நான் படித்த பள்ளியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பற்றி இந்த பதிவில் எழுதுகிறேன். அந்த சம்பவம் நடந்த போது நான் கல்லூரியில் பயின்று வந்தேன். நான் படித்த பள்ளியின் பெயர் புனிதலாறன்ஸ் மேனிலைப் பள்ளி. அதில் பனிரென்டாம் வகுப்பு படித்த இரண்டு மாணவர்கள். அவர்கள் பள்ளி படிக்கும் போதே எல்லா கெட்டபழக்கங்களையும் கற்று இருந்தனர், வீட்டில் பெற்றவர்கள் சொல்லையும், வெளியில் பெரியவர்கள் சொல்லையும் மதிப்பதில்லை. அதே போல் வகுப்பிலும் ஆசிரியரின் பேச்சையும் கேட்பது இல்லை. அவ்வாறு இருக்க ஒரு நாள் வகுப்பாசிரியர் ஏதோ தவறுக்காக வகுப்பறையை விட்டு வெளியேற சொன்னார். இவர்கள் இருவரும் வகுப்பின் வெளியில் நின்றனர். அந்த வழியாக தலைமையாசிரியர் வலம் வரும் போது இந்த இரண்டு மாணவர்களையும் வகுப்பறையின் வெளியில் பார்த்தார். அவர்களிடம் என்ன என்று விசாரித்தார். அதற்குள் வகுப்பாசிரியர் வந்து இரு மாணவர்களின் மீது சரமாரியாக புகார்களை அள்ளி தெளித்தார். ஏற்கனவே அந்த இரு மாணவர்களைப் பற்றி தலைமையாசிரியர் அறிந்திருந்ததால் அந்த மாணவர்களிடம் உங்களின் பெற்றோர்களை கூட்டி வந்தால் மட்டுமே பள்ளியில் சேர்ப்பதாய் கூறி பள்ளியை விட்டு வெளியில் அனுப்பினார்.
அந்த இரு மாணவர்களும் எந்த பதிலும் சொல்லாமல் பள்ளியை விட்டு வெளியே சென்று விட்டனர். மறுதினம் காலை பத்து மணியளவில் பள்ளியின் மதில்சுவர் அருகில் இருந்து ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்கின்றது. என்னவென்று தலைமையாசிரியர் அறையை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தார். பின்பு அங்கிருந்த ஆசிரியர்களிடம் விசாரித்தார். அந்த வெடிச்சத்ததிற்கு காரணம் உங்களால் நேற்று வெளியேற்றப் பட்ட அந்த இரண்டு மாணவர்கள் தான் என்று நடந்த விபரங்களை ஆசிரியர்கள் கூறினர். இதை கேட்டதலைமையாசிரியர் கோபம் கொண்டு அறைக்கு சென்று தொலைபேசியின் மூலம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இரண்டு மாணவர்களையும் கைது செய்து கூட்டி சென்றனர்.
மறுநாள் காலை வழக்கம் போல் எங்கள் ஊரில் பாத்திரிகை வருகிறது. அதில் "பள்ளியின் மீது வெடிகுண்டி வீச்சு" என்ற தலைப்புடன் செய்தி போடப்பட்டிருந்தது. மேலும் அதற்கு காரணமாக அந்த பள்ளியில் படித்த இரண்டு மாணவர்களும் கைது செய்யபட்டனர் எனவும், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர் எனவும் சொல்லப் பட்டிருந்தது. மேலும் அதனுடன் சேர்த்து ஒரு பெண்மணியின் பெயரை போட்டு, இவர்தான் அந்தமாணவர்களுக்கு வெடிகுண்டு சப்ளை செய்ததாகவும், அவர் நடத்தி இருந்த கடையில் இருந்து ஏராளமான வெடிப்பொருட்கள் கைப்பற்ற பட்டதாகவும் படத்துடன் பிரசுரிக்கப் பட்டிருந்தது. இந்தசெய்தி தான் பத்திரிகையின் பிரதான செய்தியாக அன்று வந்திருந்தது.
