சவுதி அரேபியாவில் பேரிச்சை மரங்கள் அதிகம். ஒருமுறை நண்பர்களுடன் இந்த பேரிச்சை மரங்களை பற்றி பேசி கொண்டிருக்கும் போது நமது ஊரில் உள்ள பனை மரத்தை பற்றிய பேச்சு வந்தது. அப்போது நான் பனை மரத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒரு வகை பூ தான் பூக்கும் அதில் நொங்கு கிடைப்பது இல்லை என்றும், மற்றொரு வகையில் தான் நொங்கு கிடைக்கும் என்று சொன்னேன்.
என்னுடன் இருந்த நண்பர்களில் சிலருக்கு இந்த இரண்டு வகைகளை பற்றி தெரிந்திருக்க வில்லை. அதில் ஒருவர் கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்று அடம் பிடித்தார். அவங்களை எல்லாம் ஒரு வழியாக சமாதான படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது.. இந்த பனை மரம் ஒன்றிலேயே இவ்வளவு குழப்பமா? அப்படியானால் எனக்கு தெரிந்த சில மரங்களில் உள்ள வகைகளை சொன்னால்? உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கும் ஏதாவது தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
பலாப்பழம் அனைவரும் அறிந்ததே... அதில் எனக்கு இரண்டு வகைகள் தெரியும். எங்கள் ஊரில் பலாப்பழத்தை வழக்கு சொல்லாக சக்கை என்று அழைப்பது உண்டு.
1)வருக்கை சக்கை(பலாப்பழம்)
2)கூழன் சக்கை(பலாப்பழம்)
இதில் முதல் வகையை மட்டும் தான் நகரங்களில் நான் பார்த்து இருக்கிறேன். இந்த வகையில் உள்ள சுளைகளை தான் தனியாக எடுத்து பாக்கட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். இதன் சுளைகள் கொஞ்சம் அடத்தியாக இருக்கும்.
இரண்டாவது வகை பலாப்பழத்தை எங்கள் ஊரை தவிர எங்கும் பார்த்து இல்லை. இந்த பலாப்பழம் பழுத்து விட்டால் நாம் நமது கைகளின் பலத்தால் இதை பிளக்க முடியும். ஆனால் முதல் வகையை எவ்வளவு நன்றாக பழுத்தாலும் கைகளினால் பிளக்க முடியாது. ரெம்ப கடினமாக இருக்கும். கத்தியால் தான் வெட்ட முடியும்.
பழுத்த கூழன் சக்கையின் சுளையை வருக்கை சக்கையின் சுளையை போல் தனியாக எடுக்க முடியாது. கூழன் சக்கையின் சுளைகள் பகுதி திட நிலையில் இருக்கும். இதை நீங்கள் கையில் எடுத்து வாயில் வைத்தால் நூல் போல் இழுக்கும். இதன் சுவை முதல் வகையை விட தித்திப்பாக இருக்கும். பல் இல்லாத முதயவர்கள் இந்த வகையை தான் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பலாப்பழத்தின் மணம் அதிக வாசனை திறன் கொண்டது. நமது வீட்டின் பக்கத்தில் உள்ள நான்காவது வீட்டில் பலாப்பழம் வெட்டினால் கூட நமது வீட்டில் அதன் வாசனை தெரிவித்து விடும். எனவே பக்கத்து வீட்டு காரர்களுக்கு தெரியாமல் இதை சாப்பிட முடியாது.
இதே பலாப்பழத்தின் வேறு சில ரகங்களும் நான் பார்த்திருக்கிறேன். அயினி சக்கை என்று அழைக்கப்படும். இது பலாப்பழத்தை போல் இருக்கும். ஆனால் அளவு மிக சிறியதாக இருக்கும். இது சிறிது புளிப்பு சுவையுடையது. இந்த மரம் பெரும்பாலும் வீடுகள் கட்டுவதற்கு பயன்படும். எங்கள் ஊரில் இந்த மரத்தின் கதவு மற்றும் ஜன்னல்களுக்கு தனி மவுசு உண்டு.
கறி சக்கை என்று அழைக்கப்படும் ஒரு ரகத்தையும் பார்த்து இருக்கிறேன். இதுவும் பார்பதற்கு பலாப்பழத்தை போல், ஆனால் சிறிய அளவில் இருக்கும். இதை சமையல் பண்ண பயன்படுத்துவார்கள்.
