Thursday, June 16, 2016

உறவுகளைச் சிதைத்த நிதி நிறுவனத்தின் (PACL) மோசடி!!!

கிராமங்களில் தனியார் முதலாளிகளால் நடத்தப்படும் நிதி நிறுவனங்களை நம்பி பணத்தை கட்டும் மக்களையும், தனி ஆட்களால்  நடத்தப்படும் ஏலச்சீட்டுகளில் பங்கெடுக்கும் மக்களையும் அதிகப்படியான வட்டிக்கு ஆசைப்படும் மக்கள், கொழுத்த லாபத்திற்கு பேராசைப் படும் மக்கள் என்ற சிறுமை படுத்தும் சொற்றொடர்களில் அடக்கிவிட முடியாது. இப்படியான நிதி நிறுவனங்களிலோ, ஏலச்சீட்டுகளிலோ பணம் கட்டுபவர்கள் பெரிய அளவில் எதிர்கால திட்டங்கள் தீட்டி, வட்டிகளைக் கணக்கிட்டு, வரும் லாபத்தை வைத்துக் கொண்டு பெரும் குபேரர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் எவரும் அந்தச் சீட்டுகளில் சேர்வதில்லை. மாறாகப் பங்காளி சொன்னான், பக்கத்து வீட்டுக்காரன் சேர்ந்திருக்கிறான், சொந்த பந்தங்களும் என்னை அந்தச் சீட்டுகளில் சேர்ந்துகொள்ளச் சொன்னார்கள் என்ற வெள்ளந்தி தனமான காரணங்களால் தான் இப்படியான மோசடிகளில் விட்டில் பூச்சிகளாக பெரும்பாலானவர்கள் விழுகிறார்கள்.

எங்கள் கிராமத்தில் இந்த பிஏசிஎல் நிறுவனம் கடந்த எட்டு வருடங்களில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய வேர்களைப் பரப்பியிருந்தது, உள்ளூரில் சிறுசிறு வேலைகள் செய்துகொண்டு கொஞ்சம் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் எல்லோரும் இந்த நிறுவனத்தின் முகவர்கள் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய உறவினர்கள் ஒருவரையும் விடாமல் பாலிசி எடுத்துக்கொள்ளுமாறு துரத்தினார்கள். சில இடங்களில் அவர்களுக்கென்று தனியாக அலுவலகமும் வைத்திருந்தார்கள். இந்த பிஏசிஎல் நிறுவனத்திலிருந்து எங்கள் ஊரில் செயல்பட்ட முகவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அதனால் தான் சுலபமாக, வெகு விரைவில் மக்களிடம் இந்த நிறுவனம் காலூன்ற முடிந்தது.

முன்பெல்லாம்  நான் வெளிநாட்டிலிருந்து ஊருக்குச் சென்றால் இந்த பிஏசிஎல் நிறுவனத்தின் முகவர்கள் குறைந்தது ஒரு பத்து பேராவது என்னைத் தேடி வீட்டிற்கு வருவார்கள். அதில் பாதி பேர் நெருங்கிய உறவினர்களாக இருப்பார்கள், மீதம் பாதி பேர் என்னையோ அல்லது என் குடும்பத்தில் உள்ளவர்களையோ தெரிந்தவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணங்கள் சொல்லித் தப்பித்து விடுவேன். தொடக்கத்தில் என்னிடம் இதுவும் எல்ஐசி போலத் தான், ஆனால் இது ஐந்து வருடத்தில் முடிந்துவிடும் என்பது போல மேலோட்டமாக சொன்னார்கள், ஒருமுறை என்னுடைய உறவினர் ஒருவரிடம் இந்த நிறுவனத்தின் திட்டங்கள் பற்றிய கோப்புகளை காட்டச் சொன்னேன், அப்போது தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, நாம் கொடுக்கும் பணத்திற்கு இவர்கள் நிலங்களைத் தான் கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள், எங்கு நிலம் இருக்கிறது? அந்த நிலத்தை நாம் பார்க்க முடியுமா? எப்போது எனக்கு அது கிடைக்கும் என்ற என்னுடைய கேள்விக்கே அந்த முகவரிடம் பதில் இல்லை. நீங்க அதையெல்லாம் பார்க்க வேண்டாம், ஐந்து வருடம் முடியும் போது இவ்வளவு ரூபாய் (ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் தொகையை சொல்லி) உங்களுக்குக் கிடைக்கும் என்பது போல தான் சொன்னார்.

இந்த பிஏசிஎல்  நிறுவனத்திலிருந்து முகவர்களாகச் சுற்றி வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நிறுவனத்தின் செயல்முறைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இதுவும் ஒரு எல்ஐசி போன்று செயல்படும் ஒரு நிறுவனம், எல்ஐசியில் நாம் சேர்ந்திருக்கும் திட்டம் முடிவு பெற பதினைந்து வருடங்கள் பணம் கட்ட வேண்டும், அதன் பிறகு தான் நமக்கு மொத்த தொகை கைக்கு வரும். ஆனால் பிஏசிஎல் நிறுவனத்தின் திட்டங்களில் ஐந்து வருடம் பணம் கட்டினால் போதும், அடுத்த ஆறு மாதங்களில் முதிர்வு பணம் கைக்கு வந்துவிடும் என்பது போல தான் எல்லோரிடம் கொண்டு சேர்த்தார்கள். இன்னும் சிலரிடம் கூட்டுறவு வங்கிகளிலும், அரசு வங்கிகளிலும் கட்டப்படும் ஆர்டி போலத் தான் என்றும், அதில் கிடைக்கும் முதிர்வு தொகையை விட இதில் அதிகமாகக் கிடைக்கும் என்றும் போகிற போக்கில் அள்ளி விட்டார்கள்.

