Tuesday, March 25, 2014

முளைக்கும் ஞானப்பல்_பிடுங்குவதைத் தவிர வேறு வ‌ழியில்லை!!!

போன வருடத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் எனக்குக் கடுமையான‌ பல்வலி, என்னால் தாங்க முடியவில்லை. கீழ் தாடையின் பின் கடவாய் பல்லில் உள்ள‌ ஈறு நன்றாக வீங்கி குத்தல் வேறு. முகத்தில் ஒரு பக்கம் கன்னம் நன்றாக‌ வீங்கி விட்டது. தாடையின் அடியில் கழலை வேறு கட்டி விட்டது. ஈறு வலி பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்துக் காலையில் உப்பால் நன்றாக வாயை கொப்பளித்து விட்டு, ஒரு கப் பால் மட்டும் அருந்திவிட்டு, ஆபிஸுக்குக் கிளம்பிவிட்டேன். என்னால் வாயை கூட நன்றாகப் பிளந்து பேச முடியவில்லை, எதையும் சாப்பிடவும் முடியவில்லை. ஒரு வேளை சிங்கப் பல் முளைக்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால் எனக்குச் சில வருடங்களுக்கு முன்பே அந்தப் பல் முளைத்து விட்டது. அதனால் எனக்கு அதன் மீது நம்பிக்கை இல்லை. எனக்குச் சொத்தை பல் இதுவரையிலும் எதுவும் இல்லை. அதனால் அது சம்பந்தமான பிரச்சனையாகவும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் தாங்க முடியாத வலி. நேரம் ஆக ஆக வலி அதிகமாகி கொண்டே இருந்தது.

ஆபிஸில் உள்ள‌ நண்பர்கள் ஒவ்வொருவரும் மருத்துவ மனைக்குப் போகச் சொன்னார்கள். நான் இருக்கும் ஹைதிராபாத் ஏரியாவில் எந்தத் திசையில் திரும்பினாலும் பல் மருத்துவமனைகளைத் தான் பார்க்க முடியும். எந்த மருத்துவமனைக்குப் போவது என்பதில் எனக்கும் நண்பர்களுக்கும் குழப்பம், நானும் இங்குள்ள பல் மருத்துவமனைகளுக்குப் போனது கிடையாது.

என்னுடைய கன்னம் வீங்கி இருப்பதும், நான் வாய் திறக்க முடியாமல் பேசுவதையும் பார்த்த‌ தெலுங்கு நண்பர் ஒருவர், நீங்க என்னுடன் வாங்க, பக்கத்தில் இருக்கும் பல் மருத்துவமனைக்கே போய் விடலாம் என்றார். சரி என்று நானும் அவருடன் டூவிலரில் அமர்ந்தேன். நாங்கள் கிளம்பிய நேரம் மதிய நேரமாக‌ இருந்ததால் பெரும்பாலன கிளீனிக்குகள் மூடி இருந்தன. கொஞ்ச தூரம் சென்ற பின்பு, ஒரு டென்டல் கிளீனிக் திறந்திருப்பதைப் பார்த்தோம், வண்டியை பார்க் செய்துவிட்டு கிளீனிக்குள் நுழைந்தோம். முன் அறையிலேயே, கம்யூட்டர் வைத்த மேஜையின் முன்பாக‌ பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்தவுடன் மே ஐ ஹெல்ப் யூ சார் என்றார். நண்பர் என்னைக் காட்டி, இவருக்கு பல்வலி டாக்டரை பார்க்க வேண்டும் என்றார். பெயர், வயது, முகவரி, மொபைல் எண் என்று அனைத்தையும் கேட்டு விட்டு, முந்நூறு ரூபாய்க் கொடுங்கள் என்றார். பணத்தைக் கொடுத்தவுடன், அதை வாங்கி மேஜையில் போட்டு மூடிவிட்டு, பிரிண்டரை ஆன் செய்து என்னுடைய தகவல்களை, அவர்கள் கிளீனிக் பெயரிட்ட பேப்பரில் பிரிண்ட் செய்து, ஒரு பைலில் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டார், என்னைச் சைகைக் காட்டி பின்னால் வர சொல்லி, பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

