இது நான் எழுதும் மூன்றாவது தொடர்பதிவு என்று நினைக்கிறேன். இந்த தொடர்பதிவை ஆரம்பித்த வசந்த் அவர்கள் கற்பனை பற்றிய விளக்கங்களை படிக்கும் போதே இந்த தொடர்பதிவு பற்றிய ஆர்வம் இருந்தது. நானும் எழுத வேண்டும் என நினைத்தேன். இவ்வளவு சீக்கிரம் இந்த தொடர்பதிவு எழுதுவேன் என்று நினைக்கவில்லை. எப்படியோ அமைதிச்சாரல் அவர்களின் அழைப்பால் எழுதுகிறேன்.
இந்த தொடர்பதிவு எழுதுவதற்கு முன்னால் இந்த பதிவுடன் தொடர்புடைய ஒரு சின்ன கொசுவத்தி சுத்தலாம் (என்ன கொசுவத்தியா? என்று ஓட வேண்டாம், ஒரு சின்ன பிளாஸ்பேக்) என்று நினைக்கிறேன். நான் சின்ன வயதில் பல பேச்சுப் போட்டிகளில் கலந்து இருக்கிறேன், பலவற்றில் பரிசுகளும் வாங்கியிருக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது மாவட்ட அளவிலும் கலந்து இருக்கிறேன். இந்த ஆர்வத்தை பள்ளிப்படிப்பை முடித்ததோடு விட்டு விட்டேன். கல்லூரியில் படிக்கும் போது எந்த போட்டிகளிலும் தொடந்தது இல்லை.
பள்ளியில் இவ்வாறு பல பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம், நான் மேடையில் பேசுவேன் என்பது ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் தெரியும். எனவே எந்தவொரு போட்டி நடந்தாலும் உடனே என்னிடம் சொல்லி உசுப்பேத்தி விடுவார்கள். ஆனால் எனது ஊரில் இருந்து வெளியில் வந்து கல்லூரி படித்ததால் என்னை பற்றி யாருக்கும் தெரிய வாய்ப்பில்லாததால் கல்லூரியில் நடக்கும் எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்வது கிடையாது. பல சுற்றறைக்கைகள் வரும், அந்த கல்லூரியில் பேச்சுப் போட்டி, இந்த கல்லூரியில் பேச்சுப் போட்டி என, நான் அமைதியாக இருந்து விடுவேன்.
நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இறுதியில் படிக்கும் போது, அந்த வருடத்திற்கான ஆண்டுவிழா போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்தன. கல்லூரி வகுப்பில் என்னுடன் பக்கத்தில் அமர்ந்திருப்பவன் என்னிடம் "நான் நம் கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் உள்ள பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள போகிறேன், ஏற்கனவே நான் பெயரும் பதிவு செய்துவிட்டேன், நீ என்னுடன் துணைக்கு வர வேண்டும்" என்று சொல்லி அழைத்தான். நானும் யோசித்தேன், எனக்கு அடுத்த பாடவேளை தெர்மல். நம்ம மண்டைக்கு ஒரு சைக்கிளும் ஏற போவது இல்லை, உக்கார்ந்து தூங்கிறதுக்கு பதிலா வேடிக்கை பார்க்க போயிடலாம் என்று, அவனிடம் சரி, என்றேன்.
இரண்டு பேரும் போட்டி நடக்கும் ஹாலுக்கு போனோம், அங்கு பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. நான் நண்பனிடம் "என்னாடா!! பேச்சுப் போட்டி என்று சொன்னாய், பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது" என்று கேட்டேன். அதற்கு அவன் என்னிடம் பாட்டு போட்டி முடிந்தவுடன் தான் பேச்சுப் போட்டி என்றான். சரி, என்ன தலைப்பு, நீ அந்த தலைப்புக்கு பேச தயாராகி விட்டாயா? நீ எழுதி வைத்திருக்கும் பேப்பரை கொடு, நான் படித்து பார்க்கிறேன் என்றேன்.
ஹா..ஹா..ஹா என்று என்னுடைய நண்பன் சிரித்தான். டேய் நீ இன்னும் ஸ்கூல் பசங்க லெவல்ல இருந்து இன்னும் மாறலியா?.. இங்கு நடப்பது "ஒரு நிமிட பேச்சு"(Just a minute speech). தலைப்பு எல்லாம் மேடையில் ஏறிய பிறகுதான் தருவார்கள். அந்த தலைப்பில் பேச வேண்டும் என்றான்.
