Thursday, June 16, 2016

உறவுகளைச் சிதைத்த நிதி நிறுவனத்தின் (PACL) மோசடி!!!

கிராமங்களில் தனியார் முதலாளிகளால் நடத்தப்படும் நிதி நிறுவனங்களை நம்பி பணத்தை கட்டும் மக்களையும், தனி ஆட்களால்  நடத்தப்படும் ஏலச்சீட்டுகளில் பங்கெடுக்கும் மக்களையும் அதிகப்படியான வட்டிக்கு ஆசைப்படும் மக்கள், கொழுத்த லாபத்திற்கு பேராசைப் படும் மக்கள் என்ற சிறுமை படுத்தும் சொற்றொடர்களில் அடக்கிவிட முடியாது. இப்படியான நிதி நிறுவனங்களிலோ, ஏலச்சீட்டுகளிலோ பணம் கட்டுபவர்கள் பெரிய அளவில் எதிர்கால திட்டங்கள் தீட்டி, வட்டிகளைக் கணக்கிட்டு, வரும் லாபத்தை வைத்துக் கொண்டு பெரும் குபேரர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் எவரும் அந்தச் சீட்டுகளில் சேர்வதில்லை. மாறாகப் பங்காளி சொன்னான், பக்கத்து வீட்டுக்காரன் சேர்ந்திருக்கிறான், சொந்த பந்தங்களும் என்னை அந்தச் சீட்டுகளில் சேர்ந்துகொள்ளச் சொன்னார்கள் என்ற வெள்ளந்தி தனமான காரணங்களால் தான் இப்படியான மோசடிகளில் விட்டில் பூச்சிகளாக பெரும்பாலானவர்கள் விழுகிறார்கள்.

எங்கள் கிராமத்தில் இந்த பிஏசிஎல் நிறுவனம் கடந்த எட்டு வருடங்களில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய வேர்களைப் பரப்பியிருந்தது, உள்ளூரில் சிறுசிறு வேலைகள் செய்துகொண்டு கொஞ்சம் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் எல்லோரும் இந்த நிறுவனத்தின் முகவர்கள் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய உறவினர்கள் ஒருவரையும் விடாமல் பாலிசி எடுத்துக்கொள்ளுமாறு துரத்தினார்கள். சில இடங்களில் அவர்களுக்கென்று தனியாக அலுவலகமும் வைத்திருந்தார்கள். இந்த பிஏசிஎல் நிறுவனத்திலிருந்து எங்கள் ஊரில் செயல்பட்ட முகவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அதனால் தான் சுலபமாக, வெகு விரைவில் மக்களிடம் இந்த நிறுவனம் காலூன்ற முடிந்தது.

முன்பெல்லாம்  நான் வெளிநாட்டிலிருந்து ஊருக்குச் சென்றால் இந்த பிஏசிஎல் நிறுவனத்தின் முகவர்கள் குறைந்தது ஒரு பத்து பேராவது என்னைத் தேடி வீட்டிற்கு வருவார்கள். அதில் பாதி பேர் நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள், மீதம் பாதி பேர் என்னையோ அல்லது என் குடும்பத்தில் உள்ளவர்களையோ தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணங்கள் சொல்லித் தப்பித்து விடுவேன். தொடக்கத்தில் என்னிடம் இதுவும் எல்ஐசி போலத் தான், ஆனால் இது ஐந்து வருடத்தில் முடிந்துவிடும் என்பது போல மேலோட்டமாக சொன்னார்கள், ஒருமுறை என்னுடைய உறவினர் ஒருவரிடம் இந்த நிறுவனத்தின் திட்டங்கள் பற்றிய கோப்புகளை காட்டச் சொன்னேன், அப்போது தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, நாம் கொடுக்கும் பணத்திற்கு இவர்கள் நிலங்களைத் தான் கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள், எங்கு நிலம் இருக்கிறது? அந்த நிலத்தை நாம் பார்க்க முடியுமா? எப்போது எனக்கு அது கிடைக்கும் என்ற என்னுடைய கேள்விக்கே அந்த முகவரிடம் பதில் இல்லை. நீங்க அதையெல்லாம் பார்க்க வேண்டாம், ஐந்து வருடம் முடியும் போது இவ்வளவு ரூபாய் (ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் தொகையை சொல்லி) உங்களுக்குக் கிடைக்கும் என்பது போல தான் சொன்னார்.

