Monday, March 17, 2014

தமிழ் சினிமா_டாஸ்மாக்கும், குழந்தைகள் காதலும்!!!

இன்றைய தமிழ் திரைப்பட உலகிற்குப் பல புதிய இளம் இயக்குனர்களின் வருகை ஆரோக்கியமானதாகத் தான் பார்க்க படுகிறது. கடந்த சில வருடங்களில் சமூகம் சார்ந்த படங்கள் அதிகமாக வந்திருப்பதும் பாராட்டுக்குரியதே. ஆனாலும் சில திரைப்படங்களில் சில காட்சிகள் வலுக்கட்டாயமாக‌த் திணிக்கப் படுகின்றதா, அல்லது கதைக்கு அவசியமாக‌ வைக்கிறார்களா என்பது மட்டும் புரியவில்லை. அவைகளில் முதன்மையாய் இருப்பது டாஸ்மாக் கலாச்சாரம், இன்னொன்று குழந்தைகளில் காதல்.

இப்போது வெளிவரும் திரைப்படங்களில் டாஸ்மாக் பார்களின் முன்பு நின்று கொண்டு குத்துப்பாடல் பாடி ஆடுவதோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு டாஸ்மாக் பார்களில் வட்டமாக அமர்ந்து கும்மாளம் அடிப்பதோ இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். காதல் தோற்றால் மது அருந்திக் கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டின் முன் நின்றுகொண்டு சண்டையிட வேண்டும் அல்லது ஒட்டு மொத்தப் பெண்களையும் திட்டிப் பாட்டுப் பாடி ஆட வேண்டும் என்ற அதர பழசு காட்சியைத் தாண்டி எவராலும் இன்றைக்கும் யோசிக்க முடியவில்லையா?. பழைய இயக்குனர்கள் தான் அதைத் தாண்டி யோசிக்கவில்லை என்று வைத்தாலும் இன்றைக்குப் புதிதாக வரும் இளம் இயக்குனர்களும் அதற்கு மேல் தான் இருக்கிறார்கள்.

கல்லூரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளிவரும் திரைப்படங்களில் கல்லூரி மாணவர்களாக‌ நடிக்கும் நடிகர்களின் கைகளிலும் மதுப்பாட்டில் கொடுக்காமல் இயக்குனர்களால் அந்தத் திரைப்படங்களை எடுக்க முடியவில்லை. திரைப்படங்களில் காதலிக்கும் நாய‌கிகள் தன்னுடைய காதலன் மதுக் குடிப்பவன் என்று தெரிந்தால், தன்னுடைய காதலன் பிறந்த நாளுக்கு மதுப்பாட்டில்களைப் பரிசாக அளிப்பதாகக் காட்சி அமைக்கும் இயக்குனர்களிடம் கேட்பது ஒன்று தான். நீங்கள் எல்லாம் நம் தமிழ் நாட்டில் தான் இருக்கிறீர்களா?. இன்றைய கல்லூரி பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் எல்லாம் நீங்கள் ஊடகங்களில் பார்ப்பது இல்லையா?. அவர்களின் உண்ணாவிரதங்கள் உங்கள் இதயங்களை நெருட வில்லையா?. இத்தகைய‌ காட்சிகளைத் திரைப்படங்களில் வைப்பது, மது என்ற அரக்கனுக்கு எதிராகப் போராடும் பெண்களைக் கொச்சை படுத்துவதாக உங்கள் மனசாட்சிக்கு தெரியவில்லையா?. எத்தனையோ கல்லூரி மாண‌வர்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அரசு மூட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்துவதும், உண்ணாவிரதம் இருப்பதும் உங்களுக்கு தெரியாதா?.

விளையாட்டை மையமாகக் கொண்டு வரும் படங்களில் கூட உங்களால் நடிகர்களின் கைகளில் மதுப்பாட்டில் கொடுக்காமல் எடுக்க முடியவில்லை. விளையாட்டில் ஒரு மாணவன் சாதிக்க வேண்டும் என்றால் முதலில் அவன் கையில் தொடக் கூடாத ஒன்று போதைப் பொருட்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த இயக்குனர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே. வலுக்கட்டாயமாகத் திரைப்படங்களில் திணிக்கப்படும் மொக்கை காமெடிகள் மற்றும் பாடல் காட்சிகள் அமைக்க‌ வேண்டுமானால் இத்த‌கைய‌ டாஸ்மாக் க‌டை கலாச்சாரம் தான் உதவும். அதை தாண்டி இவர்களால் யோசிக்க முடியாததற்கு காரணம், இயக்குனர்களின் கற்பனை வறட்சி என்று சொல்வதைத் தவிர வேறு என்ன?.