சீத்தாப்பழம் இதிலும் இரண்டு வகைகள் உள்ளது. பாஞ்சி பழம் என்று எங்கள் ஊரில் அழைக்க படும். ஒரு வகை இனிப்பு சுவை உடையது. இது தான் அதிகமாக நகரங்களில் பார்க்க முடிகிறது. இது மாவு போன்று சுவைப்பதற்கு தித்திப்பாக இருக்கும்.
இரண்டாவது வகை புளிப்பு சுவையுடையது. இதன் மேல் தோலில் முட்கள் காணப்படும். இது இனிப்பு சீத்தாப்பழத்தை விட சிறிது பெரிதாக இருக்கும்.
குறிப்பு: மேலே சொன்ன வகைகள் தெரியாது என்றால் அடுத்த மாதம் குழித்துறையில் நடைபெறும் "வாவுபலி சந்தை"யில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன். நான் கூறியதை விட அதிகமான வகைகளை பார்க்க முடியும். முடிந்தால் அதை பற்றி அடுத்த மாதம் ஒரு இடுகை போடுகிறேன்.
.
.
Monday, June 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
நல்ல பகிர்வு ஸ்டீபன்.
பலாப்பழம், சீதாப்பழம் என்று அசத்திவிட்டீர்கள்.
சிறு வயதில் நண்பர்களோடு சேர்ந்து நொங்கு பறித்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அதெல்லாம் திரும்பக் கிடைக்காத நாட்கள்..
பகிர்வுக்கு நன்றி ஸ்டீபன்.
நான் ஒரு கிராமத்தான் இருந்தும் நான் அறியாத தகவல்கள்
@செ.சரவணக்குமார் said...
//நல்ல பகிர்வு ஸ்டீபன்.
பலாப்பழம், சீதாப்பழம் என்று அசத்திவிட்டீர்கள்.
சிறு வயதில் நண்பர்களோடு சேர்ந்து நொங்கு பறித்து சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அதெல்லாம் திரும்பக் கிடைக்காத நாட்கள்..
பகிர்வுக்கு நன்றி ஸ்டீபன்.//
வாங்க சரவணன்.. நொங்குடன் நம்ம ஊர் சர்பத் சேர்த்து சாப்பிட்டா எப்படி இருக்கும்.... இப்ப நினைச்சாலும் நாக்கில் எச்சில் ஊறுது...
அவை மறக்க முடியாத நினைவுகள் தான்..
பழங்கள் பற்றிய நல்ல தகவல்கள்.
பலாப்பழத்தில் ஒருவகை சுளை ஒரேஞ்ச் வர்ணத்தில் இருக்கும்.
இதை இங்கு சண்பகவரியன் என்பார்கள் மிகுந்த சுவையாக இருக்கும்.
@கே.ஆர்.பி.செந்தில் said...
//நான் ஒரு கிராமத்தான் இருந்தும் நான் அறியாத தகவல்கள்//
அப்படியா செந்தில் அண்ணா ... ஒரு முறை டேஸ்ட் பண்ணி பாருங்கள்... ரெம்ப நல்லா இருக்கும்..
பலாபழம் சீதாப்பழம் மேட்டர் ரொம்ப புதுசா இருக்கு ஸ்டீபன்.. ஊருக்கு வந்தா மறக்காம எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்க.
பிருத்தி சக்கைன்னு ஒன்ன தான் எங்க வீட்டுல கறி வைப்பாங்க.அதுவும் கறி சக்கையும் ஒண்ணா இருக்குன்னும் தோணுது. வாவு பலி பொருட்காட்சிய ஞாபகப்படுத்திட்டீங்க :-)))
வில்லுக்குறி எதுக்கு ரொம்ப பேர் போனதுன்னு ஒரு இடுகை ப்ளீஸ் :)))))
@மாதேவி said...
//பழங்கள் பற்றிய நல்ல தகவல்கள்.
பலாப்பழத்தில் ஒருவகை சுளை ஒரேஞ்ச் வர்ணத்தில் இருக்கும்.
இதை இங்கு சண்பகவரியன் என்பார்கள் மிகுந்த சுவையாக இருக்கும்.//
வாங்க மாதேவி... நீங்கள் சொல்லும் வகை நல்ல தித்திப்பாக இருக்கும்.. எங்கள் ஊரில் அதை செம்பருத்தி வருக்கை என்று சொல்வார்கள்... உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி...
