Monday, May 23, 2016

தேர்தலில் வாக்களிக்காதவர்கள் அயோக்கியர்களா?

தேர்தல் திருவிழா ஒரு வழியாக முடிந்துவிட்டது. இந்தத் தேர்தல் வாக்கிற்கு அதிகம் பணம் கொடுத்தவர்கள் அரியணையை ஏறுபவர்களாகவும், குறைவாக பணம் கொடுத்தவர்கள் மண்டப படிகளில் இருப்பவர்களாகவும், பணம் கொடுக்காதவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது. தேர்தலில் வாக்களித்தவர்கள் அனைவரும் ஜனநாயக பரிசுத்தவான்கள் போலவும், வாக்களிக்காதவர்கள் அனைவரும் ஜனநாயக நாட்டில் பாவிகள் என்பது போலவும் ஊடகங்கள் கட்டியெழுப்புகின்றன. அதிலும் குறிப்பாக, வாக்கு சதவீதம் குறைவாகப் பதிவான கன்னியாகுமரி மற்றும் சென்னையை குறிவைத்து, படித்தவர்களுக்கு ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து என்று அமிலத்தை வீசுகிறார்கள். எது நம்முடைய ஜனநாயகத்தில் கேலிக்கூத்து என்பதைக் கொஞ்சம் சுயபரிசோதனை செய்து கொண்டால் நன்றாக இருக்கும்.தேர்தல் பரப்புரைகள் தொடங்கிய நாள் முதல், தினந்தோறும் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பற்றி ஒரு சிறு விசாரணையாவது நடத்தப்பட்டதா? எவருடைய பணம்? எந்தக் கட்சி வேட்பாளரால் கொண்டுவரப்பட்டது? அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்பது பற்றி முழுமையான தகவல்களை இந்த மக்களுக்குக் கொண்டு சென்றனவா? இன்றைக்குத் தேர்தல் ஜனநாயகம் பற்றி பேசும் ஊடகங்கள். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு பணம் இந்தமுறை தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது.

யாரால், எந்தத் தொகுதிக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற புள்ளிவிவரம் உலகில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கே தெரிகிறது என்றால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான அதிகாரிகள் கொண்டு நடத்தப்படும் தேர்தல் ஆணையத்திற்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். பணம் பட்டுவாடா, லாட்ஜில் மூட்டை மூட்டையாய் பணம், கண்டெய்னரில் பிடிபட்ட பணம், லாரியில் கொண்டுசென்ற பணம் என்று தேர்தலே அம்மணமாய் கிழிந்து தொங்கும் போது, இரண்டு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து! என்று அறிவித்து ஒட்டு போடும் வேலையைத் தேர்தல் ஆணையம் செய்யும் போது வராத கோபம் வாக்களிக்காதவன் மீது வருவது வியப்பே!ஊழலில் திளைக்கும் இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்று வந்துவிட்டது, எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தமுறை ஆறுமுனை போட்டி என்றெல்லாம் ஊடகங்களில் நீட்டி முழங்க வேண்டுமானால் இந்தக் கட்சிகள் உதவும், ஆனால் மக்களின் நலன் சார்ந்து உண்மையில் முழுமையான மாற்றம் கொண்டுவர ஏதேனும் கட்சிகள் வந்ததா? என்றால் ஏமாற்றமே!, நான்கு கட்சிகள் சேர்ந்து ஒரு அணியாகத் திரண்டு முழுமையாக ஒரு வருடங்கள் முழுமையடையவில்லை, இந்த நால்வரும் முந்தைய தேர்தல்களில் இரண்டு பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தவர்கள். அதனுடன் ஒரே நேரத்தில் பல கட்சிகளுடன் பேரம் பேசிய விஜயகாந்த் கட்சி மற்றும் பெரிய கட்சிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமாக(வாசன்) இவர்கள் தான் மூன்றாவது அணி. மதவாதம் பேசும் தேசிய கட்சி, சாதி வெறியை வளர்க்கும் மாற்றம் முன்னேற்றம் கட்சி மற்றும் இனவாதத்தைத் தூண்டும் தமிழர் கட்சி இவர்கள் தான் உங்களுக்குத் தேர்தலில் மாற்றத்தை முன்வைத்தவர்கள். இருக்கிற கொள்ளியில் நல்ல கொள்ளியை எடுத்து தலையில் வைத்துக்கொள் என்பது போல் தான் இந்த மாற்றுக் கட்சிகள், அப்படி வைக்காதவனைக் காறி உமிழ்வது அபத்தத்தின் உச்சம்.

