Monday, March 31, 2014

சுயத்தை இழப்பது_கிரிக்கெட்டா?.. வீரர்களா?..

பால்ய வயதில் உண்ணும் நேரத்திற்கு உண்ணாமலும், படிக்கும் நேரத்தில் படிக்காமலும் கிராமத்தில் ஊர் ஊராகக் கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு சுற்றியது இப்போதும் மன‌தில் நிழலாடுகிறது. சொல்லும் படியாகப் பெரிய அளவில் விளையாடவும் தெரியாது. ஆனாலும் அதன் மீதான மோகம் அளவிடமுடியாதது. எனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் தான் நாங்கள் விளையாடும் மைதானம் இருந்தது. அந்த மைதானம் அமைந்திருக்கும் இடம் எனது நண்பனுடையது. புல் வளர்ந்துக் காடாக இருந்த இடத்தைத் திருத்தி விளையாடுவது போல் உருவாக்கியது அந்த நண்பனும் நாங்களும் தான்.

பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடம் புத்தகத்தை வைத்துவிட்டு ஓடுவது அந்தக் கிரிக்கெட் மைதானத்திற்குத் தான். எங்கள் நண்பர்களுக்குள் இரண்டு அணியைப் பிரித்துத் தான் பெரும்பாலும் விளையாடுவோம். ஓர் அணியில் நான் இருந்தால் மற்றொரு அணியில் எனது அண்ணன் இருப்பான். இப்படியாகத் தான் இரண்டு அணியிலும் நண்பர்கள் அனைவரின் அண்ணன் தம்பிகள் என்று பிரிந்து நின்று விளையாடுவோம். சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கக் கூட‌ ஒருவரும் இருக்க மாட்டர்கள். ஆனாலும் வெற்றித் தோல்விக்கு அவ்வளவு போராட்டம், சண்டை நடக்கும். உடன் விளையாடுபவர்கள் நம்முடைய‌ அண்ணன் தம்பி மற்றும் நண்பர்கள் என்ற எண்ணம் சிறிதும் இருப்பது இல்லை. நான் இருக்கும் அணி வெற்றி பெற‌ வேண்டும் அது மட்டும் தான் மனதில் ஓடும்.

ஒரு வைய்டு பாலுக்கு அவ்வளவு கடுமையான வாக்குவாதம் நடக்கும். ரன் அவுட்டாக இருந்தால் சொல்லவே வேண்டாம், கட்டி பிடித்துச் சண்டை மட்டும் தான் நடக்காது, மற்ற எல்லாம் நடந்து விடும். இரண்டு அணியில் உள்ளவர்களும் சண்டையிட்டு கூச்சல் போடுவதை எங்களுடன் விளையாடாமல் வெளியில் இருந்து யாராவது பார்த்தால் இவர்கள் இனிமேல் ஒருவர் ஒருவரோடு பேசவே மாட்டார்கள் என்று தான் நினைக்கத் தோன்றும். மறுநாளே அணியை மாற்றி விளையாடும் போது நேற்று சண்டை போட்ட இருவரும் சேர்ந்து அடுத்த அணியில் உள்ளவர்களிடம் சண்டையிட்டு கூச்சல் இடுவார்கள். இவ்வாறு போடும் சண்டை போலி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அந்த நிமிடத்தில் "ந‌மது அணியின் வெற்றி" என்று ஒன்று மட்டுமே எல்லோர் மன‌தில் ஆழமாக பதிந்து இருக்கும்.

இப்படி சண்டையிட்டு விளையாடும் அணி வெற்றியடைந்து விட்டால் என்ன நடந்துவிடும், பெரிதாக ஒன்றும் இருக்காது. அந்த மைதானத்தை விட்டு வெளியில் வரும் வரை அல்லது வீட்டிற்கு போகும் வரையிலும் எதிர் அணையில் உள்ளவர்களைப் பார்த்து ஒரு குத்தல் பேச்சுடன் கூடிய‌ ஏளன புன்னகை, எங்களுக்குள் ஒரு வெற்றிக்கான புன்னகையின் பகிர்வு மற்றும் மனதிற்குள் ஏற்படும் ஒரு வகையான திருப்தி. இதை அந்த நிலையில் இருந்து அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.