பனையில் ஆண்பனை பெண்பனை என வித்தியாசம் உண்டு. ஆண்பனை காய்பதில்லை; ஆண்பனையின்றி நுங்குமில்லை.
கள்ளு வடிப்பது பெரும்பாலும் ஆண் பனையே! ஆண்பனைக் கள்ளுக்கு மவுசு அதிகம்.
திருஞானசம்பந்தர் செய்த அற்புதப் பட்டியலில்; ஆண்பனையைப் பெண்பனை ஆக்கினார் என்பதும் ஒன்று - நம்புவது நம் தெரிவு.
பலாவில் இருவகை தெரியும். கூழான் பழம் தித்திப்பு அதிகம். நிறைய விதைகள் இருக்கும்.
சீதாப்பழத்தை இலங்கையில் அன்னமுன்னா என்போம்; இதன் பிறப்பிடமான தென்னமெரிக்கப் பெயர்.உங்கள் படத்திலிட்டுள்ள இரண்டாவது பெரிய முள்ளுடைய பழத்தை இலங்கையில் பறங்கி அன்னமுன்னா என்போம்.
பப்பாசியில் ஆண், பெண் உண்டு தெரியுமா?
படங்கள் அருமை!
சீத்தாப்பழம் (அன்னமுன்னா) பார்க்க வாயூறுது. சாப்பிட்டு 25 வருசமாகுது.
@♥ ℛŐℳΣŐ ♥ said...
//பலாபழம் சீதாப்பழம் மேட்டர் ரொம்ப புதுசா இருக்கு ஸ்டீபன்.. ஊருக்கு வந்தா மறக்காம எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்க.//
உங்களுக்கு இல்லாததா.... கண்டிப்பா ஊருக்கு வந்தவுடன் அனுப்பி விடுகிறேன்.. முடிந்தால் அடுத்த மாதம் நான் சொன்ன குழித்துறைக்கு போய் வாருங்கள்... ஆடி மாதம் முழுவதும் அந்த சந்தை இருக்கும்..
சக்கக்கேத்த கூழன்னு ஒரு பழமொழி உண்டு
@கபீஷ் said...
பிருத்தி சக்கைன்னு ஒன்ன தான் எங்க வீட்டுல கறி வைப்பாங்க.அதுவும் கறி சக்கையும் ஒண்ணா இருக்குன்னும் தோணுது. வாவு பலி பொருட்காட்சிய ஞாபகப்படுத்திட்டீங்க :-)))
வில்லுக்குறி எதுக்கு ரொம்ப பேர் போனதுன்னு ஒரு இடுகை ப்ளீஸ் :)))))///
"வாவுபலி சந்தை" நான் ஊரில் இருக்கும் போது தவறாமல் ஒவ்வொரு வருடமும் கலந்து கொள்வேன்....
நீங்கள் சொல்வது போல் உங்கள் ஊரில் பிரித்தி சக்கை என்று அறிய படலாம்... ஆனால் அன்னாசி பழத்திற்கும் அந்த பெயர் உண்டு..
வில்லுக்குறி பற்றி எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன்.. என்னிடம் புகைப்படம் ஒன்று இல்லை... என்வே ஊருக்கு போய்விட்டு கன்டிப்பாக எழுதுவேன்... எங்கள் ஊரை பற்றி எழுத வேண்டுமானால் "வில்லுக்குறி பாலம்" ரெம்ப முக்கியமானது... கண்டிப்பாக புகைப்படத்துடன் விரைவில்..
@யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//பனையில் ஆண்பனை பெண்பனை என வித்தியாசம் உண்டு. ஆண்பனை காய்பதில்லை; ஆண்பனையின்றி நுங்குமில்லை.
கள்ளு வடிப்பது பெரும்பாலும் ஆண் பனையே! ஆண்பனைக் கள்ளுக்கு மவுசு அதிகம்.
திருஞானசம்பந்தர் செய்த அற்புதப் பட்டியலில்; ஆண்பனையைப் பெண்பனை ஆக்கினார் என்பதும் ஒன்று - நம்புவது நம் தெரிவு.
பலாவில் இருவகை தெரியும். கூழான் பழம் தித்திப்பு அதிகம். நிறைய விதைகள் இருக்கும்.
