அதிக லாபம் ஈட்டுவதாக‌ இல்லாததால் எவரும் அதில் முதலீடு செய்ய விரும்புவதில்லை. இப்போது ஷேர் மார்கெட் மற்றும் தங்கத்தின் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள்.

கடந்த சில வருடங்களில் அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சில சட்டங்களும் மற்றும் சொத்துகளைத் தங்கள் பெயரில் எழுதுவதற்குக் கொடுக்கும் கட்டணங்களில் அதிகரிப்பும் இந்த ரியல் எஸ்டேட் தொழிலை கொஞ்சம் கட்டுபடுத்தியுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு மாதமும் சொத்துகளில் மதிப்பு அதிகரிப்பது போன்ற ஒரு சூழ்நிலையை ரியல் எஸ்டேட் பண்ணுபவர்கள் கட்டமைத்திருந்தார்கள். இப்போது சில வருடங்களாகச் சொத்துகளில் மதிப்புப் பெருமளவில் ஏற‌வில்லை. சொத்து உரிமையாளர்களுக்கு, ஒரு தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து வாங்கிப்போட்ட ரியல் எஸ்டேட் முதலாளிகள், அந்தச் சொத்துக்களைப் பிறருக்கு விற்கவும் முடியாமல், அட்வான்ஸையும் வாங்க முடியாமல் இப்போது தவித்து வருகிறார்கள்.

.

13 comments:

Anonymous said...

இந்த இன்னும் சிறப்போடு இருப்பதாக தெரிகிறது .. ஏனெனில் சென்னையை விட்டு எங்கோ கட்டபடும் அடுக்கு மாடி வீடுகளே பல கோடிகளில் ..எப்படி இவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை . பல கோடி கொடுப்பவர்கள் எப்படி எங்கே சம்பதிகிறார்கள் என்று தெரியவில்லை ..
இப்பொது சம்பளங்கள் கோடிகளில் கொடுக்க படுகிறதா ? ஐ டி கம்பெனியில் அப்படி இருக்கலாம்.
மற்றவர்கள் எங்கே போவது. பெரும்பாலான ஐ டி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கி விலையை ஏற்றி விட்டார்கள். அவர்களுக்கு இந்த முதலீடு செய்யும் கலை கை வந்தது. விஷய அறிவு அவர்கள் குழுவாக இருப்பதால் அதிகம் . என்ன செய்வது , எல்லோருக்கும் ஐ டி வேலை கிடைத்தால் பரவாயில்லை.
வெளிநாட்டில் வேலை செய்து இங்கே வருபவர்கள் இங்குள்ள விலை கொடுத்து வாங்க இயலாது.ஆக வெளி நாட்டு அன்பர்கள் இந்தியாவில் ஐ டி வேலை தேடிக்கொண்டு வந்து விடவும்.

karthik sekar said...

வணக்கம் நண்பர்களே

உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

‘தளிர்’ சுரேஷ் said...

உண்மையான நிலவரத்தை புட்டுபுட்டு வைத்த பதிவு! ஆனாலும் நிலம் விலை இன்னும் குறையவில்லை!

Anonymous said...

in coimbatore ...apartment selling price is rs.1.75 crore ( 2000 sq ft )in Ram nagar area..i dont know who is reacy to buy this higher prices...
only black money people can buy this much higher range apartment...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரியல் எஸ்டேட் - வரலாறு முழுமையாகச் சொன்னீர்கள்.
இபோது அந்த தொழில் முதலாளிகள் மாட்டி, விழிப்பதையும் நன்றே சொன்னீர்கள்!!

நாடோடி said...