இவ்வளவு வக்கணையாய் பேசுகிறவன் வந்து நோட்டாவிற்கு ஒட்டு போட வேண்டியது தானே என்று நீங்கள் கேட்டால் அதைவிட நகைச்சுவை எதுவும் இல்லை. இந்த நோட்டாவிற்கான முழுமையான அதிகாரம் என்ன என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேர்தல் ஆணையம் 100 சதவீத ஓட்டுப் போட சொல்லி மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து விளம்பரம் செய்கிறது, ஆனால் தகுதியான வேட்பாளரை மக்கள் முன் நிறுத்துவதற்கு எந்தவித சட்டத்தையும் கடைப்பிடிப்பது இல்லை.

எதற்காக நான் ஒட்டு அளிக்கிறேன், என்னுடைய சார்பாக என்னுடைய தேவைகளையும், கருத்துக்களைச் சட்டசபையில் ஓங்கி ஒலிக்கச் செய்யும் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்க நினைத்து நான் ஒட்டு அளிக்கிறேன். அவ்வாறு நான் ஒட்டு போடும் வேட்பாளர் தேர்தலில் தோற்றால் என்னுடைய வாக்கு சீட்டிற்க்கான அங்கீகாரம் எங்கே? என்னுடைய குரலை சட்டசபையில் பேசுபவர் யார்? தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு அளித்த மக்களின் குரல்கள் வெற்றி பெற்ற வேட்பாளரின் குரலால் நசுக்கப்படும், வெற்றி பெற்றவர் பெரும்பான்மை பலம் பெற்றவர்களின் குரல் என்றால், சிறுபான்மை பலம் பெற்ற ஒடுக்கப்பட்டோரின் குரல் மவுனிக்க வேண்டியது தானா? இது தான் ஜனநாயகமா? இதற்குத் தான் நான் வாக்களிக்க வேண்டுமா?

உதாரணமாக இந்தத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவுகிறார். வெற்றி பெற்றவருக்கு இணையாகச் சதவீதத்தில் இவரும் வாக்குகள் வாங்குகிறார், இவருக்கு ஓட்டுப் போட்ட மக்களின் குரல்கள் சட்டசபையில் ஒலிக்காது, அதற்குக் காரணம் அவர் வெற்றி பெறவில்லை. இதில் இருக்கும் சிக்கல் ஜனநாயக மாண்புக்கு உட்பட்டது தானா?

என்னுடைய வாக்குக்கான மதிப்பு, நான் வாக்களிக்கும் அந்த வேட்பாளர் வெற்றி பெறவில்லை என்றால் குப்பைக்கு சமம் என்றால், நான் எதற்காக வாக்களிக்க வேண்டும்? இப்படி என்னுடைய வாக்குக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் நடைபெறும் ஒரு ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்க‌படும் மக்களாட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்.

மக்கள் அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றிற்கும் அங்கீகாரத்தை கொடுப்பதற்கான ஜனநாயக‌ வழியை வகுத்துக் கொடுத்துவிட்டு வாக்களிக்காதவர்களைக் குறை சொன்னால் பரவாயில்லை, ஆனால் நீ செலுத்தும் வாக்கு வெற்றி பெற்றவருக்கு என்றால் மதிப்பு, இல்லையென்றால் அது வெறும் "கைவிரல் மை" என்றால் எவருக்கும் அழியாத கைவிரல் மையைப் போட்டு அழகுப்பார்க்க‌ விரும்புவது இல்லை. வாங்கும் வாக்குகள் சதவீத அடிப்படையில் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பிரதிநித்துவம் கொடுக்கவேண்டும் என்ற முழக்கம் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.


.

1 comments:

Alien said...

Difference Thinking....

Nice.

Related Posts with Thumbnails