இதுக்கு மேல நான் அவனிடம் பேசினால் நம்மளை ரெம்ப அசிங்க படுத்திடுவான். அதனால அமைதியாய் இருந்திடலாம் என்று இருந்துவிட்டேன். நான் பள்ளியில் கலந்து கொள்ளும் பேச்சுப் போட்டிகளில் தலைப்புகள் ஒரு வாரத்திற்கு முன்பே தரப்படும். அந்த தலைப்பில் எழுதுவதற்கு சில ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். நான் வீட்டில் இருந்து மனப்பாடம் செய்து அம்மாவிடம் பேசி காட்டுவேன், அதன் பிறகு தான் மேடையில் பேசுவேன். நண்பன் சொன்ன "ஒரு நிமிட பேச்சு" பற்றி அப்போது தான் கேள்வி படுகிறேன், எனவே எனக்கு அது ஒரு சவாலகவே தெரிந்தது. அதை பார்க்கவும் ஆர்வம் அதிகரித்தது.
சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பமாகியது. ஹால் புல்லா நல்ல கூட்டம் இருந்தது. நானும் ஒரு ஓரமா நின்றேன். எனக்கு தெரிந்த சில வேறு டிபாட்மென்ட் பசங்களும் என்னுடன் வேடிக்கை பார்க்க வந்து சேர்ந்தார்கள். மேடையில் விரிவுரையாளர் ஒருவர் தான், கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்களையும், தலைப்பு கொடுக்கும் வேலையையும் ஒன்றாக செய்து கொண்டிருந்தார். அந்த விரிவுரையாளர் நல்ல காமெடியாக ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தார். போட்டியாளர்களுக்கு தலைப்பு கொடுத்துவிட்டு அந்த தலைப்பு பற்றி எதிர்மறையான விசயங்களையும் சொல்லி, பேச வந்தவர்களின் டிராக்கை திருப்பி விட்டு கொண்டிருந்தார்.
உதாரணமாக "நான் கடவுளை கண்டால்" என்பது தலைப்பு என்று வைத்து கொள்ளுங்கள். விரிவுரையாளர்.. அந்த தலைப்பை சொல்லிவிட்டு, "இவன் என்ன பெரிசா கடவுளிடம் கேட்டு விட் போகிறான், டெய்லி சைட் அடிக்க பெண் வேண்டும், பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்கணும் இப்படி தான் அண்ணன் பேசுவாரு" என்று விளக்கம் கொடுத்து விட்டு பேச சொல்வார். போட்டியாளர் நல்லாவே பேச வேண்டும் என்று மேடை ஏறினாலும் கண்டிப்பாக விரிவுரையாளர் சொன்ன விசயங்கள் தான் அவர்களின் காதில் ஏறுமாதலால் அனைவரும் உளறி கொண்டு தான் வந்தார்கள்.
எந்த ஒரு போட்டியாளரும் தலைப்புக்கு ஏற்றவாறு பேசவில்லை. என்னை சுற்றி ஒரு கூட்டம் சேர்ந்திருந்ததால் நானும் மேடையில் பேசுபவர்களை கிண்டல் பண்ண தொடங்கினேன். என்னுடன் சேர்ந்து கொண்டு பலரும் கலாய்க்க தொடங்கினார்கள். அங்கு மேடையில் ஏறிய பெரும்பாலான மாணவர்கள், பக்கத்தில் உள்ள அவனுடைய நண்பர்களால் போட்டிக்கு பெயர் கொடுக்க பட்டவர்கள். அவர்களின் பெயர் மேடையில் வாசிக்க பட்ட பிறகு தான் அவனுக்கே தெரியும், நம்முடைய பெயரும் இருக்கிறது என்று. மேடையில் பேசியவர்கள் சொதப்ப சொதப்ப நாங்கள் ஒரு கூட்டம் கலாய்க்க தொடங்கினோம்.
நீ முதலமைச்சர் ஆனால், உன் கனவு பலித்தால், நீ பட்டாம் பூச்சியாக இருந்தால், உனக்கு இறக்கைகள் முளைத்தால் என்று பல தலைப்புகளில் பேசினார்கள். ஒவ்வொரு தலைப்பிற்கும் விளக்கம் தருகிறேன் என்று அந்த விரிவுரையாளர் மாணவர்களின் டிராக்கை அழகாக மாற்றி விட்டுகொண்டிருந்தார். அதனால் எவராலும் பேச்சை தொடரமுடியவில்லை ஒவ்வொருவரும் பேச பேச நாங்கள் கலாச்சிட்டே இருந்தோம். போட்டியில் கலந்து கொள்ள வந்த என்னுடைய நண்பன் நாங்கள் கலாய்ப்பதை பார்த்து விட்டு, தான் போனாலும் இவனுங்க இப்படி தான் கலாய்ப்பார்கள் என்று நினைத்து கொண்டு என்னிடம், "இவ்வளவு நக்கல் பண்ணுகிறாயே நீ போய் மேடையில் பேச வேண்டியது தானே" அதுக்கு முடியாது இங்க உக்காந்து நையாண்டி பன்ணுறது எல்லோராலும் முடியும் என்றான்.
