Monday, March 3, 2014

ஆட்டோ_ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல!!!!

நான் இந்தப் பதிவில் முதலிலேயே சொல்லிவிடுகிறேன், ஆட்டோவில் கட்டண மீட்டர்கள் வைக்கக் கூடாது என்றோ, அல்லது அதில் வைத்திருக்கும் கட்டணத்தை விட அதிகமாக வாங்குவது நியாயம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் இந்த ஆட்டோ கட்டணத்தை ட்டும் பெரிதாகப் பேசும் அல்லது எழுதும் நண்பர்களிடம் கேட்பது ஒன்றுதான். ஆட்டோக்காரர்களிடம் மட்டும் "ஏன்டா மீட்டர் போட்டு ஓட்டல" என்று சர்வ சாதரணமாககேட்கும் நாம் கீழே நான் சொல்லியிருக்கும் விசயங்களை எப்படி அணுகிறோம் என்று அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.


இன்று பெருநகரங்களில் இருக்கும் திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு சாதரண மினரல் வாட்டர் பாட்டிலின் விலை என்ன? அதே வாட்டர் பாட்டிலை வெளியில் வாங்கினால் அதன் விலை என்ன? என்பது அனைவருக்கும் தெரியும்திரையரங்குகளில் விற்கப்படும் ஒரு பாப்கார்ன் விலையில் வெளியில் உள்ள கடைகளில் அதேப்போல் இரண்டு வாங்க முடியும். ஆனால் அங்கெல்லாம் யாரும் ஏன்டா இப்படி விற்கிறீங்கனு பொங்குவதைப் பார்க்க முடியவில்லை. வாயை மூடிவிட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இதைவிடக் கொடுமை வெளியில் இருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்று வாசலியே போர்டு மாட்டிவிட்டு, அதற்கும் ஆள் வைத்துப் பரிசோதனை செய்கிறார்கள். டிக்கெட் எடுத்து தான் உள்ளே வருகிறேன், அதேப்போல் என்னுடைய பணத்தை கொடுத்து தான் வெளியில் இருந்து உணவுப் பொருளும் வாங்கி வருகிறேன். ஏன்டா இவைகளை நான் உள்ளேக் கொண்டு போகக்கூடாது என்று எவரும் கேட்பதில்லை. திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்குச் செய்யும் செலவை விட, இங்கு வாங்கும் உணவுப் பொருட்களுக்கு அநியாயமாகக் கொடுக்கும் விலையின் செலவு அதிகம். திரையர‌ங்கில் முப்பது ரூபாய் ஐஸ்கீரிமை ஐம்பது ரூபாய்க்கு கணக்குக் கேட்காமல் வாங்கிச் சாப்பிட்ட‌ நாம் தான் வெளியில் வந்து, நடு வெயிலில் ரோட்டோரத்தில் நின்று "ஆட்டோ வேணுமா சார்?" என்று அழைப்பவரிடம் பத்து ரூபாய்க்குப் பேரம் பேசுவோம்.

ஆன்லைனில் பஸ் டிக்கெட் புக் பண்ணும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், வாரத்தில் சாதரண நாட்களில் இருக்கும் டிக்கெட்டின் விலையை விடச் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை நூறு ரூபாயில் இருந்து முந்நூறு ரூபாய் வரை அதிகமாக இருக்கும். இந்த மோசடி முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் தான் இருந்தது, ஆனால் இப்போது வார இறுதி நாட்களிலேயே இப்படி விலையேற்றி கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தப் பஸ் முதலாளிகள் சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் டீசலுக்கு அதிக விலை கொடுப்பதில்லை, அதேப்போலப் பஸ் ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் அதிகச் சம்பளம் கொடுத்தும் விடப் போவதில்லை. "அப்புறம் எதற்கு இந்த விலையேற்றம்?" எவருக்கும் கேட்கும் துணிவில்லை. ஒரு பஸ் டிக்கெட்டிற்கு நூறு முதல் முந்நூறு ரூபாய் அதிகமாக எந்தக் கேள்வியும் இல்லாமல் கொடுத்து பயணித்து விட்டு விடியற் காலையில் பஸ்சை விட்டு இறங்கி போக வேண்டிய இடத்திற்காக ஆட்டோவை தேடும் போது, நமக்காகவே காத்திருந்தது போல் வந்து "எங்க சார் போகனும், வா சார் உட்கார்" என்று கேட்கும் ஆட்டோகாரரிடம் தான் "மீட்டர் போட்டா ரேன்" என்று சட்டம் பேசுவோம்.

இப்போது சாதரணமாக ஒரு ஹோட்டலில் சென்று டிபன் ஆர்டர் செய்தாலே அதைக் கொண்டு வந்து பரிமாறும் சர்வர், இறுதியில் பில் கொடுக்கும் போது நமது முகத்தைப் பார்க்கிறார். அவருக்கும் பத்து ரூபாய்க்குக் குறையாமல் டிப்ஸ் வைக்க வேண்டும். சாப்பிட்டது ஐம்பது, அதற்குக் கொடுக்கும் டிப்ஸ் பத்து. இன்னும் கொஞ்சம் பெரிய ஹோட்டல்களில் நடக்கும் டிப்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும் தனது கவுரத்திற்கான குறியீடாகப் போட்டா போட்டி போட்டு கொடுக்கும் டிப்ஸ் கொஞ்சம் அல்ல. இவ்வளவு தாரளமாக நடந்து கொள்ளும் நாம் தான் ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் ஆட்டோகாரரிடம் வந்தால் மட்டும் சிக்கனம் பேசுவோம். நான் இப்போது இருக்கும் ஹைதிராபாத்க்கு வந்தவர்களுக்குத் தெரியும். பிரியாணி என்றால் அது பாவர்ஜி ஹோட்டல் என்று. அந்தக் கடையின் பிரியாணி என்றால் சாப்பிட விருப்பமில்லை என்று சொல்பவனும் சாப்பிடுவான். அந்த அளவிற்குப் பிரியாணி சுவையாக இருக்கும். இந்த ஹோட்டலில் சாப்பிட எப்போதும் நமது ஊரில் நடக்கும் கல்யாணப் பந்தி போல் தள்ளுமுள்ளாகத் தான் இருக்கும். இந்த ஹோட்டலில் பில் போடுவதும், பணம் வங்குவதும் நமக்குப் பரிமாறும் சர்வர் தான். மொத்தமாகப் பில் போட்டு கொடுக்கும் போதே அவருக்குத் தேவையான டிப்ஸை அவரே பில்லில் போட்டு நம்மிடம் வாங்கிக் கொள்வார். ஒரு வேளை பில்லில் போட மறந்து விட்டால் அவரே கேட்டு வாங்கிக் கொள்வார். நாம் சாப்பிடும் தொகைக்கு ஏற்ப அவர்களின் டிப்ஸும் இருக்கும்.

