Friday, June 27, 2014

வாடா மச்சான்! ஒருத்தன் சிக்கிட்டான்!

என்னடா! ஹைதிராபாத் வந்து ஒரு வருடத்திற்கு மேலே ஆகியும் இன்னும் கம்பெனியில் இருந்து ஒண்ணும் சொல்லாமல் இருக்கிறார்களே! என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, கடந்த வாரம் ஆபிஸுக்கு வந்த ஜெனரல் மேனேஜர், ஸ்டீபன்! சவுதி புராஜெக்ட் காண்ட்ராக்ட் கையெழுத்தாகிவிட்டது, சீக்கிரமே! கிளம்புவதற்குத் தாயார் ஆகிவிடு! என்று சொல்லிச் சிரித்தார். இந்த ஷாக் எனக்குப் புதிது ஒன்றும் இல்லாததால், நானும் சிரித்துக்கொண்டே எப்ப, சார்! கிளம்பவேண்டும்? என்று கேட்டேன். நாளைக்கே வேண்டுமானாலும் கிளம்பி வாருங்கள்! என்று தான் புராஜெக்ட் தந்தவன் சொல்லிட்டு இருக்கிறான். ஆனா, விசா! தான் அவ்வளவு சீக்கிரத்தில் ரெடியாகாது, குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்று சொல்லிமுடித்தார்.

நான் ரெம்ப நாட்கள் ஹைதிராபாத்தில் இருக்கமாட்டோம்! என்று வீட்டில் உள்ளவர்களிடமும், மனைவியிடம் சொல்லிச் சொல்லியே ஊரிலிருந்து வரும் போது பொருட்கள் எதுவும் எடுத்து வராமல், தேவைப்படும் போது ஒவ்வொன்றாக வாங்கிச் சேர்த்ததே ஒரு வண்டி வந்துவிட்டது. இப்போது நிறையப் பொருட்கள் ஊரிலும், இங்கும் என்று இரண்டு இரண்டாக இருக்கிறது. ஊருக்கு போன் செய்து வீட்டில் அப்பாவிடம் பேசிய போது, சிலப்பொருடகள் நமக்குத் தேவையாக இருக்கிறது, அவைகளைக் கொண்டுவர வேண்டுமானாலும் நீ! அதிகமாக‌ பணம் கொடுக்கத் தான் வேண்டும், அதனால் எல்லாவற்றையும் இங்குக் கொண்டு வந்துவிடு! தேவையானவைகளை வைத்துக் கொள்ளலாம், தேவையில்லாதவைகளை, நம்ம சொந்தகாரர்கள் யாருக்காவது கொடுத்துவிடலாம் என்றார். எனக்கும் அதுதான் சரியாகப் பட்டது.

இந்த இணையம் வீட்டில் இருப்பது ஒரு வகையில் வசதியாக இருந்தாலும், பல நேரங்களில் நம்மை அதில் அடிமையாக முடங்க வைத்துவிடும். கடந்த சனிக்கிழமை ஆபிஸ் லீவாக இருந்தது. காலையில் தூங்கி எழுந்ததே லேட்டாகத் தான். வெள்ளிக்கிழமை என்னுடைய வீட்டுப் பொருட்களை ஷிப்ட் பண்ணுவது பற்றி ஆபிசில் உள்ள நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஐடியாவைக் கொடுத்தார்கள். அப்போது, சென்னை நகர் பையன் ஒருவன், எதுக்குச் சார்! ரெம்ப யோசிக்கிறீங்க? இப்ப எல்லாம் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்று மூலைக்கு மூலை போர்டு மாட்டி வைச்சுருக்கானுங்க! அவர்களில் எவரேனும் ஒருவரிடம் கொடுத்துடுங்க! பொருட்கள் எல்லாம் நல்ல ஷேப்பா, கொண்டு வந்து சேர்த்திடுவார்கள் என்றான். நானும் நல்ல ஐடியாவா இருக்கே! என்று நோட் பண்ணிக் கொண்டேன். நேற்று ஆபிசில் நோட் பண்ணிய ஐடியா என்னவோ, காலையில் மனைவி கொடுத்த டீயுடன் வந்து மன‌தில் ஒட்டிக்கொண்டது.

