Wednesday, April 16, 2014

சூடு கண்ட பூனையாய் நான்_தேங்காய் சிதறல்!!!

சூடு-1: தேங்காய் சிதறல்

எனது மாவட்டம் முன்பு கேரளாவோடு தொடர்பு இருந்ததாலோ என்னவோ, எங்கள் மாவட்டத்தில் உள்ளவர்கள், எந்த‌க் குழம்பு வைத்தாலும் தேங்காய்ச் சேர்க்காமல் இருக்க மாட்டார்கள். என‌து மனைவியிடமும் தேங்காய் இல்லாமல் ஒரு குழம்பு வை என்றால் முழிக்கத் தான் செய்வார். அதனால் எங்கள் இருவருக்கு மட்டுமே ச‌மையல் செய்தாலும், வாரம் இரண்டு தேங்காயாவது செலவு ஆகும். அதனால் ஊரிலிருந்து எப்போது வந்தாலும் ஓர் அட்டைப்பெட்டியில் தேங்காய் எடுத்துவர மறப்பதில்லை.

சமையலுக்குத் தேவையான தேங்காயை என்றைக்குமே மனைவி தான் இரண்டாகப் பிளைப்பார். அவர் கொஞ்சம் மெதுவாக டொக், டொக் என்று பலதடவை வெட்டுக்கத்தியால் எல்லாபுறங்களிலும் வெட்டி சரிசமமாக இரண்டாகப் பிளந்துவிடுவார். அன்றைக்கு ஆபிஸுக்கு லீவு என்பதால் நான் வீட்டில் ஹாலில் அமர்ந்து டீவியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மனைவி தேங்காய் உடைப்பதற்கு டொக்..டொக் என்று வெட்டத் துவங்கினார். நாம் வீட்டில் இருக்கும் போது மனைவி தேங்காய் உடைப்பதா? என்று கடமையுணர்ச்சிப் பொங்கலுடன் கிச்சனுக்குச் சென்று மனைவிடம் இருந்த தேங்காயை வாங்கினேன்.

அவர் வேண்டாம் உங்களால் சரியாக உடைக்க முடியாது, நானே உடைத்துக் கொள்கிறேன், நீங்க போய் எப்பவும் போல் டீவியைப் பாருங்க என்று என்னிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். பிளாக் பண்ணிய வெப்சைட்டேயே ப்ராக்ஸிப் போட்டு உடைக்கிறோம், இதைச் செய்ய மாட்டோமா? என்று மனைவியை ஒரு நக்கல் பார்வையால் பார்த்துக் கொண்டே தேங்காயை உடைக்கத் தயாரானேன்.

தேங்காய் எப்போதும் வாங்குவதை விட அளவில் கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. தேங்காய் எப்படி உடைக்க வேண்டும் என்று தெரியுமா? இப்படி உடைக்க வேண்டும்! என்று மனைவியைப் பார்த்துக் கொண்டே தலைக்கு மேல் வெட்டுக்கத்தியை ஓங்கி முதல் வெட்டை தேங்காயின் மீது போட்டேன், அந்த வெட்டு தேங்காயின் நடுவில் விழாமல் ஓரமாக விழுந்து தொலைத்தது. வெட்டு சரியா விழவில்லை! என்று மனைவியைப் பார்த்து வழிந்துவிட்டு, இரண்டாவது வெட்டை போட்டேன். வெட்டிய வேகத்தில் தேங்காயில் மேல் உள்ள ஒரு சிறு துண்டு சிரட்டை பாய்ந்து வந்து நெற்றியைப் பதம் பார்த்தது. சுர்ரென்று எரிச்சலுடன் வந்த வலியை வெளிக்காட்டாமல் தேங்காயைப் பார்த்தேன். இப்போது விழுந்த வெட்டு முன்பு விழுந்த வெட்டிற்கு எதிர் பக்கத்தில் தேங்காயின் ஓரமாக விழுந்து சிரட்டையைச் சிராய்த்திருந்தது. அந்தச் சிராய்த்த சிரட்டைத் துண்டுதான் என் நெற்றியைப் பதம் பார்த்திருக்க வேண்டும்.