இன்றைக்குத் தமிழ் நாட்டில் எவருமே குடிக்கவில்லையா?. அல்லது டாஸ்மாக்கில் மதுப்பானங்களே விற்பனையாகவில்லையா என்று நீங்கள் கேள்விகள் கேட்கலாம். உண்மைதான், ஊருக்கு ஊர் பள்ளிக்கூடம் இருக்கின்றதோ இல்லையோ!, ஆனால் டாஸ்மாக் கடைகள் இல்லாத ஊரே இல்லை என்று சொல்லுமளவிற்குத் தமிழக அரசு எல்லா இடங்களிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறது. ஆனால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, இப்போது மக்களிடம் இந்த டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான‌ போராட்டங்கள் அதிகரித்திருக்கின்றது. இந்தக் கடைகளுக்கு எதிராக, அந்தக் கல்லூரி மாண‌வர்கள் போராட்டம், இந்தக் கல்லூரி மாணிவிகள் உண்ணாவிரதம், சென்னையில் சமூக ஆர்வலர்களின் ஆர்பாட்டம் மற்றும் கிராமங்களில் பெண்கள் அமைப்பினர் சாலை மறியல் என்ற செய்திகளைத் தான் தினந்தோறும் ஊடங்களிலும் நாளிதழ்களிலும் பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த சூழலில் இருக்கும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளைப் பிரதிபலிப்பதில் சினிமா ஊடகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இன்றைய‌ சினிமா ஊடகம், டாஸ்மாக் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் வேலையைச் செய்கின்றனவா? அல்லது அதற்கு எதிராக மக்கள் நடத்தும் போரட்டங்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்கின்றனவா?. என்று பார்த்தால் இரண்டாவது வேலையைச் செய்வதாகத் தான் தோன்றுகிறது. போதைப்பொருட்களுக்கு அடிமையாகாத‌ அடுத்த‌ தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அதனால் இப்போது வரும் இளம் இயக்குனர்களாவது டாஸ்மாக் கலச்சாரத்தைத் தவிர வேறு பாதையில் பய‌ணித்தால் நன்று.

சிறு வயதில் பள்ளி வாழ்க்கையை அனைவரும் கடந்து தான் வந்திருப்போம். ஓரிரு வருடங்கள் ஒரு பள்ளியில் படித்துவிட்டு வீட்டின் சூழலால் அந்தப் பள்ளியில் இருந்து மாற்றலாகி வேறு ஒரு பள்ளியில் போய்ச் சேரும் முதல் நாள், அறிமுகம் இல்லாத நண்பர்களில் எவன் ஒருவன் நமக்கு முதலில் ஒரு குச்சியோ, அல்லது மாங்கா வடுவோ தருகிறானோ அவனைத் தான் நம்முடைய மனம் காலம் முழுவதும் மறக்காமல் இணைபிரியா நண்பனாக வைத்திருக்கும், அவனுடன் தான் தோளில் மீது கையைப் போட்டுப் பள்ளியில் நடைப் போடுவோம். அதைப்போல் தான் பெண் தோழிகளிடமும், எழுதுவதற்குப் பென்சில் இல்லை என்று வகுப்பாசிரியரால் எழுப்பி விடப்படும் போது, சினேகப் பார்வையால் எந்தப் பெண் நமக்குப் பென்சில் தந்து உதவுகிறாரோ அவர் மீதும் நம்மையறியாமல் ஒர் இனம் புரியாத ஈர்ப்பு வந்து விடுகிறது.

சிறுவர்களுக்கு தன்னுடன் படிக்கும் அல்லது விளையாடும் ஒருவரின் மீது வரும் ஈர்ப்பு, அந்த ஒருவர் ஆண்களாக் இருந்தால் அது நட்பு என்றும், பெண்ணாக இருந்தால் காதல் என்றும் இன்றைய சினிமாக்கள் சித்தரிப்பது ஆபாசத்தின் உச்சம்.