இந்த பிஏசிஎல்  நிறுவனத்திலிருந்து முகவர்களாகச் சுற்றி வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நிறுவனத்தின் செயல்முறைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு எல்ஐசி போன்று செயல்படும் ஒரு நிறுவனம், எல்ஐசியில் நாம் சேர்ந்திருக்கும் திட்டம் முடிவு பெற பதினைந்து வருடங்கள் பணம் கட்ட வேண்டும், அதன் பிறகு தான் நமக்கு மொத்த தொகை கைக்கு வரும். ஆனால் பிஏசிஎல் நிறுவனத்தின் திட்டங்களில் ஐந்து வருடம் பணம் கட்டினால் போதும், அடுத்த ஆறு மாதங்களில் முதிர்வு பணம் கைக்கு வந்துவிடும் என்பது போல தான் எல்லோரிடம் கொண்டு சேர்த்தார்கள். இன்னும் சிலரிடம் கூட்டுறவு வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் கட்டப்படும் ஆர்டி போலத் தான் என்றும், அதில் கிடைக்கும் முதிர்வு தொகையை விட இதில் அதிகமாகக் கிடைக்கும் என்றும் போகிற போக்கில் அள்ளி விட்டார்கள்.

கிராமங்களில் உள்ளவர்கள் மேலே சொல்லியவற்றையெல்லாம்  எப்படி நம்புகிறார்கள் என்பதில் தான் உளவியல் சிக்கல் இருக்கிறது, மேலே சொல்லப்படும் வார்த்தைகள் அனைத்தும் முகவர்கள் என்று சொல்லப்படும் உறவினர்களால் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கப்படுகிறது. இங்கு பிஏசிஎல் என்ற நிறுவனத்தை நம்புவதை விட மக்கள், இந்த நிறுவனத்தின் முகவர்கள் என்று சொல்லி வரும் உறவினர்களின் வார்த்தைகளை நம்புகிறார்கள், என்னுடைய பங்காளி என்னை ஏமாற்ற மாட்டான், என்னுடைய சித்தப்பா என் பணத்தின் மீது ஆசைப்பட மாட்டார், நண்பன் எதற்காக என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்பது போல இந்த முகவர்கள் என்ற உறவினர்கள் மீது அபார நம்பிக்கை வைக்கிறார்கள். இதனால் தான் இந்த நிதி நிறுவனம் செய்த மோசடியை, முகவர்கள் என்ற உறவினர்கள் செய்த மோசடியாக நினைத்து புழுங்குகிறார்கள். இன்றைக்கு இந்த பிஏசிஎல் என்ற நிறுவனம் செய்த மோசடியின் விளைவு பல குடும்பங்களின் உறவுகளை மிக மோசமாகச் சிதைத்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தால் இந்த பிஏசிஎல் நிதி நிறுவனத்தின் முகவர்கள் பத்து பேர் என்னைத் தேடி வருவார்கள் என்று சொன்னேன் அல்லவா, அவர்களைக் கல்யாணத்திற்கு முன்பு வரை எப்படியோ சமாளித்து விட்டேன், கல்யாணம் முடிந்த பிறகு இன்னும் கூடுதலாக வரத் தொடங்கினார்கள், இதற்கு ஒரே வழி, யாராவது ஒருவரிடம் ஒரு திட்டத்தில் சேர்ந்துவிட்டு, எல்லோரிடமும் நான் அவரிடம் பணம் கட்டுகிறேன் என்று முடித்துக் கொள்ளலாம் என்றால் யாரிடம் திட்டத்தில் சேர்வது என்ற சிக்கல்?.

நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் என்னுடைய குடும்ப காரர்களே பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தில் முகவர்களாக இருக்கிறார்கள், அவர்களிடம் நான் சேராமல் உங்களிடம் சேர்ந்தால் நன்றாக இருக்காது என்று அவர்களை ஒரு வழியாகச் சமாதான படுத்தி அனுப்பிவிட்டு, குடும்ப காரர்களில் இருக்கும் முகவர்களிடம் சேரலாம் என்றால் எந்தக் குடும்ப காரரிடம் சேர்வது என்ற சிக்கல்?.