பள்ளி விடுமுறை நாட்கள் என்றால் சொல்லவே வேண்டாம், கண்டிப்பாக ஒரு பெட் மேட்ச் இருக்கும். பெட் மேட்ச் விளையாட நாங்கள் பெரும்பாலும் பக்கத்து ஊருக்கு தான் போவோம். அதற்கும் காரணம் இருக்கு, சொந்த ஊரில் விளையாடி எதிர் அணியிடம் தோற்றால் அவ்வளவு கவுரவமாக இருக்காது என்பதால் எதிர் அணியின் ஊருக்கே சென்று விடுவது. இங்கும் எதிர் அணியில் விளையாடுபவர்கள் எங்களுடன் பள்ளியில் ஒன்றாக‌ படிப்பவர்களாகத் தான் இருப்பார்கள். பள்ளி நாட்களில் நட்பாக இருந்து ஒருவர் தோளில் ஒருவர் கையைப் போட்டு ந‌டப்பவர்களாகத் தான் இருப்போம். ஆனால் இன்றைய‌ இந்தப் பெட் மேட்சில் ஒருவர் ஒருவரை எதிரியாகப் பார்த்து தான் விளையாடுவோம். அப்போது என்னுடைய அணி வெல்ல வேண்டும், நான் நன்றாகப் பவுலிங் மற்றும் பேட்டிங் பண்ண‌ வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இருக்கும்.

பெட் மேட்சிக்கான தொகை பத்து அல்லது அதிகமாகப் போனால் இருபது ரூபாய் தான் இருக்கும். அதற்காக நடக்கும் போராட்டம் என்பது பெரிதாக இருக்கும். இப்படியான மேட்சிகளில் நிற்கும் அம்பயர்களின் பாடு பெரும் பாடாக இருக்கும். அவுட் கேட்டு நிற்கும் பவுலரை மட்டும் அல்லாமல் கூடச் சேர்ந்து கூச்சல் போடுபவர்களையும் சமாளிக்க வேண்டும். ஒரு ரன்னிற்கு உயிரே போய்விட்டதாக எண்ணி சண்டையிட்டுக் கொள்வோம். பவுலிங் பண்ணும் போது எதிர் அணியில் பேட்டிங் செய்பவன், பள்ளியில் ஒரே பெஞ்சில் அருகில் இருப்பவனாகத் தான் இருப்பான். ஆனாலும் கொலை வெறியில் பாலை பவுண்ஸ் பண்ணுவதும் நடக்கும். நாங்கள் விளையாடும் இடம் டீவியில் இப்போது கண்பிக்கும் புல் வளர்ந்த சமதளமான பரப்பாக இருக்காது. சரல் மண் கொட்டப்பட்டு மேடும் பள்ளமாக இருக்கும். ஆங்காங்கே வேலியில் கற்றாழை முள்ளும் நட்டு வைத்திருப்பார்கள். அந்த வேலிகள் தான் பவுண்டரி எல்லையாக இருக்கும். ஜான்டி ரோட்ஸ் பிடிக்கும் கேட்சுகளைப் போல‌ முயற்சி செய்து பார்க்கும் போது சரல் மண் முட்டியை சிராய்க்கும். பவுண்டரியை தடுக்க நினைக்கும் போது வேலியில் இருக்கும் கற்றாழை முள் காலை பதம் பார்க்கும்.

நாங்கள் ஊர் ஊராக இதுபோல் கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு சுற்றும் போது, வீட்டில் உள்ளவர்க‌ள் திட்டுவது மட்டுமல்லால் சில‌ சம‌யம் உதையும் தருவார்கள். அர்ச்சனை நடக்கும் போது, அப்பா கேட்கும் முதல் வார்த்தை வெற்றியா?.. தோல்வியா?.. என்று தான். வெற்றி என்றால் திட்டு குறைவாகக் கிடைக்கும், தோல்வி என்றால் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். இப்படித் தோற்பதற்காக ஊர் ஊராகப் போக வேண்டுமா?.. என்று கேவலமாக அம்மா திட்டுவார்கள். இதுவே வெற்றிக்காகப் போராடும் ஊக்கத்தைத் தரும்.

