Friday, June 6, 2014

கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு!

சமீபத்தில் ஹைதிராபாத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு வயிற்றுவலி என்று சென்றிருந்தேன். எந்தப் புண்ணியவான் காலேஜில், எவ்வளவு செலவு செய்து டாக்டருக்குப் படித்தார் என்று தெரியவில்லை, வலியோடு படுக்க வைத்து ஸ்கேன் செய்துவிட்டு 8 MM கல் சிறுநீரகத்தில் இருப்பதாகச் சொல்லி உடனடியாக லேப்ராஸ்கோப்பிக் மூலம் கல்லை எடுத்தாக‌ வேண்டும், ரெம்பச் சீரியஸ் என்று கத்தியை இடுப்புக்குக் கீழேயே வைத்திருந்தார். அவர் கையிலிருந்த கத்தியை இறக்குவதற்குப் படாதபாடு பட வேண்டியதாகிவிட்டது. நானும் மனைவியும் மட்டும் தான் மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். வீட்டில் நான் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்காரவும் முடியாமல், படுக்கவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தே மனைவி மிரண்டு போயிருந்தார். நானும் வலிக்காதது போல எவ்வளவு நேரம் தான் சமாளிப்பது.

எம்ர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று ஹார்ட் பீட் ரெக்கார்டரை மாட்டிவிட்டு, கையில் பச்சை நரம்பைத் தேடி ஊசியைச் சொருகிய போதே, மனைவின் முகம் வெளறி வியர்வையை ஊற்றத் துவங்கியது. இரண்டு கையிலும், மருந்து செலுத்திய இரண்டு ஊசியைப் போட்டார்கள். அடிவயிற்றில் கனன்று கொண்டிருந்த கனல் நீர்க்கத் தொடங்கியது, சிறுது நேரத்தில் நார்மல் ஆகியிருந்தேன். அருகில் வந்த டாக்டர் உடனே அட்மிட் ஆகிடுங்க, இன்று இரவே ஆபரேசன் பண்ணிவிடலாம் என்றார். வலி அதிகமாக‌ இருந்த நேரம் டாக்டர் வந்து இப்படிச் சொல்லியிருந்தால், நானே அவரிடம் கத்தியை எடுத்துக் கொடுத்து வயிற்றைக் கிழித்து எடுத்துவிடுங்கள் என்று பல்லை இறுக கடித்திருப்பேன். ஆனால் வலியானது அட‌ங்கியிருந்ததால் ஆபிஸ் நண்பர்களுக்குப் போன் செய்தேன். மனைவியும் வீட்டிற்குப் போன் செய்திருந்தார். வீட்டில் உள்ளவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் அங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம், வலியைக் குறைத்துவிட்டு மாத்திரை வாங்கிக் கொண்டு ஊருக்கு வந்துவிடுங்கள். இங்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார்கள்.

திரும்பவும் மனைவியும் நானும் டாக்டரிடம் சென்று பேசினோம், மாத்திரையில் கரைக்க முடியாதா? என்று கேட்டோம். அதற்கு அவர் 8 MM கல் என்பது பெரிய அளவு, அதை மருந்து மற்றும் மாத்திரையால் கரைப்பது முடியாத காரியம் என்றும், நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்களின் சிறுநீரகத்திற்குத் தான் பிரச்சனை என்று கொளுத்திப்போட்டார். இருந்தாலும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, ஒரே நாள் வலியில் இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா? என்பது தான். டாக்டர் என்னைப் பயமுறுத்தியது போதாது என்று நர்சு மற்றும் உதவி டாக்டர் இருவரும் சேர்ந்து, சின்ன ஆபரேசன் தான் சார்!. ஒன்றும் பிரச்சனையில்லை, முப்பதில் இருந்து முப்பந்தைந்தாயிரம் தான் செலவு ஆகும், இரண்டு நாட்கள் தான் பெட்டில் இருக்க்க வேண்டும். இப்போது நீங்கள் சரி! என்று சொன்னால் மாலையில் ஆபரேசன் செய்துவிடுவார்கள். நீங்கள் நாளைக்கே வீட்டிற்குச் சென்றுவிடலாம்! என்று அவர்கள் அந்த மருத்துவமனையில் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக‌ என்னிடம் பேசினார்கள்.

