Thursday, March 6, 2014

என்ன மாப்ளே!!! நாய் ஒண்ணும் செய்யாது!!

எனது நண்பனுக்குச் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணமானப் புதிதில் உறவினர்கள் வீட்டில் விருந்துக்கு அழைப்பது உண்டு. ஒரு நாள் புது மனைவியின் சித்தி வீட்டிற்கு அதாவது நண்பனின் சின்ன மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். இவன் தனது மனைவியைக் காலையிலேயே டூவீலரில் சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு, இவன் மட்டும் அவசரமாக வெளியில் கொஞ்சம் வேலையிருப்பதால் அங்குத் தங்காமல் மதியம் உணவுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டான்.

நண்பனுக்கு நாய் என்றாலே ஏழாம் பொருத்தம் தான். அதுவரை தூங்கிக் கொண்டிருக்கும் நாய் கூட, இவன் அந்த வழியாக வந்தால் காது புடைக்க, வாலை நிமிர்த்துக் குரைக்கத் தொடங்கிவிடும். எனவே நாயை மட்டும் ஒருவர் வீட்டில் பார்த்து விட்டால் அந்த வீட்டிற்குத் தனியாகப் போக மாட்டான். இவன் விருந்துக்குப் போயிருந்த வீட்டில் ராஜபாளையம் நாய் ஒன்று இருந்திருக்கிறது. காலையில் இவன் சென்ற போது இவன் கண்ணில் அது மாட்டவில்லை அல்லது அது கண்ணில் இவன் மாட்டவில்லை.நண்பனுக்கு வெளியில் இருந்த வேலை எல்லாம் முடிவதற்கு மதியம் ஆகிவிட்டது. அலைச்சல் அதிகமாக இருந்ததால் பசி வேறு இவனை வாட்டியது. மாமியார் வீட்டுக் கறி விருந்துச் சாப்பாடு நினைவுக்கு வரவே வண்டியை நேராக மாமியார் வீட்டுக்கு விட்டான். வண்டியை "கேட்" டுக்கு வெளியில் நிறுத்தி, லாக் செய்துவிட்டு, மெதுவாக நடந்து "கேட்டை" திறக்க சென்றால் பெரிய அதிர்ச்சி, ஒரு பக்கம் ராஜபாளையம் நாய்க் கம்பீரமாக நிற்கிறது, இன்னொரு பக்கத்தில் தோட்டத்தில் சின்ன மாமியார் வாழையிலை வெட்டிக்கொண்டு இருக்கிறார்.

மறுபக்கத்தில் இருக்கும் நாயை பார்த்தவுடன், அதுவரையிலும் அடிவயிற்றில் இருந்த பசி இவனுக்குச் சுத்தமாக மறந்துப் போச்சு. அதென்னவோ தெரியவில்லை இவனைப் பார்த்தவுடனே அதுவும் பாதி நறுக்கிய வாலையும் முறுக்கத் தொடங்கிற்று. மறுபக்கத்தில் இருந்த மாமியார் "சும்மா வாங்க, டாமி ஒண்ணும் செய்யாது" என்று இவனைப் பார்த்தார்.

இவனுக்கோ இருந்த பசி மறந்து, காலையில் சாப்பிட்டதை அடிவயிறுக் கலக்க ஆரம்பிச்சுட்டுது.

"ஆமா!! உங்க நாயி அது..  உங்களை ஒண்ணும் செய்யாது, வர்றது எல்லாம் எனக்குத் தான்" என்று மனசுக்குள் நினைத்து விட்டு, "மாமி நீங்க கொஞ்சம் அது பக்கத்துல வந்து பிடிச்சுக்குங்க, நான் வந்துடுறேன்" என்று சொன்னான்.