அன்றைக்கு நடக்கும் பெட் மேட்சில் ஜெயித்துவிட்டால் கையில் பட்ட சிராய்ப்புகளும், காலில் ஏறிய முள்ளின் வலியும் துளியும் இருக்காது. அன்று முழுவதும் விளையாட்டின் வெற்றி களிப்பே முகத்தில் இருக்கும். ஆனால் தோல்வி என்றால் வீட்டில் போனவுடன் காயத்திற்கான மருந்தை கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.

இவ்வளவு ஏன்!! இப்போதும் கூட ஆபிசில் இருக்கும் நண்பர்கள் அணி பிரித்துக் கிரிக்கெட் ஆடினால் கூட எந்த அளவிற்குச் சண்டை போட முடியுமோ, அவ்வளவு தூரம் சண்டையிடுவதும் நடக்கும். நான் ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து போகும் போது, ஜாலியாக‌ இரண்டு மணி நேரம் விளையாட போகிறோம், அதில் எதற்காக வாக்குவாதம் செய்ய வேண்டும், இன்றைக்கு எந்தச் சண்டையும், எவருடனும் போட கூடாது என்று மனதில் நினைத்து போனாலும் களத்தில் அவ்வாறு இருக்க முடிவதில்லை. பவுலிங் போடும் போது இல்லாத வைய்டை வைய்டு என்று சொன்னால் என்னையறியாமல் வாயிலிருந்து வார்த்தைகள் வருவதைத் தடுக்கமுடிவதில்லை. இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் விளையாட்டுக் களத்தில் "வெற்றி" என்ற ஒன்றை மட்டுமே மனம் விரும்பும் என்பதை விளக்குவதற்குத் தான்.

விளையாட்டு மைதானத்தில் களம் இறங்குபவர்களையும், போர்களத்தில் எதிரிகளை எதிர்த்து போராடுபவர்களையும் மட்டும் தான் "வீரன்" என்று அழைக்கிறோம். வீரன் என்பவன் வெற்றி என்ற ஒன்றை மட்டுமே பெற்று தருபவனாகவும் அல்லது அதைப் பெறுவதற்குத் தன்னலம் கருதாமல் போராடுபவனாக‌ மட்டுமே பார்க்க படுகிறான். நம்முடைய பண்டைய‌ இலக்கியங்களில் "வீரன்" என்பதற்குப் பல விளக்கங்களையும் பலரின் வீரச் செயல்களையும் பார்க்க முடியும். போரில் புறமுதுகுக் காட்டும் வீரன் எவ்வாறு அழைக்கப்பட்டான் என்பதையும், வீரப் பண்டிய கட்டபொம்மன் வரலாற்றில் எட்டப்பனுக்கான இடம் என்ன என்பதும் அனைவரும் படித்திருப்போம்.



இன்று நடக்கும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் நடக்கும் ஊழல்களையும், பெட்டிங் போன்ற‌ செய்திகளைப் படிக்கும் போது விளையாட்டு என்பது எப்படியான வியாபாரமாக மாறி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதில் விளையாடும் வீரர்களும் தங்களின் சுயத்தை முழுவதும் தொலைத்து நிற்பதாகத் தான் பார்க்க முடிகிறது. தான் நேசிக்கும் விளையாட்டில் வரும் வெற்றியை தான் சுவாசிக்காமல் எதிர் அணிக்கு பணத்துக்காக‌ விலை பேசுகிறான் என்றால் அவனுடைய மனநிலை எத்தகையதாக இருக்கும்?.. இன்றைய சமூகத்தில் மீதான அவனுடைய எண்ணவோட்டம் என்னவாக‌ இருக்கும்?..

கல்வி, மருத்துவம், விளையாட்டு போன்ற‌ துறைகளில் யாரெல்லாம் நுழைய கூடாதோ அவர்களின் கூடாரமாகவும், கைப்பாவைகளாகவும் தான் இந்தத் துறைகள் இன்று இயங்குகின்றன‌. இவைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் வாய் மூடி மவுனிக்கிறது.