சீதாப்பழத்தை இலங்கையில் அன்னமுன்னா என்போம்; இதன் பிறப்பிடமான தென்னமெரிக்கப் பெயர்.உங்கள் படத்திலிட்டுள்ள இரண்டாவது பெரிய முள்ளுடைய பழத்தை இலங்கையில் பறங்கி அன்னமுன்னா என்போம்.
பப்பாசியில் ஆண், பெண் உண்டு தெரியுமா?
படங்கள் அருமை!
சீத்தாப்பழம் (அன்னமுன்னா) பார்க்க வாயூறுது. சாப்பிட்டு 25 வருசமாகுது.//
வாங்க யோகன் பாரிஸ்...உங்களுடைய தகவல்களையும் அறிந்து கொண்டேன்..
பப்பாளி பழத்திலும் இரண்டு வகை உண்டு எங்கள் வீட்டில் இருக்கிறது... வருகைக்கும் தகவல்களுக்கும் ரெம்ப நன்றி..
@கபீஷ் said...
//சக்கக்கேத்த கூழன்னு ஒரு பழமொழி உண்டு//
ஆமாங்க ... நானும் கேள்விபட்டிருக்கிறேன்..
ஈச்ச மரத்திலும் ஆண் மரம், பெண் மரம் என்று உண்டு (என்று நினைக்கிறேன்). முன்பு நான் இருந்த் வீட்டில் இருந்த ஈச்ச மரம் பூத்தது; ஆனால் காய்க்கவில்லை; கேட்டபோது இந்த மாதிரித்தான் சொன்னார்கள்.
சக்கை, சீத்தாப் பழ விவரங்கள் புதுசு. நன்றி.
@ஹுஸைனம்மா said...
//ஈச்ச மரத்திலும் ஆண் மரம், பெண் மரம் என்று உண்டு (என்று நினைக்கிறேன்). முன்பு நான் இருந்த் வீட்டில் இருந்த ஈச்ச மரம் பூத்தது; ஆனால் காய்க்கவில்லை; கேட்டபோது இந்த மாதிரித்தான் சொன்னார்கள்.
சக்கை, சீத்தாப் பழ விவரங்கள் புதுசு. நன்றி.//
வாங்க ஹுஸைனம்மா .. உங்க ஊர்லேயும் சக்கை என்று தான் சொல்லுவீங்களா!!!!... நான் பயந்து தான் எழுதினேன்.. யாரும் கிண்டல் பண்ணுவாங்களோ என்று... வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி..
இரண்டு பனையும் எங்க கொல்லயில (நிலத்தில்) இருக்கு ஒன்று ஆண்பனை, இன்னொன்று பெண்பனை.... பெண்பனைதான் நுங்கு காய்க்கும்... ஆண்பனை பூக்கும் காய்க்காது....
பகிர்வுக்கு நன்றி.
அவ்வ்வ்வ்... நொங்கு, பலாப்பழம், சீத்தாப்பழம்...
எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச பழ வகைகள்.. இப்படி படத்த போட்டு வெருப்பேத்துரீகளே..!!
ஹ்ம்ம்ம்.. நல்லா இருக்குங்க.. ரெம்ப நன்றி.. :-))
புளிப்பு சீத்தாப் பழம் தெரியாத தகவல். பகிர்வுக்கு நன்றி:)
பலாப்பழம் முக்கனியில் ஒன்று.. சுவையும் மிக அதிகம். ரொம்ப அருமையா சொல்லிருக்கீங்க.. ரொம்ப நன்றி தகவல்களுக்கு.
நீங்கள் சொன்ன இரு பலாக்களையும் சுவைத்திருக்கிறேன் ஸ்டீபன். கூழான்பழம் எனது பாட்டிக்கு பிடித்தமான ஒன்று.
நீங்கள் சொல்வது போல் பேரித்த மரத்திலும் ஆண் மரம் பெண் மரம் என்று உண்டு. பூ பூத்தவுடன் அதை வெட்டி மகரந்த சேர்க்கைக்காக பூக்காத மரத்தில் கட்டி விடுவார்கள். அந்த மரம் காய்க்க மட்டுமே செய்யும்.
ஆகா...சூப்பர்.. கூழன் சக்கை எனக்கு சுத்தமா பிடிக்காது... வரிக்கை சக்கைன்னா பொளிச்சுகெடத்திருவேன்..:))
நம்ம ஊர்ல டவுன் பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் பலா மரம் இல்லாம வீடே இருக்காது... சக்கைப்பழம் சாப்பிடனும் தோனுது...:))
ஆஹா,, சாப்பிட்டப் பழங்களைப் பற்றி பேசிக் கொள்வதும், சாப்பிடாதப் பழங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வதும் சுவாரஸ்யமான விஷயம் தான் ஸ்டீபன்.