கிராமங்களில் உள்ளவர்கள் மேலே சொல்லியவற்றையெல்லாம்  எப்படி நம்புகிறார்கள் என்பதில் தான் உளவியல் சிக்கல் இருக்கிறது, மேலே சொல்லப்படும் வார்த்தைகள் அனைத்தும் முகவர்கள் என்று சொல்லப்படும் உறவினர்களால் ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்கப்படுகிறது. இங்கு பிஏசிஎல் என்ற நிறுவனத்தை நம்புவதை விட மக்கள், இந்த நிறுவனத்தின் முகவர்கள் என்று சொல்லி வரும் உறவினர்களின் வார்த்தைகளை நம்புகிறார்கள், என்னுடைய பங்காளி என்னை ஏமாற்ற மாட்டான், என்னுடைய சித்தப்பா என் பணத்தின் மீது ஆசைப்பட மாட்டார், நண்பன் எதற்காக என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்பது போல இந்த முகவர்கள் என்ற உறவினர்கள் மீது அபார நம்பிக்கை வைக்கிறார்கள். இதனால் தான் இந்த நிதி நிறுவனம் செய்த மோசடியை, முகவர்கள் என்ற உறவினர்கள் செய்த மோசடியாக நினைத்து புழுங்குகிறார்கள். இன்றைக்கு இந்த பிஏசிஎல் என்ற நிறுவனம் செய்த மோசடியின் விளைவு பல குடும்பங்களின் உறவுகளை மிக மோசமாகச் சிதைத்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தால் இந்த பிஏசிஎல் நிதி நிறுவனத்தின் முகவர்கள் பத்து பேர் என்னைத் தேடி வருவார்கள் என்று சொன்னேன் அல்லவா, அவர்களைக் கல்யாணத்திற்கு முன்பு வரை எப்படியோ சமாளித்து விட்டேன், கல்யாணம் முடிந்த பிறகு இன்னும் கூடுதலாக வரத் தொடங்கினார்கள், இதற்கு ஒரே வழி, யாராவது ஒருவரிடம் ஒரு திட்டத்தில் சேர்ந்துவிட்டு, எல்லோரிடமும் நான் அவரிடம் பணம் கட்டுகிறேன் என்று முடித்துக் கொள்ளலாம் என்றால் யாரிடம் திட்டத்தில் சேர்வது என்ற சிக்கல்?.

நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் என்னுடைய குடும்ப காரர்களே பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தில் முகவர்களாக இருக்கிறார்கள், அவர்களிடம் நான் சேராமல் உங்களிடம் சேர்ந்தால் நன்றாக இருக்காது என்று அவர்களை ஒரு வழியாகச் சமாதான படுத்தி அனுப்பிவிட்டு, குடும்ப காரர்களில் இருக்கும் முகவர்களிடம் சேரலாம் என்றால் எந்தக் குடும்ப காரரிடம் சேர்வது என்ற சிக்கல்?.

மனைவியின் உறவினர்கள் என்ற முறையில் இரண்டு பேர் முகவர்கள், அண்ணனின் மனைவியின்  உறவுமுறையில் சிலர், எங்களுடைய குடும்ப உறவினர்களில் பலர் என்று ஒரு பெரிய லிஸ்டே இருந்தது. என்னுடைய மனைவி என்னிடம், "எங்களது உறவினர்களாக இருக்கும் முகவர்களிடம்  நான் பேசிக்கொள்கிறேன்" வேறு இருப்பவர்களிடம் எவராவது ஒருவரிடம் சேருங்கள் என்று ஒரு சிக்கலை அவிழ்த்தார். மற்ற இரண்டு உறவினர்களில் கண்டிப்பாக ஒருவர் வீதம் போட்டு தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை வந்தது. அண்ணனின் உறவினரில் அண்ணியின் சித்தி, எங்களின் குடும்பத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார், இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது அண்ணனின் குழந்தைகளை பார்ப்பதற்காக வாருவார், எனவே அவரிடமே அண்ணனுடைய குழந்தையின் பெயரில் ஒரு திட்டத்தில் சேரலாம் என்றும், என்னுடைய மனைவி திருமணம் முடிந்த முதல் ஒரு வருடம் நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார், எனவே அவருடைய பெயரில் ஒரு திட்டம் எடுக்கலாம் என்று என்னுடைய பெரியப்பாவின் மகள் எனக்கு அக்காள் முறை வரும் அவர்களிடம் சேர்வது என்றும் முடிவு செய்தோம். எல்லாம் ஒரு வருடம் ஆறு மாதம் நன்றாகத் தான் போனது, பணத்தை மாதம் மாதம் வீட்டிற்கே வந்து வாங்கிச் சென்றார்கள். ஒரு மாதம் பணம் கொடுப்பதற்கான ரசீதை அடுத்த மாதம் பணம் வாங்கும் போது கொடுத்தார்கள்.

இந்த பிஏசிஎல் நிறுவனத்தின் மீது சிபிஐ புகார், அலுவலகங்களில் சிபிஐ  ரெய்டு என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்ததிலிருந்து அடிக்கடி எங்கள் வீடுகளுக்கு வந்து கொண்டிருந்த இந்த நிறுவனத்தின் முகவர்களான உறவினர்கள் இப்போது வருவதில்லை, என்னுடைய அக்கா வாரத்திற்கு ஒரு நாளாவது எங்களுடைய வீட்டிற்கு வருவார். இந்த நிதி நிறுவனத்தின் மோசடிக்கு பிறகு எங்களிடம் என்ன சொல்வது என்ற தர்மசங்கட நிலைக்கு ஆளாகி வீட்டிற்கு வருவதை குறைத்துக்கொண்டார். நாங்களும் அவரை எங்காவது பார்த்தால் அவரிடம் என்ன கேட்பது, எப்படி கேட்பது என்ற தயக்கம், அப்படியே அவரிடம் கேட்டாலும், இந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை பற்றிய செய்திகள் அவருடைய மேலதிகாரிகளும் சரியாக சொல்வதில்லை என்று பதில் சொல்லுகிறார்கள். ஆனால் கட்டிய தொகை கண்டிப்பாக கிடைத்துவிடும் என்று இன்னும் எங்களை நம்ப சொல்லுகிறார்கள்.