இப்போது பயணத்திற்கு "நாங்க இருக்கோம் வாங்க" என்று நம்மைக் கனிவாக அழைப்பவர்கள் கால் டாக்சி வைத்திருப்போர். இவர்கள் இப்போது ஒரு சிஸ்டம் வைத்திருக்கார்கள், ஒரு மணி நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்டகிலோ மீட்டர் நாம் பயணம் செய்யலாம் அதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து உள்ளார்கள். இதைப் பிளான் செய்து நாம் புக் பண்ணினால் என்ன ஆகும் என்பதைக் கீழே விளக்குகிறேன். நாம் போக வேண்டிய இடத்திற்கு ஆகும் நேரம் கால் மணி நேரம், அப்படியானால் வருவதற்கும் கால் மணி நேரம், சென்றஇடத்தில் நமக்கு ஆகும் வேலைக்கான நேரம் அரை மணி நேரம் ஆக மொத்தம் ஒரு மணி நேரம் நமக்குத் தேவைப்படுகிறது. அதனால் நாம் அந்தக் கால் டாக்சியில் உள்ள ஒரு மணி நேர பிளானை புக் செய்கிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் போகும் போது கால் மணி நேரத்தில் சென்று விடுகிறேம், அங்குள்ள வேலையையும் அரை மணி நேரத்தில் முடித்து விடுகிறேம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் வரும் போது டிராபிக் காரணமாக நாம் பத்து நிமிடம் தாமதமாக வருகிறோம் என்றால் அவர்கள் கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா? அதேப்போல் மற்றொரு ஒரு மணி நேரத்திற்கான பணம். இரண்டு மணி நேரத்திற்கான பணத்தைக் கொடுத்தால் தான் உண்டு. டிரைவரிடம் எப்படி என்று கேட்டால் அவர் மீட்டரை காட்டுவார். சார் எனக்கு இதில் எதுவும் கிடைக்காது, நீங்கள் குறைத்துக் கொடுத்தால் எனது சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள் என்று கையை விரிப்பார். இதையே ஒர் ஆட்டோ டிரைவர் செய்தால் நம்முடைய எதிர்வினை என்னவாக இருக்கும்.



இன்றைக்கும் சாலையில் விபத்து நடந்தால் முதலில் வந்து உதவுபவர்கள் ஏதாவது ஒரு சிலஆட்டோ டிரைவராகத் தான் இருப்பார். அது மட்டுமல்ல குடித்துவிட்டு நடுச் சாலையில் விழுந்துக் கிடப்பவர்களைச் சற்று ஒதுக்கி போடுவதற்கோ அல்லது அவனுடய ஆடையைச் சரிசெய்வதற்கோ வழியில் செல்லும் எவருக்கும் மனசு வராது. அதையும் மனிதாபிமானம் உள்ள ஓர் ஆட்டோ டிரைவர் செய்வதை நாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்போம்.

மீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில், முதியோர்களை இன்றைய தலைமுறைகள் எவ்வாறு கவனிக்கின்றன என்ற தலைப்பில் பேசிய ஒரு பிரபல மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியது; இன்றைக்கு வீட்டில் தனியாக இருக்கும் பெரும்பாலான முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருவது மனிதாபிமானம் உள்ள ஏதாவது ஒரு சிலஆட்டோ டிரைவர்கள் தான். இந்த ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை.

சமீபத்தில் நான் சென்னை வந்தபோது ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது அவரிடம் மீட்டர் கட்டணம் பற்றிப் பேசினேன். என்னங்க மீட்டர் போட்டு ஓட்டினா லாபமா? நஷ்டமா? என்றேன், அவரோ எனக்கே தெரியல சார் என்றார். அப்புறம் நஷ்டம் தான் சார். எங்க சார்!! சவாரி கிடைக்க மாட்டேங்குது, எங்களுக்கு உறுதியாக இத்தனை சவாரி கிடைக்கும் என்று இருந்தால் லாபமாக இருக்கும். ஆனால் இப்போது சாவரி கிடைப்பதே குறைவாக இருக்கு என்று சொன்னார். அவர் கூறியதும் எனக்கு உண்மையாகப் பட்டது, காரணம் இவர்களுக்கு இன்று இத்தனை சாவரிகள் கிடைக்கும் என்ற உறுதி இல்லை. ஆனால் அன்றைக்கும் அவர்கள் குடும்பத்தை நடத்த வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். இன்றைய விலைவாசி உயர்வு மேல் மட்டத்தில் இருப்பவர்களையே அசைத்துப் பார்க்கிறது, இவர்கள் எல்லாம் எம்மாத்திரம். நம்மிடம் வாங்கும் பத்து, இருபது ரூபாய்களைக் கொண்டு அவர்கள் ஒன்றும் பங்களா கட்டிவிட முடியாது. அவர்கள் குடியிருப்பது என்பதோ வாடகை வீடுகளிலும், சேரிகளிலும் தான். அவர்களின் வாழ்க்கை தரமும் பெரிதாக உயர்ந்தாகவும் இல்லை.


இந்த ஆட்டோ டிரைவர்களுக்குக் கேட்கும் தொகையை எந்தக் கேள்வியும் கேட்காமல் கொடுக்கும் சில பயணிகளால் தான் இந்த பிரச்சனை என்றுப் புகார் வேறு கூறுகிறார்கள் முற்போக்காளர்கள். இவர்களால் தான் இந்த ஆட்டோ டிரைவர்கள் எல்லோரிடமும் அதிகமாக பணம் கேட்பதாகவும் எழுதுகிறார்கள். இப்படிக் கொடுப்பவர்கள் தான் முதலில் திருந்த வேண்டும் என்று அறிவுரை வேறு. என்ன கொடுமை... கண்டிப்பாக நான் கொடுக்கும் பத்து அல்லது இருபது ரூபாய், அவனுடைய குழந்தைக்குப் பிஸ்கட் ஆகத் தான் வீட்டுக்கு போகும். இப்படிக் கொடுப்பதை நிறுத்தி தான் நான் திருந்த வேண்டும் என்றால் நான் திருந்தாமலே இருந்துவிட்டுப் போகிறேன்.