நானும் உள்ளே நுழைந்தேன், அங்கு முப்பது வயது மதிக்கதக்க பெண் ஒருவர் இருந்தார், வெள்ளை கோட் மாட்டியிருப்பதால் அவர் தான் டாக்டராக இருக்க முடியும் என்று எண்ணிகொண்டேன். அவர் முன்பாக இருந்த நாற்காலியில் என்னை அமர சொன்னார். நானும் அமர்ந்தேன், என்ன பிரச்சனை என்பதைக் கேட்டவர் கையில் ஒரு போர்க் போன்ற இரும்பு கத்தி ஒன்றையும், சிறிய டார்ச் லைட்டையும் கையில் எடுத்து வாயை பிளக்க சொன்னார். என்னால பெரிய அளவில் வாயை திறக்க முடியவில்லை. அவர் எழுந்து நின்று போர்க் போன்ற கத்தியால் தாடையை அழுத்தி பார்த்து விட்டு, அணிந்திருந்த கோட்டின் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை எடுத்து எவரிடமோ தெலுங்கில் பேச தொடங்கினார். அவர் பேசியதை வைத்து பார்க்கும் போது, அவருடைய சீனியராகத் தான் இருக்க வேண்டும். பேசி முடித்து விட்டு சார் உங்களின் பல்லுக்கு ஒரு ஸ்கேன் எடுக்க வேண்டும். இப்போது சீனியர் டாக்டர் இங்கு இல்லை, ஈவ்னிங் வந்தால் ஸ்கேன் எடுத்துவிட்டு சீனியர் டாக்டரிடம் நீங்கள் கன்சல்ட் பண்ணலாம் என்றார். மேலும் உங்க வலிக்கு ஒரு மாத்திரை எழுதியிருக்கிறேன், ஒன்று மட்டும் போடுங்கள், நான்கு மணி நேரம் உங்களுக்கு வலி இருக்காது என்றார். என்ன பிரச்சனை என்று கேட்டேன், அதற்கு அவர் நம்ம ஊரு படங்களில் வரும் டாக்டர்களில் டயலாக் ஆன, எதுவும் ஆபரேசன் முடிந்த பிறகு தான் சொல்ல முடியும் என்பது போல், ஸ்கேன் எடுத்தால் தான் எதுவும் சொல்ல முடியும் என்றார். நானும் வெளியே வந்து விட்டேன்.

என் பின்னாலேயே முன் அறையில் இருந்த‌ பெண்மணியும் வந்தார், வந்தவர் மாத்திரை எழுதிய சீட்டை கொடுத்துவிட்டு, ஈவ்னிங் எப்ப சார் வருவீங்க, அப்பாயின்மென்ட் போட்டு வைக்கவேண்டும் என்றார். ஐ வில் டிரை டு கம் யேர்லி என்று சொல்லிவிட்டு நண்பனுடன் நடந்தேன். எல்லா டாக்டர்களும் எழுதும் புரியாத மருந்து சீட்டு போல் இல்லாமல் மாத்திரையைப் படிக்க முடிந்தது. "கேட்ரால்" (ketorol) என்று மாத்திரையின் பெயர் எழுதியிருந்தது, பல்வலி என்று சொன்னவுடன் எனது நண்பர் ஒருவரும் இந்த மாத்திரையின் பெயரை சொல்லித்தான் வாங்கிச் சாப்பிட சொல்லியிருந்தார். டாக்டரின் கன்சல்ட் இல்லாமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேண்டாம் என்று மற்ற நண்பர்கள் சொல்லியதால் இங்கு வர வேண்டியதாயிற்று.

மெடிக்கல் ஷாப்பில் இருந்து மாத்திரையை வாங்கி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டேன். ஒரு மாத்திரையைப் போட்ட சிறிது நேரத்திலேயே பல்வலி குறைந்து விட்டது,. ஆனால் பல் ஈறுகளின் வீக்கம் குறையவில்லை. காலையில் இருந்து ஏதும் சாப்பிடத‌தால் கடுமையான பசி வேறு, ஒய்ப் கொடுத்த பயிறு கஞ்சியைக் குடித்து ஒரு தூக்கத்தைப் போட்டேன். சரியா நான்கு மணி நேரம் தான் அந்த மாத்திரை வேலை செய்தது. மாலை ஆறு மணியளவில் மீண்டும் கடுமையான பல்வலி ஆரம்பித்தது. ஒய்ப், காலையில் நான் சென்ற‌ டென்டல் கிளீனிக்கு திரும்பவும் போகலாம் என்றார். எனக்கோ, சாதாரண‌ பல்வலிக்கு ஸ்கேன் என்பது கொஞ்சம் ஓவராகப் பட்டது. பக்கத்தில் இருக்கும் வேறு கிளீனிக் போகலாம் என்று நான் சொன்னேன், அவரும் சரி என்று இருவரும் கிளம்பினோம்.

