Thursday, March 20, 2014

பயண அனுபவமும், தொ(ல்)லைக்காட்சித் தொடர்களும்..

எத்தனை வாட்டி ஊருக்கு வந்தாலும் ஒரு முறை கூடக் கன்னியாகுமரிக்கு போக முடியல. தம்பி டேய் நீயும் இந்த வாட்டி இங்க தானே இருக்கிற நாம் எல்லோரும் கன்னியாகுமரிக்கு போய்ட்டு வந்திடலாம். ஸ்கூல் படிக்கும் போது அங்க போனது, அதுக்க அப்புறம் இன்னும் ஒரு தடவ கூடப் போகல. சென்னையில இருக்கேன் தான் பேரு, ஆனா பாப்பாவை இன்னும் ஒரு தடவை கூடப் பீச்சுக்கு கூட்டிட்டு போகல. கொஞ்சம் பெருசா வளர்ந்த பிறகு போகலாம் என்று சொல்லியே நாட்கள் ஓடிவிட்டது என்று அக்கா என்னிடம் அவளுடைய ஆதங்கத்தை வைத்தாள்.

நானும் இங்க தான் இருக்கிறேன் என்று தான் சொல்லிக்கணும், கல்யாணம் முடிஞ்ச அப்புறம், ஒரு தடவையாவது கன்னியாகுமரிக்கு போகனும் என்று நினைப்பேன், ஆனா அதுக்கான வாய்ப்பு அமையவே இல்லை. தம்பி உனக்கு ஒரு வாரம் லீவு இருக்கு தானே, இந்த வாட்டி நாம குடும்பத்தோட கன்னியாகுமரிக்கு போயிட்டு வந்திடலாம் என்று அண்ணனும் தன்னுடைய ஆசையையும் என்னிடம் வைத்தான்.

அண்ணனும், அக்காவும் அவங்களுடைய ஆசைகளை என்னிடம் சொல்லியாயிற்று, இனி அதைச் செயல்ப்படுத்த வேண்டிய பொறுப்பு என்னுடையது மட்டும் தான். இவங்க எல்லோரையும் வீட்ல இருந்து நேரத்திற்குக் கிளப்பி, பார்க்க வேண்டிய இடம் எல்லாம் பார்த்துவிட்டு பொழுது சாய்வதுக்கு முன்பு கூட்டி வர முடியுமா? என்பது தான் என்னுடைய மனதில் தோன்றியது. மூணு புராஜெக்டை ஒரே நேரத்தில் தந்து மூணையும் நீ தான் பார்க்கணும் என்று ஆபிஸில் சொன்னா கூடப் பார்த்து விடலாம். ஆன அக்கா, அண்ணன், என்னுடையது என்று மூன்று குடும்பத்தையும் வெளியில் கூட்டி போயிட்டு வார்றதுனா சும்மாவா. ஒரு துணிக்கடைக்குப் போனாலே ஒம்பது மணி நேரம் ஆக்குறவங்க, இப்ப என்ன செய்யப் பொறாங்களோ என்று அடிவயிறு கலங்க ஆரம்பிச்சுது.

மனதில் இருந்ததை ஒரு பக்கம் ஓரம் கட்டி வச்சுட்டு, அதுக்கு இப்ப என்ன? நளைக்கே போயிடலாம் என்றேன்.

அம்மா, அப்பா நீங்களும் எங்க கூட வாங்க என்று அக்கா கூப்பிட்டது தான் தாமதம், என்னால ரெம்ப நேரம் வண்டியில உக்கார முடியாது, எனக்கு முதுகு வலிக்கும் என்று அம்மா ஒதுங்கி அப்பாவை பார்த்து சிரிக்க, அப்பாவும் இங்க இருக்கிறா ஆடு, கோழி எல்லாம் யாரு பாக்குறது, நீங்க போயிட்டு வாங்க என்று அப்பாவும் மெல்ல நகர்ந்தார்.