பதினைந்து ரூபாய் தண்ணீர் பட்டிலை இருபத்திஐந்து ரூபாய் சொல்லும் போது வாயை மூடிக் கொண்டு வாங்கும் நாம், ஆட்டோ காரர்களில் சட்டையைப் பிடிப்பது எதனால். மேலே சொல்லியிருக்கும் பிரச்சனைகளை எல்லாம் எந்தப் பத்திரிக்கையும் எழுதியதாகவோ அல்லது ஊடகங்கள் பொங்கியதாகவோ தெரியவில்லை. காரணம் இந்தப் பெரிய கார்பரேட் முதலாளிகளில் விளம்பரம் பத்திரிக்கைகளுக்கும், ஊடகங்களுக்கும் தேவை. இவர்களில் நியாயம், அநியாயம் எல்லாம் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டும் தான்.

.

28 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திரையரங்கு அநியாயம் சரி தான்... திரையரங்குக்கு செல்ல வேண்டிய நிலையிலா உள்ளது இன்றைய படங்கள்...! சரி... அது வேறு விஷயம்...

மனித மனங்கள் என்றோ சுருங்கி விட்டது... இன்றைக்கு பிச்சை இடுவதில் கூட பேதம் உண்டு...

திண்டுக்கல்லில் தண்ணீர் பிரச்சனைப் பற்றி அதிகம்... அதை விட குழாய்அடி சண்டை அதிகம்... அதை விட அதிகம் இந்தப் பதிவில் --> http://dharumi.blogspot.in/2014/02/719.html

நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள் ஜாலியாக...! ஹா... ஹா...

ராஜி said...

சினிமாக்கு போகததால் திரையரங்கு கொள்ளைத் தெரியாது. ஆனா ஹோட்டல் கொள்ளைப் பற்றி நீங்கள் சொல்லுறது நிஜம்தான்.

k.gopaalan said...

ஆட்டோவில் பயணிப்பவர்களில் பலரும் நடுத்தர வர்க்கர்த்தினர்தான். அப்படிப்பட்டவர்கள் நீங்கள் கூறும் தியேட்டர்களுக்கும் ஓட்டல்களுக்கும் போகாதவர்கள்தான். தவிர, ஆட்டோக்களில் தினமும் போவதும் மற்ற இடங்களுக்கு எப்போதாவது போவதும் ஒன்றாகிவிடுமா.

மற்ற மாநிலங்களில் உள்ள மீட்டர் போட்டு ஒட்டும் ஆட்டோ ஒட்டுனர்கள் யாரும் மக்களுக்கு உதவாமலா இருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும்தான் குடும்பம் நடத்துவது கடினமாக இருக்கிறதா. இங்குபோன்று விலையில்லாப் பொருட்கள் வழங்கப்படாத மற்ற மாநிலங்களில் உள்ள ஆட்டோ ஒட்டுனர்கள் எப்படிக் குடும்பம் நடத்துகிறார்கள். எந்த்த தலை நகரத்திலும் 5/10 ரூபாய்க்கு உணவை எந்த அரசும் வழங்கவில்லையே.

நான் சில மாநிலங்களில் இருந்து அடிக்கடி லக்கேஜுடன் சென்னை வந்தபோது அங்கும் இங்கும் உள்ள ஆட்டோ ரேட்டைப் பார்த்து இவர்கள் அடிப்பது கொள்ளை என்று உணர்ந்திருக்கிறேன். லக்கேஜுக்கும் ஆட்டோ ஓட்டுவதற்கும் என்ன தொடர்பு.

இவர்களை உயர்த்திவிட்டவர்கள் நமது நடிகர்கள்தான். நான் பல தடவை மதுரை சென்றிருக்கிறேன். குறைந்தது 40ரூபாய். கொடுத்தால் ஏறு என்று சொல்லிக்கொண்டு பகல் முழுதும் ஆட்டோ நிலையங்களில் தூங்குகிறார்கள். இவ்ர்கள் உழைப்பாளிகளா.

சென்னையில் நம்ம ஆட்டோவும், திருச்சியில் சிலரும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டினாலேயே மாதம் 12 ஆயிரம் சம்பாதிக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். இவர்கள் குடும்பம் நடத்த இது போதாதா.

நடுத்தர மக்களுடன் கார்ப்ப்ரேட்டுகளை ஏன் இணைக்கிறீர்கள். உங்கள் வீட்டில் நுழையும் திருடர்க்ளை கார்ப்பரேட் வீட்டில் போய் திருடு என்று சொன்னால் கேட்டுவிட்டுப் போய் விடுவார்களா.

கோபாலன்

Anonymous said...

இதே பதிவு வினவு.காம் ல். எது ஒரிஜினல் ?

Anonymous said...

Delete my previous comment. Error in viewing the post.

Barari said...

ஒவ்வொரு கேள்வியும் இதயத்தை சுடுகிறது.சிந்திக்க வைத்து விட்டீர்கள் சார்.

நாடோடி said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//திரையரங்கு அநியாயம் சரி தான்... திரையரங்குக்கு செல்ல வேண்டிய நிலையிலா உள்ளது இன்றைய படங்கள்...! சரி... அது வேறு விஷயம்...

மனித மனங்கள் என்றோ சுருங்கி விட்டது... இன்றைக்கு பிச்சை இடுவதில் கூட பேதம் உண்டு...

திண்டுக்கல்லில் தண்ணீர் பிரச்சனைப் பற்றி அதிகம்... அதை விட குழாய்அடி சண்டை அதிகம்... அதை விட அதிகம் இந்தப் பதிவில் --> http://dharumi.blogspot.in/2014/02/719.html

நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள் ஜாலியாக...! ஹா... ஹா...//

வாங்க தனபாலன் சார்,

கருத்துரைக்கு ரெம்ப நன்றி,

நமக்கும் குழாயடி சண்டைக்கும் ரெம்ப தூரம்.. :)

நாடோடி said...