சின்ன மாமியாரும் சரி என்று தலையை ஆட்டிவிட்டு, வந்து நாயைப் பிடிப்பதற்குள், வீட்டின் உள்ளிருந்து வாசலில் வந்த சின்ன மாமனார் "என்ன மாப்ள நீங்க!! இந்த நாய்க்குப் போய் இப்படிப் பயப்படுறீங்கனு" இவனுடைய ஆண்மைக்குச் சவால் விட இவனும் "சடோர்னு" கேட்டைத் திறந்து வீட்டை நோக்கி நடக்க, முறுக்கிய வாலுடன் டாமியும் பாய, "ஆஆஆனுனு" நண்பனின் அலறல்.

நாய்ப் பாய்ந்த வேகத்தில் அதன் பல் எதுவும் படவில்லை, நகம் தான் கீறி விட்டுருந்தது.

அப்புறம் என்ன?. பக்கத்து வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் குசலம் விசாரிக்க வந்துட்டாங்க.

"நம்ம டாமி, ஊர்ல இதுவரைக்கும் யாரையும் கடிச்சதே கிடையாதுனு" பெருசு ஒண்ணு கன்னத்தில் கை வைக்க, "அப்ப நான் என்ன திருட்டு பயலானு" நண்பன் மனதினுள் நினைத்து முறைக்க,

ஆமா அக்கா "புதுசா வந்த மாப்பிளையையாக் கடிக்கனுமுனு" இன்னொரு பெருசு நெற்றி புருவத்தை உயர்த்த, அதுக்கென்ன "புது மாப்பிளை, பழைய மாப்பிளை" என்று பார்த்தா கடிக்கும் என்று மனசுக்குள் நண்பன் புலம்பினான்,

என்ன மாமா என்னை கறிவிருந்துக்கு கூப்பிட்டீங்க, அதுக்கு முன்னாடி இந்த நாய்க்கு கறிவிருந்து போட்டு இருக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டு பரிதாபமாக மாமாவை பார்க்க, அவரு "மன்னிசிடுங்க மாப்பிள" என்று தலை கவிழ்ந்தார்.

நாயின் பல்லுப் படல என்றாலும், "கறி ஏதும் இரண்டு நாளைக்குச் சாப்பிட வேண்டாம், வெறும் ரசம் மட்டும் சாப்பிடுங்கனு" பக்கத்துவீட்டுக் காரர் சொல்ல, "விருந்துக்கு வந்த இடத்துல இப்படி ஆகிப் போச்சேனு" இன்னொருவர் ஆரம்பிக்க, நண்பனுக்கோ ஆள விட்ட போதும், இப்படியே ஓடியே போயிருவேன் என்பது போல் ஒவ்வொருவரையும் பார்த்தான்.

எப்படியோ எல்லோரையும் ஒருவழியா சமாதானப் படுத்திவிட்டு, ரசம் வைத்துச் சாப்பிட்டு விட்டு, மனைவியை வண்டியில் ஏற்றி, வீட்டுக்குக் கிளம்பினால், தெருவில் போகும் வழியில் இரண்டு பக்கமும் கூட்டமாக நின்னு வேடிக்கை வேறு பாத்திருக்கிறார்கள். நண்பனோ சாலையைத் தவிர வேறு எதையுமே பார்க்காதது போல் வண்டியை ஓட்டிவந்திருக்கிறான்.

இது போதாதுனு வழியில் மூணு இடத்தில் வண்டியை நிப்பாட்டி

என்ன மச்சான் "நாய் கடிச்சாமே" அக்கா சொன்னானு ஒருத்தரும்,

என்ன மாமா "நாய் எங்கக் கடிச்சினு" வேற ஒருத்தரும்,

"போகும் போதே ஆஸ்பத்திரிக்கு போயிட்டு போங்க மருமவனேனு" இன்னொருத்தரும் சொல்ல..