நமக்கு தான் கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது புதிதா என்ன?.. "டேய் சூனா பானா, நான் எல்லாம் மேடையில் ஏறினால் அப்புறம் உனக்கு எல்லாம் பிரேஸ் கிடைக்காதுடா பிரேஸு" அந்த காரணத்தினால் தான் நான் மேடையில் ஏறவில்லை என்று அவனிடம் திரும்பவும் கலாய்த்தேன். இதை கேட்டவுடன் கூட இருதவர்களில் இரண்டு பேர் என் நண்பனுடன் சேர்ந்து கொண்டு அப்படி அவனுக்கு கிடைக்கலனாலும் பரவாயில்லை நீ இன்னைக்கு மேடையில் பேசுகிறாய் என்று விருவிருவென்று என்னுடைய பெயரை அந்த விரிவுரையாளரிடம் கொடுத்து விட்டார்கள்.
எனக்கு திக் என்று தான் இருந்தது. வெளியில் காட்டவில்லை எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டு இருந்தேன். ஓடி விடலாம் என்று நினைத்தால், அப்புறம் காலேஜில் தலை காட்ட முடியாது, அத்தனை பேரும் சேர்ந்து கலாய்த்து விடுவானுங்க. அப்பதான் போட்டியை கொஞ்சம் சீரியஸா பார்க்க தொடங்கினேன். தலைப்பை அவர் சொல்லி முடித்தவுடன் நாம் பேச ஆரம்பித்து விட்டால் விரிவுரையாளரில் டிராக்கில் இருந்து நம்முடைய டிராக்கிற்கு மாறிவிடாலாம் என்பது தான் என்னுடைய திட்டம். விரிவுரையாளர் பேசிவிட்டால் நாம் அவருடைய டிராக்கில் தான் பேச்சை ஆரம்பிப்போம், அப்புறம் வேலைக்கு ஆகாது.
என்னுடன் வந்த நண்பனுடைய பெயரும் வாசிக்க பட்டது, அவனும் மேடை ஏறினான். அவனுக்கு வந்த தலைப்பு " எனது பார்வையில் சுதந்திர இந்தியா". நல்ல தலைப்பு தான். ஆனால் விரிவுரையாளர் நமக்கெல்லாம் சுதந்திரம் கிடைக்கவில்லை என்றால் இவ்வாறு கல்லூரிக்கு வரமுடியுமா? பெண்களை சைட் அடிக்க முடியுமா?.. இல்ல கலேஜிக்கு கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு தான் போக முடியுமா? என்று டிராக்கை மாற்றிவிட்டார். அவனும் அந்த விரிவுரையாளரின் டிராக்கிற்கே மாறி சொதப்பி விட்டான்.
நாமளும் இப்படி போனா கண்டிப்பா நம்ம பேசுகிற டிராக்கும் மாறிவிடும் என்று நினைத்து கொண்டு மேடைக்கு அருகில் சென்று நின்று கொண்டேன். எனக்கு முன்னால் பெயர் கொடுத்தவனிடம் சென்று, நீ பேசி முடித்தவுடன் மைக்கை தயவுசெய்து கொண்டு போய் மைக் ஸ்டண்டில் வைத்து விடாதே, என்னுடைய கையில் கொடுத்து விடு என்றேன். அவனும் சரி என்றான்.
என்னுடைய திட்டம் பெயர் வாசித்தவுடன் மேடையில் ஏற வேண்டும், அவர் தலைப்பை சொன்னவுடன், சிறிதும் யோசிக்காமல் பேச்சை ஆரம்பித்து விட வேண்டும் என்பது தான். அதன் படியே நானும் மேடையில் பேசிவிட்டேன். விரிவுரையாளரை பேசவே விடவில்லை. நான் பேசி முடித்தவுடன் அவரும் பாராட்டினார். எனக்கு கொடுக்க பட்ட தலைப்பு "உன் கனவு நிஜமானால்"
நான் பேசிய டிராக், சாதி, மத பேதமற்ற நல்ல சமுதாயம் படைக்க வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டேன். ஒரு நிமிடம் தான் பேச வேண்டும் நான் தொடந்து பேசியதால் அவர்கள் மணி ஒலித்து நிறுத்தினார்கள். நான் கண்டிப்பாக விரிவுரையாளரின் பேச்சுக்கு காத்திருந்திருந்தால் கண்டிப்பாக என்னுடைய டிராக்கை மாற்றியிருப்பார்.