அப்படியே monday market, wednesday market, friday market பற்றியும் ஒரு இடுகைப் போடுங்கள். இது இந்த நேயரின் விருப்பம்.ஹி..ஹி..
பழங்கள் குறித்து அதிகம் தெரியாது. தெரிந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. பழங்கள் குறித்த பகிர்வுக்கு நன்றி.
பலாப்பழம் ,சீத்தா பழம் , நுங்கு சர்பத் ஆஹா.....ஊர் நினைவு வந்து விட்டது.!!
எத்தனையோ மர வகைகளில் ஆண் , பெண் என்று இருக்கு. உதாரணம் பப்பாளிப்பழம்.. இதில் ஆண் மரத்தில் பூ மட்டுமே பூக்கும் . அதுப்போல பேரிச்சை மரமும் ஆண் மரப்பூவை வைத்தால் மட்டுமே பேரிச்சை நன்றாக காய்க்கும் . இல்லாவிட்டால் விளைச்சல் இருக்காது.
( விட்டால் பதிவே போட வேண்டி வரும் )
சீத்தாப்பழம் சாப்பிட்டு எத்தனை நாட்கள் ஆகின்றன...... பலாப் பழமும் ஊருக்கு வரும் போதுதான்..... படங்களிலாவது காண முடிந்ததே.... நன்றிங்க.
ஆஹா நண்பரே பழங்களின் புகைப்படங்களும் அதற்குத் தகுந்த தகவல்களும் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
அடடடடா,,,
பலாவில் இத்தனை வகை இருப்பது இப்பொழுதுதான் தெரியும்...
இந்த பலாபழத்தை எங்க அய்யன் வாங்கிவந்து.. அட..அட..அதை அறுக்கும் பக்குவம் இருக்குதே..நாங்கயெல்லாம் குமுக்கா உட்காந்துகுவோம்..உண்ணை தடவி அதை அறத்து உறவுகளுக்கு கொடுத்து..ருசியை கேட்டு மகிழ்வோம்..அதை நினைக்க வைத்தது உங்கள் பதிவு.
தல... அருமையான பதிவு...
நானெல்லாம் பழம் கிடைச்சா திங்குறத தவிர வேற ஆராய்ச்சியெல்லாம் பண்றதில்ல தல... இதுல இவ்ளோ விஷயம் இருக்கா.... இன்னும் சொல்லு தல..
இனிப்பான இடுகைக்கும் இனிப்பான தகவலுக்கும் நன்றி ஸ்டீபன்
தொடரட்டும் இது
//இரண்டாவது வகை பலாப்பழத்தை எங்கள் ஊரை தவிர எங்கும் பார்த்து இல்லை. இந்த பலாப்பழம் பழுத்து விட்டால் நாம் நமது கைகளின் பலத்தால் இதை பிளக்க முடியும்//
மரங்களை வாசம் பிடிச்சே பலாப்பழம் திருடுவதில் எங்கள் கூட்டாளி குழு வில்லாதி வில்லன்கள்:)மூன்று,நான்கு பேர் சேர்ந்து ஒன்று,இரண்டு பழச்சுளைகளை முழுங்கி விடுவோம்.பலாக்கொட்டைய வேறு சுட்டுத்தின்பதோ,வேகவைத்தோ அதையும் விடுவதில்லை:)
கையில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து விட்டு பழத்தை கையில் பிளந்தால் கையில் பலா பால் ஒட்டிக்கொள்ளாது.அது ஒரு கனாக்காலம்.
//சக்கக்கேத்த கூழன்னு ஒரு பழமொழி உண்டு//
கபீஷ்!எங்களுக்கெல்லாம் கரும்பு புழியற சக்கை,அட்றா சக்கை!அட்றா சக்கைதான் தெரியும்:)
பழத்தை தின்று சக்கைகளை அப்படியே விட்டு விடுவதால் சுத்தமா பலாபழம் தான்:)
கூழ்!சோளக்கூழ்,கம்மங்கூழ்தான் கூலா இருக்கும்.
ஸ்டீபன் எனக்கு பிடிச்ச பலாபழம் மற்றும் சீதா பழத்தை போட்டு அசத்திட்டிங்க.