இப்போது ஞாபகம் இருப்பதை, இப்படியே விட்டால் மறந்துவிடும் என்று, லேப்டாப்பை திறந்து இணையத்தில் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று தட்டியது தான் தாமதம். முதல் பக்கத்திலேயே சுலேகா டாட் காம் என்ற பேஜ் தானாகத் திறந்து போன் நம்பர் மற்றும் மெயில் ஐடி என்ற தகவல்களைக் கேட்டு, பாப் அப் வின்டோ ஒன்று ஓபன் ஆகியது. நான் உசாரா இருக்கிறேன்! என்ற எண்ணத்தில் அதில் என்னுடைய தகவல்கள் ஏதும் கொடுக்காமல் மூடிவிட்டு, அந்த வெப் பேஜில் இருந்த சில பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ்களின் தகவல்களில் உள்ள போன் நம்ப‌ர்களை நோட் பண்ணி அதில் முதலில் இருந்த, இரண்டு பேருக்கு கால் பண்ணி விவரங்களைக் கேட்டேன். அவர்கள் எந்த ஊரில் இருந்து எந்த ஊருக்கு ஷிப்ட் செய்யவேண்டும்? என்னென்ன பொருட்களை மேஜராக இருக்கின்றன? என்ற தகவல்களைக் கேட்டார்கள். நானும் பொறுமையாக அவர்களின் கேள்விக்கான பதில்களைக் கொடுத்தேன். ஒருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் தவிர்த்துப் பதினான்காயிரம் என்றார், இன்னொருவர் டாக்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் எல்லாம் சேர்த்துப் பதிமூன்றாயிரம் என்றார். இவர்கள் இருவரிடம் பேசியதில் இவ்வளவு ரூபாய் வித்தியாசம் இருக்கிறதா? என்று எண்ணிக்கொண்டே குளிக்கச் சென்றேன்.

குளித்து வருவதற்குள், மனைவி இரண்டுமுறை பாத்ரூம் கதவை தட்டிவிட்டார். என்னவென்று கேட்டால், உங்க போன் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கிறது என்றார். யார் அடிக்கிறார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், புது எண்ணாக இருக்கிறது பெயர் வரவில்லை என்றார். நான் அவரிடம், மொபைலை எடுத்து பேசு! என்றேன். அதற்கு அவரோ, புது எண்ணாக இருக்கிறது, கண்டிப்பாகத் தெலுங்கில் தான் பேசுவார்கள், நான் எடுக்க மாட்டேன்! என்றார். சரி விடு! அடிக்கட்டும், நான் வெளியில் வந்து பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்து மொபைலை எடுத்துப் பார்த்தால், இரண்டு எண்களிலிருந்து பனிரென்டு மிஸ்டுகால்கள் இருந்தது. அந்த எண்களில் ஒன்றை தொடர்பு கொண்டு கேட்டால், சார், நாங்க! சுலேகா டாட் காமில் இருந்து பேசுகிறோம், நீங்க பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விவரம் தேடுகிறீர்களா? என்று ஒருவர் கேட்டார். நானும் அவரிடம் தெரியாமல் "ஆமாம்" என்று சொல்லிவிட்டேன். அவர் என்னிடம் நாங்க உங்களுக்குப் பல பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் விபரங்கள் தருகிறோம், உங்க மெயில் ஐடியை தாருங்கள் என்று கேட்டார். மெயிலுக்கு அந்தத் தகவல்களை அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் மொபைலுக்கும் தொடர்ந்து மெசேஸ் வந்து கொண்டே இருந்தது.

தொடந்து வந்து கொண்டிருந்த மெஸேஜ்களில் இருவதிலிருந்து இருவத்தைந்து பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸின் விபரங்கள் மற்றும் போன் நம்பர்கள் இருந்தது. இதோடு விட்டுருந்தால் நல்லாயிருக்கும், ஆனா! அந்தப் பயபுள்ள நல்லவேலை ஒண்ண பார்த்துவிட்டு விட்டது. என்னனா, அந்த மெஸேஜில் இருக்கும் அனைத்துப் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸுக்கும் என்னுடைய போன் நம்பரை கொடுத்து உங்களுக்கு ஓர் அடிமைச் சிக்கிட்டான்! அவன் வேறு, இன்னைக்கு வேலைவெட்டியில்லாமல் சும்மா தான் வீட்டில் இருக்கான்! எவ்வளவு பேசினாலும் தாங்குவான் போல! அதனால் உங்க திறமையைக் காட்டுங்கள்! என்று கோர்த்து விட்டு அவன் அமைதியாகிவிட்டான். அப்புறம் என்னா! காலையில, ஒரு பத்து மணிக்குச் ச‌ங்கை எடுத்து ஊத ஆரம்பிச்சது.சார், நீங்க வீட்டு பொருட்கள் ஷிப்ட் செய்ய வேண்டும் என்று சுலோகா டாம் காமில் சொன்னீங்களாம்!

ஆமாங்க! சொல்லியிருந்தேன்!

நாங்க‌ *---$%%%.. பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸூல இருந்து பேசுறோம்!

அப்படியா! சொல்லுங்க.

எங்க, சார்! போகனும்?

அங்க, தான் போகனும்!.

என்னவெல்லாம் கொண்டு போகனும்?

இதெல்லாம் கொண்டு போகனும்!.

மேஜர் பொருட்கள் மட்டும் சொல்லுங்க?

டீவி, பிரிஜ், டைனிங்டேபிள், செயர், கூலர், பெட்!.

வண்டி இருக்க? சார்!

