Tuesday, July 12, 2016

பிச்சைப் பாத்திரம் ஏந்தி!!

ஊரில் இருக்கும் போது, வழக்கமான ஒரு நாள். காலையில் துக்கம் எழுந்து, கடன்களை முடித்து காபி குடிக்கும் போது அன்றைய தினம் எனக்கான அலுவல்கள் சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை என்று தோன்றியதால் நாகர்கோவிலில் கடை வைத்திருக்கும் நண்பனைப் பார்த்து வரலாம் என்ற எண்ணம் வந்தது. ஊரில் இருக்கும் போது இப்படியான நாட்கள் கிடைப்பது மிக அரிதாக இருக்கும். உறவினர்கள் எவராவது அவர்கள் வீட்டிற்கு அழைத்திருப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு வேலையாக அரசு அலுவலகங்களுக்குச் சென்று வர வேண்டியிருக்கும், இல்லையென்றால் குடும்பத்தில் சுப காரியங்கள் ஏதாவது இருக்கும். அப்படி எதுவும் இல்லையென்றால் மனைவி தன்னுடைய வீட்டிற்குச் சென்று வரலாம் என்று அழைப்பார்கள். அன்றைக்கு இப்படியான லவுகீக‌ வேலைகள் ஏதும் இதுவரை காதுக்கு வரவில்லை.  அதனால் காலையிலேயே குளித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன்.

நாகர்கோவிலில் கடை வைத்திருக்கும் நண்பன் என்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். பொறியியல் முடித்து சென்னை, பெங்களூர், ஹைதிராபாத் என்று பல இடங்களில் இருக்கும் சிறு சிறு நிறுவனங்களில் வேலைப்பார்த்து விட்டு, எதிலும் நிரந்தரமாகப் பணி செய்யப் பிடிக்காமல் ஊருக்கு வந்து, வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் நாகர்கோவிலில் ஒரு மொபைல் போன் சர்வீஸ் சென்டர் தொடங்கியிருந்தான். சென்ற முறை நான் ஊருக்கு வந்திருந்த போது என்னிடம் தான் கடை தொடங்கியிருப்பதை சொல்லி, விசிட்டிங் கார்டு கொடுத்து ஒரு நாள் கடைக்கு வருமாறு அழைத்திருந்தான், அப்போது என்னால் செல்ல முடியவில்லை. சவுதியில் இருக்கும் போதும் ஒருமுறை என்னை அழைத்து விசாரித்திருந்தான், இந்தமுறை ஊருக்கு வரும் போது கண்டிப்பாகக் கடைக்கு வருவதாகச் சொல்லியிருந்தேன்.

நண்பர் கடை வைத்திருப்பது மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு எதிர் புறம் இருக்கும் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில். இரு சக்கர வாகனத்தில் வேப்பம்மூடு ஜங்சன் வழியாகப் பேருந்து நிலைய சாலையில் சென்றால் திரும்ப வர முடியாது, அது ஒரு வழிப்பாதை, ஒரு நான்கு கிலோ மீட்டர் சுற்றினால் தான் திரும்பவும் வேப்பம்மூடு ஜங்சனுக்கோ அல்லது செட்டிக்குளத்திற்கோ வர முடியும். அதனால் மீனாட்சிபுரம் பேருந்து நிலைய சாலையில் ஏதும் வேலையிருந்தால் நான் பெரும்பாலும் என்னுடைய வாகனத்தை நகராட்சி பூங்காவிற்கு எதிர் புறத்தில் இருக்கும் இரு சக்கர வாகன பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, ஆக வேண்டிய வேலைகளை நடந்து சென்று முடித்துவிட்டுத் திரும்ப வந்து வாகனத்தை எடுத்துச் செல்வேன். நான்கு கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் சுற்றுவதில் பிரச்சனையில்லை, ஆனால் அந்தச் சாலையில் செல்லும் வாகனம் அனைத்தும் கடும் நெருக்கடியில் ஆமை வேகத்தில் நகரும், சாலையும் குண்டும் குழியுமாக இருக்கும். முன்னால் செல்லும் வண்டியிலிருந்து வரும் புகை மற்றும் அது கிளப்பும் செம்மண் துகள் மொத்தம் உங்களை முகத்தில் வந்து ஒட்டிக் கொள்ளும்.  மழைக்காலமாக இருந்தால் சொல்லவே வேண்டாம், சேறும் சகதியுமாக உங்களை அடையாளம் தெரியாமல் ஆக்கிவிடும். இதற்குப் பயந்தே அந்தச் சாலையில் நடந்து சென்று ஆக வேண்டிய வேலையைப் பார்த்து விடுவது.

