Thursday, March 13, 2014

என்னைப் பார்த்து ஏன்டா அந்தக் கேள்வியைக் கேட்டே!!!

சிலருக்கு ஊடகங்களில் பிரபலாமனவர்களை எங்காவது பார்த்து விட்டால் போதும் அவர்களுக்குள் ஓர் இனம் புரியாத ஆனந்தம் அவர்களுக்கும் தெரியாமலே வந்து விடுகிறது. நாம் ரசிப்பதையோ அல்லது அவர்களிடம் உரையாடுவதையோ, அவர்களுடன் போட்டோ பிடித்துக் கொள்வதையோ அவர்கள் விரும்புகிறார்களா என்று கூட நாம் சிந்திப்பது இல்லை. எப்படியாவது அவர்களிடம் பேசி விட வேண்டும் என்பது மட்டும் தான் சிலரின் எண்ணமாக இருக்கிறது.திரையுலகில் உள்ள நடிகர்களாக இருந்தால் இன்னும் சொல்லவே வேண்டாம்.

எனது அலுவலகத்திலும் ஒருவர் இருக்கிறார். அவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு என்ற இடம் தான் சொந்த ஊர். படங்களைப் பற்றியும், பட நடிகர்களையும் பற்றித்தான் அதிகமாகப் பேசுவார். அவருடைய சொந்த ஊரிலும் வருடத்திற்கு இரண்டு முறையாவது படப்பிடிப்பு நடக்கும். அப்போது படப்பிடிப்புக்கு வரும் நடிகர்களை மொபைலில் போட்டோ பிடித்து வந்து எங்களிடம் காண்பித்துப் பெருமைப்பட்டுக் கொள்வார். அதோடு மட்டும் அல்லாமல் அந்த நடிகரிடம் பேசினேன், இந்த நடிகரிடம் பேசினேன், அவருக்குப் பேசவே தெரியவில்லை எப்படித்தான் படத்தில் உள்ள வசனங்கள் எல்லாம் பேசுறாங்களோ என்று விமர்சனம் செய்வார்.



இப்படி இவருடைய நடிகர் புராணங்களை நாங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு நாள் எங்கள் அலுவலகத்திற்குப் புதிதாகப் பணிக்கு பலரை எடுத்திருந்தார்கள். அதில் ஒருவர் சென்னையில் பணியாற்றியவர். அவர் சென்னையில் பணியாற்றும் போது அவருடைய அறை நண்பராக இருந்தவர் சினிமா துறையில் வேலை செய்பவர். அவர் மூலமாக அவருக்கு நடிகர் சரவணன்(பருத்தி வீரன்) அவர்களில் மொபைல் எண் கிடைத்திருக்கிறது. அதை அவருடைய மொபைலில் பதிவு செய்து வைத்திருக்கிறார். எங்கள் அலுவலகத்தில் வந்த சில நாட்களிலேயே எங்கள் கூட்டத்தில் ஒருவராக அவரும் ஐக்கியமாகி விட்டர்.

ஒரு நாள் அலுவலகத்தில் தேநீர் இடைவேளையின் போது நடிகர்களைப் பற்றிப் பேசும் நண்பர் புதிதாக வந்த நண்பரிடம் நான் அந்த நடிகரிடம் பேசியிருக்கிறேன், இந்த நடிகரிடம் பேசியிருக்கிறேன் என்று சொல்ல, அவர் உடனே தன்னிடம் இருந்த மொபைலில் உள்ள நடிகர் சரவணன் அவர்களின் எண்ணை கொடுத்து பேச சொன்னர். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை, நாங்களும் கூடச் சேர்ந்து எங்கள் முன்னால் நீங்க பேசுங்க என்று கூவ, வேறு வழியில்லாமல் சென்னை நண்பர் கொடுத்த எண்ணை மொபைலில் அழுத்தினார்.

லவ்டு ஸ்பீக்கர் மட்டும் தான் போட்டு பேச வேண்டும் என்று சொல்லி அவரைச் சூழ்ந்து நின்றோம். எப்படியும் இவர் சொதப்பல் தான் செய்ய போகிறார் என்று வேடிக்கைப் பார்த்து நின்றோம்.

நண்பரோ மொபைல் போனில் அழைத்து நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தார். நலன் விசாரிப்புகள் இருவரும் மாறி,மாறி பேசிக் கொண்டார்கள். உங்க நடிப்பு எனக்கு ரெம்பப் பிடிக்கும் என்று நண்பர் சொல்ல பக்கத்தில் இருந்த எங்களுக்குச் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. மொபைலில் ஸ்பீக்கர் போட்டு பேசிக் கொண்டிருந்ததால் நாங்கள் சிரித்தது சரவணன் அவர்களுக்கும் கேட்டிருக்க வேண்டும். சரவணன் அவர்களும் "அலுவலகத்தில் வேலையைத் தவிர எல்லாம் பாக்குறீங்க போல" என்று சிரித்துக் கொண்டே நன்றி சொன்னார். இப்ப என்ன படம் நடிச்சிட்டு இருக்கீங்கனு என்று நண்பர் கேட்க, சரவணன் அவர்களும் பேர் வைக்காத இரண்டு மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். இப்படி ஆரம்பம் எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் நண்பர் சொன்ன விசயத்தினால் நடிகர் சரவணன் மட்டும் அல்ல சுற்றி நின்ற நாங்களுமே திகைத்து நின்றோம்.

ஒரு நொடி நேர அமைதிக்குப் பின், நான் உட்பட அனைவரும் "ஹா ஹா" "ஹேக்ஹே" "ஹேஹே" என்ற சிரிப்பொலி.