காலையில வீட்ல சாப்பிட்டு விட்டே கிளம்பலாம், மதிய சாப்பாட்டிற்கு வீட்டில் இருந்து ஏதாவது பண்ணி சாப்பிட‌ கொண்டு போனால் நல்லா இருக்கும் என்று அத்தான் ஆரம்பித்தார்கள்.

அதுக்கென்ன "பிரியாணி" பண்ணிட்டால் போச்சு என்று அண்ணி சொல்ல, நானும் பண்ணுறதே பண்ணிறீங்க மட்டன் பிரியாணியாய்ப் பண்ணினால் நல்லா இருக்கும் என்று ச‌ப்பு கொட்டினேன்.

ஆமா, காலையில எழுந்து பாப்பாக்களை ரெடி பண்ணுறதே பெரிய வேலை, இதுல மட்டன் பிரியாணியாம் மட்டன் பிரியாணி. வேணும்னா தயிர் சாதமும், புளி சாதமும் கிண்டலாம் என்று சொல்லி சிரித்தார் அக்கா.

நீங்க கிண்டுற தயிர் சாதமும், புளி சாதமும் சாப்பிடுவதற்கு, அங்க ரோட்டோரத்துல இருக்குற க‌டையிலேயே சாப்பிட்டுவிடலாம், அதனால காலையிலே சீக்கிரமா கிளம்புறதுக்குள்ள வழிய பாருங்க, ஒன்பது மணிக்கு எல்லாம் கார் வீட்ல நிற்கும் என்றான் அண்ணன்.

மறுநாள் காலை ஒன்பது மணி! 

என் வீட்டு அம்ம‌ணி அதுவரையிலும் அயன் பண்ணி கொண்டிருந்த‌ சுடிதாரை தூக்கி கொண்டு அவசர அவசரமாகப் பாத்ரூம்க்கு ஓடினார். குளிச்ச தலையுடன் ஒரு பக்க தோளில் தொங்க‌ போட்டிருந்த சட்டையை எடுத்து மெதுவாக அயன் பாக்ஸில் வைத்து தேய்க்க தொடங்கினார் அத்தான்.

வீட்டின் ஹாலில், தான் முழுவதும் கிளம்பி கையில் இட்லி தட்டுடன் அம்மணாம ஓடும் பாப்பாவை துரத்தி கொண்டு ஓடினார் அண்ணி. வீட்டின் கொல்லை புறத்தில், குத்த வைத்து உக்காந்திருக்கும் பாப்பாவை "சீக்கிரம் சீ போ" இல்லைனா உன்னை விட்டுட்டு நாங்க ம‌ட்டும் கார்ல போயிடுவோம் என்று மிரட்டி கொண்டிருந்தார் அக்கா.

இப்பவே மணி ஒன்பது தாண்டியாச்சி, இதுக்குத் தான் நான் நேத்தே வர மாட்டேன் என்று சொன்னேன், ஓர் இடத்துக்கு நேரத்துக்குப் போனாமா வந்தமானு இருக்கணும், ஆனா இவங்களைக் கூட்டிட்டு சொன்ன நேரத்திற்கு வரவும் முடியாது, போகவும் முடியாது என்ற முனகலுடன் கையில் இரண்டாவது காப்பியை கொண்டு தந்தார் அம்மா.

பெரிய கார்ல தானே போறீங்க, பக்கத்து வீட்டு பெரியப்பாவையும், பெரியாம்மாவையும் உங்க கூட வர சொல்லியிருக்கேன். அவங்க கரெட்டா கிளம்பி திண்ணையில் உக்காந்து இருப்பாங்க, காப்பியை குடிச்சுட்டு, நீ போய் அவங்களை வெயிட் பண்ண சொல்லு என்றார் அப்பா.