நான் வசிக்கும் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள மெயின் ரோட்டில் குறைந்தது பத்து டென்டல் கிளீனிக்காவது இருக்கும். நாங்கள் இருவரும் நடந்து மெயின் ரோட்டை அடைந்தோம். அந்த ரோட்டின் முதல் வரிசையிலேயே இருந்த கடைகளில் முதல் மாடியில் வெள்ளை நிற போர்டில் புளுக் கலரில் எழுதப் பட்ட டென்டல் கிளீனிக்கை நோக்கி நடந்தோம். அந்தக் கிளீனிக் உள்ளே நுழைந்தவுடன் ரிசர்ப்சன் என்று எதுவும் இல்லை, விசாலமான‌ ஒற்றை அறை கொண்டது அதில் பாதியில் ஒரு ஸ்கீரின் தொங்க விடப்பட்டு, அந்த அறை இரண்டாகப் பிரிக்கப் ப‌ட்டிருந்தது. ஸ்கிரீன் முன்னால் ஒரு சாய்வு நாற்காலியில் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் மட்டும் இருந்தார். அவர் முன்னால் ச‌ற்று உயரம் அதிகமான ஸ்டூல் போன்ற இருக்கை இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு ரோபட்டின் கை போன்ற ஒரு மெஷின் இருந்தது. எங்களைப் பார்த்தவுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் எழுந்து, ஐ அம் டாக்டர் ... என்று கை கொடுத்து விட்டு, ஸ்டூல் போன்று எதிரில் இருந்த‌ இருக்கையில் என்னை அமர சொன்னார்.

அவர் சொன்ன பெயரும், வெளியில் தொங்கவிடபட்டிருந்த போர்டில் இருந்த பேரும் ஒன்றாக இருந்தது. என்ன பிரச்சனை என்று என்னைக் கேட்டார், நானும் சொன்னேன். என்னோட கன்சல்டன் பீஸ் முந்நூறு ரூபாய் சார், அப்புறமா கொடுங்க என்று சொல்லிவிட்டு, ஒரு வெள்ளை நிற‌ அப்பிளிக்கேசன் தாளில் என்னுடைய பெயர், வயது, முகவரி, மொபைல் எண் என்று எழுதத் தொடங்கினார். முன்பு எப்போதாவது இது போல் பல்வலி வந்திருக்கிறதா, அடிக்கடி வருமா என்ற‌ கேள்விகளையும் கேட்டு வைத்தார். நான் எல்லாவற்றிற்கும் இல்லை ஒற்றை வரியில் பதில் சொன்னேன். இவரும் கையில் கத்தி போன்ற இரும்பை வைத்துக் கொண்டு வாயில் நுழைத்து டார்ச் லைட் கொண்டு பார்த்தார். பரிசோதனைச் செய்துவிட்டு, உங்களுக்கு ஞானப்பல்(Wisdom Tooth) தான் முளைக்கிறது, ஆனால் அதைச் சரியாக வெளியே வர விடாமல் தாடையில் உள்ள தசை தடுக்கிறது அதனால் தான் உங்களுக்கு வலியும் இருக்கிறது, எதற்கும் ஒரு சிறிய‌ எக்ஸ்‍ரே எடுத்து பார்த்து விடலாம் என்றார். அந்தக் கிளீனிக்கில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள் இவர் எக்ஸ்ரே தானே சொல்லுகிறார் என்று பக்கத்தில் அமர்ந்திருந்த ஒய்ப்பை பார்த்துவிட்டு சரி என்று தலையாட்டினேன். சார் எக்ஸ்ரேவிற்கு ஒரு நூறு ரூபாய் தனியாக அப்புறம் பே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு ரோபோ கை போன்று இருந்த மெசினை எனது பக்கமாகக் கொண்டு வந்து வாயினுள் ஒரு சிறிய சதுர வ‌டிவ பிலிம் அட்டையை வாயில் திணித்தார். என்னால் வாயையே முழுமையாகத் திறக்க முடியவில்லை, அதில் இந்தச் சதுர அட்டையை ஈறு வீங்கி இருக்கும் பக்கமாக அழுத்தும் போது வலி தாங்க முடியவில்லை. நான் அ என்று கத்தினால் பக்கத்தில் இருக்கும் ஒய்ப் ஆ என்று கத்துவார், அதற்குப் பயந்தே வலியை சமாளித்தேன். ஒரு வழியாக எக்ஸ்ரே எடுத்துக் கழுவி விட்டார்.

நான் முதல் முறையாகப் பல்லுக்கான எக்ஸ்ரேவை இப்போது தான் பார்க்கிறேன். கடைவாய் பல் இரண்டு மட்டும் தான் அதில் தெரிகிறது. வேறு எதுவும் எனது கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது டாக்டர் என்னுடைய சீட்டின் பின் புறத்தில் படம் வரைய தொடங்கினார். சார் உங்க ஞானப்பல் இப்படித் தான் முளைக்க வேண்டும் என்று ஒரு படம் வரைந்தார், ஆனால் உங்கள் பல் இப்படி முளைக்காமல் உள் நோக்கி முளைக்கிறது என்று இன்னொரு படம் வரைந்தார். அதில் முன்பு வரைந்தற்கு எதிர் திசையில் பல்லின் நீளத்தை நீட்டி வரைந்திருந்தார். இப்படி நீட்சியாக இருக்கும் பல் தாடையில் உள்ள தசையைச் சேதப் படுத்துகிறது, அதனால் தான் உங்களுக்கு வலி அதிகமாக இருக்கிறது என்று தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் சொல்லி முடித்தார்.