மறுமுனையில் இருந்து "டொயிங்" "டொயிங்" என்ற சத்தம் வந்து நண்பரின் மொபைல் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. நண்பரோ அவர் சொன்ன விசயத்தினால் தான் நடிகர் சரவணன் அவர்கள் கோபத்தில் மொபைல் இணைப்பை துண்டிப்பு செய்தார் என்று நினைக்காமல், சுற்றி நின்று நாங்கள் சத்தமாகச் சிரித்ததால் தான் அவர் கோபப்பட்டு துண்டித்துவிட்டார் என்று எங்களை முறைக்க‌ ஆரம்பித்து விட்டர். சுற்றி நின்ற நாங்களோ இன்னும் சத்தமாகக் கை கொட்டி சிரிக்க ஆரம்பித்து விட்டோம். நண்பரோ இன்னும் வெறியுடன் எங்களைப் பார்த்தார்.

நடிகர் சரவணன் அவர்களிடம் நண்பர் சொன்ன விசயம் இது தான். சார் நீங்க நடிகை ரஞ்சிதா அவர்களுடன் நடித்த படம் சமீபத்தில் தான் டிவியில் பார்த்தேன் ரெம்ப நல்லாருந்தது என்பது தான். நண்பர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் அவர் சொன்ன சூழல் தான் எங்களைச் சிரிப்பதற்கும், நடிகர் சரவணன் அவர்களைக் கோபப்படுவதற்கும் வைத்தது. நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா அவர்களின் வீடியோ பரபரப்பாகப் பேசப்பட்ட நேரத்தில் தான் நண்பர் இப்படி ஒரு விசயத்தை நடிகர் சரவணன் அவர்களிடம் சொன்னது.

மறுமுனையில் இருந்த நடிகர் சரவணன் அவர்களின் நிலைமை என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கவுண்டமணி அவர்கள் கரகாட்டகாரன் படத்தில் என்னைப் பார்த்து ஏன்டா அந்தக் கேள்வியைக் கேட்ட? என்று செந்திலை உதைத்துக் கொண்டே இருப்பார். அதுபோல் சரவணன் அவர்களும் "என்ன பார்த்து அவன் எப்படி இப்படிச் சொல்லலாம்?? என்று லைட் பாய்ஸ் யாரையாவது உதைத்திருக்கக் கூடும். அப்படியே மொபைல் போனை தூக்கி போட்டு உடைத்திருப்பார். இல்லையென்றால் குறைந்த பட்சம் சிம்கார்டையாவது தலையைச் சுற்றி தூக்கி எறிந்திருப்பார்.

நம்ம நண்பரை குறை ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை, காரணம் நடிகர் அவர்களுடன் பேசுவதற்கு ஒரு மாததிற்கு முன்னால் தான் கே டிவியில் சரவணன் மற்றும் ரஞ்சிதா அவர்கள் நடித்த "பொண்டாட்டி ராஜ்யம்" படத்தைப் பார்த்திருக்கிறார். நண்பருக்கு சரவணன் அவர்களிடம் பேசும் போதும் இந்தப் பொண்டாட்டி ராஜ்யம் படம் மட்டும் தான் ஞாபகம் இருந்திருக்கிறது, ஆனால் சூழல் சுற்றி இருந்தவர்களுக்கும், சரவணன் அவர்களுக்கும் நித்தி மற்றும் ரஞ்சிதா வீடியோவை ஞாபகப் படுத்திவிட்டது.

எல்லாவற்றையும் விட நண்பர் ஒரு மணி நேரம் கழித்து சொன்னது தான் ஹைலைட்.. சாரி கேட்கலாம் என்று போன் பண்ணி பார்த்தேன் மொபைல் சுவிட் ஆப் என்று வருகிறது என்பது தான்.

இன்னுமா அந்த மெபைல் எண்ணை அவர் வைத்திருப்பார், எப்போதே விட்டு எறிந்திருப்பார் என்றேன். அப்படினா அவரோட புது எண்ணை எவரிடமாவது கேட்டு வாங்க வேண்டும் என்று என்னைப் பார்த்து சிரித்தார்.

எக்ஸ் கீயூஸ் மீ !! உங்களில் யாரிடமாவது அவ‌ரோட புது மெபைல் எண் இருந்தா என்னிடம் சொல்லுங்களேன்.. என்னோட நண்பர் புதுக் கான்செப்ட் உடன் அவரிடம் பேச காத்திருக்கிறார்..

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இத்தனை கலாட்டா செய்தும் அவரோட புது எண்ணை வாங்கியேத் தீரணுமா...? ம்... பெற்றவர்களைத் தவிர பலருக்கு பலரின் மீது தீவிர பக்தி...!

"சித்தப்பு" நிலை - சிரமமான நிலையாக இருந்திருக்கும்...!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா உங்கள் நண்பர், நடிகர் சரவணனை விட மாட்டார் போலிருக்கிறதே

நாடோடி said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//இத்தனை கலாட்டா செய்தும் அவரோட புது எண்ணை வாங்கியேத் தீரணுமா...? ம்... பெற்றவர்களைத் தவிர பலருக்கு பலரின் மீது தீவிர பக்தி...!

"சித்தப்பு" நிலை - சிரமமான நிலையாக இருந்திருக்கும்...!//

வாங்க தனபாலன் சார்,

உண்மைதான்.. வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி..

@கரந்தை ஜெயக்குமார் said...
//ஆகா உங்கள் நண்பர், நடிகர் சரவணனை விட மாட்டார் போலிருக்கிறதே//

வாங்க ஐயா,

அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.. ஹிஹி..

Kasthuri Rengan said...

நன்றாக சிரிக்க வைத்த பதிவு..
நன்றி

r.v.saravanan said...

நன்றாக சிரித்தேன் ஸ்டீபன்

Related Posts with Thumbnails