இது என்னுடைய கதை இல்லை, பலருடைய குடும்பங்களில் இது தான் நிலைமை, காரணம் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல் எவரும் இந்த நிறுவனங்களின் நம்பிக்கையை விட, இந்த உறவினர்களின் வார்த்தையை நம்பி  தான் திட்டங்களில் அதிகமாகசேர்ந்தார்கள். நானும் கூட இந்த இரண்டு குடும்ப முகவர்களிடமும், உங்களுடைய நிறுவனத்தின் மீது எனக்குத் துளியும் நம்பிக்கை கிடையாது, உங்களின் வார்த்தையை நம்பியும், இதனால் உங்களுக்கும் ஒரு சிறு பலன் கிடைக்கும் என்ற அடிப்படையில் தான் நான் இந்தத் திட்டத்தில் சேருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

இந்த பிஏசிஎல் நிறுவனத்தில் சேர்ந்திருந்த முகவர்களுக்குக் கொடுக்கப்படும் போனஸ் தொகையானது மற்ற நிறுவனங்களில் கொடுக்கப்படும் தொகையை விட அதிகம், அதனால் அதிகமான முகவர்கள் இந்த நிறுவனத்தில் சேருவதில் காட்டிய ஆர்வம் இந்த நிறுவனத்தின் மோசடிக்குத் துணையாக அமைந்தது, மிகக் குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் தன்னுடைய கிளைகளைக் கிராமங்களின் அடிவரையிலும் சென்று சேர்த்தது. முதல் ஐந்து வருடங்களில் சேர்ந்தவர்களுக்கு, சொல்லிய காலத்திற்குள் முதிர்வு தொகையை கொடுத்திருந்தது, அவ்வாறு கிராமங்களில் முதிர்வு தொகை பெற்ற ஒரு சிலரின் பெயர்களை மூலதனமாகச் சொல்லி  பலரிடம் இந்தத் திட்டங்களை கொண்டு சேர்த்ததில் இந்த முகவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

இந்த நிதி நிறுவத்தின் மோசடியால் பணத்தை இழந்தது ஒருபுறம் இருந்தாலும், குடும்ப உறவினர்களின் உறவுகளிலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. எனக்குத் தெரிந்து இன்றளவும் பலகுடும்பங்களில் உள்ளவர்கள் தான் கட்டிய பணத்தை உறவினர்களானமுகவர்களிடம் கேட்டு சண்டைகள் போடுகிறார்கள். இந்தச் சண்டையை சகிக்க முடியாமல் சில முகவர்கள் தங்களுடைய கை காசுகளைப் போட்டும், கடன் வாங்கியும் அவர்களுக்கான தொகையை திரும்பக் கொடுத்து குடும்ப உறவினர்களைத் திருப்தி படுத்துகிறார்கள்.




சஹாரா நிறுவனம் செய்த நிதி நிறுவன மோசடியை விட இந்த பிஏசிஎல் நிறுவன மோசடி பல மடங்கு பெரியது என்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிதி நிறுவன மோசடி இது தான் என்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்வதற்கு முறையான அங்கீகாரம் பெறவில்லை என்று இன்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இவர்கள் ஒவ்வொரு மாதமும் வசூலிக்கும் பல கோடி ரூபாய் தொகையை அரசு அங்கீகரித்த வங்கிகள் மூலமாகத் தான் பரிமாற்றம் செய்திருப்பார்கள், சாமானியனான என்னால் ஒரு வங்கியின் மூலம் இன்னொருவரின் வங்கி கணக்கிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் கூட முழுமையாகப் பண பரிமாற்றம் செய்ய முடியவில்லை. ஒரு ரூபாய் பண பரிமாற்றம் செய்ய வேண்டுமானாலும்  நம்மிடம் ஆயிரத்தெட்டு ஆவணங்கள் இருக்க வேண்டும், எதற்காக என்று கேட்டால் இது தான் வாங்கியின் சட்ட நடைமுறை என்று நமக்கு வகுப்பு எடுக்கிறார்கள். இவர்களில் சட்டம் யாரை நோக்கிப் பாயும் என்பது ஏழை விவசாயி பாலனை தாக்கியதிலும், முதலாளி மல்லயாவை பத்திரமாக லண்டனில் சேர்த்ததிலும் தான் பல்லிளிக்கிறதே!..


இந்த நிறுவனத்தின் மோசடியைப் பற்றிய விகடன் கட்டுரை:

Monday, June 13, 2016

ஏன்டா டேய்! காசு கேக்குற நேரமா இது!

பேச்சுலராக சவுதியில் வேலைப்பார்த்த போது, கம்பெனி கொடுத்திருந்த ஹெஸ்ட்கவுஸில் பத்திலிருந்து பன்னிரண்டு பேர் ஒன்றாக தங்கியிருப்போம். அவ்வாறு இருப்பவர்களில் ஒருவர் வேறு ப்ரொஜெக்ட்களுக்காக வேறு இடங்களுக்குச் சென்றால் புதிதாக இன்னொருவர் இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்து கொள்வார். எப்படியும் பத்துபேருக்கு மேல் தான் அந்த ஹெஸ்ட்கவுஸில் எப்போதும் தங்கியிருப்போம். நான்கு பெரிய‌ படுக்கையறை கொண்ட பங்களாவைத் தான் கம்பெனி எங்களுக்குக் கொடுத்திருந்தது. அங்குத் தங்கியிருக்கும் நாங்கள் அனைவரும் ஒன்றாக‌ சமையல் செய்து தான் சாப்பிடுவோம்.

சமையல் செய்வதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வேண்டிய‌ பணத்தின் கணக்கு வழக்குகளை பராமரிப்பதற்கு எங்களுள் ஒருவரை நியமித்துக் கொள்வோம். அவரை நாங்கள் மெஸ் மேனேஜர் என்று அழைப்போம். அவரிடம் மாத சம்பளம் கைக்கு வந்தவுடன் ஒரு குறிப்பிட்ட தொகையை எல்லோரும் கொடுத்து விடுவோம்.அவர் அந்த பணத்தை வைத்துக்கொண்டு அந்த மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துவிடுவார்.