இதற்கு என்ன தான் தீர்வு என்று கேட்டேன், அந்தப் புதிதாக‌ முளைக்கும் ஞானப்பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் டாக்டர். இப்போதே பல்லைப் பிடுங்க முடியாது, உங்களின் வலியை முதலில் குறைக்க வேண்டும் அதன் பிறகு தான் பல்லைப் பிடுங்க வேண்டும், நான் இப்போதே சில மாத்திரைகளை எழுதி தருகிறேன், அவைகளைச் சாப்பிடுங்கள், வலி முழுமையாகக் குறைந்த பிறகு வாருங்கள் பிடுங்கி விடலாம், ஒரு பல் பிடுங்குவதற்கு நான் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் சார்ஜ் செய்வேன் என்றும், அப்புறம் உங்கள் ப‌ற்களில் கறைகள் இருக்கின்றது அதை இப்போதே கிளீன் செய்கிறேன், அதற்கும் ஓர் அறுநூரு ரூபாய் சார்ஜ் ஆகும் என்று சொல்லிக்கொண்டே, என் பதில் எதையும் எதிர்பார்க்காமல் சீட்டில் மருந்தை எழுத தொடங்கினார். நானும் ஒய்ப்பும் என்ன செய்வது என்று தெரியாமல் விளித்துக் கொண்டிருந்தோம்.

மருந்து எழுதிவிட்டுத் தலையை நிமர்த்த டாக்டரிடம், அந்தப் பல்லைப் பிடுங்காமல் ஏதும் செய்ய முடியாதா? என்று கேட்டேன். இல்லை சார், உங்களுக்கு நிரந்தரமான தீர்வு வேண்டுமானால் பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் டாக்டர். அவர் சொல்லும் போது, இப்போது இருந்த வலி மறந்து, இனி பல் பிடுங்கினால் வரும் வலியை இப்போதே நினைக்கத் தொடங்கிருந்த‌ என்னைப் பார்த்து, எதுக்கு சார் நீங்க பயப்படுறீங்க, நான் இன்றைக்குக் கூட ஒருவருக்குப் பல் பிடுங்கியிருக்கிறேன், நாளைக்கும் எனக்கு ஓர் அப்பாயின்மென்ட் இருக்கு, திஸ் இஸ் ஜஸ்ட் லைக் தட் சர்ஜரி என்றார்.

சற்றும் யோசிக்காமல், டாக்டர் நான் இந்த வார இறுதியில் ஊருக்குப் போகிறேன், அங்குப் போய்ப் பல்லைப் பிடுங்கிக் கொள்கிறேன், நீங்கள் இப்போது வலியைக் குறைப்பதற்கான‌ மருந்து மட்டும் எழுதிக் கொடுங்கள் என்றேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன், இல்ல சார் நீங்க நினைப்பது போல் பெரிய சர்ஜரி இல்லை என்றார். நானும் விடாமல் "ஆத்தா வையும் வீட்டுக்குப் போகனும், காசு கொடு" என்பது போல் பேசியதைப் பார்த்து விட்டு சார் அப்படினா நீங்க ப‌ல்லை கிளீன் மட்டும் பண்ணிக்குங்க என்றார். இல்ல டாக்டர் என்னால் வலியைக் கட்டுபடுத்த முடியவில்லை, இப்போது நீங்கள் கிளீன் செய்தால் என்னால் தாங்கிக்கொள்ள‌ முடியாது. வலி குறைந்த பிறகு நாளைக்கு வேண்டுமானால் வருகிறேன் என்றேன். ஒரு வழியாக "நாளைக்கு வாருங்கள்" என்று ஐந்நூரு ரூபாய் பில்லை போட்டுக் கையில் கொடுத்து விட்டு, மருந்து சீட்டையும் கொடுத்தார்.