வீட்டில் நடக்கும் வேலைகளைப் பார்த்தால் இப்ப எல்லாம் இவர்கள் கிளம்ப மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டே,கையில் இருந்த‌ காப்பியை குடித்து விட்டுப் பக்கத்தில் இருந்த பெரியப்பா வீடு நோக்கி நடந்தேன். அப்பா சொன்னது போல் அவர்கள் இருவரும் கிளம்பி தான் இருந்தார்கள். என்னப்பா எல்லோரும் கிளம்பியாச்சா?. கீழ ரோட்ல கார் வந்து நிற்குது என்று பெரியப்பா என்னை நோக்கினார். இல்லை பெரியப்பா நம்ம வீட்டுப் பொம்பளைகள் எல்லாம் கிளம்ப எவ்வளவு நேரம் ஆகுமுனு உங்களுக்குத் தெரியாதா என்று பெரியப்பாவை பார்த்தேன். அவருடைய முகத்தில் புன்னகையைத் தவிர வேறு பதில் இல்லை.

நம்ம வீட்டு பொம்பளங்க‌ எல்லாம் ஓர் இடத்திற்குக் கிளம்பனும் என்றால் பெரும் பாடு தான், ஆமா, நாம‌ போயிட்டுச் சாயங்காலம் ஆறு மணிக்குள்ள வந்திடலாம் இல்ல என்று பெரியம்மா கேள்வியைக் கேட்டு என் முகத்தைப் பார்த்தார். ஏதும் வேலை இருக்கா பெரியம்மா என்று அவரிடம் கேட்டேன். இல்ல சும்மா தான் கேட்டேன் என்றார் பெரியம்மா. அதெல்லாம் ஆறு மணிக்குள்ள வந்திடாலாம் என்றேன். பெரியம்மா முகத்தில் சந்தோச புன்னகை தெரிந்தது. சரி பெரியம்மா நீங்க இங்க உக்காந்திருங்க, நான் போய் அவங்களைச் சீக்கிரம் கிளம்பச் சொல்லுறேன் என்று சொல்லிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தேன்.

வீட்டில் வந்து பார்த்தால் எல்லோரும் பரபரப்பாய் கிளம்பி கொண்டிருந்தார்கள், அப்போதே மணி பத்தை தாண்டியிருந்தது. ஒருவர் சிலேடை காணவில்லை என்றும் இன்னொருவர் ஸ்டிக்கர் பொட்டை இங்க தான் வச்சிருந்தேன் நீங்க பாத்தீங்களானு என்னிடம் கேட்க, நானே என்னோட சட்டை பாக்கெட்ல இருக்கு என்று சொல்லிவிட்டு அண்ணனை தேடினேன். நேத்து பூ வாங்க சொல்ல மறந்திட்டாங்களாம், அதான் இப்ப பூ வாங்க அவன் டூவீலரை எடுத்திட்டு ரோட்டுக்குப் போயிருக்கிறான் என்று அம்மா மெல்லிய புன்னகையுடன் என்னிடம் சொன்னார்.

எப்படியோ எல்லோரும் ஒரு வழியா கிளம்பி, வீட்டை விட்டு வெளியில் வரும் போது மணி பதினொன்று. வீட்டில் இருந்து நடந்து கீழே நிற்கும் வண்டியின் அருகில் நெருங்கும் போது, அண்ணி மட்டும் வீட்டை நோக்கி திரும்பவும் ஓடினார். ஏன்னு கேட்டால், பாப்பாவின் பால் பாட்டிலை மறந்து விட்டாராம் என்று அண்ணன் தலையில் அடித்தான். வண்டி கிளம்பி கன்னியாகுமரி போகிறதுக்குள்ள பாப்பாக்கள் இரண்டு பேரும் இரண்டு இடங்களில் இறங்க வைத்து விட்டார்கள். எப்படியோ கன்னியாகுமரிக்கு போயி இறங்கும் போது மணி பனிரென்டு முப்பது.