கடைசியில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இறுதியாண்டில் படிக்கும் ஒரு மாணவனுக்கு முதல் பரிசு கிடைத்தது. அதில் என்ன ஒரு சந்தோசம் என்றால் முதல் பரிசு பெற்ற மாணவனும் எங்களுடைய மெக்கானிக்கல் டிபார்மென்ட். அப்படியானால் சொல்லவா வேண்டும் எங்களுடைய கொண்டாட்டங்களுக்கு. முதல் பரிசு கிடைத்த மாணவன் பேசிய தலைப்பு "நான் காதலிக்கிறேன்" அவன் அன்னை தெரசா அவர்களை பற்றி அழகாக பேசினான். இதுதான் நான் கடைசியாக பேசிய மேடை. அதன் பிறகு அதற்கான வாய்ப்புகள் இதுவரையிலும் கிடைக்கவில்லை.
எதற்கு இந்த கொசுவத்தி என்று நீங்கள் நினைக்கலாம், இந்த தொடர்பதிவுக்கும் கொசுவத்திக்கும் என்ன சம்பந்தம் என்று. ஒரு தலைப்பை பற்றி எழுதவோ!! பேசவோ!! வேண்டுமானால் இரண்டு விதமாக செய்ய முடியும். அதில் நாம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை நாம் முதலில் முடிவு செய்ய வேண்டும்.
ஒரு நாளைக்கு மட்டும் நீங்கள் விரும்பிய உருவத்தை பெறலாம்ன்னு ஒரு வரம் கிடைக்குது. என்ன உருவம் எடுக்க ஆசைப்படுவீர்கள்?.. உங்கள் அனுபவம் எப்படியிருக்கும்ன்னு எழுதுங்க.
மேலே அமைதிச்சாரல் அவர்கள் கொடுத்த தலைப்பில் எப்படி எழுத வேண்டும் என யோசித்து விட்டு அடுத்த பதிவில் வருகிறேன். நீங்களும் ஏதாவது ஐடியா கொடுப்பதாக இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லலாம். கொடுத்த ஐடியா மணிக்கு பரிசாக ஒரு தலைப்பு கொடுத்து எழுத வைக்க படுவார்கள் என்று சொல்லி கொல்(ள்)கிறேன்.
பார்டா!!!!!! கற்பனை கதையை படிக்கலாம் என்று வந்தால் உன் சொந்த கதையை எழுதி கொல்கிறான் என்று சொன்னீர்கள் ஆனால், நான் அடுத்த பதிவில் ஒரு நாள் எடுக்க போகும் உருவத்தால் மாயமாகவும், இரும்பு கையாலும், முகமூடியாலும் தாக்க படுவீர்கள் என்று கனைக்கிறேன்... இந்த வரியில் இருந்து அடுத்த பதிவு ஆரம்பம்.
.
.
.
Thursday, July 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
உங்க ஒரு நாள் உருவத்தை காண ஆவலா இருக்கோம்.
தொடர்பதிவை எழுதியிருப்பீர்கள் என்று வந்தால் கல்லூரியில் நடந்த மேடைப்பேச்சு போட்டி பற்றி அழகாக சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்...
கண்டிப்பா உங்களிடமிருந்து சுவாரஸ்யமான தொடர்பதிவு இருக்கும் என்று உங்களின் க்ளூக்கள் மூலமே தெரிகிறது வாழ்த்துக்கள்...
நீங்க பேச்சுல(ர்) புலியா. அருமை ஸ்டீபன். நீங்க விவரித்த விதம் நல்லாயிருக்கு.
தொடர்பதிவுன்னா கண்டிப்பா நம்ம பிரதாப்பை கூப்பிட்டே ஆகணும் சொல்லிட்டேன் ஆமா.
முன் கதைச்சுருக்கமே இவ்வளவு நல்லாருக்கே. கதையும் சுவாரஸ்யமாத்தான் இருக்கும்.. காத்திருக்கிறோம். அழைப்பை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி.