@ராஜி said...
//சினிமாக்கு போகததால் திரையரங்கு கொள்ளைத் தெரியாது. ஆனா ஹோட்டல் கொள்ளைப் பற்றி நீங்கள் சொல்லுறது நிஜம்தான்.//

வாங்க சகோ,

கருத்துரைக்கும், வருகைக்கும் ரெம்ப நன்றி..

சேக்காளி said...

//ஆட்டோ டிரைவராகத் தான் இருப்பான்//
"ன்" கொஞ்சம் நெருடலாய் படுகிறது.கூடுதல் நெருக்கத்தினால் சரளமாய் வந்து விட்டதோ?.

நாடோடி said...

@Anonymous k.gopaalan said...
//ஆட்டோவில் பயணிப்பவர்களில் பலரும் நடுத்தர வர்க்கர்த்தினர்தான். அப்படிப்பட்டவர்கள் நீங்கள் கூறும் தியேட்டர்களுக்கும் ஓட்டல்களுக்கும் போகாதவர்கள்தான். தவிர, ஆட்டோக்களில் தினமும் போவதும் மற்ற இடங்களுக்கு எப்போதாவது போவதும் ஒன்றாகிவிடுமா.//

வாங்க கோபலன்,

நான் எழுதியிருக்கும் விசயங்கள் அனைத்தும் எவரோ ஒருவருக்கு நடந்தது அல்ல, இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் அனுபவம் இருக்கும்..

தியேட்டர், ஹோட்டல், தண்ணீர், கால் டாக்சி, எல்லமே சென்னையில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தான்..

பதிவின் முதல் பத்தியிலேயே நான் பதில் சொல்லியிருக்கிறேன்..

//மற்ற மாநிலங்களில் உள்ள மீட்டர் போட்டு ஒட்டும் ஆட்டோ ஒட்டுனர்கள் யாரும் மக்களுக்கு உதவாமலா இருக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும்தான் குடும்பம் நடத்துவது கடினமாக இருக்கிறதா. இங்குபோன்று விலையில்லாப் பொருட்கள் வழங்கப்படாத மற்ற மாநிலங்களில் உள்ள ஆட்டோ ஒட்டுனர்கள் எப்படிக் குடும்பம் நடத்துகிறார்கள். எந்த்த தலை நகரத்திலும் 5/10 ரூபாய்க்கு உணவை எந்த அரசும் வழங்கவில்லையே.//

நான் இருப்பது ஹைதிராபத்தில், அதிகமாக ஆட்டோவை நம்பி தான் நான் பயணம் செய்கிறேன். எல்லோரும் மீட்டர் போட்டு தான் ஓட்டுகிறார்க்ள் என்று நம்பினால் உங்கள் அறியாமை..

//நான் சில மாநிலங்களில் இருந்து அடிக்கடி லக்கேஜுடன் சென்னை வந்தபோது அங்கும் இங்கும் உள்ள ஆட்டோ ரேட்டைப் பார்த்து இவர்கள் அடிப்பது கொள்ளை என்று உணர்ந்திருக்கிறேன். லக்கேஜுக்கும் ஆட்டோ ஓட்டுவதற்கும் என்ன தொடர்பு.

இவர்களை உயர்த்திவிட்டவர்கள் நமது நடிகர்கள்தான். நான் பல தடவை மதுரை சென்றிருக்கிறேன். குறைந்தது 40ரூபாய். கொடுத்தால் ஏறு என்று சொல்லிக்கொண்டு பகல் முழுதும் ஆட்டோ நிலையங்களில் தூங்குகிறார்கள். இவ்ர்கள் உழைப்பாளிகளா.//

நான் மேலே தியோட்டரில் இருந்து கால் டாக்சி வரை சொல்லியிருப்பவர்கள் எல்லாம் உங்களுக்கு உழைப்பாளிகளாக தெரியும் போது ஆட்டோ டிரைவர் உழைப்பாளியாக தெரியாதலில் எனக்கு ஆச்சரியம் இல்லை..

//சென்னையில் நம்ம ஆட்டோவும், திருச்சியில் சிலரும் மீட்டர் போட்டு ஆட்டோ ஓட்டினாலேயே மாதம் 12 ஆயிரம் சம்பாதிக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். இவர்கள் குடும்பம் நடத்த இது போதாதா.//

பதிவிலேயே சொல்லியிருக்கிறேன், நிரந்தரமாக சாவரி கிடைக்கும் என்றால் அவர்களும் லாபம் என்று தான் சொல்லுகிறார்கள்..

//நடுத்தர மக்களுடன் கார்ப்ப்ரேட்டுகளை ஏன் இணைக்கிறீர்கள். உங்கள் வீட்டில் நுழையும் திருடர்க்ளை கார்ப்பரேட் வீட்டில் போய் திருடு என்று சொன்னால் கேட்டுவிட்டுப் போய் விடுவார்களா.

கோபாலன்//

எனது வீட்டில் ஏழை திருடன் செய்யும் திருட்டை மட்டும் நான் பேசாமல், கார்பரேட் திருடன் செய்வதையும் பேசுகிறேன்.. அதையே எல்லோரும் பேசுங்கள் என்றும் சொல்லுகிறேன். ஆட்டோ டிரைவர்களுக்கு மட்டும் ஏன் ஓர வஞ்சனை?????????

நாடோடி said...

@Anonymous said...
//இதே பதிவு வினவு.காம் ல். எது ஒரிஜினல் ?//

நல்லது எங்க வந்தா என்ன?... படிக்க வேண்டியது தானே.. வினவில் இறுதியில் என்னுடைய வலைத்தள இணைப்பு இருக்கிறதே..

@Barari said...
//ஒவ்வொரு கேள்வியும் இதயத்தை சுடுகிறது.சிந்திக்க வைத்து விட்டீர்கள் சார்.//

வாங்க சார்,

கருத்துரைக்கு ரெம்ப நன்றி.

நாடோடி said...

@சேக்காளி said...
//ஆட்டோ டிரைவராகத் தான் இருப்பான்//
"ன்" கொஞ்சம் நெருடலாய் படுகிறது.கூடுதல் நெருக்கத்தினால் சரளமாய் வந்து விட்டதோ?.//

உண்மை தான் நண்பரே..

அறியாமல் வந்தது தான்... சரி செய்கிறேன்..

Avainayagan said...

