Sunday, March 9, 2014

சாலையைப் போடுங்க‌, ஆனா மண்டை உடையாம போடுங்க!!!

சாலைகளைப் போடுவதற்கு அரசு எப்படி ஒப்பந்தங்கள் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதைக் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. சமீபத்தில் சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றிருந்தேன். பல போரட்டங்களுக்குப் பிறகு மீண்டும் நாகர்கோவில் முதல் மார்த்தாண்டம் வரையிலான சாலையைப் போட தொடங்கியிருந்தார்கள். இவர்கள் ஒரு பகுதியில் இருந்து போட்டு மறுபுறத்தில் முடிப்பதற்குள் முதலில் போட பட்டிருக்கும் சாலைகள் பல்லை காட்ட தொடங்கியிருக்கும். இது தான் இவர்கள் போடும் சாலையின் லட்சணம். இவை ஒருபுறம் இருக்க நான் கேட்ட முதல் கேள்விக்கான அவசியம் இதுதான். நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரையிலான நெடுஞ்சாலை ஒருவழிச்சாலை, இரண்டு புறமும் வாகனம் போவதும், வருவதுமாக இருக்கும்.

இவர்கள் சீரமைக்கும் சாலையில் முதல் முதலாக எந்த அளவில் சாலையில் தார் போட்டு இருப்பார்களோ, அதே அளவில் தான் திரும்பவும் அதன் மேல் சல்லியை கொட்டி தார் ஊற்றுகிறார்கள். எல்லோருக்கும் தெரியும் தார் சாலை என்பது சாதரணத் தரையில் இருந்து சற்று உயரமாக இருக்கும். இப்படி உயரமாக இருக்கும் சாலையில் ஒவ்வொரு முறையும் சீரமைக்கும் போது ஒர் அங்குலம் முதல் இரண்டு அங்குலம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு இரண்டு அல்லது முன்று முறை செய்யும் போது சாலையின் உயரம் தரையின் சமதளத்தில் இருந்து ஒர் அடிவரை உயர்ந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் சாலைப்போடுபவர்கள் இந்த இரண்டு ஓரங்ளையும் சிறுது சல்லிக் கொட்டி மழித்து விடுவது இல்லை. அவ்வாறு செய்தால் ஒப்பந்த தாரர்களுக்குக் கொஞ்சம் சல்லியும் சிறிது தாரும் செலவு ஆகும். அதனால் இவர்கள் செய்வது இல்லை, இன்னும் சில ஒப்பந்த தாரர்கள் சாலையின் இரண்டு ஓரங்களிலும் மண்ணைக் கொட்டி மறைத்து விடுவார்கள். சாலைப் போட்ட நான்கு நாட்கள் நன்றாக இருக்கும், ஒரு மழை வந்தால் காணமல் போகும்.

இதைப் போன்ற‌ ஒரு வழிச் சாலையில் இருச்சக்கர‌ வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு நன்றாகத் தெரியும், இரண்டு பெரிய பேருந்தோ அல்லது கனரக வண்டியோ நேர் எதிராக வந்தால் இவர்கள் முதலில் ஓரங்கட்டுவது ஓரத்தில் செல்லும் இருச்சக்கர‌ வாகனத்தைத் தான். சாலையில் இருந்து ஒர் அடி பள்ளத்தில் இருக்கும் தரையில் இருச்சக்கர‌ வண்டியை அனுபவம் இல்லாமலோ அல்லது கைத் தவறியோ விட்டால் என்ன ஆகும் வண்டியின் சக்கரத்தை சுழற்றி ஆளை கிழே தள்ளும். பெரும்பாலன விபத்துக்கள் இப்படித்தான் நடக்கின்றன்.

இந்த நெடுஞ்சாலை ஒரு வழிச்சலையாக இருப்பதால் ஒரு வண்டி முன்னால் போகும் போது இரண்டாவது வண்டி முதல் வண்டியை முந்த வேண்டும் என்று நினைக்கும் போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஓரங்கட்டுவது இருச்சக்கர வாகனத்தைத் தான். இருச்சக்கர வண்டியை ஓட்டும் நீங்கள் வலுக்க‌ட்டாயமாகப் பள்ளத்தில் இறக்க‌ நிர்பந்திக்கப் படுவீர்கள். உங்களால் வண்டியைக் கட்டுப்படுத்தி ஓர் அடிக்கு மேல் இருக்கும் பள்ளத்தில் இறக்க‌ முடியாவிட்டால் கீழே விழ வேண்டியது தான்.இன்றைக்கு நமது நாட்டில் சாலைகள் ஒழுங்காக இல்லை, சாலை விதிகளும் ஒழுங்காக இல்லை, அப்படியே இருந்தாலும் அதை மதிப்பதற்கு மக்களும் தயாரில்லை. ஆனால் 200 சி.சி, 250 சி.சி என்று இருச்சக்கர‌ வாகனங்களைக் கல்லூரி படிக்கும் இளைஞர்களைக் குறி வைத்து விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். அந்த வண்டியை ஓட்டுவதற்கான சாலை வசதி இருக்கிறதா என்று வண்டி வாங்குபவனே கவலை படாத போது, வண்டியை விற்பவன் எங்கே கவலைப்படப் போகிறான். சி.சி அதிகமான‌ வண்டிகளை இப்போது பெரு நகரங்கள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் பார்க்க முடிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் அதிகம். அதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் கைகளில் சி.சி அதிகமாக உள்ள வண்டிகளைத் தான் பார்க்க முடிகிறது. ஒரு வண்டியில் இரண்டு, முன்று பேர் என்று சிட்டாகப் பறக்கிறார்கள். இப்படி வண்டியில் போகும் என்று சொல்ல முடியாது பறக்கும் கல்லூரி மாணவர்கள் வண்டியை கொண்டு சாலையின் ஓரத்தில் இருக்கும் பள்ளத்தில் விட்டால் என்ன ஆகும், மண்டை தான் உடையும்.