நான் வில்லுக்குறியிலிருந்து கிளம்பி கலெக்டர் அலுவலகத்திலிருந்து நேராக செட்டிக்குளம் போகாமல், இடது பக்கம் திரும்பி டதி மேனிலைப் பள்ளி வழியாக நாகர்கோவில் நகராட்சி பூங்காவிற்கு வந்தடைந்தேன். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கும் நேரம் தாண்டியிருந்ததால் பெரிய அளவில் வாகன நெருக்கடி இல்லை. அதனால் வீட்டிலிருந்து கிளம்பிய இருபது நிமிடத்தில் அங்கு வந்தடைந்திருந்தேன். இதுவே ஒரு அரை மணி நேரம் முன்னதாக வீட்டிலிருந்து கிளம்பியிருந்தால், கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் வாகனங்களின் நெருக்கடியில் சிக்கியிருப்பேன். நான் இருபது நிமிடத்தில் கடந்து வந்த சாலையில் ஒரு எட்டு பொறியியல் கல்லூரியும், இரண்டு கலைக் கல்லூரியும் இருக்கிறது. காலையில் இந்தச் சாலையானது வாகன நெரிசலில் விழிபிதுங்கித் தவிக்கும்.

காலையில் நகராட்சி பூங்காவிற்கு எதிரில் இருக்கும் இடத்தில் பார்க்கிங் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல, சாலையின் ஓரம் ஒரு வரிசையில் தான் வாகனங்கள் நிறுத்த முடியும். கடைகளில் வேலைபார்ப்பவர்கள் மற்றும் நகருக்குள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வருபவர்கள் என்று எல்லோரும் அந்த இடத்தில் தான் தங்களுடைய இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். நான் வந்த நேரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை முழுமையாக அந்த பார்க்கிங் நிரம்பியிருந்தது. வண்டியிலிருந்து இறங்கி மெதுவாக தள்ளிக் கொண்டே வந்து ஏதாவது ஒரு இடைவெளி இருக்கிறதா? என்று பார்த்தேன். சிறிது தூரத்தில் ஒரு இடைவெளி இருப்பது கண்ணுக்கு புலப்பட்டது. அவசரமாக வண்டியை தள்ளிக் கொண்டு அதில் விடுவதற்கு முனைவதற்குள் ஒரு வண்டி என்னை இடிப்பது போல் சீறிக் கொண்டு வந்து அந்த பார்க்கிங் இடத்தை நிரப்பியது.

எனக்குக் கடுங்கோபம், நான் வண்டியை அந்த இடைவெளியில் தான் பார்க்கிங் செய்ய வருகின்றேன் என்பதை வண்டியை விட்டவர் ஊகித்திருக்கக் கூடும், அதற்காகத் தான் அவ்வளவு வேகமாக அவர் வண்டியைக் கொண்டு வந்து அதில் பார்க்கிங் செய்தார். முறைத்துக் கொண்டே, ஏன்டா! என்னோட கவட்டைக்குள்ள கொண்டு வந்து வண்டியை விட வேண்டியது தானே! என்று கேட்பதற்கு வாய் வரை வந்த வார்த்தையை, அவருடைய கால் சட்டையைப் பார்த்தவுடன் கேட்காமல் மென்று விழுங்கினேன்.

சாரி தம்பி! கொஞ்சம் அவசரம், அதான்! அதோ, அந்தப் பக்கம் ஒரு இடம் காலியாக இருக்குது அங்க விடுங்க! என்று சொல்லிவிட்டு என்னுடைய முகத்தைக் கூட திரும்பிப் பார்க்காமல் எதிர்த் திசையில் இருந்த டீக்கடையை நோக்கி வேகமாகச் சென்றார். அந்த டீக்கடையில் நின்ற இருவர் இவரைப் பார்த்தவுடன் லேசாகத் தலை கவிழ்ந்து வணக்கம் வைத்தனர். இவரும் பதிலுக்கு தலையை ஆட்டிக் கொண்டு அவர்களை நெருங்கினார். மூன்று பேரும் அணிந்திருந்த காக்கி நிறத்திலான கால் சட்டை அவர்கள் காவல் துறை என்பதை ஊர்ஜிதம் செய்தது. மூவரும் காலில் அணிந்திருந்த ஷூ அவர்களின் கடமையை பளிச்சிட வைத்தது.