வண்டி இல்லங்க.

அலமாரி இருக்கா? சார்!

அலமாரி இல்லங்க.

நாகர்கோவிலில் இருந்து உங்க ஊரு எத்தனை கிலோமீட்டர்?

பதிமூணு கிலோமீட்டர்.

இவ்வளவு ரூபாய் ஆகும் சார்!

அப்படியா, நான் டேட் இன்னும் கன்பார்ம் ஆகல, டேட் கன்பார்ம் ஆனதும் சொல்லுறேன்.

நான் எப்ப, சார்! கால் பண்ணட்டும்?

அடுத்த வாரத்துல, கால் பண்ணுங்க.

மொத்தம் பதிமூணு பேரு, ஓர் ஆளு நானு, தெலுங்கு, ஹிந்தி, இங்கிலீஸ் என்று மூணு லாங்கேஜ் வேறு! கதற‌, க‌தற மேலே கேட்டக் கேள்வியைப் பாரபட்சம் இல்லாமல் கேட்டார்கள். நானும் எவ்வளவு நேரம் தான் காதில் இரத்தம் வராதது போலவே நடிக்கிறது!.

இதுல ஒரே பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸிடம் இருந்து, இரண்டு மூன்று பேர் மாறி மாறி வேறு பேசினார்கள், ஏம்ப்பா! இப்ப, தான் உங்க ஆபிஸில் இருந்து விபரங்கள் கேட்டார்கள், என்று சொன்னால், சாரி, சார்! சுலேகாவில் இருந்து எனக்கும் மெஸேஜ் வந்தது, நான் ஆபிஸில் இல்லை, வெளியில் இருக்கிறேன். என்று மன்னிப்பு வேறு.

கொடுமை என்னானா! எல்லாத் தகவல்களையும் கேட்டுவிட்டு, சாரி, சார்! நாங்கள் லோக்கல் பேக்கர்ஸ் அண்ட மூவர்ஸ் ஸ்டேட் விட்டு ஸ்டேட் பண்ணுறது இல்லனு எகத்தாளம் வேறு. போதும்! இதோட நிப்பாட்டிக்கலாம்! என்று சொல்லலாம் என்றால் யாரிடம் சொல்வது என்பது தெரியாது.

காலையில, பத்து மணிக்கு ஆரம்பிச்சது, மாலையில் ஆறு மணி ஆன‌ பிறகும் விடலியே! நாலு பேரு, சார்! நாளைக்குக் காலையில வீட்டுக்கு வந்து, உங்க பொருட்களைப் பார்த்து கொட்டேசன் தருகிறோம் என்று அவர்களின் தொழில் நேர்மையை என்னிடம் விவரித்தார்கள்.

சும்மா, இணையத்தில் ஒரு பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் இன் ஹைதிராபாத் என்று போட்டுத் தேடியது ஒரு குற்றமா?. கடந்த ஒரு வாரமாகக் கொட்டேசன் வாங்குவதும், எப்ப, சார்! டேட் கண்பர்ம் பண்ணுவீங்க! என்ற கேள்விகளுக்குத் தான் பதில் சொல்லிட்டு இருக்கிறேன்.

நேற்றைக்கு எனக்குப் பதிலாக இங்கு ஹைதிராபாத் ஆபிஸில் புதிதாக ஒருவரை எடுத்திருந்தார்கள், அவர் பூர்வீகம் சென்னை. ஹைதிராபாத்தில் வீடு வாடகைக்கு வேண்டும் என்று இணையத்தில் நேற்று தேடிக்கொண்டிருந்தார். இன்னைக்கு ஆபிஸுக்குக் கொஞ்சம் லேட்டா வருகிறேன்! என்று மெஸேஜ் மட்டும் எனக்கு அனுப்பியிருக்கிறார். பாவம்! யாருடைய போனில் சிக்கி தவிக்கிறாரோ? வந்தா தான் விசாரிக்க முடியும்.

பார்ப்போம்! இன்னொரு பதிவு எழுத்துவதற்கு மேட்டர் தேறுமா என்று!

.

4 comments:

Anonymous said...

You should appreciate their service !

‘தளிர்’ சுரேஷ் said...

விட்டா அவனுங்களே டேட் குறிச்சு பேக்கேஜ் பண்ணி அனுப்பிச்சுருவானுங்க போல! ஹாஹாஹா!

Mohamed Nizamudeen said...

உங்க அனுபவத்தைப் படிச்சி இரசித்தோம் .
நண்பரின் அனுபவம் எப்போ?

drogba said...

யாரையாவது பழிவாங்க இது சூப்பர் முறையாக இருக்குமோ? உங்க நம்பர் தர முடியுமா?? எல்லாம் முதலிருந்து ஆரம்பிக்கத்தான். 'மறுபடியுமா?' என்று ஒருவரை புலம்ப வைப்பதில் எத்தனை சுகம்??

Related Posts with Thumbnails