நண்பனுக்கோ கடுங்கோபம். "ஆமா இது இப்ப ரெம்ப முக்கியம்" என்று தனக்குள்ளேயே சொல்லி கொண்டான். எல்லோருக்கும் போலி சிரிப்பையும், தலையும் ஆட்டிவிட்டு வந்திருக்கிறான்.

இனிமேலும் சின்ன மாமியார் வீட்டுக்குத் தனியா போவானு நினைக்குறீங்க!!!!..

குறிப்பு: இந்தப் பதிவு நான் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த போது எழுதியது.

.

11 comments:

Ramajayam ராமஜெயம் said...

அந்த நாய் கடிச்ச மாப்பிள்ளை நீங்களா இருப்பீங்களோன்னு சந்தேகமா இருக்குது.

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன மாமனாருக்கு ஒரு நாள் இருக்கு - (பூஜை...!

‘தளிர்’ சுரேஷ் said...

நல்ல நகைச்சுவை பதிவு! வாழ்த்துக்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுஜாதாவின் குதிரை கடிச்ச கதை ஞாபகம் வந்தது.

கிருஷ் ணா said...

இது கதையா இல்ல உண்மைக் கதையா ??

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//குறிப்பு: இந்தப் பதிவு நான் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த போது எழுதியது.

//

அதாவது வ. ஆசிரியராக இருந்தபோது 'வலைச்சரத்தில்' எழுதியது... சரிதானே?
அந்த லிங்க் இங்கே கொடுங்களேன்.

நாடோடி said...

@Ramajayam ராமஜெயம் said...
//அந்த நாய் கடிச்ச மாப்பிள்ளை நீங்களா இருப்பீங்களோன்னு சந்தேகமா இருக்குது.//

வாங்க ராமஜெயம்,

அப்படி எல்லாம் பொது இடத்துல கேட்க கூடாது, எல்லாரும் பாக்குறாங்களா இல்லைய!!!!!! அவ்வ்வ்..

வருகைக்கும் ரெம்ப நன்றி.

@திண்டுக்கல் தனபாலன் said...
//சின்ன மாமனாருக்கு ஒரு நாள் இருக்கு - (பூஜை...!//

வாங்க தனபாலன் சார்,

ஆமா கண்டிப்பா... :) கருத்துக்கு ரெம்ப நன்றி..

நாடோடி said...

@‘தளிர்’ சுரேஷ் said...
//நல்ல நகைச்சுவை பதிவு! வாழ்த்துக்கள்!//

வாங்க சுரேஷ் சார்,

வருகைக்கும், கருத்துக்கு ரெம்ப நன்றி..

@யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//சுஜாதாவின் குதிரை கடிச்ச கதை ஞாபகம் வந்தது.//

வாங்க யோகன் பாரிஸ்,

கதையை ரசித்தமைக்கு ரெம்ப நன்றி.. தவறையும் திருத்திவிட்டேன்..

நாடோடி said...

@கிருஷ் ணா said...
//இது கதையா இல்ல உண்மைக் கதையா ??//

வாங்க கிருஷ்ணா,

அனுபவத்தில் கொஞ்சம் கலர் கொடுத்து எழுதுவது தான். வருகைக்கு ரெம்ப நன்றி.

நாடோடி said...

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//குறிப்பு: இந்தப் பதிவு நான் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த போது எழுதியது.

//

அதாவது வ. ஆசிரியராக இருந்தபோது 'வலைச்சரத்தில்' எழுதியது... சரிதானே?
அந்த லிங்க் இங்கே கொடுங்களேன்//

வாங்க நிஜாம் சார்,

ஆமா, ஒரு வாரம் ஆசிரியராக இருந்த போது எழுதியது தான்.. லிங்க் கீழே..

http://blogintamil.blogspot.in/search/label/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF

கரந்தை ஜெயக்குமார் said...

தாய் மொழியாம் தமிழ் மொழியில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் ஓர் வலைப் பூ.
அருமை நண்பரே
இனி தொடர்வேன்

Related Posts with Thumbnails