அறுபது ரூபாய் தூரத்துக்கு 100 ரூபாய் 120 ரூபாய் கேட்பது எந்த விதத்தில் நியாயம். சும்மாவே நின்று கொண்டிருந்தாலும் இருப்பேன் மீட்டர் போட்டு ஓட்டமாட்டேன் என்று நிற்பவர்களைப் பற்றி என்ன சொல்வது. பல ஆட்டோக்களை கூப்பிட்டாலும் வர மறுக்கும் போது என்ன செய்வது.(பெரியார் பாதையிலிருந்து பேருந்து நிலையம் செல்ல 45 நிமிடங்கள் பல ஆட்டோக் காரர்களிடம் கேட்டுக்கொண்டே நின்ற கொடுமையை எங்கே போய் சொல்வது.) ஆட்டோவைக் கேட்கவே பயமாக இருக்கிற நிலை உருவாகி இருப்பதை நீங்கள் உணரவில்லையா? ஏதோ ஓரிரு நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

வவ்வால் said...

நாடோடி நண்பரே,

வழக்கமாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாதமாகத்தான் பேசுவேன்.

ஆனால் அவர்கள் கட்டண கொள்ளை செய்யவில்லை என சொல்ல முடியாதே. பெரும்பாலோர் கூடுதலாக கேட்கிறார்கள் என்பது உண்மை,சரியான கட்டணத்திலும் பலர் ஓட்டுகிறார்கள் என்பதும் உண்மை.

மேலும் ஹைதராபாத் பிரியாணி,ஆம்னி பஸ்,மல்டிபிளக்ஸ் சினிமா,கால் டாக்சி எல்லாம் காமன் மேனின் அத்யாவசிய தேவையாக கருத முடியாது,ஆட்டோ பயணம் என்பது சாமன்ய மனிதனின் தேவையாக கருதப்படுவதால் அதில் கொள்ளை என்றால் அனைவரும் கவனிக்கிறார்கள்.

மாதத்தில் சுமார் 20 நாட்களுக்கு போல் ஆட்டோவை பயன்ப்படுத்துவதால் அதுவும் வேறு வேறு இடங்களில் என்பதால் பெரும்பாலும் கூடுதலாக கேட்பதை கண்டுப்பிடித்து சொல்வேன், இதே தூரத்துக்கு 50 ரூ தான் போனவாரம் என சொன்னால் அது போனவாரம்,நான் சொல்றது இந்த வாரம் என்பார்கள் அவ்வ்!

சண்டையெல்லாம் போட்டுக்கொண்டு இருப்பதில்லை, வேற ஆட்டோ பார்த்துக்கிறேன் என சொல்லிவிட்டு ,வேற வண்டிய புடிச்சுடுவேன். எப்போவாது வேற வர ஆட்டோக்கூட இங்கே நின்னு பிடிக்க கூடாதுனு மிரட்டும் ஆட்டோ ஓட்டுனர்களை பதிலுக்கு மிரட்டிட்டு வருவதும் உண்டு :-))

நெறைய பேரு அவங்க சொன்ன தொகைக்கு ,கூப்பிட்ட ஆட்டோ வரணும்னு நினைக்கிறார்கள், அது இல்லைனா இன்னொன்னு பார்த்துக்கிறது தானே!

# தியேட்டர்களில் தண்ணீர், ஐஸ்கிரீம்,பாப்கார்ன் எல்லாம் வாங்கணும்னு அவசியமில்லை. ஆனால் விலை கூட வைக்கிறாங்களே என்றால் அதுக்கும் ஒரு விதி இருக்கு, தனிப்பட்ட வியாபார அரங்கங்களில் தனியாக விலை நிர்ணயம் செய்துக்கொள்ளலாம் என இருக்கு.

அவ்விலை எம்.ஆர்பிக்கு மேலோ அல்லது கீழாகவோ இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் எம்.ஆர்பி விட கம்மியா யாரும் விக்கிறதில்லை அவ்வ்!

சில நிறுவனங்கள் எம்.ஆர்பியை விட விலைக் கம்மியாக வியாபாரத்தினை பெருக்க விற்பதும் உண்டு.

இதுப்பற்றி வழக்கு நடந்து , விலையை "தனிப்பட்ட வியாபார அரங்குகள்" வச்சுக்கலாம்னு தீர்ப்பே வந்திருக்கு.

# குவாட்டருக்கு 5 ரூவா கூடுதலாக கொள்ளையடிக்கிறாங்க அதைக்கூட யாரும் கண்டுக்கிறதேயில்லை அவ்வ்!

”தளிர் சுரேஷ்” said...

விரிவான அலசல்! ஆபத்துக்கு உதவும் மனிதாபிமானம் உள்ளவர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்! அதே போல நான் பார்த்தவரையில் சிறுபான்மை ஆட்டோக்காரர்கள்தான் நேர்மையாக கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏதோ ஒரு நாள் ஐந்தோ பத்தோ அதிகமாக கொடுக்கலாம். அதே தினமும் தரமுடியாது இல்லையா? தியேட்டர், ஓட்டல், மால், போன்ற கொள்ளைகளும் கண்டிக்கப்பட வேண்டியதே! அங்கு நாம் வாங்குவதை புறக்கணித்தால் இதற்கு விடிவு கிடைக்கும். சிலர் கேட்கும் தொகை நியாயமானதாக இருந்தால் கொடுத்து மீட்டர் போடாமல் பயணிப்பதில் தவறில்லை! இரண்டு மடங்கு அதிகமாக கேட்பதால்தான் யோசிக்க வேண்டியுள்ளது.ஒரு சிறுகதை எழுத இந்த பதிவு கருவாகியுள்ளது. நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// வாயை மூடிவிட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்//

வாயை மூடி சாப்பிடும் வித்தையை, விதத்தை எனக்கும் விளக்குவீர்களா நாடோடி? (for joke )

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆட்டோ டிரைவர்களின் உதவிகளையும் மனிதாபிமானத்தையும் விளக்கும் விதமான பதிவு இது! ஆட்டோ ஓட்டுனர்கள், அவர்கள் தொழிலை செய்வதாகவே கொண்டாலும் கூட நிச்சயம் சேவை மனம் கொண்டவர்களே!

ஆட்டோ ஓட்டுனர்களுக்காக... தமிழ்மணம் வாக்கு 6.

ரமேஷ் கார்த்திகேயன் said...