மனைவியின் உறவினர்கள் என்ற முறையில் இரண்டு பேர் முகவர்கள், அண்ணனின் மனைவியின்  உறவுமுறையில் சிலர், எங்களுடைய குடும்ப உறவினர்களில் பலர் என்று ஒரு பெரிய லிஸ்டே இருந்தது. என்னுடைய மனைவி என்னிடம், "எங்களது உறவினர்களாக இருக்கும் முகவர்களிடம்  நான் பேசிக்கொள்கிறேன்" வேறு இருப்பவர்களிடம் எவராவது ஒருவரிடம் சேருங்கள் என்று ஒரு சிக்கலை அவிழ்த்தார். மற்ற இரண்டு உறவினர்களில் கண்டிப்பாக ஒருவர் வீதம் போட்டு தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தது. அண்ணனின் உறவினரில் அண்ணியின் சித்தி, எங்களின் குடும்பத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார், இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது அண்ணனின் குழந்தைகளை பார்ப்பதற்காக வாருவார், எனவே அவரிடமே அண்ணனுடைய குழந்தையின் பெயரில் ஒரு திட்டத்தில் சேரலாம் என்றும், என்னுடைய மனைவி திருமணம் முடிந்த முதல் ஒரு வருடம் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார், எனவே அவருடைய பெயரில் ஒரு திட்டம் எடுக்கலாம் என்று என்னுடைய பெரியப்பாவின் மகள் எனக்கு அக்காள் முறை வரும் அவர்களிடம் சேர்வது என்றும் முடிவு செய்தோம். எல்லாம் ஒரு வருடம் ஆறு மாதம் நன்றாகத் தான் போனது, பணத்தை மாதம் மாதம் வீட்டிற்கே வந்து வாங்கிச் சென்றார்கள். ஒரு மாதம் பணம் கொடுப்பதற்கான ரசீதை அடுத்த மாதம் பணம் வாங்கும் போது கொடுத்தார்கள்.

இந்த பிஏசிஎல் நிறுவனத்தின் மீது சிபிஐ புகார், அலுவலகங்களில் சிபிஐ  ரெய்டு என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்ததிலிருந்து அடிக்கடி எங்கள் வீடுகளுக்கு வந்து கொண்டிருந்த இந்த நிறுவனத்தின் முகவர்களான உறவினர்கள் இப்போது வருவதில்லை, என்னுடைய அக்கா வாரத்திற்கு ஒரு நாளாவது எங்களுடைய வீட்டிற்கு வருவார். இந்த நிதி நிறுவனத்தின் மோசடிக்கு பிறகு எங்களிடம் என்ன சொல்வது என்ற தர்மசங்கட நிலைக்கு ஆளாகி வீட்டிற்கு வருவதை குறைத்துக்கொண்டார். நாங்களும் அவரை எங்காவது பார்த்தால் அவரிடம் என்ன கேட்பது, எப்படி கேட்பது என்ற தயக்கம், அப்படியே அவரிடம் கேட்டாலும், இந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை பற்றிய செய்திகள் அவருடைய மேலதிகாரிகளும் சரியாக சொல்வதில்லை என்று பதில் சொல்லுகிறார்கள். ஆனால் கட்டிய தொகை கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று இன்னும் எங்களை நம்ப சொல்லுகிறார்கள்.

இது என்னுடைய கதை இல்லை, பலருடைய குடும்பங்களில் இது தான் நிலைமை, காரணம் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல் எவரும் இந்த நிறுவனங்களின் நம்பிக்கையை விட, இந்த உறவினர்களின் வார்த்தையை நம்பி  தான் திட்டங்களில் அதிகமாகசேர்ந்தார்கள். நானும் கூட இந்த இரண்டு குடும்ப முகவர்களிடமும், உங்களுடைய நிறுவனத்தின் மீது எனக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது, உங்களின் வார்த்தையை நம்பியும், இதனால் உங்களுக்கும் ஒரு சிறு பலன் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் நான் இந்தத் திட்டத்தில் சேருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

