Tuesday, June 3, 2014

இப்பாடுகள் பட்டு_ஏதற்காக ஊருக்கு வரவேண்டும்?

ஒவ்வொரு முறையும் ஹைதிராபாத்திலிருந்து ஊருக்கு வந்து போவதற்குள் நானும் எனது மனைவியும் ஒரு வழியாகிவிடுவோம். காரணம் ஹைதிராபத்திலிருந்து நாகர்கோவிலுக்கான வழித்தடப் பயணத் தூரம் கிட்டதட்ட ஆயிரத்து நானுறு கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். விமானத்தில் புக்கிங் செய்து வந்தால் இருவருக்கும் சேர்த்துப் பதினைந்தாயிரம் ரூபாய் டிக்கட்டிற்கு மட்டும் வைக்க வேண்டும். அதிலும் இண்டிகோ ஏர்வேஸ் மட்டும் தான் நேரடியாக ஹைதிராபாத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு விமானசேவை வைத்திருக்கிறது. மற்றவை எல்லாவற்றிலும் சென்னை அல்லது பெங்களூர் இறங்கி அடுத்த விமானத்தில் திருவனந்தபுரம் வரவேண்டும்.

நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஹைதிராபாத் விமான நிலையம் செல்வதற்குக் காருக்கு வாடகைக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் சில கால் டாக்சிக்கு மட்டும் நானுற்று ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டும். ஆட்டோவில் செல்லலாம் என்றால் விமானநிலையம் செல்லும் ரோட்டில் ஆட்டோக்களுக்கும் அனுமதியில்லை. பஸ் வசதியிருக்கிறது. அதற்கும் டிக்கட் கட்டணம் 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை இருக்கிறது. இரண்டு பேருக்கும் சேர்த்து, அதுவும் ஒரு தொகை வந்துவிடும். விமான நிலையம் செல்லும் பஸ்கள் நகரில் குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்புகளில் இருந்து தான் கிளம்பும். அந்த‌ குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பிற்கும் வீட்டிலிருந்து கிளம்பி ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். இவ்வாறு லக்கேஜுகளைத் தூக்கி கொண்டு ஆட்டோவிற்கும், பஸ்ஸிற்கும் அலைவதற்குப் பேசாமல் கால் டாக்சியில் போய்விடலாம். வீட்டிலிருந்து ஹைதிராபாத் விமான நிலையம் செல்லுவதற்கு ஒரு செலவு என்றால், திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து எனது வீட்டிற்குச் செல்வதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையையும், நேரத்தையும் செலவளிக்க வேண்டும்.

விமானப் பயணம் இப்படியிருக்க, ரெயில் பயணம் இன்னும் மோசம். தினமும் ஹைதிராபாத்திலிருந்து சென்னைக்கு மூன்று ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த மூன்று ரெயில்களிலும் நீங்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாவது புக்கிங் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் உங்களுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிடும். அவசரமாக இருந்தால் தக்கல் முறையில் புக்கிங் செய்து பார்க்கலாம். ஒன்பது கிரகணங்களில் உச்சம் பெற்ற ஒருவரால் மட்டும் தான், இந்தத் தக்கல் முறையில் புக்கிங் செய்யமுடியும். எப்படியோ ஒரு வழியாக மாலையில் ரெயிலை பிடித்துக் காலையில் சென்னை வந்துவிட்டால் அடுத்து நாகர்கோவிலுக்குப் போவதற்கு வழிதேட வேண்டும்.

காலையில் சென்னையில் வந்து இறங்கியவுடன் நாகர்கோவிலுக்குச் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸ் என்ற‌ ஒரு ரெயில் தான் இருக்கிறது. க‌ட்சிகுடா எக்ஸ்பிர‌ஸில் வந்தால், நடைமேடை ஏறி இறங்குவதற்குத் தான் உங்களுக்கு நேரம் இருக்கும். அவசர அவசரமாக ஓடிவந்து நீங்கள் இந்த ரெயிலை பிடிக்கவேண்டும். ஹைதிராபாத் எக்ஸ்பிரஸில் வந்தால் சென்னை சென்ட்ரல் வந்து மீண்டும் டாக்ஸியோ, ஆட்டோவோ பிடித்துத் தான், சென்னை எழும்பூர் வந்து குருவாயூர் எக்ஸ்பிரஸை பிடிக்கவேண்டும். காலையில் 7.40 மணிக்கு எடுத்தால் இரவு 9.45 மணிக்கு நாகர்கோவிலை அடையும். இதிலும் வழியில் எங்காவது சிக்னலில் கோளாறுகள் ஏற்பட்டால் மணியானது பத்தை தாண்டிவிடும்.