3 கிலோ மீட்டர் பயணம் செய்வதர்கு 100 ரூபாய் வாங்குகிறார்கள்/ கேக்கிறார்கள். இதை தான் சரி என்று சொல்லுறீங்க.

இப்பொழுது உள்ள கட்டணம் குறைவாக உள்ளது என்று கட்டனத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு

மீட்டர் போடமாட்டேன் என்பது நல்லதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்

10/20 ரூபாய் அதிகமாக கொடுக்க பெரும்பாலானோர் தயங்குவது இல்லை. இரண்டு மடங்கு அதிகம் என்பது மிக அதிகம்.

நாடோடி said...

@Viya Pathy said...
//அறுபது ரூபாய் தூரத்துக்கு 100 ரூபாய் 120 ரூபாய் கேட்பது எந்த விதத்தில் நியாயம். சும்மாவே நின்று கொண்டிருந்தாலும் இருப்பேன் மீட்டர் போட்டு ஓட்டமாட்டேன் என்று நிற்பவர்களைப் பற்றி என்ன சொல்வது. பல ஆட்டோக்களை கூப்பிட்டாலும் வர மறுக்கும் போது என்ன செய்வது.(பெரியார் பாதையிலிருந்து பேருந்து நிலையம் செல்ல 45 நிமிடங்கள் பல ஆட்டோக் காரர்களிடம் கேட்டுக்கொண்டே நின்ற கொடுமையை எங்கே போய் சொல்வது.) ஆட்டோவைக் கேட்கவே பயமாக இருக்கிற நிலை உருவாகி இருப்பதை நீங்கள் உணரவில்லையா? ஏதோ ஓரிரு நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.//

வாங்க வியாபதி,

நான் முதல் பத்தியிலேயே சொல்லிவிட்டேன். என்னுடைய எண்ணம் என்ன என்பதை, ஒரு கண் பார்வையில் குறை சொல்லும் நாம், இன்னொரு கண்ணை பற்றி கவலை படுவதே இல்லை என்பதே என்னுடைய இந்த பதிவு. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

நாடோடி said...

@வவ்வால் said...
//நாடோடி நண்பரே,

வழக்கமாக ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாதமாகத்தான் பேசுவேன்.

ஆனால் அவர்கள் கட்டண கொள்ளை செய்யவில்லை என சொல்ல முடியாதே. பெரும்பாலோர் கூடுதலாக கேட்கிறார்கள் என்பது உண்மை,சரியான கட்டணத்திலும் பலர் ஓட்டுகிறார்கள் என்பதும் உண்மை.//

வாங்க வவ்வால் நண்பரே,

ஆட்டோ கட்டணம் பற்றி என்னுடைய பார்வையை நான் முதல் பத்தியிலேயே சொல்லியிருக்கிறேன். எல்லோரும் நல்லவர்கள் என்று நானும் சான்றிதல் கொடுக்க மாட்டேன்.


//மேலும் ஹைதராபாத் பிரியாணி,ஆம்னி பஸ்,மல்டிபிளக்ஸ் சினிமா,கால் டாக்சி எல்லாம் காமன் மேனின் அத்யாவசிய தேவையாக கருத முடியாது,ஆட்டோ பயணம் என்பது சாமன்ய மனிதனின் தேவையாக கருதப்படுவதால் அதில் கொள்ளை என்றால் அனைவரும் கவனிக்கிறார்கள்.///


நண்பருக்கு தெரியாதது ஒன்றும் இல்லை, ஆம்னிபஸ் பயன் படுத்துபவர்களும், பிரியாணி சாப்பிடுபவர்களும், தியோட்டருக்கு போகின்றவர்களும் காமன் மேன் இல்லை என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இந்த பதிவு முழுக்க முழுக்க என்னுடைய அனுபவ பதிவு தான். பணியின் நிமித்தம் பல ஊர்களுக்கு செல்லும் காமன் மேன்களுக்கும் கண்டிப்பாக நான் சொல்லுவதில் ஏதாவ‌து ஒன்றிலாவது அனுபவம் இருக்கும்.

//மாதத்தில் சுமார் 20 நாட்களுக்கு போல் ஆட்டோவை பயன்ப்படுத்துவதால் அதுவும் வேறு வேறு இடங்களில் என்பதால் பெரும்பாலும் கூடுதலாக கேட்பதை கண்டுப்பிடித்து சொல்வேன், இதே தூரத்துக்கு 50 ரூ தான் போனவாரம் என சொன்னால் அது போனவாரம்,நான் சொல்றது இந்த வாரம் என்பார்கள் அவ்வ்!//

நானும் மாததிற்கு கணிசமான தொகையை ஆட்டோவிற்கு செலவு செய்கிறேன். காரணம் நான் ஹைதிராபாத்திற்கு என்னுடைய டூவீலரை கொண்டு செல்லவில்லை, மார்கெட்டுக்கு போக வேண்டுமானாலும் ஆட்டோ தான் பயன்படுத்துக்கிறேன். நீங்கள் சொல்வது போல், சில நாட்கள் அதிகமாக கொடுப்பேன், அதே இடத்திற்கு சில நாட்கள் குறைவாகவும் கொடுப்பேன், ஆட்டோக்களின் வருகையை பொறுத்து..


//சண்டையெல்லாம் போட்டுக்கொண்டு இருப்பதில்லை, வேற ஆட்டோ பார்த்துக்கிறேன் என சொல்லிவிட்டு ,வேற வண்டிய புடிச்சுடுவேன். எப்போவாது வேற வர ஆட்டோக்கூட இங்கே நின்னு பிடிக்க கூடாதுனு மிரட்டும் ஆட்டோ ஓட்டுனர்களை பதிலுக்கு மிரட்டிட்டு வருவதும் உண்டு :-))//

இதேப் போல் எனக்கும் அனுபவம் உண்டு. ரெம்ப பேசினால் நானும் பேசுவேன்.. ;)

//நெறைய பேரு அவங்க சொன்ன தொகைக்கு ,கூப்பிட்ட ஆட்டோ வரணும்னு நினைக்கிறார்கள், அது இல்லைனா இன்னொன்னு பார்த்துக்கிறது தானே!//

இது தான் உண்மை நண்பரே.. இந்த மனநிலை எல்லா இடங்களிலும் இருப்பது இல்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு..