இந்த பிஏசிஎல் நிறுவனத்தில் சேர்ந்திருந்த முகவர்களுக்குக் கொடுக்கப்படும் போனஸ் தொகையானது மற்ற நிறுவனங்களில் கொடுக்கப்படும் தொகையை விட அதிகம், அதனால் அதிகமான முகவர்கள் இந்த நிறுவனத்தில் சேருவதில் காட்டிய ஆர்வம் இந்த நிறுவனத்தின் மோசடிக்குத் துணையாக அமைந்தது, மிகக் குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் தன்னுடைய கிளைகளைக் கிராமங்களின் அடிவரையிலும் சென்று சேர்த்தது. முதல் ஐந்து வருடங்களில் சேர்ந்தவர்களுக்கு, சொல்லிய காலத்திற்குள் முதிர்வு தொகையை கொடுத்திருந்தது, அவ்வாறு கிராமங்களில் முதிர்வு தொகை பெற்ற ஒரு சிலரின் பெயர்களை மூலதனமாகச் சொல்லி  பலரிடம் இந்தத் திட்டங்களை கொண்டு சேர்த்ததில் இந்த முகவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

இந்த நிதி நிறுவத்தின் மோசடியால் பணத்தை இழந்தது ஒருபுறம் இருந்தாலும், குடும்ப உறவினர்களின் உறவுகளிலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இன்றளவும் பலகுடும்பங்களில் உள்ளவர்கள் தான் கட்டிய பணத்தை உறவினர்களானமுகவர்களிடம் கேட்டு சண்டைகள் போடுகிறார்கள். இந்தச் சண்டையை சகிக்க முடியாமல் சில முகவர்கள் தங்களுடைய கை காசுகளைப் போட்டும், கடன் வாங்கியும் அவர்களுக்கான தொகையை திரும்பக் கொடுத்து குடும்ப உறவினர்களைத் திருப்தி படுத்துகிறார்கள்.




சஹாரா நிறுவனம் செய்த நிதி நிறுவன மோசடியை விட இந்த பிஏசிஎல் நிறுவன மோசடி பல மடங்கு பெரியது என்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிதி நிறுவன மோசடி இது தான் என்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்வதற்கு முறையான அங்கீகாரம் பெறவில்லை என்று இன்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இவர்கள் ஒவ்வொரு மாதமும் வசூலிக்கும் பல கோடி ரூபாய் தொகையை அரசு அங்கீகரித்த வங்கிகள் மூலமாகத் தான் பரிமாற்றம் செய்திருப்பார்கள், சாமானியனான என்னால் ஒரு வங்கியின் மூலம் இன்னொருவரின் வங்கி கணக்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் கூட முழுமையாகப் பண பரிமாற்றம் செய்ய முடியவில்லை. ஒரு ரூபாய் பண பரிமாற்றம் செய்ய வேண்டுமானாலும்  நம்மிடம் ஆயிரத்தெட்டு ஆவணங்கள் இருக்க வேண்டும், எதற்காக என்று கேட்டால் இது தான் வாங்கியின் சட்ட நடைமுறை என்று நமக்கு வகுப்பு எடுக்கிறார்கள். இவர்களில் சட்டம் யாரை நோக்கிப் பாயும் என்பது ஏழை விவசாயி பாலனை தாக்கியதிலும், முதலாளி மல்லயாவை பத்திரமாக லண்டனில் சேர்த்ததிலும் தான் பல்லிளிக்கிறதே!..


இந்த நிறுவனத்தின் மோசடியைப் பற்றிய விகடன் கட்டுரை:

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

எனது அத்தையும் பி.ஏ.சி எல் முகவர். பலமுறை என்னிடம் சேரச் சொல்லி கேட்டார். நான் சேரவில்லை. இன்று அவரிடம் பணம் கட்டிய பலர் தொந்தரவு செய்கின்றனர். தவித்து வருகிறார்.

நாடோடி said...

வாங்க சுரேஷ்,

உண்மைதான், பெரும்பாலன ஏஜென்டுகளின் நிலைமை மோசம் தான். இதில் உறவினர்களாக இருப்பது தான் இன்னும் சோகம்..

Related Posts with Thumbnails