காலையில் உங்களால் குருவாயூர் எக்ஸ்பிரஸில் டிக்கட் கிடைக்காமலோ அல்லது பிடிக்க முடியாமலோ போனால் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மாலையில் செல்லும் ரெயில்களில் புக்கிங் செய்ய வேண்டும். இந்த ரெயில்களில் உங்களுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டுமானால் நீங்கள் இரண்டு அல்லது மூன்று மாததிற்கு முன்பே புக்கிங் செய்து வைக்க வேண்டும். கடைசி நேரங்களில் இந்த ரெயில்களில் டிக்கெட் கிடைப்பது அரிது. இவ்வாறு மாலையில் உள்ள ரெயில்களில் புக்கிங் செய்திருந்தால், ஹைதிராபாத்திலிருந்து காலையில் சென்னை வந்த நீங்கள் ஹோட்டலில் அறை எடுத்து தங்க வேண்டும் அல்லது ரெயில்வே ஸ்டேசனில் உள்ள பொது ஓய்வறைகளில் மாலை வரை தேவ்டுக் காக்க வேண்டும்.

இந்தப் பட்ஜெட்டில் ரயில்வே துறையானது, ஹைதிராபத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நேரடியாக ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது. நானும் தினமும் இயக்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடந்த சில வாரங்களாக, வார நாட்களில் ஒரு நாள் மட்டும் இயக்குகிறார்கள். ஒரே ரெயிலாக இருந்தபோதும், பயண நேரம் எந்தவிதத்திலும் குறையவில்லை. அதே முப்பது மணி நேரம் தான்.

தொடச்சியாக முப்பது மணி நேரம் ரெயில் பயணம் என்பது எவருக்கும் சோர்வை தரக்கூடியதாகத் தான் இருக்கும். இந்தப் பயணக் களைப்பை போக்குவதற்கு நீங்கள் வீட்டின் அறைக்கதவை இழுத்து மூடிவிட்டு ஒரு நாள் முழுவதும் படுத்து உறங்க வேண்டும்.

ஹைதிராபாத்திலிருந்து நாகர்கோவில் வழியாகத் திருவனந்தபுரத்திற்குத் தினமும் மூன்று வால்வோ பஸ்கள் தனியார் டிராவல்ஸ்களால் இயக்கப்படுகிறது. இதில் டிக்கட் கட்டணம், ஒருவருக்கும் வந்து போவதற்கு நான்காயிரம் செலவு செய்ய வேண்டும். பயண நேரம் குறைவு தான், பதினேழு மணி நேரத்திலிருந்து, பதினெட்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம். நான் தனியாக ஊருக்கு வரும் போது பெரும்பாலும் இந்தப் பஸ்ஸில் தான் வருவேன். மனைவியால் இந்தப் பேருந்தில் சிறிது நேரம் கூடத் தாக்குபிடிக்க முடியவில்லை. பேருந்தில் ஏறியவுட‌னேயே தலையைப் பிடித்துக் கொண்டு வாந்தியெடுக்க ஆரம்பித்துவிடுவார். மாத்திரைகளைப் போட்டாலும் தாக்கு பிடிக்காது. கையில் நான்கு ஐந்து கவர்களைக் கட்டிக் கொண்டுதான் எப்போதும் வருவோம். இந்தப் பஸ்ஸில் பயணம் செய்வதில் பெண்களுக்கு இன்னும் ஒரு பெரிய பிரச்சனை கழிவறைகள்.



ஹைவே சாலையில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுவதால் வழியில் பெண்களுக்கு என்று சரியான பாதுகாப்பான கழிவறைகளில் இவர்களால் நிறுத்த‌ முடிவதில்லை. சாலையின் ஓரத்தில் நிறுத்தி போகச் சொல்லுகிறார்கள், ஆண்களுக்குப் பிரச்சனையில்லை. ஆனால் பெண்களின் பாடு தான் பெரும் கஷ்டம். டிரைவரிடம் சென்று பெண்கள் செல்ல வேண்டும் என்று சொன்னால் மட்டும் தான் ஏதாவது பெரிய‌ பெட்ரோல் பங்குகளில் நிறுத்துகிறார்கள். இதை இயக்கும் டிரைவர்களுக்குப் பயண‌நேரம் மட்டும் தான் குறிக்கோள். இந்த மணிக்கு பஸ்ஸை எடுக்க வேண்டும், இத்தனை மணிக்கு சாப்பாடிற்கு நிறுத்த வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு ஓட்டுகிறார்கள். இந்தப் பஸ்ஸுகளில் பயணம் செய்யும் போது, ஆங்காங்கே நடக்கும் வால்வோ பஸ்களின் விபத்துகள் நம் கண்முன்னே வந்து நிற்பது மறுக்க முடியாத உண்மை.

பத்து நாட்கள் ஆபிஸில் லீவு வாங்கிவிட்டு ஊருக்கு வரலாம் என்று நினைத்தால், வருவதற்கு இரண்டு நாட்கள், போவத‌ற்கு இரண்டு நாட்கள் என்று நான்கு நாட்கள் டிராவலிலேயே முடிந்துவிடுகிறது. மீதமுள்ள நாட்களில் பயணக் களைப்பு, மாமனார் வீடு, உறவினர் வீடு, திருமணம், சடங்கு, பங்காளிகள் சண்டை, நம்முடைய சொந்த வேலைகள்... அட! போங்கப்பா இப்பவே கண்ணைக் கட்டுது..