சிறிது நேரத்தில் ஆபிஸிலிருந்து நண்பர்களும் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். அதில் சென்னையைச் சேர்ந்த நண்பர், சார்! 8 MM கல்லுக்கு எல்லாம் லேப்ரோஸ்கோப்பிக் ஆப‌ரேசன் பண்ண வேண்டாம். எனது மாமியாருக்கும் இதே போல் தான் இருந்தது, சென்னையில் உள்ள மருத்துவமனையில் மருந்தில் கரைத்துவிட்டார்கள் என்றும் அதனால் நீங்கள் இங்கு ஆபரேசன் செய்ய வேண்டாம் என்றும், அப்படியே ஆபரேசன் செய்ய வேண்டுமானால் ஊரில் போய்ச் செய்து கொள்ளுங்கள் என்று எனக்கும், மனைவிக்கும் இன்னும் நம்பிக்கையைக் கொடுத்தார்.

இவர்களிடம் சென்று ஆபரேசன் செய்ய வேண்டாம்! என்று சொன்னால் விட மாட்டார்கள் என்று நினைத்துகொண்டு, டாக்டர்! நாங்கள் இருவரும் இங்குத் தனியாக இருக்கிறோம், ஆபரேசன் செய்தால் என்னைக் கவனித்துக்கொள்ள மனைவிக்குச் சிரமமாக இருக்கும், அதனால் ஊரில் சென்று செய்து கொள்கிறோம் என்று எதார்த்தத்தைச் சுட்டிப் பேசினேன். அவரும் சரியென்று தலையை ஆட்டி, எவ்வளவு சீக்கிரம் பண்ணுகிறீர்களே, அவ்வளவு நல்லது! என்று பக்கத்தில் இருந்த நர்சை அழைத்து, எங்களை டிஸ்சார்ஜ் செய்யச் சொன்னார்.

டாக்டர் அறையை விட்டு வெளியே வந்த எங்களிடம், நர்ஸ், சார்! நாங்க, எதனால் நீங்கள் ஆபரேசன் பண்ணவில்லை? என்பதற்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் அதில் பணம் இல்லை என்று எழுதியிருக்கிறேன். ஒரு கையெழுத்துப் போட்டுவிடுங்கள் என்றார். அவரைப் பார்த்துச் சிரிக்கத் தான் தோன்றியது. டிஸ்சார்ஜ் ரிப்போட்டில் பெரிதாக நாங்கள் இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்திருக்கிறோம், நாங்கள் ஆபரேசன் செய்வதற்குப் பரிந்துரை செய்திருக்கிறோம் என்றும் எழுதிக் கையெழுத்து வாங்கினார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குத் திரும்பவும் அடிவயிறு வலிப்பது போன்ற பிரம்மை வர துவங்கியது.

ஒரு வழியாக மருத்துவமனையில் உள்ளவர்களைச் சமாளித்து வீட்டிற்கு வந்தவுடன் மஸ்கட்டில் இருக்கும் ஜெனரல் மேனேஜருக்குப் போனில் அழைத்து விசயத்தைக் கூறினேன். அவர் ஹைதிராபாத்தில் வேறு மருத்துவமனைக்குச் சென்று கன்சல்ட் பண்ண வேண்டுமானாலும் நான் உதவி செய்கிறேன் அல்லது ஊருக்கு போக வேண்டுமானாலும் சென்று வா. முதலில் உடம்பை கவனித்துக் கொள், வேலைகள் எல்லாம் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்றார். வீட்டில் உள்ளவர்களும் ஊருக்கு வந்துவிடு என்று அழைத்தனர். உடனடியாகத் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் இரண்டு டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்துவிட்டேன். அவசர அவசரமாகக் கிளம்பி ஊருக்கு வந்தாயிற்று. மறுநாள் காலையில் உறவினர் ஒருவரின் மூலமாகத் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிம்ஸ் மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் வாங்கி அங்குச் சென்று யூராலஜி டாக்டருக்காகக் காத்திருந்தோம்.