எங்களது ஊரில் ஊனமுற்ற பெண்மணி ஒருவர் தனது வீட்டிலேயே பெட்டிககடை ஒன்று வைத்திருந்தார். அது நான் படித்த பள்ளியின் அருகிலேயே இருந்தது. அதனால் அந்த கடையில் பள்ளி மாணவர்களை கவருவதற்காக மிட்டாய்கள் மற்றும் பரிசுச் சீட்டு போன்றவை அதிகமாக இருக்கும். அதோடு அல்லாமல் அந்தகடையில் சிறிய பட்டாசுகளும் கிடைக்கும். இதை அவர் விற்பதற்கு அரசிடம் இருந்து எந்தவித உரிமமும் வாங்கபடவில்லை. அங்கு விற்கப்படும் பட்டாசுகளில் முக்கியமானது "எறிபடக்கு" என்று அழைக்கப்படும் ஒருவகை பட்டாசு. இதன் உள்பகுதியில் வெள்ளை கல் மற்றும் வெடிமருந்து வைக்கப்பட்டு வெளியில் காகிதங்களால் சுற்றப்பட்டு சிறிய எலுமிச்சைப் பழஅளவு இருக்கும். இதை தரையில் ஓங்கி அடித்தால் "பாடார்" என்ற சத்தத்துடன் வெடிக்கும். இந்தவகை பட்டாசை சிறுவர்கள் வாங்கி வெடிப்பது உண்டு. பாதுகாப்பாக இருப்பதால் பெரியவர்களும் கண்டுகொள்வது இல்லை. குறிப்பாக இதற்கு நெருப்பு தேவையில்லை. தென்பகுதியில் உள்ளவர்கள் இதைப்பற்றி அறிந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பத்திரிகையில் அன்று சொன்னது போல் அன்று பள்ளியின் மீது வெடிகுண்டு வீசப்படவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்றால், பள்ளியில் இருந்து அனுப்பபட்ட அந்த இரண்டு மாணவர்களும் தலைமையாசிரியர் கூறியது போல் மறுநாள் பெற்றோரை பள்ளிக்கு கூட்டி வரவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் இருவரும் அந்தஊனமுற்ற பெண்ணின் கடையில் இருந்து எறிபட்டாசை வாங்கி கொண்டு வந்து பள்ளியில் மதில்சுவரின் மீது எறிந்து வெடிக்கசெய்தனர். உண்மையில் அது வெடிகுண்டு இல்லை, பட்டாசு தான். இது தலைமையாசிரியருக்கும் தெரியும். ஆனால் இந்தமாணவர்களின் ஒழுங்கீனங்களை ஏற்கனவே அறிந்திருந்தபடியாலும், பட்டாசை கொண்டுவந்து பள்ளியின் மதில் மேல் எறிந்து விளையாடியதும் அவரது கோபத்தை அதிகப்படுத்தியது. இவர்களுக்கு ஒரு பாடம் புகட்டவே அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளும் அந்த இரண்டு மாணவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், எங்கு இருந்து வெடிகுண்டு வாங்கினீர்கள் என்று கேட்டு விட்டு அந்த ஊனமுற்ற பெண்மணியையும் கைது செய்தனர். மறுநாள் பத்திரிகையில் ஒரு பெரியகதையை எழுதி இருந்தார்கள். அதில் பெரும்பகுதி புனையப்பட்டதாகவே இருந்தது.