//கொடுத்த ஐடியா மணிக்கு பரிசாக ஒரு தலைப்பு கொடுத்து எழுத வைக்க படுவார்கள் என்று சொல்லி கொல்(ள்)கிறேன்.//
நானெல்லாம் சந்தேகம் கேக்குர ஆளுங்க . ஐடியா குடுக்குற ஆளா என்ன ..ஹி..ஹி.. எப்படி எஸ்ஸ்ஸ்கேப்..
நல்ல சுவாரசியமா இருந்தது ஸ்டீபன். கல்லூரி நினைவுகளை அருமையாக சொல்லிருக்கீங்க.. ஐடியாவா.. நீங்க எதாவது 2 ஐடியா கொடுங்க. ஒரு ஐடியா தாரேன்.
நல்ல பகிர்வு. ரொம்ப மகிழ்ச்சி.. தொடருங்கள் ஸ்டீபன்.. வாழ்த்துக்கள்
பள்ளியிலேயே ஜெயிச்ச ஆளு. அதான் எழுத்துல பின்றீங்க ..
அட அசத்தலான விவரிப்பு தல...
அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்ஸ்..
//எனக்கு கொடுக்க பட்ட தலைப்பு "உன் கனவு நிஜமானால்"
நான் பேசிய டிராக், சாதி, மத பேதமற்ற நல்ல சமுதாயம் படைக்க வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டேன்//
நல்ல விஷயத்தைதான் பேசியிருக்கீங்க.....
ஆஹா! காமிக்ஸா மாயாவி?
///நான் அடுத்த பதிவில் ஒரு நாள் எடுக்க போகும் உருவத்தால் மாயமாகவும், இரும்பு கையாலும், முகமூடியாலும் தாக்க படுவீர்கள் என்று கனைக்கிறேன்... இந்த வரியில் இருந்து அடுத்த பதிவு ஆரம்பம்.///
இதுக்கு பிறகும் யாரும், தைரியமா.. சொல்லுவமா என்ன??? :D :D
சும்மா தாங்க.. சொன்னேன்.. உண்மையிலே ஒரு நிமிஷ பேச்சு போட்டில கலக்கிட்டீங்க.. இரண்டாம் பரிசு என்றாலும்...
போன இடத்துல பரிசு வாங்கினது.. சிறப்பு தாங்க.. வாழ்த்துக்கள்.. :-))
//நீங்க பேச்சுல(ர்) புலியா. அருமை ஸ்டீபன்//
அக்பர் தல அதுலென்ன உங்களுக்கு அவளோ சந்தோசம்..நற நற நற....
கொசுவத்தி செம காமெடி ஸ்டீபன்.
நீங்க ஒரு பேச்சாளர்னு உங்ககிட்ட பேசும்போது நினைச்சேன்...:))
நீங்களும் அந்த புரொபசர் மாதிரி தொடர்பதிவுக்கு சம்பந்தமில்லாம டிராக் மாறிட்டீங்கன்னு நினைச்சேன். அந்த ஒருநாள் உருவம் பதிவு போடுங்க....
பட்டர்பிளையா மாறனும், தேன்சிட்டா மாறனும்னு மொக்கை போடாம காமெடியா ஒரு தீம் யோசிங்க...:))
நல்ல நினைவுப் பகிரல் ஸ்டீபன்.
ஒரு நிமிடப் போட்டியில் பேச நீங்கள் கையாண்ட உத்தி பாராட்டுக்குரியது.
கவலைப்படாதீர்கள் நண்பா. இன்னும் நிறைய மேடைகள் காத்திருக்கின்றன.
கொசுவத்தி நல்லா இருந்திச்சு!!!
// டேய் சூனா பானா,//
அதாரு சூனா பானா??
அருமையான் பகிர்வு நண்பரே! கலக்குங்க!!
நல்லா எழுதியிருக்கிங்க.. தொடருங்கள்
ஸ்டீபன் சரவணகுமார் சொன்னது போல் நிறைய மேடைகள் தயாராகி கொண்டு உள்ளது. உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் மேடை பேச்சு அனுபவம் நல்லா இருந்தது
உங்க ஒரு நாள் உருவத்தை காண
ரெடி யா இருக்கேன்
தொடர் பதிவுல உங்களுக்கு கொடுத்த தலைப்பு கல்லூரி நாட்களா?
உங்க கல்லூரி நாட்கள் இனிமையாத்தான் இருந்திருக்கு....
அடுத்த் பதிவுல சந்திப்போமா?
ஆஹா அசத்துங்க தொ.பதிவா.. ஸ்டீபன் சூப்பர்..
அடேங்கப்பா - ஒரு நிமிசம் பேசுனதுக்கு என்ன பில்டப்பு - தூள் கெளப்பி இருக்கீங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
Post a Comment