Sunday, July 17, 2016

மாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்!!

கடந்த மாதம் இறுதியில் எனது ஊரில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை கல்வி கடன் வாங்கிய மாணவர்கள் அனைவருக்கும் அலைபேசியின் வழியாக அழைப்பு வருகிறது. அலைபேசியில் பேசிய வங்கி ஊழியர்கள் வரும் 26 ம் தேதி மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் சம்பந்தமாக நேரில் வந்து வங்கி மேலாளருடன் பேசுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது, வெளியூரில் இருக்கும் மாணவர்கள், நேரில் வர முடியாவிட்டால் அவர்களுடைய பெற்றோரை அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.

அவர்கள் அழைத்த தேதியில் காலையிலேயே மாணவர்களும் பெற்றோர்களும் வந்து குழுமி விடுகிறார்கள். வந்தவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வங்கி மேலாளர் அழைத்துப் பேசுகிறார். எப்போது வாங்கிய கல்வி கடனைக் கட்டுவீர்கள்? என்ற பொதுவான கேள்வி கேட்க படுகிறது சிலர் கடனை மொத்தமாகக் கட்டுவதற்கு, தங்களுக்கு வசதி படும் மாதத்தை குறிப்பிட்டு சொல்லுகிறார்கள், பலர் தவணை முறையில் கட்டுகிறோம் அதற்காக வழிமுறையைக் கேட்கிறார்கள். வந்திருந்திருக்கும் மாணவர்களின் விசாரணைக்கும், விபரங்களுக்கும் பதிலளிக்க வங்கி அலுவலர்கள்  மாணவர்களை அழைக்கவில்லை. மாணவர்கள் கல்விக்கடன் வாங்கிய தொகையை மொத்தமாக வங்கியில் எப்போது கட்ட வேண்டும், வங்கிச் சொல்லும் தேதிக்குள் கட்டவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதைத் தெரிவிப்பதற்காக தான் அழைத்திருந்தார்கள்.

கடந்த மாத இறுதிக்குள், அதாவது நான்கு நாட்களுக்குள் கல்விக்கடனாக வாங்கிய முழுத் தொகையையும் கட்டுவதாக இருந்தால் வட்டி தள்ளுபடி. ஒரு மாதத்தில், அதாவது இந்த மாதத்திற்குள் கட்டுவதாக இருந்தால் ஒரு நாற்பதாயிரம் ரூபாய் வட்டி சேர்த்து கட்ட வேண்டும், அதற்கு மேல் எடுத்துக் கொண்டால் எழுபதாயிரம் ரூபாய் வட்டி சேர்த்து கட்ட வேண்டும், அதுவும் மூன்று மாதத்திற்குள் கட்ட வேண்டும், இல்லையென்றால் தனியாரிடம் வசூலிக்க நாங்கள் கொடுத்து விடுவோம், அப்போது உங்களுக்கு வட்டி எப்படி வரும் என்று நீங்கள் கணக்கு கூடப் போட்டு பார்க்க முடியாது என்று வந்திருந்த மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பீதியை கிளப்பி அனுப்பியிருக்கிறார்கள். கொசுறு செய்தியாக, அன்றைக்கு வந்த மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் கையில் வைத்திருந்த பணத்தை கண்டிப்பாகக் கட்டி செல்லவும் சொல்லியிருக்கிறார்கள், இப்போது பணம் ஏதும் கொண்டு வரவில்லை என்று சொல்லியவர்களிடம், உங்களுடைய பாக்கெட்டை பாருங்கள், பர்ஸை பாருங்கள் என்று அனைத்தையும் சோதித்து 500 ரூபாய் இருந்தாலும் வசூலித்திருக்கிறார்கள்.



வங்கிகள் கல்விக்கடன் கொடுத்ததை வசூலிக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து கிடையாது, ஆனால் அதை வசூலிப்பதற்குச் சரியான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்க்கிறோம். கல்விக்கடனைத் தவணை முறையில் கட்டுவதற்கு எதனால் வங்கிகள் அனுமதிப்பது இல்லை என்று தெரியவில்லை. முழுத் தொகையையும் மொத்தமாகக் கட்ட வேண்டும் என்று சொல்வதன் விபரமும் நமக்குப் புரியவில்லை. இப்போது ஒரு பத்து வருடங்களாகக் கிராமங்களில் கல்விக் கடனை நம்பி தான் பலரின் கனவுகள் துளிர்விட்டிருக்கின்றன. வங்கிகளில் கடன் வாங்கி கல்வி கற்றவர்கள் கண்டிப்பாகக் கடனை கட்டாமல் ஏமாற்றப் போவது கிடையாது, பெரும்பாலும் அவர்களில் சொந்த ஊரில் இருக்கும் வங்கியில் தான் கடன் வாங்கியிருப்பார்கள், வாங்கிய கடனை அந்த வங்கிகளில் செலுத்தவில்லை என்றால் அந்த வங்கிகளில் வேறு எந்தவிதமான காரியங்களுக்கும் அந்த வங்கியை அணுக முடியாது என்பதை அவர்கள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள், அதனால் காலம் தாழ்த்தியாவது வங்கிகளில் உள்ள கடனை அடைத்து விடுக்கிறார்கள், இது இப்படியிருக்க வங்கிகளில் நிலுவையில் இருக்கும் கல்விக்கடன்களை வசூலிக்கத் தனியார் முதலாளிகளிடம் மத்திய அரசு கொடுத்திருப்பதை என்னவென்று சொல்வது.