இந்தசம்பவத்தில் அரசியல் விளையாடியதா? அல்லது பத்திரிகைகள் தனது சுயநலத்துக்காக மிகைப் படுத்தி எழுதினவா? என்று நான் அறியேன். ஆனால் சில விசயங்கள் என்னை உறுத்தியது. பத்திரிகையில் தன்னுடைய பெயரை பார்த்த அந்த ஊனமுற்ற பெண்மணி மனதளவில் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார், பாதிக்கப்பட்டிருப்பார். அந்த மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும். அந்த சம்பவத்தில் தொடர்புடைய பையன் ஒருவனின் அப்பா வெளி நாட்டில் வேலை செய்து வந்தார். மகனின் படிப்பு முடித்தவுடன் தன்னுடன் அழைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் பையன் செய்த காரியத்தால் அவருடைய கனவு தகர்ந்தது. இனி ஜென்மத்திற்கும் வெளிநாடு போக முடியாதபடி ஆகிவிட்டது, காரணம் அந்த வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஐயா காவல்துறை கணவான்களே! பத்திரிகை வியாதிகளே! எந்தஒரு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் போதும், எழுதும் போதும் சிறிது மனசாட்சியுடன் கையாளுங்களேன்.
Friday, February 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது, இதில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை நினைத்தால்.
நம்முரு பத்திரிக்கைகள் தர்மம் பத்தி நமமுருக்கு தெரியாததா? வியாபாரம் அதிகம் நடக்க என்னவேணாலும் மனசாட்சி இல்லாம எழுதுவானுங்க... விடுங்க தல
வருத்தமான நிகழ்ச்சி.
சில நாட்களுக்கு முன் ஒரு விமானம் கோளாறினால் கடலில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.
அதை ஒரு தமிழ் டிவியில் இப்படி சொன்னார்கள்.
அந்த நாட்டி விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று.
அருமையான அலசல்,
பத்திரிக்கைகளில் இந்த மாதிரி செய்திகளால் குழப்பம் வரும். எல்லாம் காசுக்குதான். நன்றி ஸ்டீபன்
நிஜமாகவே இப்படி நடந்ததா???வருத்தமான நிகழ்ச்சி.
ஒண்ணுன்னா ஒன்பதுன்னு எழுதறது தான் பத்திரிகைகளின் வேலை. அவர்கள் இம்மாதிரியான பொய்களை புனைவதற்கு, வேறு..... கீழ்த்தரமான வேலைகளை செய்யலாம். அவர்களுக்கு தேவையாய் இருப்பதெல்லாம் பணம் தானே
ஒரு செய்தியை பத்தா திரிச்சி மக்கள் கைல கொடுக்கறதுதான் பத்திரிக்கை.. பாருங்க பத்து+திரி+கை...
மிகக் கொடுமையான விசயம்..
ஐயா காவல்துறை கணவான்களே! பத்திரிக்கை வியாதிகளே! எந்தஒரு சம்பவத்தை பற்றி விசாரிக்கும் போதும், எழுதும் போதும் சிறிது மனசாட்சியுடன் கையாளுங்களேன்.
.........பத்திரிகை தர்மம் என்று ஒன்று உண்டு. அது இன்னும் இருக்கிறது என்று நம்புவோம். பொறுப்புணர்ந்து நடக்கட்டும்.
இந்த மீடியா பத்தி கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் எழுதினது
http://www.karthikthoughts.co.cc/2009/12/blog-post_24.html
இதில் தவறு செய்தவர்கள்:
1. அந்த மாணவர்கள் (வெடி வெடித்தார்கள்)
2. தலைமையாசிரியர் (போலீஸில் கா(மா)ட்டிவிட்டார்.)
3. காவலர்கள் (கேஸ் போட்டார்கள்; சிறையில் போட்டார்கள்)
4. பத்திரிகை (செய்தி போட்டு மாணவர்களின் எதிர்காலத்தை
பாழடித்தார்கள்)
5. நாடோடி (பத்திரிகை என்பதை "பத்திரி'க்'கை" என்று
போட்டார்.)
எனினும் தலைமையாசிரியர் இன்னும் பொறுப்புடன் செயல்பட்டிருக்கலாம்.
@சைவகொத்துப்பரோட்டா
உள்ளதை உள்ளபடி எழுத மாட்டார்களா என்ற ஆதங்கம் தான்.
தொடர்ந்து வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
@நாஞ்சில் பிரதாப்
முடிந்து போன விசயத்தை எப்படி எழுதினாலும் பரவாயில்லை தல..ஆனா இந்த விசயத்தில்...