//# தியேட்டர்களில் தண்ணீர், ஐஸ்கிரீம்,பாப்கார்ன் எல்லாம் வாங்கணும்னு அவசியமில்லை. ஆனால் விலை கூட வைக்கிறாங்களே என்றால் அதுக்கும் ஒரு விதி இருக்கு, தனிப்பட்ட வியாபார அரங்கங்களில் தனியாக விலை நிர்ணயம் செய்துக்கொள்ளலாம் என இருக்கு.

அவ்விலை எம்.ஆர்பிக்கு மேலோ அல்லது கீழாகவோ இருக்கலாம், ஆனால் பெரும்பாலும் எம்.ஆர்பி விட கம்மியா யாரும் விக்கிறதில்லை அவ்வ்!

சில நிறுவனங்கள் எம்.ஆர்பியை விட விலைக் கம்மியாக வியாபாரத்தினை பெருக்க விற்பதும் உண்டு.

இதுப்பற்றி வழக்கு நடந்து , விலையை "தனிப்பட்ட வியாபார அரங்குகள்" வச்சுக்கலாம்னு தீர்ப்பே வந்திருக்கு.//

நீங்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன். அரசு எல்லாம் சாதரன மக்களை விட்டு எப்போதோ விலகி சென்றுவிட்டன. சட்டங்கள் எல்லாம் கார்பரேட்டும் ஒன்றாகவும், சாதரண மனிதனுக்கு ஒன்றாகவும் இருப்பதில் வியப்பேதும் இல்லை..

//# குவாட்டருக்கு 5 ரூவா கூடுதலாக கொள்ளையடிக்கிறாங்க அதைக்கூட யாரும் கண்டுக்கிறதேயில்லை அவ்வ்!//

உண்மைதான் நண்பரே,5 ரூபாய் மட்டும் அல்ல, பெரும்பாலன கடைகளில் கூட்டமாக இருக்கும் போது, நூறு ரூபாய் கொடுத்தால் சில்லரை என்பது திரும்ப‌ கொடுப்பதே பெரிய விசயம்..:)

நாடோடி said...

@s suresh said...
//விரிவான அலசல்! ஆபத்துக்கு உதவும் மனிதாபிமானம் உள்ளவர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்! அதே போல நான் பார்த்தவரையில் சிறுபான்மை ஆட்டோக்காரர்கள்தான் நேர்மையாக கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏதோ ஒரு நாள் ஐந்தோ பத்தோ அதிகமாக கொடுக்கலாம். அதே தினமும் தரமுடியாது இல்லையா? தியேட்டர், ஓட்டல், மால், போன்ற கொள்ளைகளும் கண்டிக்கப்பட வேண்டியதே! அங்கு நாம் வாங்குவதை புறக்கணித்தால் இதற்கு விடிவு கிடைக்கும். சிலர் கேட்கும் தொகை நியாயமானதாக இருந்தால் கொடுத்து மீட்டர் போடாமல் பயணிப்பதில் தவறில்லை! இரண்டு மடங்கு அதிகமாக கேட்பதால்தான் யோசிக்க வேண்டியுள்ளது.ஒரு சிறுகதை எழுத இந்த பதிவு கருவாகியுள்ளது. நன்றி!//

வாங்க நண்பரே,

அதிகமாக் கேட்கும் நபர்களை புறந்தள்ளுவதே சிறந்ததாக இருக்கும்.. கதையை எழுதிவிட்டு எனக்கும் தகவல் சொல்லுங்க..

நாடோடி said...

@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
// வாயை மூடிவிட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள்//

வாயை மூடி சாப்பிடும் வித்தையை, விதத்தை எனக்கும் விளக்குவீர்களா நாடோடி? (for joke )////

வாங்க நிஜாம் நண்பரே,

உங்க கண்ணுக்கு தான் எல்லாம் வந்து மாட்டுது. நானும் திரும்ப திரும்ப படித்தாலும் இதெல்லாம் கண்ணுல மாட்ட மாட்டேங்குது.. ஹிஹிஹி..


@அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
//ஆட்டோ டிரைவர்களின் உதவிகளையும் மனிதாபிமானத்தையும் விளக்கும் விதமான பதிவு இது! ஆட்டோ ஓட்டுனர்கள், அவர்கள் தொழிலை செய்வதாகவே கொண்டாலும் கூட நிச்சயம் சேவை மனம் கொண்டவர்களே!

ஆட்டோ ஓட்டுனர்களுக்காக... தமிழ்மணம் வாக்கு 6.//

கருத்துரைக்கும், வாழ்த்துக்கும் தமிழ் மண ஓட்டுக்கும் ரெம்ப நன்றி, அப்புறம் பதிவு இன்னும் காணல... சீக்கிரம் போடுங்க.. :)))

நாடோடி said...

@ரமேஷ் கார்த்திகேயன் said...
//3 கிலோ மீட்டர் பயணம் செய்வதர்கு 100 ரூபாய் வாங்குகிறார்கள்/ கேக்கிறார்கள். இதை தான் சரி என்று சொல்லுறீங்க.

இப்பொழுது உள்ள கட்டணம் குறைவாக உள்ளது என்று கட்டனத்தை உயர்த்துவதை விட்டுவிட்டு

மீட்டர் போடமாட்டேன் என்பது நல்லதா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்

10/20 ரூபாய் அதிகமாக கொடுக்க பெரும்பாலானோர் தயங்குவது இல்லை. இரண்டு மடங்கு அதிகம் என்பது மிக அதிகம்.//

வாங்க நண்பரே,

ஆட்டோக் கட்டணம் பற்றி என்னுடைய பார்வையை, முதல் பத்தியிலேயே சொல்லியிருக்கிறேன். ஆட்டோ கட்டணம் மட்டும் பேசும் தாங்கள், பதிவில் சொல்லியிருக்கும் வேறு எதை பற்றியும் பேசவில்லையே.. ஏன் நண்பரே... இது தான் என்னுடைய குற்றச்சாட்டு..

k.gopaalan said...

ZEE TV யில் நேற்றைய செய்தி. கோயம்புத்தூரில் மக்கள் ஆட்டோ ஒட்டுனர் இருவரை பல ஆட்டோ ஒட்டுனர்கள் தெருவில் ஓட ஓட விட்டு அடித்தனர். எங்கடா நம்ம சாயம் வெளுத்துப் போயிடுமோ என்ற பயம்தான் காரணம் என்று நினைக்கிறேன். இதற்கு உங்கள் கருத்து ?