இந்த ஐபில் கிரிக்கெட் போட்டியில் தோற்றாலும், ஜெயித்தாலும்...

காசு..
பணம்..
துட்டு..
மணி மணி.. 

கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. பணம் வருகிறது என்றால் சுயம் என்ன?.. ஆடையை இழந்து அம்மணமாக வாழவும் தயார்...


.

8 comments:

unmaikal said...

எதுவெல்லாம் தேச விரோதம்?- THE HINDU

இந்தியாவில் ஆட்சியாளர்கள் கையில் சட்டங்கள் எப்படி விளையாட்டுப் பொம்மைகள்போலக் கையாளப்படுகின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணமாகியிருக்கிறது மீரட் சம்பவம்.


ஆசியக் கோப்பைப் போட்டியில், இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியைக் கொண்டாடினார்கள் என்ற காரணத்துக்காக, உத்தரப் பிரதேசத்தில் பயிலும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத் துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தியிருக்கிறது மீரட் காவல் துறை.


கடும் கண்டனங்களைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 124 ஏ-யின் கீழ் பிரிவினைவாதக் குற்றச்சாட்டு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டாலும், பிரிவு 153 ஏ-யின் கீழ் வெவ்வேறு இனங்களுக்கிடையே துவேஷத்தை ஏற்படுத்த முயன்றது, பிரிவு 427-ன் கீழ் விஷமத்தனமான செயல்களில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் இன்னும் நீடிக்கின்றன.


இந்த விஷயம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவிடம் பேசியிருக்கிறார். பிரச்சினைக்கு மதப் பிரிவினைவாதச் சாயம் விழுந்துவிடாமல் தவிர்ப்பதற்காக, மாணவர்களை காஷ்மீருக்குத் திரும்ப அனுப்பியிருப்பதாக சுவாமி விவேகானந்தர் சுபார்தி பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.


தாங்கள் எந்தப் புகாரையும் பதிவுசெய்யவில்லை என்று பல்கலைக்கழகத் தரப்பு கூறினாலும், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று காவல் துறை தரப்பு தெரிவிக்கிறது.


இந்தியாவில் எதுவெல்லாம் தேச விரோதம்?


“அரசுக்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் பேச்சு களையும் கருத்து வெளிப்பாடுகளையும்கூடப் பிரிவினைவாதம் என்ற வரையறைக்குக் கீழே கொண்டுவந்துவிட முடியாது; வன்முறையையும் கலவரத்தையும் தூண்டிவிடும் வகையிலான நடவடிக்கைகள்மீது மட்டுமே தேசத் துரோகத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியும்” என்று கூறுகிறது உச்ச நீதிமன்றம்.


ஆனால், சாதாரண ஒரு கிரிக்கெட் போட்டி விஷயத்துக்கே தேசத் துரோகச் சட்டத்தைத் துணைக்கு அழைக்கின்றனர்.


இதற்கான அடிப்படை வெறுமனே சட்ட அறியாமையும் யதேச்சதிகாரமும் மட்டும் என்று சொல்லிவிட முடியுமா?


சமீபத்தில் ஜம்முவில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவிருந்த ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியினர் தங்கியிருந்த ஹோட்டலில் நள்ளிரவுச் சோதனைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.


இப்போது காஷ்மீர் மாணவர்கள்மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு. காஷ்மீரிகளின் மனதிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?


இந்தியப் பொதுச் சமூகத்திலிருந்து மேலும் மேலும் ஏன் அவர்களை நாம் வெளியே தள்ளுகிறோம்?


இந்தச் சமயத்தில், பாகிஸ்தான் - இந்தியா இடையேயான ஒரு கிரிக்கெட் போட்டியை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். சென்னையில் நடைபெற்ற பரபரப்பான அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.


அரங்கத்தில் இருந்த சென்னை ரசிகர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று, பாகிஸ்தானுக்குக் கரவொலி எழுப்பினர். வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலரும் நெகிழ்ந்துபோயினர்.