எங்களுக்குள் சமையல் வேலைகள் ஒவ்வொன்றையும் பிரித்துக்கொள்வோம், எவர் அன்றைக்குச் சமையலுக்கு தலைமை தாங்குகிறாரோ அவருக்கு மற்றவர்கள் உதவிகள் செய்வோம், செம ஜாலியாகவும், கலாட்டாவாகவும் சமையல் நடக்கும். எங்களுள் ஒரு மூன்று நான்கு பேருக்கு மட்டும் தான் சமையல் நன்றாகச் செய்ய தெரியும், மற்றவர்கள் அவர்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மாதத்தின் தொடக்கத்தில் காலை வேளைக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட், கார்ன் ப்ளெக்ஸ், வோட்ஸ் என்று ஆரம்பித்து அப்படியே பால், காப்பி, டீ, பிரட் வித் மயோனிஸ் என்றாகி மாத கடைசியில்  பிளாக் டீ வித் பிரட் மட்டும் என்று வந்து நிற்கும். மதியத்திற்கும் மாத தொடக்கத்தில் ரைஸ், குழம்பு, கூட்டு, பொரியல், ஆம்லெட், அப்பளம் என்று ஆரம்பித்து ரைஸ் வித் தயிரில் வந்து நிற்கும். மாத தொடக்கத்தில் வரும் வார இறுதியிலும் அப்படித்தான், மட்டன் அல்லது சிக்கன் பிரியாணி வித் பிஷ் அல்லது பிரான் ஃப்ரை என்று ஆரம்பித்து மாத கடைசியில் ரசம் சாதம் என்று வந்து நிற்கும்.

சமையல் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் எல்லாம் இணையத்தைப் பார்த்து சமையல் செய்து தங்களின் சமையல் திறனை வளர்த்துக் கொள்வார்கள். பெயரில்லா சட்னியில் ஆரம்பித்து பெயரில்லா பிரியாணி வரை செய்து டிரையல் பார்த்துக் கொள்வார்கள். மாத கடைசியில் இன்னும் காமெடியாக இருக்கும், மேலே நான் சொல்லிய படி மாதத்தின் தொடக்கத்திலேயே ஹெவி பர்சேஸ் செய்து மெஸ் பணத்தை காலி செய்துவிட்டு, மாத இறுதியில் பிரிஜில் மிச்சம் இருக்கும் பொருட்களை வைத்துச் சமையல் செய்யவேண்டும், இந்த மாதிரி நேரங்களில் சமையல் ஜாம்பவான்கள் எவரும் சமையலில் இறங்காமல், சமையல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பவனை அழைத்து கோதாவில் கோத்து விட்டுவிடுவார்கள்.

ஏதாவது ஒரு காய் மாதத்தின் தொடக்கத்தில் வாங்கி வைத்து, எவரும் குழம்பு வைக்கும் போது சீண்டாமல் அப்படியே வாடி வதங்கி பிரிஜில் ஓரத்தில் இருக்கும், அன்றைக்குப் பலிகடாவான நண்பனிடம் "அந்தக் காய் இருக்கிறது,  யூடியுபில் எப்படிச் செய்வது என்று பார்த்து விட்டு டிரை பண்ணு!" என்று உசுப்பேற்றுவார்கள். அவனும் அந்தக் காயை வைத்து எப்படிக் குழம்பு செய்வது என்று நாலைந்து வீடியோவை பார்த்து ஒரு பெரிய லிஸ்டுடன் சமையலறைக்கு வருவான். வந்தவன் கேட்கும் முதல் மசாலா பொருளே இருக்காது, அப்படியே அவன் ஒவ்வொரு மசாலா பொருளாக சொல்லி ஒரு பத்து பொருள் கேட்டால், இரண்டு தான் சமையலறையில் இருக்கும். அய்யோ! இதை வைத்து எப்படிக் குழம்பு செய்வது என்று கேட்கும் அப்பாவியிடம், நாங்க இருக்கோம்! என்ற வாசன் ஐ கேர் டையலாக்குடன் சமையல் தெரிந்த இரண்டு பேர் சிரித்துக்கொண்டே நிற்பார்கள்.

அந்த டயலாக் மற்றும் சிரிப்பிற்குள் இருக்கும் விஷமத்தைப் புரிந்து கொண்டு, உஷாராகி விட்டால் நல்லது, இல்லையென்றால் அன்று முழுவதும் அவனை காமெடி பீஸாக்கி விடுவார்கள். நீ, யூடியூபில் பார்த்த முறைப்படி சமையல் செய்ய ஆரம்பி!, மசாலா பொடி போடுவது எல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று, சமையல் அறையில் மிச்சம் மீதம் இருக்கும் எல்லா மசாலா பவுடர்களையும் எடுத்து அருகில் வைத்துக் கொண்டு காத்திருப்பார்கள். அவனும் இவர்களின் பேச்சை நம்பிச் சமையலை ஆரம்பிப்பான். கோலம் போட புள்ளிகளை ஆரம்பிப்பது மட்டும் அவனாக‌ இருப்பான், அதை வண்ணம் தூவி முடிப்பது இவர்களாக இருப்பார்கள்.