இப்போது வரும் சினிமாக்களில் நாயகனின் பால்ய கால‌ வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறேன் என்று இயக்குனர்களின் மனதில் உள்ள‌ வக்கிர எண்ணங்களை எடுத்து தொலைக்கிறார்கள். சிறு வயது நாயகன் என்றால் அவனுக்கு ஒரு சிறு வயது காதலியும் காட்டப்படுகிறாள். அந்த வயதிலேயே அவளுக்குப் பரிசுகள் தருவதில் இருந்து, அந்தக் காதலிக்காக நண்பர்களுடன் சண்டை போடுவது வரை காட்சி படுத்துகிறார்கள். இதைவிடக் கொடுமை அந்தச் சிறு வயது காதலிக்கு முத்தம் கொடுப்பது என்று வைக்கும் காட்சிகள். இவையெல்லாம் எந்த விதத்தில் படத்தின் வெற்றிக்கு உதவுகின்றன என்று நமக்கு தெரிய‌வில்லை, ஆனால் அந்த காட்சிகளை குழந்தைகளுடன் வந்து திரையரங்குகளில் பார்க்கும் பெற்றோரின் மனநிலையும், அந்த குழந்தைகள் மனநிலையும் எப்படி இருக்கும் என்று இயக்குனர்கள் சிந்தித்தால் நலமாக இருக்கும்.

.

9 comments:

Yaathoramani.blogspot.com said...

எங்கள் அனைவரின் ஆதங்கத்தையும்
அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

நாடோடி said...

@Ramani S said...
//எங்கள் அனைவரின் ஆதங்கத்தையும்
அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

வாங்க ரமணி சார்,

வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பூனைக்கு யார் மணிகட்டுவது???
எங்கள் கவலையையும் கொட்டித் தீர்த்து விட்டீர்கள். நன்றி!
இதையும் படியுங்கள்.
http://kolandha.com/2013/02/kal.html

திண்டுக்கல் தனபாலன் said...

/// இயக்குனர்களின் மனதில் உள்ள‌ வக்கிர எண்ணங்களை ///

அவர்கள் மீது தவறில்லை... வளர்த்த அவங்கவங்க அப்பன் இருக்கானே... இன்றைக்கு ஆத்தாளும்... என்னத்தச் சொல்ல...?

Unknown said...

நல்ல சிந்தனை...!
படைப்பாளிகள் வியாபாரிகளாய் மாறிப் போனதன் விளைவுதான் இவை எல்லாம்...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

r.v.saravanan said...

நானும் இதை பற்றி நினைப்பதுண்டு ஸ்டீபன் பெரும்பாலான படங்களில் பார் காட்சி கண்டிப்பாக இடம் பெறுகிறது

நாடோடி said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//பூனைக்கு யார் மணிகட்டுவது???
எங்கள் கவலையையும் கொட்டித் தீர்த்து விட்டீர்கள். நன்றி!
இதையும் படியுங்கள்.
http://kolandha.com/2013/02/kal.html//

வாங்க சார், நீங்க கொடுத்த லிங்க்கும் படித்து விட்டேன். இளம் இயக்குனர்கள் நினைத்தால் மணி கட்டலாம், ஆனால் இவர்களும் பழையவர்களில் பாணியில் நடை போடுவது வருத்தமாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றிங்க.

நாடோடி said...

@திண்டுக்கல் தனபாலன் said...
/// இயக்குனர்களின் மனதில் உள்ள‌ வக்கிர எண்ணங்களை ///

அவர்கள் மீது தவறில்லை... வளர்த்த அவங்கவங்க அப்பன் இருக்கானே... இன்றைக்கு ஆத்தாளும்... என்னத்தச் சொல்ல...?//

இரண்டு பேரும் மாறி, மாறி ஆட்சி செய்யும் போது என்ன செய்ய, கருத்துக்கு ரெம்ப நன்றி சார்.

@முட்டா நைனா said...
நல்ல சிந்தனை...!
படைப்பாளிகள் வியாபாரிகளாய் மாறிப் போனதன் விளைவுதான் இவை எல்லாம்...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!//

வாங்க முட்டாநைனா, வியாபரத்திலும் ஒரு நேர்மை வேண்டும் தானே சார்..

நாடோடி said...

@r.v.saravanan said...
//நானும் இதை பற்றி நினைப்பதுண்டு ஸ்டீபன் பெரும்பாலான படங்களில் பார் காட்சி கண்டிப்பாக இடம் பெறுகிறது//

வாங்க சரவணன், கருத்துக்கும், வருகைக்கும் ரெம்ப நன்றி.

Related Posts with Thumbnails