இந்த முறையும் தேங்காயுடன் மோதியதில் நாக்அவுட் ஆனதால், மனைவியின் முகத்தைப் பார்க்காமல் கோபத்தில் இன்னும் வலுவாக ஓங்கி மூன்றாவது வெட்டை குறிப்பார்த்து நடுவில் போட்டேன். வெட்டு எங்கு விழுந்தது என்று பார்பதற்குள் கையிலிருந்த தேங்காய் நான்கு பகுதியாக உடைந்து, ஆளுக்கொரு திசையாகப் பலமான சத்ததுடன் போய் விழுந்தது. வடிவேலு ஒரு படத்தில் தன்னுடைய மனைவியிடம் சண்டையிடும் போது அங்க என்னமா சத்தம்! என்று முறுக்கு மீசை மாமானார் வீட்டில் கீழிருந்து கேட்பது போல, எங்களுடைய ஹவுஸ் ஓனர் ஆன்டியும் அங்க என்னமா சத்தம் என்று கீழிருந்துக் குரல் கொடுக்க, என்னுடைய மனைவி வெளியில் சென்று ஒண்ணும் இல்ல ஆன்டி, தேங்காய் உடைக்கும் போது கைத் தவறிக் கீழே விழுந்துவிட்டது என்று சமாளித்து வந்தார்.

நான் மெதுவாக‌ உடைத்திருந்தாலும் இரண்டு பாகமாக உடைத்தியிருப்பேன். இப்படி நான்கா உடைத்து போட்டிருக்கீங்க?. இதைத் துருவலில் வைத்து எப்படித் துருவது? என்று என்னை முறைக்க ஆரம்பித்தாள் மனைவி.

இவ்ளோ பன்ணிட்டோம்! இதைப் பண்ண மாட்டோமா! என்று மனைவின் கையிலிருந்த தேங்காய் துண்டுகளையும், கத்தியும் எடுத்துக் கொண்டு போய் ஹாலில் உக்கார்ந்து சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட‌த் துவங்கினேன். ஹாலில் ஓடிக்கொண்டிருந்த டீவியில், டேய்!! சின்னப் பேச்சாடா பேசினா! இதுவும் வேணும்! இதுக்கு மேலும் வேணும்! என்ற வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடி ஆதித்யா சேனலில் போய்க்கொண்டிருந்தது.குறிப்பு: இந்தத் தலைப்பில் அவ்வப்போது மேலும் சில‌ சிறுகதைகள் வரும். அதனால் தான் சூடு-1 என்று இதற்குச் சப் டைட்டில் போட்டிருக்கிறேன்.

.

5 comments:

‘தளிர்’ சுரேஷ் said...

தேங்காய் உடைக்கிறதும் ஒரு கலையோ?! ஹாஹா!

திண்டுக்கல் தனபாலன் said...

ரொம்பவே சிரமப்பட்டுள்ளீர்கள்...

நாடோடி said...

@‘தளிர்’ சுரேஷ் said...
//தேங்காய் உடைக்கிறதும் ஒரு கலையோ?! ஹாஹா!//

வாங்க சுரேஷ்,

வந்து படித்து ரசித்தமைக்கு நன்றி.

@திண்டுக்கல் தனபாலன் said...
//ரொம்பவே சிரமப்பட்டுள்ளீர்கள்...//

வாங்க தனபாலன்,

தொடர் வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி.

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

sekar said...

ரசிக்கும்படி எழுதும் திறமை உங்களுக்கு இருக்கிறது .

அதே சமயத்தில் நல்ல கருத்துக்களும் மறைந்து இருக்கிறது

Related Posts with Thumbnails