கடல் உள்ள போனா நீங்க திரும்ப‌ வர்றதுக்கு ரெம்ப நேரம் ஆகும். அதனால சாப்பிட்டு விட்டுப் போங்கள் என்று சொன்ன டிரைவரின் ஆலோசனையின் படி ஹோட்டலை நோக்கி நடந்தோம்.

வந்ததோ இடங்களைச் சுற்றிப் பார்க்க, ஆனா முதல் வேலையே சாப்பாடு தான் நடந்தது. நான் நினைச்ச மட்டன் பிரியாணியையும் ஆர்ட‌ர் பண்ணிட்டேன், சாப்பாடும் ஒரு வழியாக முடிந்து விட்டது.

இப்போது ஒவ்வொரு இடமாகச் சுற்ற தொடங்கினோம், முதலில் போனது விவேகானந்தர் பாறைக்கு, கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் பாறையில் இருந்து திரும்ப வர்றதுக்கு விசைப்படகிற்காக‌ ரெம்ப நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. இங்கு ரெம்ப நேரம் கால் கடுக்க‌ நின்னதாலோ, என்னவோ எல்லோரும் ஒன்றாகத் திருவள்ளுவர் சிலைக்குப் போக வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார்கள். சூரியனும் மேற்கு நோக்கி விரைவாக‌ நகரத் தொடங்கி விட்டான்.



இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சென்றதை விட, கோவிலை சுற்றி இப்போது அதிகமான புதுக் கடைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பொருட்களைப் பேரம் பேசி வாங்குவதற்குள் நேரம் போய்க் கொண்டே இருந்தது. பெண்கள் ஒவ்வொருவரையும் மிரட்டி ஒவ்வொரு கடையில் இருந்தும் வெளியேற்றியது பெரியம்மா தான். அதனால் ஆண்கள் எங்களுக்குப் பெரிய அளவில் கஷ்டம் இல்லை.

ஒவ்வொரு மணி நேரம் ஆகும் போதும், மணி நான்கு ஆகிவிட்டது, ஐந்து மணி ஆகிவிட்டது சீக்கிரம் வாங்க, வீட்டிற்கு ஆறு மணிக்குள்ள போகனும் என்று கோபமாகக் கத்தி கொண்டே பெரியம்மா இருந்தார்கள். ஒரு ஸ்டிக்கர் பொட்டு வாங்கவே நாலு கடை பார்க்கும் நம்ம ஆளுங்க இதற்கு எல்லாம் அசருவாங்களா என்ன. சவகாசமா கேட்டால் சங்குமுகம் வரும் போது மணி ஆறு. பெரியம்மாவின் கண்கள் கோபத்தில் கொப்பளித்தது. ஆனால் வெளியில் ஏதும் சொல்லாமல் இருந்தார்.

இருந்ததே இருந்தோம், அப்படியே சூரியன் மறையுறதையும் பார்த்து விட்டு போவோம் என்றார்கள். சூரியனும் ஒரு வழியாகக் கடலில் விழுந்து விட்டான். தண்ணீரில் விளையாட போன நம்ம‌ ஆட்களுக்குக் கடலை விட்டு வர மனம் ஒப்பவில்லை.

கடலை விட்டு வெளியில் வந்து பிளாட்பாரம் கடைகளையும் பார்க்க வேண்டும் என்று அங்கேயும் சுற்ற தொடங்கினார்கள்.

எப்படியோ ஒரு வழியாக எல்லோரும் வண்டியில் வந்து ஏறும் போது மணி எட்டு. பெரியம்மாவின் முகம் மட்டும் கொடுரமாக இருந்தது. அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது, ஆறு மணிக்குள்ள வீட்டிற்கு வரலாமா என்று பெரியம்மா கேட்டது.