கையில் இருந்த ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு மருந்து சீட்டை வாங்கிக் கொண்டேன், மருந்து சீட்டில் இரண்டு மாத்திரைகள் எழுதியிருந்தார். வெளியில் வந்து யோசித்துப் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் நான்கு மணிநேரம் வலி தாங்கும் மாத்திரையைச் சாப்பிடலாம், இந்த மாத்திரைகளை வாங்க வேண்டாம் என்று ஒய்ப் சொல்ல நானும் சரி என்று, வீட்டிற்குத் திரும்பினோம். போகும் வழியில் மொபைல் போன் அடித்தது, எடுத்து யாரென்று கேட்டால் மதியம் போய் இருந்த கிளீனிக்கில் இருந்து கால் பண்ணுறோம், எப்ப சார் ஸ்கேன் எடுக்க வர்றீங்க என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என்று மனதிற்கு நினைத்துக் கொண்டே பல்வலி சரியாகிவிட்டது என்று சொல்லி மொபைலை கட் செய்தேன்.

ஊரில் இருக்கும் அம்மா முதற்கொண்டு எவரிடமும் இதுவரையிலும் எனக்குப் பல்வலி என்று சொல்லவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் போனைப் போட்டு அம்மாவிடம் சொன்னேன், அவர்கள் கடவாய் பல் முளைக்கும் போது இரண்டு நாட்கள் வலி இருக்கத் தான் செய்யும், அதற்காகப் பல்லை எல்லாம் பிடுங்க கூடாது என்றும், இந்த வயதில் பல்லைப் பிடுங்கினால் தலைவலி வரும் என்று சொல்லி, சில பாட்டி வைத்தியங்களையும் சொன்னார். மிதமான வெந்நீரில் உப்பு போட்டு அடிக்கடி வாய்க் கொப்பளிக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு, அப்படியே பல் வலி அதிகமாக இருந்தால், இரண்டு நாட்கள் ஆபிஸில் லீவு சொல்லிவிட்டு இங்கு வந்து விடு, நம்ம ஊரில் உள்ள டாக்டரிடம் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

இரவு ஒரு மாத்திரையைப் போட்டுவிட்டுத் தூங்கிவிட்டேன், இடையில் சரியாக அதிகாலை ஒரு மணியளவில் திரும்பவும் பல் வலி, உடனே இன்னொரு மாத்திரையை எடுத்துப் போட்டுவிட்டு தூங்கி விட்டேன். காலையில் எழுந்த போது பெரிய அளவில் வலி இல்லை, ஆனால் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் வீங்கய படியே இருந்தது. வாயின் உள்ளும் பல் ஈறு வீங்கி இருந்தது. அம்மா சொன்ன படியே வெந்நீரில் உப்பு போட்டு வாயைக் கொப்பளித்து, பல்லை துலக்கினேன். நேரம் ஆக ஆக வலி திரும்பவும் அதிகரித்தது. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, நேற்று என்னோடு வந்த தெலுங்கு நண்பரிடம் இருந்து போன் வந்தது. இப்ப பல் வலி எப்படி இருக்கிறது, திரும்பவும் அந்தக் கிளீனிக்கு போனீங்களா? ஸ்கேன் எடுத்தாதீர்களா? என்று கேட்டார். நான் நேற்று நடந்தவைகளைக் கூறினேன். அவர் உடனே, ஸ்டீபன் நீங்கள் எதற்கும் கவலை பட வேண்டாம், நாம் கோட்டியில்(கோட்டி என்பது ஹைதிராபாத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரம்) இருக்கும் பெரிய டென்டல் கிளீனிக்குப் போகலாம், நீங்க ரெடி ஆகுங்க, நான் உங்களை வீட்டில் வந்தே அழைத்துச் செல்கிறேன் என்றார். திரும்பவும் முதல்ல இருந்தா!!! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினேன். ஒய்ப்க்கு நான் போவதில் விருப்பம் இல்லை, ஆனால் நானும், என் முகமும் இருக்கும் நிலையைப் பார்த்துவிட்டுப் போங்கள் என்றார்.

அந்தப் பெரிய‌ பல் மருத்துவமனையின் நுழைவாயிலை பார்த்தவுடனே, இது நமக்கான மருத்துவமனை இல்லை என்பதை முடிவு செய்துவிட்டேன். ஆனால் கூட்டி வந்த நண்பரின் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பாமல் உள்ளே நுழைந்தோம். "நாங்க இருக்கோம் வாங்க" என்று இப்போது அழைக்கும் மருத்துவமனைகளின் தோரனை அங்கேயும் இருந்தது. வரவேற்பறையில் என்னுடைய முழுத் தகவல்களையும் சேகரித்துவிட்டு நானூறு ரூபாய் என்றார்கள். அதைக் கொடுத்தவுடன், ரூம் நம்பர் நான்கில் போய் டாக்டரை பாருங்கள் என்றார்கள். நான் அங்குப் போவதற்குள் என்னுடைய பைல் டாக்டரின் கையில் இருந்தது. என்ன பிரச்சனை என்று கேட்டுவிட்டு, வரிசையாகச் சில டெஸ்ட்களை எழுதினார். முதலில் ஸ்கேன் எடுக்க வேண்டும், அப்புறம் பல்லை கிளீன் செய்ய வேண்டும், கடைசியாக‌ இரத்தம் பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொன்றாக முடித்துவிட்டு என்னை வந்து பாருங்கள் என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார். என்னைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்லாத குறையாக ஒவ்வொரு இடமும் வழி காட்டினார்கள்.