எவண்டா யோக்கியன் என்று ஒவ்வொருவரும் கேட்கத் தொடங்கினால் எங்கும் அடிதடிதான்.

கோபாலன்

நாடோடி said...

@Anonymous k.gopaalan said...
//ZEE TV யில் நேற்றைய செய்தி. கோயம்புத்தூரில் மக்கள் ஆட்டோ ஒட்டுனர் இருவரை பல ஆட்டோ ஒட்டுனர்கள் தெருவில் ஓட ஓட விட்டு அடித்தனர். எங்கடா நம்ம சாயம் வெளுத்துப் போயிடுமோ என்ற பயம்தான் காரணம் என்று நினைக்கிறேன். இதற்கு உங்கள் கருத்து ?

எவண்டா யோக்கியன் என்று ஒவ்வொருவரும் கேட்கத் தொடங்கினால் எங்கும் அடிதடிதான்.

கோபாலன்//

வன்முறையை எவர் செய்தாலும் கண்டிக்க கூடியதே. அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. அதை பற்றிய முழுமையாக விசயம் படிக்க இந்த லிங்கில் படிக்கவும்....

http://www.maalaimalar.com/2014/02/17132659/auto-fees-problem-private-auto.html

இது நேற்று நடந்த பிரச்சனையில்லை, இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்தது..

குழுவாக ஒரு அமைப்பு இயங்கும் போது அதற்க்கான வரவேற்பு அதிகமாக இருக்கும். அவர்களுக்கு சாவாரியும் அதிகமாக கிடைக்கும். அதில் இருக்க்கும் லாப நஷ்டங்களை பகிரிந்து கொள்ள முடியும். ஆனால் தனி மனிதனுக்கு எந்த அளவு வரவேற்பு இருக்கும், அவனுக்கு எத்தனை சாவரிகள் கிடைக்கும், அவனுக்கு எப்படி கட்டுபடியாகும் என்பது கேள்விக்குறியே!!!

கீழே ஒரு சின்ன விளக்கம்,

1)ஒருவர் தனது ஆட்டோவை முழுப்பணமும் கையில் இருந்து போட்டு வாங்கியிருக்கிறார்

2)ஆனால் ஒருவர் தன்னிடம் இருந்த ஐம்பாதாயிரம் மட்டும் கொடுத்து மீதி பணத்தை தவணையில் கட்டுகிறார்

3)இன்னொருவர் தனது உறவினரோ அல்லது ஒரு அமைப்போ வாங்கி கொடுத்த ஆட்டோவை வைத்து ஓட்டுகிறார்.

இவர்கள் மூன்று பேருக்கும் கட்டணம் எப்படி இருக்க வேண்டும், நீங்களே சிந்தியுங்கள்.. தயவு செய்து ஆட்டோ காரராகவே இருந்து மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்..

1)முதலானவருக்கு தவணை பற்றிய கவலை இல்லை, ஆட்டோ ஓட்டுவதன் மூலம் வரும் வருமானம், அவருடைய குடும்ப செலவு, முதலிக்கான லாபம் ம‌ட்டும் இருந்தால் போதும்.

2)இரண்டாவது ஓட்டுனருக்கு கிடைக்கும் வருவாயில் மாதம்தோறும் கட்ட வேண்டிய‌ தவணை, மற்றும் குடும்பத்த்துக்கான செலவு மற்றும் முதலுக்கான லாபம் இவ்வளவும் பார்க்க வேண்டும்..

3)மூன்றாவது ஓட்டுனருக்கு கிடைக்கும் வருவாயில் வீட்டு செலவு மட்டும் பார்த்தால் போது. முதலை பற்றிய கவ‌லையில்லை, தவணை பற்றியும் கவலையில்லை... இந்த மூன்று பேருக்கும் எப்படி கட்டணம் நிர்ணயம் செய்வது??????????????

ஆட்டோ கட்டண பிரச்சனையில் அரசின் தலையீடு ரெம்ப அவசியம், அவைகளை முறைப்படுத்த வேண்டியது அரசு ம‌ட்டும் தான். அது நடக்காத வரையில் இது போன்ற பிரச்சனைகள் நடக்க தான் செய்யும்..

எந்த் பிரச்சனையையும் எனக்கும் சும்மா மேலோட்டமாக மட்டும் பார்க்கவோ, படிக்கவோ கூடாது என்பது தான் அதனால் தான் இந்த பெரிய கருத்துரை....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//கருத்துரைக்கும், வாழ்த்துக்கும் தமிழ் மண ஓட்டுக்கும் ரெம்ப நன்றி, அப்புறம் பதிவு இன்னும் காணல... சீக்கிரம் போடுங்க.. :)))//

புதிய பதிவு இறை நாட்டப்படி விரைவில்...
வரும்வரை காத்திருக்கவும்.
நன்றி!

Anonymous said...

//2)இரண்டாவது ஓட்டுனருக்கு கிடைக்கும் வருவாயில் மாதம்தோறும் கட்ட வேண்டிய‌ தவணை, மற்றும் குடும்பத்த்துக்கான செலவு மற்றும் முதலுக்கான லாபம் இவ்வளவும் பார்க்க வேண்டும்..
//


நான் லோன் போட்டு ஒரு வீடு வாங்கிட்டு, "எனக்கு மாத தவணை கட்ட வேண்டியிருக்கு, சம்பளத்த ஏத்தி கொடு" ன்னு முதலாளி கிட்ட கேக்க முடியுமா?

நாடோடி said...

//நான் லோன் போட்டு ஒரு வீடு வாங்கிட்டு, "எனக்கு மாத தவணை கட்ட வேண்டியிருக்கு, சம்பளத்த ஏத்தி கொடு" ன்னு முதலாளி கிட்ட கேக்க முடியுமா?//

@வாங்க அனானி,

உங்க அறிவை நினச்ச நான் விய‌க்கேன்!!!

ஒரு தொழில் பண்ணும் போது எதெல்லாம் முதலீடாக வைத்து, அந்த தொழிலின் லாப நஷ்டங்களை கண்க்கிடுவாங்க என்பதை தெரிந்து கொண்டு வாருங்கள், அப்புறம் விவாதம் பண்ணுவோம்.//

Related Posts with Thumbnails