நாடோடி, பலாப்பழங்கள் பற்றி எனக்கும் ஓரளவு தெரியும். கூழன் பழங்கள் எனக்கு சாப்பிடவே பிடிக்காது.
பனையில் ஆண் பனை, பெண் பனை என்று 2 விதமான பனை மரங்கள் உண்டு என்பது சரி தான்.
அய்யோ,இரண்டு பழமும் எனக்கு பிடிக்கும். பலாப்பழத்திலன் வகை தெரிந்தாலும் உங்க மூலமாக ரெஃப்ரெஷ் செய்தாச்சு.அருமை.
சக்கவரட்டி செய்ய கூழன் சக்கை இருந்தால் கொள்ளாம். வேலை கொஞ்சம் எளுப்பத்தில் முடியும்.
அயினிச்சக்கையை மாத்தூர் தொட்டிப்பாலம் பார்க்கப்போனபோது வாங்கினேன்.
வருக்கச்சக்கை பழுக்குமுன் (நல்லா முற்றி இருக்கணும்)சுளைபிரிச்சு சிப்ஸ் செஞ்சா பலே ஜோர்.
ஆமாம். இந்த வாவுபலி சந்தை எங்கே நடக்குது?
சூப்பர் பதிவு. ரசித்தேன்
//கறி சக்கை என்று அழைக்கப்படும் ஒரு ரகத்தையும் பார்த்து இருக்கிறேன்//
அதை சீமச்சக்க என்று சொல்லுவாங்க. உருளைக்கிழங்கும், கூடவே சின்ன உள்ளியும் போட்டு மசால்கறி வெச்சு அதுகூட ஒருகை பக்கோடாவும் அள்ளிப்போட்டு கறிவெச்சா,ஸ்ஸ்ஸ்.. மழைக்காலத்துல ரசத்துக்கு அதுதான் தொடுகறி.பிரித்திச்சக்கைன்னு அன்னாசியைத்தான் சொல்லுவாங்க.
அயினிச்சக்க திற்பரப்பு,மாத்தூர் தொட்டிப்பாலம் ஏரியாவுல மலிஞ்சு கிடக்கும்.அதோட விதைகளையும் வறுத்து தின்னலாம் தெரியுமோ!!!
கடைசி படத்தில் இருப்பது,'ஆத்திச்சக்க' இதுவும் உள்ளே இனிப்பா, மாவுமாதிரி இருக்கும்.எங்க சித்திவீட்டுல பாத்துருக்கேன்.
கூழன்சக்கையை சக்கப்பணியாரத்துக்கும், செங்கவருக்கையை வரட்டிக்கும் உபயோகப்படுத்தினா ரொம்ப பொருத்தமா இருக்கும்.
பின்னூட்டம்ங்கிற பேர்ல பதிவு போட்டதுக்கு மாப்பு :-))))
@துளசி கோபால் said...
//சக்கவரட்டி செய்ய கூழன் சக்கை இருந்தால் கொள்ளாம். வேலை கொஞ்சம் எளுப்பத்தில் முடியும்.
அயினிச்சக்கையை மாத்தூர் தொட்டிப்பாலம் பார்க்கப்போனபோது வாங்கினேன்.
வருக்கச்சக்கை பழுக்குமுன் (நல்லா முற்றி இருக்கணும்)சுளைபிரிச்சு சிப்ஸ் செஞ்சா பலே ஜோர்.
ஆமாம். இந்த வாவுபலி சந்தை எங்கே நடக்குது?
சூப்பர் பதிவு. ரசித்தேன்//
வாவுபலி சந்தை ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் நடைபெறும். அது முழுக்க முழுக்க மரம் மற்றும் செடிகளின் கண்காட்சி. "ஆடிவெள்ளி" அன்று அங்கு சிறப்பாக இருக்கும். அந்த நாளில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு லேக்கல் விடுமுறை விடுவார்கள்.... ஆடி மாதம் முழுவதும் இந்த கண்காட்சி நடைபெறும்... முடிந்தால் ஒருமுறை சென்று பாருங்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி துளசி மேடம்..
@அமைதிச்சாரல் said...