விளையாட்டு என்பதன் உண்மையான நோக்கம் இதுதான். எல்லைகளைத் தாண்டி நல்லுறவை வளர்ப்பது. உண்மையான வெற்றியை அங்கீகரிப்பதுதான் விளையாட்டுக்கான அடிப்படை. உண்மையில், விளையாட்டில் தேசப் பற்றை நுழைப்பவர்கள்தான் பிரிவினைக்கு வித்திடுகிறார்கள்.


Ref: THE HINDU சிந்தனைக் களம் » தலையங்கம் எதுவெல்லாம் தேச விரோதம்?



COPIED FROM :

http://vanjoor-vanjoor.blogspot.sg/2014/03/blog-post_31.html

திண்டுக்கல் தனபாலன் said...

கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் தொலைந்து பல வருடங்கள் ஆகி விட்டது... அதன் பிற்கு என்னே நிம்மதி...!

அனைத்தும் பணம் செய்யும் மாயை...

unmaiyanavan said...

நானும் டி‌டி அண்ணன் கட்சி தான். இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பாற்பதும் கிடையாது, அதைப் பற்றி பேசுவதும் கிடையாது.

”தளிர் சுரேஷ்” said...

ஒரு ஐம்பது காசு பெட் மேட்சிற்கு உயிரையே கொடுத்து விளையாடுவோம்! கரடு முரடான கழனியில் பிட்ச் செதுக்கி பதம் செய்து விளையாட ஆரம்பிக்கையில் உழுது விடுவார்கள். அதன் பின் அடுத்த கழனி என்று ஊரெல்லாம் சுற்றுவோம்! அந்த காலமே தனி! இன்று ஊரிலும் சரி! இந்திய கிரிக்கெட்டும் சரி! நிறைய மலிந்துவிட்டது! கிரிக்கெட் பார்ப்பதும் குறைந்து விட்டது! நல்லதொரு பகிர்வு! நன்றி!

நாடோடி said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் தொலைந்து பல வருடங்கள் ஆகி விட்டது... அதன் பிற்கு என்னே நிம்மதி...!

அனைத்தும் பணம் செய்யும் மாயை...//

வாங்க தனபாலன் சார்,

உங்களால் பார்க்காமல் இருக்க முடிகிறது, என்னால் அந்த மனநிலைக்கு வர முடியவில்லை.. கருத்துக்கு ரெம்ப நன்றி.

@Chokkan Subramanian said...
//நானும் டி‌டி அண்ணன் கட்சி தான். இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் பாற்பதும் கிடையாது, அதைப் பற்றி பேசுவதும் கிடையாது.//

வாங்க சுப்ப்ரமணியன் சார்,

பார்க்காமல் இருப்பது நல்ல விசயம், என்னைப்போல் புலம்ப தேவையில்லை.. கருத்துக்கு ரெம்ப நன்றி.

நாடோடி said...

@தளிர்’ சுரேஷ் said...
//ஒரு ஐம்பது காசு பெட் மேட்சிற்கு உயிரையே கொடுத்து விளையாடுவோம்! கரடு முரடான கழனியில் பிட்ச் செதுக்கி பதம் செய்து விளையாட ஆரம்பிக்கையில் உழுது விடுவார்கள். அதன் பின் அடுத்த கழனி என்று ஊரெல்லாம் சுற்றுவோம்! அந்த காலமே தனி! இன்று ஊரிலும் சரி! இந்திய கிரிக்கெட்டும் சரி! நிறைய மலிந்துவிட்டது! கிரிக்கெட் பார்ப்பதும் குறைந்து விட்டது! நல்லதொரு பகிர்வு! நன்றி!//

வாங்க சுரேஷ்,

உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்குது போல.. கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி..

சேக்காளி said...

வார நாயித்து கெழம ஒரு பெட் மேட்ச் இருக்கு வாரியளா?

நாடோடி said...

@சேக்காளி said...
//வார நாயித்து கெழம ஒரு பெட் மேட்ச் இருக்கு வாரியளா?//

வாங்க சேக்காளி நண்பா,

அதுக்கென்னா டிக்கெட்டை போட்டு கொடுங்க.. வந்து தூரு வாரிடுவோம்.. ஒப்பனங் பேட்டிங் கொடுப்பீங்க தானே!!!!..
ஹி ஹி..

Related Posts with Thumbnails