சமையல் முடித்த போது அவனுக்கே டவுட் வரும், இதைச் சாதத்தில் ஊற்றி சாப்பிடுவதா? அல்லது ஒதுக்கி வைத்துச் சாப்பிடுவதா? என்று. ஒருவழியாக எடுத்து அதை டைனிங் டேபிளில் வைத்தால் மொத்த பேரும் மார்க்கு போட‌ வந்துவிடுவார்கள் ஷெப் தாமு வாக. ஏன்டா! இந்தக் குழம்பை வைக்கத் தான் யூடியூபுல ஒரு மணி நேரம் வளைச்சு வளைச்சு வீடியோ பார்த்தியா? என்று ஒருவன் சொல்ல‌, இதுக்கு "நான் தயிரை ஊற்றியே சாப்பிடுவேன்" என்று சொல்லிக்கொண்டு  இரண்டாவது ரவுண்டு சாதத்தைப் போட்டு அதே குழம்பை ஊற்றுவான். மச்சி! ஜஸ்ட் மிஸ்சு, வீடியோ மட்டும் எடுத்திருந்தா, இந்த வாரம் இது தான் மச்சு வைரல் வீடியோ! என்று ஒருவன் ஆரம்பிக்க, மச்சி! வீட்ல ஏதும் இந்த குழம்பை டிரை பண்ணிராத! அதோடு உன்னை தலை முழுகிடுவாங்க! என்று நக்கலுக்கும், கிண்டலுக்கும் பிஎச்டி வாங்கினவன் எல்லாம் அந்தக் கூட்டத்தில் தான் இருப்பான், வெச்ச குழம்பில் வயிறு நிறைகிறதோ, இல்லையோ! இவனுங்க அடிக்கிற லூட்டியில் வயிறு நிறைந்துவிடும்.

மெஸ் மேனேஜர் பற்றி ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா, ஒருமுறை சென்னையை சேர்ந்த நண்பர் ஒருவரை மெஸ் மேனேஜர் ஆக நியமித்து இருந்தோம், நண்பர் காசு விசயத்தில் ரெம்ப கறாரான‌ ஆளு! ஐம்பது ஹலாலா என்றாலும் கணக்கு பார்த்து வாங்கிவிடுவார். வாரத்துக்கு ஒருமுறை எங்கள் சமையலுக்கு தேவையான பொருட்களை லூலூ, பாண்டா போன்ற சூப்பர் மார்கெட்டுக்கு சென்று வாங்கிவருவோம். நாங்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து டாக்சியில் தான் இந்த இடங்களுக்குச் செல்ல முடியும். சில நேரங்களில் நாங்கள் நியமித்திருக்கும் மெஸ் மேனேஜர் மாலையில் வாக்கிங் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு நடந்து சென்றே பொருட்களை வாங்கி வந்து விடுவார். டாக்சிக்கு செலவு செய்யும் 20 ரியால் மிச்சம் என்ற அளவிற்குக் கணக்கு பார்ப்பவர் என்றால் நீங்களே அவரின் கருமி தனத்தைப் புரிந்து கொள்ளுங்கள். இத்தனைக்கும் வாங்க வேண்டிய பொருட்கள் எல்லோருக்கும் பொதுவானது, அந்த டாக்சிக்கான காசும் கூட மெஸ் கணக்கில் இருந்து தான் கொடுக்கப்படும். அதில் அவருடைய காசு 2 ரியால் அடங்கியிருக்கிறது என்ற அளவிற்குக் கணக்கு பார்ப்பவர்.

சமையலில் எந்தப் பொருட்களையும் வேஸ்ட் பண்ணுவதில் இந்த நண்பருக்கு உடன்பாடு இருக்காது, பிரிஜில் ஒருவாரம் வைத்த குழம்பு மீதம் இருந்தாலும், நண்பர் கூச்சப்படாமல் சூடு பண்ணி சாப்பிடுவார். ஏதாவது காய்கறிகள் வேஸ்ட் ஆகிறது என்றால், நாம் அழைக்க வேண்டாம் இவரே வாலண்டியராக வந்து குழம்பு செய்கிறேன் என்று காமெடி பண்ணுவார், வாயில் எவரும் வைக்க முடியவில்லை என்று சொன்னாலும் சிரித்துக்கொண்டே, ஒரு நாள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி  சாப்பிடுங்க ஜி என்று சொல்லுவார். இவரிடம் உள்ள நல்ல குணம், எவர் என்ன சொன்னானும் கோபமே படாமல் சிரித்துக்கொண்டே இருப்பார். நம்ம கூட இருக்கிறவனுங்களுக்கு இது போதாதா? போர் அடிக்கும் போதெல்லாம் இந்த நண்பரைத் தான் ஓட்டுவார்கள். அவர்கள் நம்மை ஓட்டுகிறார்கள் என்று தெரிந்தாலும் இவரும் அவர்களுடன் சேர்ந்து சிரிப்பார், அவ்வளவு நல்லவர்.

மெஸ் மேனேஜராக இருந்த நண்பர், புதிய ப்ரொஜெக்ட்டுக்காக வேறு ஒரு இடத்திற்கு செல்ல‌ வேண்டியிருந்தது. எனவே அவர் பார்த்து வந்த எங்கள் மெஸ் கணக்கு வழக்குகளை முடித்து வேறு ஒருவரிடம் கொடுக்க வேண்டி வந்தது. அதற்காக  நண்பர் ஒரு நாட்கள் முழுவதும் அமர்ந்து எல்லா கணக்குகளையும் பார்த்துவிட்டு யாருக்கெல்லாம் பணம் கொடுக்கவேண்டி வந்ததோ அவைகளை கொடுத்துவிட்டு, யாரெல்லாம் அவருக்கு தரவேண்டுமோ, அந்த பணத்தையும் வசூலித்துக்கொண்டிருந்தார். சிலர் ஏதோ ஒரு தருணத்தில் இவரிடம் வாங்கிய ரியால்களை கூட ஞாபமாக கேட்டு வாங்கிக்கொண்டார், பெரிய தொகையெல்லாம் கிடையாது இரண்டு ரியால், ஐந்து ரியால் அப்படி தான், என்னிடம் கூட ஜீ!நீங்க, ஒரு நாள் காலையில சாண்ட்விச் சாப்பிட்ட கணக்கில் ஒரு மூன்று ரியால் தரவேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டார். நான் அதை சுத்தமாக மறந்து போயிருந்தேன். ஒருவரிடம் வாங்கி சாப்பிட்டதை கூடவா மறப்பார்கள் என்று எண்ண தோன்றும், காரணம் நானும் சில நாட்கள் அவருக்கு சாண்ட்விச் வாங்கி கொடுத்திருப்பேன்.