வண்டியில் அம‌ரும் போது, கொஞ்சம் தள்ளி தான் இருக்கிறது என்ற பெரியப்பாவின் குரலுக்கு, அனல் பறக்கும் பார்வையுடன் கூடிய கோபம் பெரியம்மாவின் கண்ணில் தெறித்தது. அனைவரும் வண்டியில் ஏறியவுடன், வண்டி கிளம்பத் தொடங்கியது. கடலில் ரெம்ப நேரம் ஆட்டம் போட்டதனால் பாப்பா இரண்டு பேரும் தூங்க ஆரம்பித்தார்கள். பயணக் களைப்பும், வண்டியின் ஜன்னல் வழியாக வீசிய‌ இயற்கை காற்றும் எல்லோரின் கண்களையும் சுழற்றியது.

பக்கத்தில் இருந்த என்னுடைய மனைவியிடம், ஆமா, பெரியம்மா ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்கள்?, ஆறு மணிக்கும் யாரையும் வீட்டிற்கு வர சொல்லி இருப்பார்களோ என்று கிசுகிசுத்தேன். அதற்கு என் மனைவியோ புன்சிரிப்புடன் அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ஆறு மணியில் இருந்து பெரியம்மா தொலைக்காட்சி தொடர்கள் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இன்னைக்கு நம்ம கூட வந்ததால் எல்லாத் தொடரும் அவங்களால பார்க்க முடியாம போச்சு, அதான் இவ்வளவு கோபமாக இருக்காங்க‌ என்றார். இவ்வளவு தானா, நானோ ஏதோ பெரிய விசயமாக இருக்குமோ என்று நினைத்தேன் என்றேன். உங்களுக்கு என்ன தெரியும் அந்தத் தொடர்களை ஒரு நாள் பார்க்கவில்லை என்றால் கதையோட தொடர்ச்சி போயிடும் என்றார். என்ன பெரிய கதை மாடி படியில இருந்து இறங்கி வந்து கிச்சனுக்குப் போய் ஒரு கப் தண்ணி குடிச்சுட்டு, திரும்பவும் மாடி படி ஏறி பெட்ரூம் கதைவை திறக்கும் போது "தொடரும்" என்று போடுவான் என்றேன். ரெம்பச் சத்தம் போட்டு பேசாதீங்க, பெரியம்மா காதில் கேட்டுவிடப் போகிறது என்றார்.

பெரியம்மாவிற்குத் தொலைக்காட்சி தொடர் தானே பார்க்க முடியல, வீட்டுக்குப் போய்த் திரும்பவும் போட சொல்லி, நான் அவங்களுக்குக் காட்டுறேன் என்றேன். ஆமா, நீங்க சொன்ன உடன் போடுவதற்குத் தொலைக்காட்சி தொடர் என்ன உங்க வீட்டு டிவிடி பிளேயரில் உள்ள படமா? என்றார். சிரிப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தேன்.

வண்டி எங்கள் ஊர் எல்லையைத் தொடும் போது, இரவு மணி ஒன்பதை தாண்டியிருந்தது. பயணக் களைப்புடன் வண்டியில் இருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தோம். பெரியம்மா அவங்க வீட்டிற்குக் கிளம்பினார். அவர்கள் சென்ற பின்னாடியே நானும் வீட்டில் இருந்த‌ என்னுடைய லேப்டாப்பை தூக்கி கொண்டு அவர்கள் பின்னால் போனேன். என்னுடைய யுஎஸ்பி மோடத்தை லேப்டாப்பில் கனெக்ட் செய்து, இணையத்தில் இருந்து பெரியம்மா சொன்ன அனைத்துத் தொலைக்காட்சி தொடர்களையும் அவர்களுக்குப் போட்டு காட்டினேன். "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தில் விஜய் சேதுபதி, தாதாவாக நடித்திருக்கும் பசுபதி அவர்களிடம் "குமுதா ஹேப்பி அண்ணாச்சி" என்று சொல்வது போல் நானும் "பெரியம்மா ஹேப்பி அண்ணாச்சி" என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வந்தேன்.