கன்னியாகுமரி மாவட்ட செய்திதாள்களை என்றைக்குப் புரட்டினாலும் பக்கத்திற்குப் பக்கம் இருச்சக்கர வாகன விபத்துக்களைப் படிக்க‌ முடியும். எனது நட்பு வட்டம் மற்றும் உறவுகளில் கூடச் சமீக காலங்களில் நடந்த விபத்துகள் மட்டும் மூன்று. இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள், இன்னொருவர் ஆசிரியர். நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் அதிகமாக விபத்துக்கள் நடைப்பெறும் இடங்கள் எது என்று எவரிடம் கேட்டலும் கீழே உள்ளவற்றைப் பட்டியல் இடுவார்கள். பார்வதி புரத்தை அடுத்த உள்ள‌ களியங்காடு, சுங்கான்கடையை அடுத்து உள்ள‌ கருப்புக்கோடு, தோட்டியோடு, வில்லுக்குறி பாலம் மற்றும் குமாரகோவிலை ஒட்டியுள்ள தென்கரை பாலம். இந்த இடங்களில் தான் அதிகமான இருச்சக்கர வாகன விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த இடங்களில் முறையான அறிவிப்புப் பலகைகள் கூட இல்லை, அப்படியே சில இடங்களில் இருந்தாலும் அவை கண்ணுக்கு தெரியாதவாறு மிகச் சிறியதாக ஓரத்தில் எங்காவது நட்டு வைத்திருக்கிறார்கள்.

நாகர்கோவிலில் ஊள்ள சாலைகளைப் பற்றிப் பேசும் போது நமது கண் முன் வந்து நிற்கும் முக்கியமான ஒரு சாலை கோட்டார் ரயில்வே நிலையத்திற்குச் செல்லும் சாலை. எனக்குத் தெரிந்து இந்தச் சாலை ஒரு நாளும் மேடு பள்ளம் இல்லாமல் இருப்பது இல்லை. பிரசவத்திற்கான சாலை என்று விளையாட்டிற்குச் சொல்லும் சாலையைப் பார்க்க வேண்டும் என்றால் இது தான். தினமும் ஆயிரகணக்கானோர் வந்து செல்லும் இந்தச் சாலையின் நிலைமை ரெம்ப மோசம்.

வாஜ்பாய் அவர்கள் பிரதமாக இருக்கும் போது கொண்டு வந்த தங்க நாற்கரச் சாலையைப் பற்றிக் கருத்து விவாதங்களிலும், மேடையெங்கும் நாங்கள் கொண்டு வந்த அருமையான திட்டம் என்று முழங்கும் பொன்னார் அவர்கள், அவரது சொந்த தொகுதியில் அத்திட்டம் நடைமுறை ப‌டுத்தாது பற்றி வாயே திறப்பது இல்லை. காவல் கிணறுடன் இத்திட்டம் முடக்கப்பட்டு நிற்கின்றது. சாலை விரிவாக்கம் செய்தால் பல முதலாளிகளில் கடைகள் தகர்க்கப்படும். அரசியல்வாதிகளுக்குத் தான் முதலாளிகளுக்கு நஷ்டம் என்றால் இரத்த கண்ணீரே வருமே..

.

3 comments:

ராஜி said...

நீங்க சொல்றதுலாம் நிஜம்தான். ஆனா, சம்பந்தப்பட்டவங்க அடுத்தவங்க நலனை யோசிக்குறதில்லையே!

‘தளிர்’ சுரேஷ் said...

நிஜம்தாங்க நீங்க சொல்றது! ஆனா கேட்பவர் காதில் விழ வேண்டுமே! நன்றி!

நாடோடி said...

@ராஜி said...
//நீங்க சொல்றதுலாம் நிஜம்தான். ஆனா, சம்பந்தப்பட்டவங்க அடுத்தவங்க நலனை யோசிக்குறதில்லையே!//

வாங்க சகோ, வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

@ ‘தளிர்’ சுரேஷ் said...
//நிஜம்தாங்க நீங்க சொல்றது! ஆனா கேட்பவர் காதில் விழ வேண்டுமே! நன்றி!//

வாங்க சுரேஷ், நாம் சொல்லுறதை சொல்லி வைப்போம், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

Related Posts with Thumbnails