தேசிய வங்கிகளில் வசூல் ஆகாமல் இருக்கும் கல்விக்கடனை ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு 45% என்ற கணக்கீட்டில் விற்றிருக்கிறது. இனி மாணவர்கள் கட்ட வேண்டிய கல்விக்கடனை வசூலிப்பது வங்கிகள் அல்ல, இந்த ரிலையன்ஸ் என்ற தனியார் நிறுவனம் தான். வட்டிகளுடன் சேர்த்து 125% முதல் 145% வரும் பணத்தின் மதிப்பை வெறும் 45% க்கு இந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றிருக்கிறது. இந்த 45% பணத்தையும் உடனடியாக, மத்திய அரசுக்கு இந்த நிறுவனம் கொடுப்பது இல்லை, முதலில் 15% பணத்தைத் தான் கொடுக்கிறது, முழுத் தொகையை மாணவர்களிடமிருந்து வசூலித்த பின்பு தான் மீத பணத்தை இந்த நிறுவனம் மத்திய அரசுக்குக் கொடுக்கும். அப்படியானால் மாணவர்களின் கல்விக்கடனில் அரசுக்கு முதலில் வருவது வெறும் 15% பணம் மட்டும் தான். அந்தத் தனியார் நிறுவனத்திற்கு வரும் லாபத்தைத் தோராயமாக கணக்கிட்டால் நம்முடைய அரசுகள் யாருக்காகத் தரகு வேலை பார்க்கிறது என்பது தெளிவாக தெரியும்.

வெறும் 45% பண மதிப்பிற்கு இந்தக் கல்வி கடனைத் தனியாருக்கு விற்றிருக்கும் மத்திய அரசு அந்தத் தள்ளுபடி சலுகையை நேரடியாக மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாமே. எரிவாயு மானியம் நேரடியாக மக்களின் வங்கி கணக்கில், உர மானியம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில், அரசின் மானிய தள்ளுபடி அனைத்தும் மக்களின் வங்கி கணக்கில் நேரடியாகப் போடுவோம் என்று மக்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைத்து கொண்டிருந்த இந்தச் சலுகைகளை பெற வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு பெரிய விளம்பரம் செய்த மத்திய அரசு, கல்விக்கடனை மட்டும் மாணவர்களுக்கு நேரடியாக அந்தச் சலுகையை கொடுக்காமல் தனியார் முதலாளியைக் கூட்டு சேர்த்ததில் தெரிந்து விடுகிறது இவர்கள் சொல்லும் வளர்ச்சி யாருக்கு என்று.

சமீபத்தில் கருப்பு பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் வரும் அக்டோபர் மாதம் வரை நீட்டிப்பு கொடுத்து அதற்குள் அரசிடம் நேரடியாகக் கொண்டு வந்து ஒப்படைத்தால் எந்தவித கெடுபிடியும் இருக்காது என்று கருப்பு பண முதலைகளுக்குச் சலுகைகளை பிரதமர் நேரடியாக அறிவிக்கிறார். ஆனால் கல்வி கற்க மாணவர்கள் வாங்கிய வங்கிக் கடனை வசூலிக்கத் தனியார் முதலாளிகளிடம் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒப்படைக்கிறார், ஏன், இந்த நாட்டில் எவரெல்லாம் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று அரசுக்குத் தெரியாதா? அவர்களிடமிருந்து அந்தக் கருப்பு பணத்தை வசூலிக்க இப்படி தனியார் முதலாளிகளை நியமிக்க வேண்டியது தானே, அதெப்படி முடியும் திருடர் கூட்டத்தைப் பிடிக்க திருடர் கூட்டம் ஒத்துக் கொள்ளுமா என்ன?, இப்படியான செயல்களில் எல்லாம் முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள், அனைத்து வங்கிகளிலும் கடன் வாங்கிய மல்லையாவின் கடனை நான் வசூலித்துத் தருகிறேன் என்று ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் முன்வருமா? இல்லை இந்த முதலாளிகளின் கூட்டமைப்பான நாஸ்காம்(NASSCOM) தான் மல்லையாவின் கடனுக்கு பொறுப்பேற்குமா? ஒரு காலமும் அப்படி நடக்கப் போவது இல்லை, ஆனால் ஏழை, எளிய மக்களின் விவசாய மற்றும் கல்வி கடன்களை வசூலிக்க அடியாட்களுடன் இந்தத் தனியார் முதலாளிகள் முன் வருவார்கள்.

ஒரு பக்கம் அரசு வங்கிகளிலிருந்து மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கத் தனியார் நிறுவனங்களை நியமிக்கிறது, மறு பக்கம் அரசுத்துறை நிறுவனமான அஞ்சல் துறையை, தனியார்கள் செய்ய வேண்டிய வியாபாரத்தைச் செய்ய வைக்கப் போவதாக அறிவிக்கிறது. இது எந்த மாதிரியான கொள்கை என்று தெரியவில்லை. இப்படியே போனால் இன்னும் சில வருடத்தில் ஒவ்வொரு தனியார் நிறுவனத்திற்கும் ஒவ்வொரு மாநிலம், மாவட்டம் என்று பிரித்து கொடுத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

போங்க பாஸ்!, நீங்க காமெடி பண்ணிட்டு! இப்ப மட்டும் அரசு தான் மாநிலம் மற்றும் மாவட்டங்களை நிர்வகிக்கிறதா என்ன?. தாது மணல், நிலக்கரி, கிரானைட், எரிவாயு என்று மொத்த இயற்கை வளங்களும் தனியார் நிறுவனங்கள் கையில்! அப்படியானால் அரசு?


.

0 comments:

Related Posts with Thumbnails