முதலில் ஸ்கேன் எடுத்துவிட்டார்கள், பிறகு இரத்த பரிசோதனைக்குத் தேவையான இரத்தையும் எடுத்துவிட்டு, பல்லை கிளீன் செய்யும் அறைக்கு அனுப்பினார்கள். அதிக அழுத்தத்தில் கெமிக்கலை பீய்ச்சி அடித்துப் பல்லை கிளீன் செய்யும் போது மட்டும் அதிகமான கூச்சம் இருந்தது. கிட்ட தட்ட அரைமணி நேரம் நடந்து. எல்லாம் முடித்த பிறகு அனைத்து ரிப்போட்டும் டாக்டரின் அறைக்குச் சென்றுவிட்டது. ஸ்கேன் ரிப்போர்டை எடுத்து என்னிடம் காட்டி வலதுப் பக்கம் கடவாயில் முளைத்திருக்கும் இரண்டு பல்லும் தாடையில் உள்ள தசையை அழுத்துகிறது, எனவே இரண்டு பல்லையும் பிடுங்கிவிடலாம் என்றார். நேற்று சென்று வந்த‌ டாக்டர் ஒரு பல்லைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னதுக்கே தலைதெறிக்க ஓடி வந்தேன் இங்க என்னடானா இரண்டு பல்லைப் பிடுங்க வேண்டுமாம், டாக்டரிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.இரண்டு பல்லையும் பிடுங்கிவிட்டு, அதில் தசைகளை அழுத்தாத அளவு புதுப் பல்லை பிளான்டிங் செய்துவிடலாம் என்றார். பிளான்டிங் முறையை எனக்கு அவர் விளக்கியதில் இருந்து நான் புரிந்து கொண்டது இது தான், என்ன வென்றால் முதலில் காங்கிரிட் போட வேண்டும் பின்பு அதில் மேற்பூச்சு பூச வேண்டும் பின்பு பட்டி பார்க்க வேண்டும் கடைசியாகச் சில மாதங்கள் கழித்து வர்ணம் பூச வேண்டும் என்பதை மெடிக்கல் டெக்னிக்கல் வார்த்தையில் சொன்னார்.

ஒவ்வொன்றுக்கும் ஆகும் செலவையைம் பட்டியல் இட்டார், பல்லைப் பிடுங்கி விட்டு, புதுப் பல்லை நடுவதற்கு(Dental implant surgery) 15000 ரூபாய் ஆகும் என்றும், பின்பு ஓர் ஆறு மாதம் கழித்து பல்லின் ஸ்திரத் தன்மையை உறுதி செய்ய‌(Implant restoration) இன்னும் ஒரு 15000 ரூபாய் என்றும், அப்புறம் கடைசியாக ஒரு வருடம் கழித்து வேக்சிங்(Waxing) செய்வதற்கு 10000 ரூபாய் ஆகும் என்றும், இந்த மூன்றையும் செய்து விட்டால் உங்கள் பல்லுக்குப் பிரச்சனை என்பதே வராது என்றும் சொன்னார்.

வலி குறைவதற்கு மாத்திரை எழுதி இருக்கிறேன், தினமும் வாயை கொப்பளிக்க ஒரு மொத் வாஷ் லிக்யூர் எழுதியிருக்கிறேன். நாளைக்கு ஆபரேசனுக்கு டைமை ரிசர்ப்சனில் புக் செய்து கொள்ளுங்கள் என்று என்னைப் பார்த்தார்.