இவ்வாறு எங்களுடன் இருந்தவர்கள் எல்லோரிடமும் ஒரு ஹலாலா கூட‌ பாக்கி இல்லாமல் எல்லாவற்றையும் கணக்குப்பார்த்து வாங்கிக் கொண்டார். நண்பருக்கு கம்பெனியிலிருந்து விடியற்காலை ஆறு மணிக்கு பிளைட் புக் பண்ணியிருந்தார்கள். நண்பர் மூன்று மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி கொண்டிருந்தார். ஒவ்வொரு அறையாகச் சென்று லைட் போட்டு ஏதாவது பொருளை மிஸ் பண்ணி விட்டோமா! என்று சோதித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு இவர் செய்த களோபரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நான் உட்பட பாதி பேர் தூக்கத்திலிருந்து விழித்துவிட்டோம். நாங்களும் ஆளுக்கொரு பக்கமாக உதவி செய்து அவருடைய சோப்பு முதல் பாத்ரூம் சப்பல் வரை எடுத்து கவரில் போட்டுக் கொடுத்துவிட்டோம்.

வேறொரு நண்பர் இரண்டு நாட்கள் ப்ரொஜெக்ட் விசயமாக சைட்டுக்கு சென்று லேட்டாக வந்து ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தவர் தூங்கிக் கொண்டிருந்த நண்பரின் அறைக்கு, ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு முறை சென்று பார்த்துக்கொண்டே இருந்தார். அந்த நண்பரோ சைட்டுக்கு சென்று வந்த‌ பயண களைப்பில், நல்ல குறட்டை விட்டுத் தூங்கி கொண்டிருந்தார். இவர் அவரை நேரடியாக எழுப்பாமல், ஏதாவது செய்து விழிக்கச் செய்யலாம் என்ற எண்ணத்தில் அறையில் லைட் போடுவது, அவர் தூங்கி கொண்டிருக்கும் கட்டிலுக்கு அடியில் தேடுவது என்று ஏதேதோ செய்து கொண்டிருந்தார். விழித்திருந்த நண்பர்களிடமும், இவன் எப்போது எழுவானோ! தெரியவில்லை! என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

ஒரு வழியாக நண்பரும் நான்கு மணிக்கெல்லாம் தன்னுடைய பெட்டியுடன் ரெடியாகி விட்டார். பெட்டியுடன் ரெடியானவர் திரும்பவும் தூங்கி கொண்டிருந்தவரின் அறைக்குச் சென்று பார்த்து வந்தார். நானும் இவர் அவரிடம் சொல்லிவிட்டு கிளம்புவதற்குத் தான் இத்தனை பிரியப்படுகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

இவரை வழியனுப்பிவிட்டு இன்னொரு தூக்கத்தை போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த‌ நண்பர்களிடம், திரும்பி சைட்டுக்கு சென்று வந்த நண்பர் விழித்துவிட்டானா? என்று திரும்பவும் கேட்க, எங்களில் கொஞ்சம் நக்கலான நண்பர் ஒருவர் ஓடிச்சென்று தூங்கிக் கொண்டிருந்த நண்பரைத் தட்டி எழுப்பி, டேய்! இவனை வழியனுப்பிவிட்டு நீ தூங்குடா, இல்லனா! இவன் எங்களைத் தூங்க விடாமல் நீ விழிக்கும் வரை காத்திருப்பான் போலிருக்கு என்று கத்த, தூங்கிக் கொண்டிருந்தவனோ! திடுக்கிட்டு எழுந்து கண்ணைக் கசக்க‌, பிளைட்டில் போவதற்குக் கிளம்பி நின்றவர், அவரிடம் சென்று, ஒரு நீண்ட‌ பில்லை நீட்டி ஜீ! இது தான் மெஸ் கணக்கு, நீங்க எனக்கு ஒரு நான்கு ரியால் தரவேண்டும் என்று கேட்க, இவரோ, வந்து எழுப்பிய நண்பரைக் கொடூரமாக பார்க்க! சுற்றி நின்ற நாங்கள் அனைவரும் ஙே! ஙே! ஙே!.. என்று முழித்தோம்.



.

Thursday, June 9, 2016

நாம் தான் உணவிற்குக் கையேந்தும் தலைமுறைகள்!!

இன்றைக்கு நம்முடைய உணவு பழக்கவழக்கம் எப்படி இருக்கிறது என்பதை நம்முடைய வீட்டில் சமையல் அறையில் இருக்கும் குளிர்சாதன பெட்டியைத் திறந்து பார்த்தாலே தெரிந்துவிடும். குறைந்தது மூன்று பாத்திரங்களாவது எப்போதும் அந்தப் பெட்டியில் இருக்கும், நேற்று வைத்த சாம்பார், இரண்டு நாட்கள் முன்பு வைத்த காரக் குழம்பு, ஒரு வாரத்திற்கு முன்பு வைத்த ரசம் என்று ஏதாவது ஒன்றை மாற்றி மாற்றி தேதி வாரியாக பிரித்து வைத்திருப்போம். இவையில்லாமல் பாதி எடுத்துவிட்டு மீதம் வைத்திக்கும் தயிர் பாக்கெட், ரெடிமேடாக கடைகளில் வெட்டிக் கிடைக்கும் ப்ரோசன் காய்கறிகள் என்று பட்டியல் நீளும்.

"விரைவாகச் சமைக்க முடிகிறது" என்று சொல்லிக்கொண்டு, நாம் சமைக்கும் உணவுகள் நம் உடலை எந்தளவிற்கு மாற்றத்திற்கு உட்படுத்துகிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறோம். காலையிலேயே பிரட் ஆம்லெட், நூடுல்ஸ் போன்ற வெளிநாட்டு  உணவு வகைகளை நம்முடைய குழந்தை களின் தட்டில் பரிமாற தொடங்கிவிட்டோம், நமது பாரம்பரிய உணவுகளையும் பதப்படுத்தப்பட்ட மாவுகள் மூலம் தயாரிக்க தொடங்கிவிட்டோம். இன்ஸ்டன்ட் உப்புமா முதல் இன்ஸ்டன்ட் பரோட்டா வரை வாங்கி குளிர்சாதன பெட்டியில் அடுக்கி விடுகிறோம்.