அந்த போலிஸ்காரர் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன், நல்ல வேளை ஒரு வண்டி நிறுத்துவதற்கான இடம் காலியாக இருந்தது. அதில் வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு வேப்பம்மூடு சிக்னல் கடந்து பேருந்து நிலையத்தை நோக்கி மெதுவாக நடந்தேன். எதேச்சையாகத் திரும்பி பார்த்த போது அந்த மூன்று போலிஸ் காரர்களும் என் பின்னால் சிறிது தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

நடந்து செல்லும் வழியில், அப்போது தான் ஒவ்வொரு பிளாட்பார கடைகளும் துளிர் விடத் துவங்கியிருந்தது, பெரிய நீல நிற பிளாஸ்டிக் கவர்களில் நிறைத்து வைத்திருந்த செருப்புகள், பேக்குகள், குடைகள் மற்றும் வளையல்கள் போன்ற பொருட்களை அடுக்கி வைக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை கூடைகளிலிருந்து எடுத்து பிளாட்பாரத்தில் பிளாஸ்டிக் பேப்பர் விரித்துக் கூறு பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். அதைக் கடந்து சிறிது தூரம் கடந்து பூ விற்பவர்களின் வரிசை ஆரம்பித்திருந்தது.

சுற்றி வேடிக்கை பார்த்து கொண்டு நடந்த என்னுடைய மனதில் திடீரென அந்த போலிஸ்காரர்களின் ஞாபகம் வரவே திரும்பவும் திரும்பி அவர்கள் வருகிறார்களா? என்று பார்த்தேன். இப்போதும் அவர்கள் மூன்று பெரும் நான் போய் கொண்டிருக்கும் திசையில் தான் வந்து கொண்டிருந்தார்கள். எனக்கு என்னவோ, அவர்கள் மூவரும் என்னைத் தான் பின் தொடருகிறார்கள்! என்ற எண்ணம் முன் மூளையில் தோன்றி என்னை சல சலக்க வைத்தது. நான் நடந்து கொண்டிருக்கும்  பிளாட்பாரத்தை ஒட்டி ஒரு பழக்கடை இருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும் போது அவசர அவசரமாக மூன்று தோசையை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டு விட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தது, அதன்பிறகு இது வரையிலும் தொண்டையை எதுவும் நனைக்காததால் பழக்கடையில் முன்னால் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற சர்பத் பாட்டிலை அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்தவுடன் நாக்கு மேலும் வறண்டது.

அந்த போலிஸ்காரர்கள் என்னைத் தான் பின் தொடர்கிறார்களா? என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, அந்தக் கடையில் மேல் சட்டை அணியாமல் கை பனியனுடன் இருந்த பெரியவரிடம் ஒரு சர்பத்! சொல்லிவிட்டுத் திரும்பி நின்றேன். பழ சர்பத் போடட்டுமா தம்பி! நல்ல பழுத்த நயம் பேயன் பழம் இந்த கிடக்கு பாருங்க! என்று கட்டி தொங்க விடப்பட்டிருந்த வாழைக்குலையை காட்டிய கடைக்காரரிடம், வேண்டாங்க! வெறும் சர்பத் ஒரு முழு எலுமிச்சை பழம் பிழிந்து போடுங்கள்! என்று சொல்லிக் கொண்டு, சிறிது தூரத்தில் பேருந்து நிலையத்திற்குள் இறங்கும் படிக்கட்டுகளில் வரிசையாக அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர்களின் மீது என்னுடைய கவனம் சென்றது.