வீட்டிற்கு வந்தவுடன் என்னோட மனைவி என்னிடம் வந்து, நீங்க இணையத்தில் தொலைக்காட்சி தொடர் பார்க்கலாம் என்பதை எனக்குச் சொல்லி தரவே இல்லியே என்றார். நீ தான் தொலைக்காட்சி தொடரே பார்க்க மாட்டியே என்றேன். இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டா பார்ப்பாங்க, சரி சரி அந்த விஜய் டிவியில் போடும் "உறவுகள் தொடர்கதை" சீரியலை லேப்டாப்பில் எனக்குப் போட்டு தாங்க என்றார்.

.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சீரியல் வீட்டுப் பெண்களுக்கு எந்தளவு விரும்பப்படுகிறது (அடிமையாகி ?) என்பதற்கு பெரியம்மா அவர்கள் ஒரு உதாரணம்... ஆனாலும் பெரியவர்கள் என்னதான் செய்வார்கள்...? ம்...

இனி உங்கள் லேப்டாப்பில் உறவுகளின் மெகா தொடர்கதை தொடரும் என்று நினைக்கிறேன்... ஹிஹி...

Unknown said...

நல்ல அனுபவம்...
//சரி சரி அந்த விஜய் டிவியில் போடும் "உறவுகள் தொடர்கதை" சீரியலை லேப்டாப்பில் எனக்குப் போட்டு தாங்க என்றார்.//
இதான்... சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிறதுங்கிறது...

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : சீனு என்ற ஸ்ரீனிவாசன் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : திடங்கொண்டு போராடு

வலைச்சர தள இணைப்பு : நானும் பதிவுலகமும் - 2

sury siva said...

எல்லா வூட்டுலேயும் இதே கதை தான் போல இருக்கு

அஞ்சு மணி அடிச்சு முப்பது நிமிஷம்
ஆஹா வூட்டுக்குப்போயி விளக்கு ஏத்த வேணும் அப்படின்னு
அவசர அவசரமா தினம் போவாக.

முதல்லே மகான் பற்றி
பின்னே ராஜ் டி.வி. தமிழ் நியூஸ்
அதுக்குப்பின்னே மண் வாசனை,
கருத்தம்மா,
தெய்வம் தந்த வூடு
பின்னே அதுக்கு ஏன்னா பேரு, சக்ரவர்த்தி குடும்பம் அப்படின்னு
ஏகத்துக்கு நாட்டாமை பண்ணும் ஒரு சீரியல் ( இப்படி ஒரு அசட்டு மருமகள் யார் வூட்டுலேனாச்சும் இருக்குமா ? !!!)
அப்பறம் சரவணன் மீனாட்சி,
முடிஞ்சா உடனேயே சூப்பர் சிங்கர்.
அதுக்கப்பறம் ஆபீஸ்.

நடுவிலே அட்வர்டைஸ்மென்ட் வரும்போது
சாப்பாடு.

முடியும்போது மணி 11 ஆகிவிடுகிறது.

நான் கொஞ்சம் பி.பி. சி. பார்க்கிறேனே அப்படின்னு
சொன்னால்,

என்ன அப்படி டி.வி. யே கதி ன்னு உட்கார்ந்திருக்கீக..

பேச்சு வேர..

கியவி பேச்சு தாங்க முடியலேடா ..

இதுக்குத்தான் பிறவி எடுத்தாயா சுப்பு தாத்தா

அப்படின்னு மனசுக்குல்லேந்து ஒரு அசரீரி கேட்குது.

ராஜி said...

அரசி, கோலங்கள் தொடரை விடாமல் பார்த்துட்டு இருந்தேன். அந்த போதைக்கு அடிமையாறது மாதிரி இருந்ததால் தொர்களைப் பார்க்குறதையே நிறுத்திட்டேன். இப்ப டிவி பக்கமே போறதில்ல.

Related Posts with Thumbnails