@Anonymous said...
//இந்த இன்னும் சிறப்போடு இருப்பதாக தெரிகிறது .. ஏனெனில் சென்னையை விட்டு எங்கோ கட்டபடும் அடுக்கு மாடி வீடுகளே பல கோடிகளில் ..எப்படி இவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை . பல கோடி கொடுப்பவர்கள் எப்படி எங்கே சம்பதிகிறார்கள் என்று தெரியவில்லை ..
இப்பொது சம்பளங்கள் கோடிகளில் கொடுக்க படுகிறதா ? ஐ டி கம்பெனியில் அப்படி இருக்கலாம்.
மற்றவர்கள் எங்கே போவது. பெரும்பாலான ஐ டி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்கி விலையை ஏற்றி விட்டார்கள். அவர்களுக்கு இந்த முதலீடு செய்யும் கலை கை வந்தது. விஷய அறிவு அவர்கள் குழுவாக இருப்பதால் அதிகம் . என்ன செய்வது , எல்லோருக்கும் ஐ டி வேலை கிடைத்தால் பரவாயில்லை.
வெளிநாட்டில் வேலை செய்து இங்கே வருபவர்கள் இங்குள்ள விலை கொடுத்து வாங்க இயலாது.ஆக வெளி நாட்டு அன்பர்கள் இந்தியாவில் ஐ டி வேலை தேடிக்கொண்டு வந்து விடவும்.//

வாங்க அனானி,

நீங்கள் சொல்வது உண்மைதான், முன்பு சொத்துகளின் விலைகள் ஒவ்வொரு நாளும் ஏறியது போல் இப்போது சில வருடங்களாக‌ ஏறவில்லை.. கருத்துக்கு நன்றி.

நாடோடி said...

@‘தளிர்’ சுரேஷ் said...
//உண்மையான நிலவரத்தை புட்டுபுட்டு வைத்த பதிவு! ஆனாலும் நிலம் விலை இன்னும் குறையவில்லை!//

வாங்க சுரேஷ்,

முன்பு இருந்தது போலான அதிரடி விலையேற்றம் இப்போது இல்லை. கருத்துக்கு நன்றி.

@Anonymous said...
//in coimbatore ...apartment selling price is rs.1.75 crore ( 2000 sq ft )in Ram nagar area..i dont know who is reacy to buy this higher prices...
only black money people can buy this much higher range apartment...//
yes, your statement was correct. big political people & actors only can buy this kind of high price apartment.

நாடோடி said...

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//ரியல் எஸ்டேட் - வரலாறு முழுமையாகச் சொன்னீர்கள்.
இபோது அந்த தொழில் முதலாளிகள் மாட்டி, விழிப்பதையும் நன்றே சொன்னீர்கள்!!//

வாங்க நிஜாம்,

உங்களுடைய கருத்துக்கு ரெம்ப நன்றி.

Rama K said...

நல்ல பதிவு. உங்கள் கருத்துகளை நானும் அமோதிக்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...


வெள்ளையும் சொள்ளையுமாய், செண்ட், முறுக்கு செயின், பிரேஸ்லெட் இத்யாதியோடு உலவும் ஆசாமிகள் பற்றியும் ரியல் எஸ்டேட் குறித்தும் விவரமாகச் சொன்னீர்கள்.

உண்மையில் தற்சமயம் ரியல் எஸ்டேட்டில் ஒரு வித் தேக்கநிலையே (STAGNATION) நிலவுகிறது. ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மூலம் அதனை மறைக்கப் பார்க்கிறார்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

த.ம.2

நாடோடி said...

@Rama K said...
//நல்ல பதிவு. உங்கள் கருத்துகளை நானும் அமோதிக்கிறேன்.//

வாங்க நண்பரே,

உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

@தி.தமிழ் இளங்கோ said...

//வெள்ளையும் சொள்ளையுமாய், செண்ட், முறுக்கு செயின், பிரேஸ்லெட் இத்யாதியோடு உலவும் ஆசாமிகள் பற்றியும் ரியல் எஸ்டேட் குறித்தும் விவரமாகச் சொன்னீர்கள்.

உண்மையில் தற்சமயம் ரியல் எஸ்டேட்டில் ஒரு வித் தேக்கநிலையே (STAGNATION) நிலவுகிறது. ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் மூலம் அதனை மறைக்கப் பார்க்கிறார்கள்.//

வாங்க சார்,

விளம்பரங்கள் இல்லாமல் கொடிக்கட்டி பறந்த தொழில் இப்போது கூவி, கூவி விற்கும் நிலையும், இலவசங்களை கொடுத்து விற்கும் நிலையும் உருவாகியிருக்கிறது. கருத்துக்கு ரெம்ப நன்றி.

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

நன்றிகள் பல...
நம் குரல்

Related Posts with Thumbnails