இவரிடமும் பல் பிடுங்குவதைத் தவிர வேறு வழியில்லையா என்று அப்பாவியாகக் கேட்டேன். பெர்மனட் சொலுசன் வேண்டுமானால் நீங்கள் நான் சொன்ன முறையைக் கையாளுவது தான் நல்லது என்று முடித்தார். அதற்கு மேல் அங்கு இருக்க எனக்கு விருப்பம் இல்லை. வரவேற்பறையில் மொத்தமாக இரண்டாயிரத்து எண்ணூறு ரூபாய் பில் போட்டுக் கையில் கொடுத்தார்கள். நாளைக்கு மதியத்திற்கு மேல் தான் ஆபரேசன் தியேட்டர் காலியாக உள்ளது, உங்களுக்கு ஓகே வா சார் என்று ஒரு பெண்மணி கேட்டார், "நான் இங்குத் திரும்ப வந்த தானே நீங்க ஆபரேசன் பண்ணுவீங்க" என்று மனதிற்குள் நினைத்து விட்டு, அப்படியே புக் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டு என்னுடைய பைலை வாங்கிக் கொண்டு வெளியில் திரும்பி நடந்தேன். அப்போது என்னுடன் வந்த‌ நண்பன் இங்கேயே மெடிக்கல் ஷாப் இருக்கிறது என்றார். ஓ அந்த வருமானம் கூட அடுத்தவனுக்குப் போகக் கூடாதா? என்று இங்கேயே வைத்திருக்கார்களா என்று மனதில் நினைத்துக் கொண்டு மெடிக்கல் ஷாப்பை நோக்கி நடந்தோம்.

இரண்டு நாட்கள் என்னைப் படுத்திய பல்வலி மறுநாள் காலையில் தூங்கி எழும் போது துளியும் இல்லை. கன்னத்தில் இருந்த வீக்கமும் மறைந்திருந்தது. அதற்கு மேலும் நான் பல்லைப் பிடுங்க போயிருப்பேன் என்று நினைக்கிறீங்களா?... 

எனக்கு இது நடந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது, பல் சம்பந்தமாக‌ இதுவரையில் எனக்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை. இரண்டு நாட்கள் முன்பு நண்பர் ஒருவரின் பிறந்த நாளுக்கு வாங்கிக் கொடுத்த சிக்கன் பிரியாணியில் உள்ள லெக் பீஸை கடிக்கும் போது, அந்த எலும்பில் உள்ள மஜ்ஜை பல்லின் இடையில் அடைத்துக் கொண்டு வலிக்கிறது. இதற்காக இங்க உள்ள டாக்டரிடம் போனால் என்ன ஆகும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

.

10 comments:

paranthu said...

romba sirama patrikeengha Sir

ராஜி said...

ஞானப்பல் பிடுங்கிட்டா ஞானம் இல்லாமப் போயிடும்ன்னு பயந்துட்டீங்களா!?

r.v.saravanan said...

பல் பிடுங்க நினைத்தாரா பணம் பிடுங்க நினைத்தாரா

இராஜராஜேஸ்வரி said...

நன்றாகத்தான் பிடுங்குகிறார்கள் .. சொத்தை..!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஒரு டாக்டரு 'ஒரு பல்லைப் பிடுங்கணும்'ன்னாரு. வேற
ஒரு டாக்டரு 'இரு பற்களைப் பிடுங்கணும்'ன்னாரு.
எனக்கு என்ன கவலைன்னா...
உங்களுக்கு எத்தனை ஞானப் பற்கள் முளைத்தன?
அவை இப்போ நல்லா இருக்குதுகளா?
இதச் சொல்லாம விட்டிட்டீகளேன்றதுதான்...
(சும்மா ஜோக் தான் சார்.)

நல்ல வேலையாக இரு டாக்டர்களிடமிருந்தும் தப்பிச்சிட்டீங்க!
இதுமாதிரியே எல்லோரும் தப்பிச்சிட்டா... அந்த டாக்டர்கள் கதி???

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லா இடத்திலும் எப்படி ஒரே மாதிரி சொல்கிறார்கள்... அப்படித்தான் கற்றுக் கொண்டார்களோ...?

எவ்வளவு இருந்தாலும் பிடுங்கி விடுவார்கள் போல - பணத்தை...!

மறுபடியுமா...? லெக் பீஸே வேண்டாம்...! ஹா... ஹா...

நாடோடி said...

@paranthu said...
//romba sirama patrikeengha Sir//

வாங்க நண்பரே, உண்மைதான் ரெம்ப படுத்திட்டாங்க..:)

@ராஜி said...
//ஞானப்பல் பிடுங்கிட்டா ஞானம் இல்லாமப் போயிடும்ன்னு பயந்துட்டீங்களா!?//

வாங்க சகோ.. எங்க பக்கத்து வீட்டு ஞானம் எப்பவோ வீடை காலி பண்ணிட்டு போயிட்டாங்க.. :) அதுக்கு நான் இப்ப‌ ஏன் பயப்படனும்?.. ஹி ஹி..

@r.v.saravanan said...
//பல் பிடுங்க நினைத்தாரா பணம் பிடுங்க நினைத்தாரா//

வாங்க சரவணன்,

இரண்டையும் சேர்த்து தான் பிடுங்க பார்த்தார்..

நாடோடி said...

@இராஜராஜேஸ்வரி said...
//நன்றாகத்தான் பிடுங்குகிறார்கள் .. சொத்தை..!//

வாங்க சகோ..