ஆணும் பெண்ணுமாக வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அழுக்கு தரித்த ஆடையுடன், தண்ணீர் கண்டு பல வருடங்கள் ஆன தேகத்துடன் கையில் தட்டுடனும், சிலர் அழுக்கு துணி மூட்டைகளைக் கக்கத்தில் வைத்துக் கொண்டும் வழியில் வந்து போவோரிடம் கை நீட்டி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். காலை நேரமாக இருந்ததால் மக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கவில்லை. மாலை நேரமாக இருந்தால் அவர்கள் இவ்வளவு சவுகரியமாக அமர்ந்து, இந்த இடங்களில் பிச்சைகள் கேட்க முடியாது. அலுவலகம் முடிந்து, வீட்டிற்குச் செல்ல பேருந்து பிடிக்க வரும் மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி முடித்து நேரத்தைக் குறிவைத்து இயங்கும் பேருந்துகளை தேடிவரும் மாணவர்கள், கிராமங்களிலிருந்து வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை நகரத்திலிருந்து வாங்கிச் செல்லும் கூட்டம் என்று இந்தப் படிக்கட்டுகள் எப்போதும் பரபரப்பாக இயங்கும்.

அந்தப் பிச்சை எடுப்பவர்கள் கூட்டத்தில் இடையில் அமர்ந்திருந்த ஒருவர் மீது மட்டும் என்னுடைய பார்வை கொஞ்சம் ஆழமாகப் பதிந்தது, அவருக்கு உடலில் எந்தவித ஊனமும் எனது கண்களுக்கு தெரியவில்லை, மற்றவர்களை விட இவரது ஆடையில் அழுக்கு குறைவாகவே இருந்தது. தலைமுடி செம்பட்டை பாய்ந்து, ஒரு வாரம் சவரம் செய்யாத தாடியுடன், கழுத்தில் ஒரு பெரிய கருப்பு கயிறு கட்டி கையில் ஒரு கீறலான சில்வர் தட்டுடன் அமர்த்திருந்தார். பக்கத்தில் ஒரு கை இழந்த ஒருவர், வாழை இலை பொதிந்த பார்சலிலிருந்து எதையோ எடுத்துச் சாப்பிட்டு கொண்டிருந்தார். இவர் அவரை ஏக்கத்துடன் பார்ப்பது போல எனக்குத் தோன்றியது.

தம்பி சர்பத்! என்று சொல்லிய குரலைக் கேட்டு திரும்பி, கடைக்காரர் கொடுத்த வெளிர் மஞ்சள் நிற சர்பத் நிரம்பிய கண்ணாடி கப்பை வாங்கிக் குடிக்க துவங்கினேன். வறண்ட நாவிற்குக் குளிர்ச்சியாக இறங்கிய இனிப்பும், புளிப்பும் கலந்த பானம் அடி வயிறு வரை நனைத்தது. எவ்வளவு? என்று கடைக்காரரிடம் கேட்டேன். ஒரு சர்பத் பத்து ரூபாய் தம்பி, நீங்க முழு பழமும் பிழிய சொன்னீங்க! பன்னிரண்டு ரூபாய் கொடுங்க! என்றார். பர்சிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, திரும்பி அந்த போலீஸ்காரர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்தேன். அவர்கள் வருவதற்கான அறிகுறி ஏதும் என் கண்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் வந்த வழியாகத் திரும்பி சென்றிருக்க வேண்டும், அல்லது என்னைத் தாண்டி சென்றிருக்க வேண்டும், என் பார்வையிலிருந்து தவறி என்னைத் தாண்டி செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. நான் நிற்பதற்கு எதிர்த் திசையில் இருக்கும் கடைகளுக்குள் சென்றிருக்க வாய்ப்பு உண்டு, ஆனால் அங்கு இருப்பது துணிக்கடைகளும், செருப்பு கடைகளும். போலிஸ்காரர்கள் அப்படியான கடைகளுக்கு செல்லும் வாய்ப்பு குறைவு.

அந்த பழக் கடையிலிருந்து நகர்ந்து பிச்சைக்காரர்கள் அமர்ந்திருக்கும் படிக்கட்டில் நடந்தேன். நான் அந்த பழக் கடையிலிருந்து வேடிக்கை பார்த்த பிச்சைக்காரர் இப்போது என்னுடைய முகத்தைப் பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது. அனிச்சையாக என்னுடைய கை பாக்கெட்டுக்குள் சென்றது, ஒரு பத்து ரூபாயை எடுத்து அவருடைய தட்டில் போட்டுவிட்டு, மற்ற பிச்சைக்காரர்கள் சுதாரிப்பதற்குள் வேகமாக நடந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