இன்றைய அவசர உலகில் எல்லாவற்றிற்கும் சுலபமான வழியைத் தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய நாம் உணவுப் பொருட்கள் சமைப்பதற்கும் குறுக்கு வழிகளை நாடத் தொடங்கிவிட்டோம், பதப்படுத்தப் பட்ட உணவுப்பொருட்களுக்கு நாம் அடிமையாக மாறிவிட்டோம். அதனால் தான் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருட்களின் குவியல்கள் பெரிய பெரிய சூப்பர் மார்கெட்களில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உள்ளது. சிலர் வீட்டில் சமைக்கும் சிக்கன் குழம்பு பிடிக்கவில்லை என்று ஓரம் தள்ளுகிறார்கள், ஆனால் கடைகளில் வாங்கும் புரோஸ்டடு சிக்கன் ஒரு பக்கெட்டை காலி செய்கிறார்கள், குழந்தைகளும் பழங்கள் சாப்பிட பிடிக்கவில்லை, ஆனால் பாட்டில்களில் வைத்திருக்கும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளை வாங்கித் தாருங்கள் என்றும் சொல்லுகிறார்கள். முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் எல்லாம் வயோதிகர்களும், நோயாளிகளும் உண்ணும் உணவாக இன்றைய தலைமுறைகள் எண்ணுகிறார்கள். அதற்கு மாற்றாகப் பன்னாட்டு நிறுவனங்களால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குப்பை உணவுகளின் சுவைகளுக்கு அடிமையாகியிருக்கிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கு இப்போது இருக்கும் நிறுவனங்கள் போதாது என்று, இன்றைக்குப் பல கார்பரேட் சாமியார்களும் களத்திற்கு குதித்துள்ளார்கள். "ஐந்தே நொடியில் ஆரோக்கியமான உணவு தயார்!" என்று நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் விளம்பரங்கள் தான் இன்றைக்கு நமது வீட்டுத் தொலைக்காட்சியை நிறைக்கிறது. இப்போது நமது சமையல் அறையில் நிறைந்திருக்கும் பொருட்கள் அனைத்தும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் தான். நாம் எதை உண்ண வேண்டும் என்பதைக் கூட இன்றைக்குப் பல பன்னாட்டு நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. அத்தகையை உணவு பழக்க வழக்கத்திற்கு நாமும் அடிமையாகி, நம்முடைய அடுத்த தலைமுறையையும் அதற்கு பழக்கப் படுத்தி விட்டோம்.

காலையில் எழுந்து பல் துலக்குவதற்கு உபயோகிக்கும் பற்பசையில் ஆரம்பித்து, இரவு தூங்குவதற்கு முன்னால் உபயோகப்படுத்தும் மவுத் வாஷ் வரைக்கும் சந்தை படுத்துவதில் பல பன்னாட்டு நிறுவனங்கள் அனைவரின் கவனத்தை விளம்பரங்கள் மூலமாக ஈர்ப்பதில் போட்டி போடுகின்றன. இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிக்கும் பொருட்களை உபயோகப்படுத்தாமல் எவரும் வாழவே முடியாது என்ற ஒரு மாயத் தோற்றத்தை நிறுவ முயலுகிறார்கள்.

நம்முடைய நுகர்வு கலாச்சாரத்தை உரம் போட்டு வளர்ப்பதற்கு "விளம்பரம்" என்னும் உத்தியை இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றன. தொலைக்காட்சி, பத்திரிக்கை மற்றும் இணையம் என்று எந்தப் பக்கம் நீங்கள் நுழைந்தாலும் வலுக்கட்டாயமாக அவர்களின் விளம்பரங்களைப் பார்க்க வைத்துவிடுகிறார்கள். ஏதோ ஒரு தேவைக்காக ஒருமுறை வாங்கும் பொருட்களை, மறுமுறை நாடிச்சென்று வாங்க வைத்து, பின்னர் அதற்கு நாம் அடிமையாகும் யுத்தியைப் பன்னாட்டு நிறுவனங்கள் சிறப்பாக செய்கின்றன. கடைகளுக்குச் சென்றுதான் வாங்க முடியும் என்றிருந்த பொருட்களை வீடுத் தேடிவந்து கொடுக்கும் ஆன் லைன் வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அதிகப்படியான நுகர்வு கலாச்சாரம் நம்முடைய சுயச் சார்பை அழித்திருக்கிறது. நம்முடைய சுயச் சார்பை அழித்ததில் தான் பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றிகள் அடங்கியிருக்கிறது, உதாரணமாக என்னுடைய பால்ய வயது வாழ்க்கையை எடுத்துக்கொள்ளலாம். எனது வீட்டைச் சுற்றி ஒரு இருபது சென்ட் நிலம் உண்டு. அந்த நிலத்தைச் சுற்றியிருந்த வேலியில் அப்பா அன்னாசி செடி நட்டு வைத்திருந்தார்கள், அதிலிருந்து வீட்டிற்குத் தேவையான அன்னாசிப் பழம் கிடைக்கும். மேலும் அதில் ஒரு நான்கு வகையான மாமரங்கள் மற்றும் இரண்டு பலாமரம், இரண்டு கொல்லாமரம்(முந்திரி மரம்) மற்றும் ஒரு புளிய மரமும் உண்டு. இந்த மரங்களை எல்லாம் என்னுடைய தாத்தா நட்டு வளர்த்தாக அப்பா சொல்லுவர்கள். சிறிய மரங்களாக மூன்று நாட்டுக் கொய்யா மரம், இரண்டு சீத்தாப்பழம் மரம் மற்றும் ஒரு பப்பாளி என்று அப்பா நட்டு வைத்திருந்தார்கள்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டில் பசு மாடு ஒன்று எப்போதும் இருக்கும். நான் பள்ளிப் படிக்கும் போது வீட்டில் சாண எரிவாயுவைப் பயன் படுத்தித்தான் சமையல் செய்வார்கள். அதிலிருந்து கிடைக்கும் கழிவு உரத்தைக் கொண்டு வீட்டில் தோட்டங்கள் போடுவது தான் எங்களுடைய பொழுதுபோக்காக இருந்தது. அக்கா பூச்செடிகள் வளர்ப்பதில் ஆர்வமாக இருப்பாள், நானும் எனது அண்ணனும் கீரை, அவரை, கத்தரி, தக்காளி போன்ற காய்கறிகளை நட்டு வளர்ப்போம். வீட்டின் கொல்லைப்புறத்தில் பாத்திரங்கள் கழுவும் கழிவு நீர் பாயும் இடத்தில் எப்போதும் இரண்டு வாழைமரங்கள் நிற்கும். வீட்டின் அருகில் உள்ள நிலம் அல்லாமல் ஊருக்கு வெளியில் ஒரு வயலும், சிறிய தென்னம் தோப்பும் எங்களுக்கு உண்டு.