இங்குக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிச் சொல்லுவது அவசியமாகிறது. ஒருமுறை அப்பாவிற்குத் திடிரெனக் கால் மூட்டுவலி வந்தது, ந‌டக்கும் போது ஒரு பக்கமாகத் தாங்கலாகத் தான் ந‌டந்தார். நாகர்கோவிலில் இருக்கும் மருத்துவமனைகளில் சென்று காட்டியபோது, ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டுக் கால் மூட்டுகள் இரண்டும் அதிகமாகத் தேய்ந்து உள்ளது. நீங்கள் உடனடியாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்குப் பயம் அதிகமாக இருந்தது. உடனடியாக உறவினர் ஒருவரின் மூலம் இந்தக் கிம்ஸ் மருத்துவமனைக்கு அப்பாவை அழைத்துச் சென்றிருந்தோம், சரியாக ஒரு மாதம் மாத்திரைகள் கொடுத்து, காலுக்குச் சில உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு டாக்டர் பரிந்துரைத்திருந்தார். சரியாக ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைத்தது. இப்போது அப்பா முழுமையாகக் குணமாகிவிட்டார். நான் இந்தக் கிம்ஸ் மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்ட வரை தேவையில்லாம் எந்தவொரு பிரச்சனைக்கும் அறுவைச் சிகிச்சையைப் பரிந்துரைப்பது இல்லை. மேலும் பணமும் அதிகமாகப் பிடுங்குவது இல்லை. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கூட்டம் மட்டும் அதிகமாக இருக்கும். அதனால் இங்கு மருத்துவம் பார்க்க வேண்டுமானால் ஒருநாள் முழுமையாக‌ நீங்கள் செலவு செய்ய வேண்டியதுவரும்.எனது டோக்கன் எண் டீவியில் வந்தவுடன் டாக்டரை சென்று சந்தித்தோம். ஹைதிராபாத்தில் இருந்து கொண்டு சென்ற ஸ்கேன் மற்றும் ரிப்போட்டுகள் எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்தவர், இப்போது வலியிருக்கிறதா? என்று மட்டும் கேட்டார், நான் இப்போது வலியில்லை என்றேன். பின்னர் இரத்தம், சிறுநீர் பரிசோதனை மற்றும் எக்ஸ்‍-ரே ஆகியவற்றை எழுதி, இவைகளைப் பண்ணிவிட்டு ரிப்போட்டுடன் வாருங்கள் என்றார். இவைகளை முடித்து ரிப்போர்ட் கிடைப்பதற்கு மதியம் ஆகியிருந்தது. மதியதிற்கு மேல் சென்று டாக்டரை பார்த்தோம். எல்லா ரிப்போட்டுகளையும் பார்த்துவிட்டு "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்றார். ஏம்ப்பா! மெத்த படித்த, கடவுளுக்கு நிகராகப் பார்க்கப்படும் டாக்டர்களே! எல்லா நோயாளியின் மனமும் இந்த ஒற்றைச் சொல்லுக்குத் தான் ஏங்குகிறது. இந்த உண்மை என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும். காசு, பணம், துட்டு, மணி.. என்று மட்டும் யோசிப்பதால் இந்த வார்த்தைகள் உங்கள் வாயினிலிருந்து வருவது இல்லை. "பயப்படும் படியாக ஒன்றுமில்லை" என்ற வார்த்தையின் பலமே என்னுடைய சிறுநீரகக் கல்லை கரைந்திருந்தது.

ஹைதிராபாத் மருத்துவமனையில் கொடுத்திருந்த எந்த மருந்தையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி, முப்பது நாட்களுக்கு இவர் புதிதாக‌ மாத்திரையும் மருந்தும் கொடுத்துவிட்டு இவைகள் முடிந்தவுடன் திரும்பவும் வந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார். இந்த கல் பிரச்சனை மூன்று நாளில் முழிபிதுங்க வைத்துவிட்டது. விமான டிக்கட் செலவு என்று பணத்தையும், அறுவைச் சிகிச்சை என்று மனத்தையும் காலி செய்திருந்தது.