.

6 comments:

ராஜி said...

ஊர் விட்டு ஊர் வந்து சொந்த மண்ணை மிதிக்க எத்தனை பிரயத்தனப் பட வேண்டி இருக்கு!!

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! பயணங்கள் கஷ்டமாகத்தான் அமைகின்றன! அத்துணை கஷ்டத்திற்கு பிறகும் சொந்தங்களை காண்கையில் ஓர் நிறைவு! அதற்குத்தான் இந்த கஷ்டம்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நண்பரே, பயணங்கள் முடிவதில்லை.
வேறு வழியில்லை. அந்த வழியில்
பயணித்துதான் ஆகவேண்டும்.
உங்கள் நிலைதான்... பாவம் ஐயா!

ஹுஸைனம்மா said...

சொந்த நாட்டில் இருக்கிறோம் என்றுதான் பேர், சொந்த ஊருக்கு வந்து சேர்வதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது!! இதைவிட வளைகுடா/வெளிநாடுகளில் இருந்துகூட சீக்கிரம், அதுவும் அவஸ்தைகள் இல்லாமல் வந்து சேர்ந்து விடலாம்.

என் பெற்றோர் நான்கு ஆண்டுகாலம் பாண்டிச்சேரியில் இருந்தார்கள். பக்கத்து ஊர்தான் என்று நினைப்போம். ஆனால், அங்கிருந்து திருநெல்வேலி வந்து சேர்வதே பெரிய பாடு - நேரடி ரயில் கிடையாது. விழுப்புரத்தில் வந்து நள்ளிரவில் ஏற/இறங்க வேண்டும். டிக்கட்டும் 3, 4 மாதங்களுக்குமுன்பே பதிவு செய்ய வேண்டும்.

அதென்னவோ ஊரில் பயணம் செய்வதென்றால் இப்போதெல்லாம் சலிப்புதான் வருகிறது. :-(

நாடோடி said...

@ராஜி said...
//ஊர் விட்டு ஊர் வந்து சொந்த மண்ணை மிதிக்க எத்தனை பிரயத்தனப் பட வேண்டி இருக்கு!!//

வாங்க சகோ,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..கருத்துக்கு ரெம்ப நன்றி

@‘தளிர்’ சுரேஷ் said...
//உண்மைதான்! பயணங்கள் கஷ்டமாகத்தான் அமைகின்றன! அத்துணை கஷ்டத்திற்கு பிறகும் சொந்தங்களை காண்கையில் ஓர் நிறைவு! அதற்குத்தான் இந்த கஷ்டம்!//

வாங்க சுரேஷ்,

சொந்த பந்தங்கள் இருப்பதால் தான் இத்தனை கஷ்டங்களையும் தாங்க வேண்டியிருக்கிறது.. கருத்துக்கு நன்றி.

நாடோடி said...

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//நண்பரே, பயணங்கள் முடிவதில்லை.
வேறு வழியில்லை. அந்த வழியில்
பயணித்துதான் ஆகவேண்டும்.
உங்கள் நிலைதான்... பாவம் ஐயா!//

வாங்க நிஜாம் சார்,

உண்மைதான் வேறு வழியில்லை, என்ன செய்வது?. கருத்துக்கு ரெம்ப நன்றி

@ஹுஸைனம்மா said...
//சொந்த நாட்டில் இருக்கிறோம் என்றுதான் பேர், சொந்த ஊருக்கு வந்து சேர்வதற்குள் நாக்கு தள்ளிவிடுகிறது!! இதைவிட வளைகுடா/வெளிநாடுகளில் இருந்துகூட சீக்கிரம், அதுவும் அவஸ்தைகள் இல்லாமல் வந்து சேர்ந்து விடலாம்.

என் பெற்றோர் நான்கு ஆண்டுகாலம் பாண்டிச்சேரியில் இருந்தார்கள். பக்கத்து ஊர்தான் என்று நினைப்போம். ஆனால், அங்கிருந்து திருநெல்வேலி வந்து சேர்வதே பெரிய பாடு - நேரடி ரயில் கிடையாது. விழுப்புரத்தில் வந்து நள்ளிரவில் ஏற/இறங்க வேண்டும். டிக்கட்டும் 3, 4 மாதங்களுக்குமுன்பே பதிவு செய்ய வேண்டும்.

அதென்னவோ ஊரில் பயணம் செய்வதென்றால் இப்போதெல்லாம் சலிப்புதான் வருகிறது. :-(//

வாங்க சகோ,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, ஒவ்வொருமுறையும் நான் இதை அனுபவித்து விருகிறேன். இந்தியாவில் இருக்கிறேன் என்ற நினைப்பு மட்டும் தான் இருக்கிறது, மற்றவை எல்லாம் கொடுமையாக நகருகிறது..

Related Posts with Thumbnails