@அக்பர்
தொலைக்காட்சி செய்திகள் இதை விட மோசம்..என்னைக்கு தான் திருந்துவார்களோ..
@Starjan ( ஸ்டார்ஜன் )
கருத்துக்கு நன்றி ஸ்டார்ஜன்.
@gulf-tamilan
உண்மை தான் நண்பா...வருகைக்கு நன்றி
@தமிழ் உதயம்
ஒரு வார்த்தை சொன்னாலும் திருவாசகமாய் சொன்னீங்க..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@அண்ணாமலையான்
புது விளக்கம் அருமையாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@முத்துலெட்சுமி/muthuletchumi
உண்மை தான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@Chitra
வாங்க மேடம்..உங்களுடைய கருத்தை வழிமொழிகிறேன்.
@LK
படித்தேன் நண்பரே...நல்லா எழுதி இருக்கீங்க..பாலோவரா போட்டேன்..ஆனால் உங்களுடைய பதிவுகள் என்னுடைய பிளாக்கில் தெரியவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை.உங்களுக்கு தெரிந்தால் கூறவும்.
@அக்பர்
அப்பவே படித்தேன் அக்பர்..நீங்க சொல்லி எழுதாமலா? எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை தல..பழைய நினைவுக்கு போயிட்டு வந்து விடுகிறேன்
@NIZAMUDEEN
வாங்க நிஜாம்..பதிவை அருமையாக ஐந்து வரிகளில் சுருக்கி விட்டீர்கள். ஆனால் அந்த ஊனமுற்ற பெண்ணை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை. அவர் தவறு செய்ய வில்லையா? அல்லது அவருக்கு தவறு இழைக்க படவில்லையா?..அப்படியே என்னுடைய தவறை சொல்லியதற்கு ரெம்ப நன்றி. உடனே திருத்திவிடுகிறேன்..உங்களுடைய சிரிப்பு எல்லாம் ரெம்ப நல்லா இருக்கு..
எல்லாத் தொழிலுக்கும் தொழில் தர்மம் என்று உள்ளது. அதற்காக சில நியாய தர்மங்களை அவர்கள் மீறுகிறார்கள். இது எல்லாத் தொழிலிலும் உள்ளது. பத்திரிக்கைத் தொழிலில் விளம்பரத்திற்காக இந்த தர்மம் மிகையாக மீரப் பட்டுள்ளது.. மிகவும் கண்டிக்கத் தக்கது.
மனிதத்தை மறந்தவர்களால் நிகழ்ந்த வெட்கக் கேடு..
நன்றி..
இதுபோன்ற தவறுகளால் பாதிக்கபடுபவர்களைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டால் அவர்களுக்கு பிழைப்பில்லாமல் போய்விடும் என்று
நினைக்கிறார்களோ என்னவோ.
தர்மம் வெல்லும்
பரபரப்பிற்காக எழுதும் பத்திரிக்கை சூழலில் நாம் மாட்டி கொண்டுள்ளதை அருமையாக பதிவில் விளக்கியிருக்கீங்க...
@நாடோடி
தெரியவில்லையே. நான் சமீபத்தில் http ://lksthoughts .blogspot .கம என்ற முகவரியில் இருந்து http :// kathikthoughts .co .cc என்ற முகவரிக்கு மாறிஉள்ளேன். அதனால் என்று எண்ணுகிறேன். எதற்கும் கூகுளுக்கு ஒரு மெயில்அனுப்புகிறேன்
ஊடகங்கள் செய்வது விபச்சாரத்தைவிட கேவலமாக இருக்கிறது. வீடுகளில் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதை இந்த ஈனப்பிறவிகள் எப்படி மறந்தனரோ?
(திரும்ப திரும்ப ஒரே காட்சியை காட்டிக்கொண்டிருப்பத்)
உங்கள் பதிவு சரியான சமயத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அரிப்பெடுத்து அலைப்வர்களுக்கு இது புரியுமா?
Post a Comment