உண்மை தான்.. கொஞ்சம் விட்டால் எல்லாத்தையும் எழுதி கேட்பார்கள்..

@ திண்டுக்கல் தனபாலன் said...
//எல்லா இடத்திலும் எப்படி ஒரே மாதிரி சொல்கிறார்கள்... அப்படித்தான் கற்றுக் கொண்டார்களோ...?

எவ்வளவு இருந்தாலும் பிடுங்கி விடுவார்கள் போல - பணத்தை...!

மறுபடியுமா...? லெக் பீஸே வேண்டாம்...! ஹா... ஹா...//

வாங்க சரவணன் சார்,

மருத்துவம் பணம் பிடுங்கும் தொழிலாக மாறிவிட்டது. நோயாளிகளுக்கு நம்பிக்கை விதைக்க வேன்டிய இவர்கள், அவ நம்பிக்கையை விதைத்து அதன் மூலம் காசு பார்க்கிறார்கள்.. என்னத்த சொல்ல..

ஆமாங்க..லெக் பீசு நல்லா இருக்கும்... :)

நாடோடி said...

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//ஒரு டாக்டரு 'ஒரு பல்லைப் பிடுங்கணும்'ன்னாரு. வேற
ஒரு டாக்டரு 'இரு பற்களைப் பிடுங்கணும்'ன்னாரு.
எனக்கு என்ன கவலைன்னா...
உங்களுக்கு எத்தனை ஞானப் பற்கள் முளைத்தன?
அவை இப்போ நல்லா இருக்குதுகளா?
இதச் சொல்லாம விட்டிட்டீகளேன்றதுதான்...
(சும்மா ஜோக் தான் சார்.)

நல்ல வேலையாக இரு டாக்டர்களிடமிருந்தும் தப்பிச்சிட்டீங்க!
இதுமாதிரியே எல்லோரும் தப்பிச்சிட்டா... அந்த டாக்டர்கள் கதி???//

வாங்க நிஜாம் சார்,

முளைத்தது என்னவோ ஒண்ணு தான் ஸ்கேன் எடுத்துவிட்டு இரண்டும் உங்களுக்கு பிற்காலத்தில் பிரச்சனை பண்ணும் என்று வரும் முன் காப்போம் என்பது போல் அவர் மருத்துவம் பார்க்கிறார்..

அதுவும் சரிதான்... :)))

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பரே... இதே இம்சையை கடந்த டிசம்பர் மாதம் அனுபவிச்சேன்....

உங்க பதிவுல எப்படி எழுதினிங்களோ அத்தனையும் நான் பட்டேன்....

ஆனா, ஆபரேட் செஞ்சு அந்த பல்லை எடுத்துட்டேன்... காரணம், சின்ன கிளீனிக்ல செக் செஞ்சப்ப அவரும் ஆபரேட் செய்யணும், ரெண்டு பல்லையும் எடுக்கணும், ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல வாங்க.. வர்றப்ப பழைய சட்டை போட்டுகங்க... கை நிறைய பழைய துணி கொண்டு வாங்கன்னு சொல்லிட்டு... ஒன்னும் பயப்பட வேணாம்... உங்க தாடை அப்படியே இருக்கும். முகம் மாறின மாதிரி இருக்காதுன்னு சொல்ல...நானும் ஈவ்னிங் வரேன்னு சொல்லிட்டு, முன்னாடியே செக்கப் செஞ்ச பெரிய டெண்டல் கிளீனிக்க்கு போயிட்டேன்...

பல் படுக்கை வசமா முளைச்சதுல பக்கத்து பல்லை தள்ளி அது சொத்தை பல்லா ஆயிருச்சு...
அதனால ரெண்டையும் பிடுங்க வேணாம்... சொத்தை பல்லை ஆர்டிபிசியல் செய்யலாம்னு யோசனை சொல்ல...
அதன் படி ஒரு பல்லை பிடுங்கி, இன்னொரு பல்லுக்கு செராமிக் ஆர்டிபிசியல் பல் வச்சு முடிக்க மொத்தம் ஒரு மாசம் பிராசஸ் ஆச்சு...
செலவு சுமார் 12000 ரூபாய்...

எனக்கும் உங்களுக்கு மாதிரியே சில புட்ஸ் சாப்பிடும் போது வலி இருந்துச்சு கிட்டத்தட்ட ரெண்டு வருசத்துக்கும் மேல... ஆனா ஆபரேட் பண்ற அளவுக்கு இப்போதான் வந்துச்சு....

என் அட்வைஸ் என்னான்னா... அந்த பல்லை ஆபரேட் செஞ்சு பிடுங்கிருங்க... பக்கத்து பல்லை காப்பாத்திருங்க....

Related Posts with Thumbnails