சிறிது தூரம் நடந்து வரும் போது மேல் பாக்கெட்டிலிருந்த‌ மொபைல் போன் அலறியது, சாலையில் வண்டிகள் சென்று வரும் ஒலியில் எதுவும் பேச முடியாது என்பதால், அருகில் இருந்த செருப்பு கடையின் சுவர் ஓரமாக நின்று மொபைலை ஆன் செய்து பேசினேன். நண்பன் ஒருவன், வெளிநாட்டிலிருந்து அழைத்திருந்தான். அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, என்னைத் தாண்டி ஒரு சிலர் வேகமாக ஓடினார்கள், நானும் திரும்பி என்னவென்று அவர்கள் ஓடும் திசையில் பார்த்தேன். இப்போது அந்தப் பிச்சைக்காரர்கள் அமர்ந்திருந்த படிக்கட்டுகளை சுற்றி ஒரு பெரிய கூட்டம் சேர்ந்திருந்தது.

நண்பனிடம், இரவு அழைக்குமாறு சொல்லிவிட்டு, மொபலை அணைத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு, கூட்டத்தில் ஒருவனாக நானும் வந்து என்னவென்று எட்டிப் பார்த்தேன். இரு சக்கர வாகன நிறுத்தும் இடத்தில், எனது வண்டியை நிறுத்தப் போகும் இடத்தில் அவசரமாகக் கொண்டு நிறுத்திய போலீஸ்காரர் இப்போது நான் பத்து ரூபாய் பிச்சை போட்ட பிச்சைக்காரரின் பிடரியை இடது கையால் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பிச்சைக்காரர், விடுங்க சார்! என்கிட்ட ஒண்ணும் இல்ல! சொன்னா கேளுங்க! விடுங்க சார்! என்று திமிறி கொண்டிருந்தார்.



பிச்சைக்காரர் முழு பலத்தை கூட்டி போலீஸ்காரரின் பிடியிலிருந்து விடுபட எவ்வளவு முயற்சித்தும் பலனளிக்கவில்லை. எங்கல வச்சிருக்க! மடிய அவுருல! என்று சொல்லியவாறு வலது கையால் பிச்சைக்காரரின் இடுப்புத் துணியை பிடித்து இழுக்கச் சாணி தாள் பொதிந்த ஒரு பொட்டலம் கீழே விழுந்தது. பொட்டலம் கீழே விழுந்த கணம், போலீஸ்காரரின் கை பிச்சைக்காரரின் கன்னத்தில் பதிந்தது. விழுந்த அடியின்
வீச்சு என்னுள் அதிர்ந்தது, அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. அதற்குள் அந்த இடம் முழுவதும் பெருங்கூட்டம் வேடிக்கை பார்க்க கூடியிருந்தது. மற்ற இரு போலீஸ்காரர்களும் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து போங்கய்யா! போங்கய்யா! கூட்டம் போடாதீங்க! போங்க! போய் வேலையை பாருங்க! என்று கத்தினார்கள்.

ஆண்களும் பெண்களும் வாயில் எதை எதையோ முனகியவாறு அவர்கள் தம் வேலையைப் பார்க்க கிளம்பினார்கள். நானும் திரும்பி நடந்தேன், கையிலும், தோளிலும் சில்வர் மற்றும் பித்தளை நிறத்தில் மாலையாகத் தொடங்கவிடப்பட்ட ஊக்குகளையும் பாச்சா உருண்டை பாக்கெட்டுகளையும் கொண்டு என்னுடன் திரும்பி நடந்த முதியவர் "காலம் போற போக்கை பாத்தியளா தம்பி! இந்த வயசுல இவனுக்கு இது தேவையா! காலேஜ் பயலுவளுக்கு கஞ்சா விக்கிறான்! இன்னா மாட்டிடான் இல்லா! உள்ள வச்சி எலும்பை எண்ணி புடுவானுங்க!" என்று என்னிடம் சொல்லிவிட்டு சாலையைக் கடந்து சென்றார். சாலையில் சென்ற ஆட்டோவின் பின்னால் "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" என்று எழுதியிருந்தது.  ஒரு சினேக பார்வையுடன், ஆட்டோவும் முதியவரும் சென்ற திசையைப் பார்த்து கொண்டு என் வழியில் நடந்தேன்.

.

0 comments:

Related Posts with Thumbnails