சிறுவயதில் அம்மா சாப்பிடுவதற்கு எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பார்கள், அவர்களிடம் பசியில்லை என்று சொன்னால் அவர்களின் பதில் இதுவாகத் தான் இருக்கும் "கல்லைத் தின்றாலும் செரிக்கிற வயசு". இன்றைக்குச் சாப்பிடும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலும் ஆயில் இருக்கா? கொழுப்பு இருக்கா? என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிட்டாலும் கடைசியில் கல்லாகத் தான் தேங்குகிறது.

இன்று எதைச் சாப்பிடுகிறோம்? எப்படிச் சாப்பிடுகிறோம்? கண்டிப்பாகச் சிந்திகக வேண்டியிருக்கிற‌து.

.

8 comments:

ரூபன் said...

வணக்கம்
யாவரும் அறிய வேண்டிய விடயத்தை பதிவாக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

hameedu jaman said...

Good

Tamizhan said...

From your post, I guess you are a Gulf resident. You must take care of the amount of water you consume everyday. People are under a misconception that as we live in AC rooms, we dont need to worry, but it is the reverse. we exert higher work load to the kidneys,as sweating is controlled. Make sure you drink plenty of water and keep your BP under control.

‘தளிர்’ சுரேஷ் said...

பல டாக்டர்களும் மருத்துவ மனைகளும் பணம் பிடுங்கவே ஆசைப்படுகின்றனர். விழிப்புணர்வு பதிவு. வாழைத்தண்டு சாறு சிறுநீரகக் கல்லை கரைய வைக்கும். முயன்று பாருங்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

நலம்...

Anonymous said...

Hyderabad doctors are good in these kind of activities once they told my wife will die in another 3 months if we don't do the heart valve surgery immediately , then I came to Coimbatore for second opinion there is no issues with the heart identified , a tablet advised for couple of weeks (drowsiness) and solved the issue. this happened 11 yrs before

நாடோடி said...

@ரூபன் said...
//வணக்கம்
யாவரும் அறிய வேண்டிய விடயத்தை பதிவாக வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//

வணக்கம் ரூபன்,

உங்களின் மேலான கருத்துக்கு ரெம்ப நன்றி.

@hameedu jaman said...
//Good//

thank you Hameedu.

@Tamizhan said...
//From your post, I guess you are a Gulf resident. You must take care of the amount of water you consume everyday. People are under a misconception that as we live in AC rooms, we dont need to worry, but it is the reverse. we exert higher work load to the kidneys,as sweating is controlled. Make sure you drink plenty of water and keep your BP under control.//

Hi Tamizhan,

Yes, I was worked some gulf country in earlier days. Not now. thanks for giving your advise. now i am drinking lot of water.

நாடோடி said...

@‘தளிர்’ சுரேஷ் said...
//பல டாக்டர்களும் மருத்துவ மனைகளும் பணம் பிடுங்கவே ஆசைப்படுகின்றனர். விழிப்புணர்வு பதிவு. வாழைத்தண்டு சாறு சிறுநீரகக் கல்லை கரைய வைக்கும். முயன்று பாருங்கள்!//

வணக்கம் சுரேஷ்,

வாழைத்தண்டு பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன். பெரிய பதிவாக ஆகிவிடும் என்பதால் முடித்து கொண்டேன். ஒருமுறை அதை பற்றியும் எழுதுகிறேன். நன்றி.

@திண்டுக்கல் தனபாலன் said...
//நலம்...//

ரெம்ப நன்றி. :)

@Anonymous said...
//Hyderabad doctors are good in these kind of activities once they told my wife will die in another 3 months if we don't do the heart valve surgery immediately , then I came to Coimbatore for second opinion there is no issues with the heart identified , a tablet advised for couple of weeks (drowsiness) and solved the issue. this happened 11 yrs before//

very sad.. lot of hospital like that doing there own way.. how we believe. ):

Related Posts with Thumbnails