//கறி சக்கை என்று அழைக்கப்படும் ஒரு ரகத்தையும் பார்த்து இருக்கிறேன்//
அதை சீமச்சக்க என்று சொல்லுவாங்க. உருளைக்கிழங்கும், கூடவே சின்ன உள்ளியும் போட்டு மசால்கறி வெச்சு அதுகூட ஒருகை பக்கோடாவும் அள்ளிப்போட்டு கறிவெச்சா,ஸ்ஸ்ஸ்.. மழைக்காலத்துல ரசத்துக்கு அதுதான் தொடுகறி.பிரித்திச்சக்கைன்னு அன்னாசியைத்தான் சொல்லுவாங்க.
அயினிச்சக்க திற்பரப்பு,மாத்தூர் தொட்டிப்பாலம் ஏரியாவுல மலிஞ்சு கிடக்கும்.அதோட விதைகளையும் வறுத்து தின்னலாம் தெரியுமோ!!!
கடைசி படத்தில் இருப்பது,'ஆத்திச்சக்க' இதுவும் உள்ளே இனிப்பா, மாவுமாதிரி இருக்கும்.எங்க சித்திவீட்டுல பாத்துருக்கேன்.
கூழன்சக்கையை சக்கப்பணியாரத்துக்கும், செங்கவருக்கையை வரட்டிக்கும் உபயோகப்படுத்தினா ரொம்ப பொருத்தமா இருக்கும்.
பின்னூட்டம்ங்கிற பேர்ல பதிவு போட்டதுக்கு மாப்பு :-))))//
விதையை வறுத்து அல்லது சுட்டு தின்னுவது சூப்பரா இருக்கும்... இதை அவித்து கூட்டும் வைப்பார்கள்.. அதுவும் கிழங்கு போல் சூப்பரா இருக்கும்... எங்க ஊரை நல்லா சுத்தி இருக்கீங்க.. நீங்களும் நம்ம மாவட்டங்களா?.......
இதுக்கு எதுக்கு மாப்பு...மத்தாப்பூ,,எல்லாம் சின்னபுள்ளதனாம...ஹி..ஹி..
ரொம்ப நன்றி நாடோடி.
கன்னியாகுமரிக்கு இன்னொருக்கா அதுவும் குழித்துறைக்கு ஆடிமாசம் வரக் கிடைக்குமான்னு தெரியலை.
விவரம் கிடைச்சதே போதும்.
'அங்கே'யும் பின்னூட்டத்தில் சொன்னது நல்லது. நம்ம மக்கள்ஸ்க்கு விவரம் போய்ச்சேர்ந்துரும்:-)))
சொல்ல விட்டுப்போச்சு.
இந்த கறிச்சக்கையை திருச்சூர், எர்ணாகுளம் பக்கம் 'கடச்சக்க'ன்னு சொல்றாங்க. இதை சிப்ஸ் செஞ்சா .....ஆஹா.....
இதே சக்கையை ஃபிஜியில் ப்ரெட் ஃப்ரூட்ன்னு சொல்வாங்க. இதைக் கொண்டுபோகன்னே அந்தக் காலத்துலே வெள்ளைக்காரன் ஃபிஜி வந்துருக்கான். எதுக்கு?
அடிமைகளுக்கு சாப்பாடு:(
துளசி அக்கா கூறும் பிறட் வுறுட்(bread fruit) ஐ ,இலங்கையில் ஈரப் பலா என்போம். கறிக்கு மாத்திரம் பாவிப்போம்.
இதன் இலைக்கும், பலா இலைக்கும் உருவில் மிகுந்த வேறுபாடு உண்டு.
மக்கா சக்கையில் 'செம்பருத்தி வருக்கை', 'முண்டன் சக்கை' என்று பல இனம் உண்டு. நான் நினைக்கேறேன் அதுவும் வருக்கையில் ஒரு இனம் தான். அப்புறம் 'பிருத்தி சக்கை' என்றால் நாகர்கோயில் காரனுக்கு கூட தெரியாது. 'பாஞ்சி பழம்' நம்ம ஊருக்கு மட்டும் உள்ள வார்த்தை அது.
//துளசி அக்கா கூறும் பிறட் வுறுட்(bread fruit) ஐ ,இலங்கையில் ஈரப் பலா என்போம். கறிக்கு மாத்திரம் பாவிப்போம்.
இதன் இலைக்கும், பலா இலைக்கும் உருவில் மிகுந்த வேறுபாடு உண்டு.// ஆமாம் யோகன் பாரிஸ்(Johan-Paris) .
எங்கள் ஊரில் அதன் பெயர் 'கறி சக்கை'.
Post a Comment