நான் மேலே சொல்லியிருக்கும் அனைத்துமே எங்கள் வீட்டிற்குத் தேவையான உணவு பொருட்களில் 75 சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்துவிடும். நெல்லிருந்து கிடைக்கும் அரிசியிலிருந்து மதியத்திற்கும் இரவிற்கும் தேவையான சோறு மற்றும் காலை உணவான புட்டு, இடியாப்பம், ஆப்பம் செய்து கொள்ளலாம். இரண்டுமுறை நெல் பயிரிட்டால் ஒருமுறை உளுந்து, சிறுபயிறு என்று வயலில் விதைப்போம், எனவே தோசை இட்லிக்குத் தேவையான உளுந்து கிடைத்துவிடும். வீட்டில் பசு மாடு இருப்பதால் சுத்தமான பாலுக்குப் பஞ்சம் இல்லை எனவே காப்பி, டீ போன்றவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. முக்கனிகளான மா, பலா, வாழை இவை மூன்றும் எங்கள் வீட்டு தோட்டத்தில் இருப்பதால், எங்களின் உணவு தேவைக்கான பழங்கள் வீட்டு நிலத்தில் நடப்பட்டிருக்கும் மரங்களிலிருந்தே கிடைத்துவிடும்.

எனது வீட்டின் முன் நிற்கும் மிளகு கொடி


நாங்க! கன்னியாகுமரி ஆளுங்க! தேங்காய் இல்லாமல் குழம்பு என்பது எங்கள் அகராதியில் கிடையாது, தினமும் ஒரு அரைமுறி தேங்காயாவது காலி செய்துவிடுவோம். தென்னந் தோப்பிலிருந்து கிடைக்கும் தேங்காயும், அதிலிருந்து செக்கில் ஆட்டப்பட்டுக் கிடைக்கும் எண்ணெயும் சமையலுக்கு தாராளமாக போதும். குழம்பு வைப்பதற்கான புளி வீட்டில் இருக்கும் மரத்திலிருந்து கிடைத்துவிடும். எனது அம்மா மாதம் ஒருமுறை வத்தல், மல்லி, மஞ்சள் என்று ஒரு ஒன்பது வகையான மளிகைப் பொருட்களை கடையிலிருந்து வாங்கிப் பக்குவப்படுத்தி பொடி செய்து வைத்துக்கொள்வார்கள். இந்தப் பொருட்களுடன் சோப்புகள் மற்றும் சிறிய வெங்காயம் போன்றவை தான் பெரும்பாலும் நாங்கள் கடைகளிலிருந்து வாங்கும் பொருளாக இருக்கும்.

அம்மா பொடிச் செய்து வைத்திருக்கும் குழம்பு தூளைத் தான் மீன் குழம்பு வைப்பது முதல் மட்டன் குழம்பு வைப்பது வரை உபயோகப்படுத்துவார்கள். வீட்டில் எப்போதும் பத்து நாட்டுக் கோழிகளுக்கு குறையாமல் வளரும், அதனால் முட்டைகளுக்கும் வீட்டில் பஞ்சம் இல்லை. ஊரில் திருவிழா மற்றும் வேறு விசேசம் என்றால் வெடைக் கோழியும் அடிக்கலாம். வாரத்தில் ஆறு நாட்களும் என் வீட்டில் மீன் குழம்பு இருக்கும், அதோடு கூட வீட்டில் விளையும் கீரைகள் மற்றும் அவரைப் போன்றவற்றால் செய்யப்பட்ட பொரியல்களும் இருக்கும், வார இறுதி நாளில் மட்டும் மட்டன் அல்லது சிக்கன் இருக்கும். இவ்வாறு நாங்கள் உண்ணும் உணவுப் பொருளில் பெரும்பகுதி ரசாயனங்களின் கலப்பு இல்லாமல் நம்முடைய நிலத்தில் விளைந்தவையாக இருந்தது.

வணிகர்களின் போராட்டம் காரணமாக ஒரு வாரம், இரண்டு வாரம் எல்லாம் கடைகள் திறக்கப்படவில்லையென்றாலும் அந்த காலத்தில் என்னுடைய அம்மா உட்பட எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள், காரணம் சுயச் சார்பு, இன்றைக்கு ஒரு நாள் கடைகள் அடைத்தாலே என்ன நிலமை என்பதை நீங்களே தெரிந்து வைத்திருப்பீர்கள். பால் கிடைக்கவில்லை, குடி தண்ணி கிடைக்கவில்லை என்ற குரல்களை தான் எங்கும் கேட்க முடியும். எப்படி நாம் கையேந்தி நிற்கிறோம் என்பதை இதைவிடத் தெளிவாக விளக்கிவிட முடியாது.

சமீபத்தில் விகடனில் வந்த ஒரு கட்டுரையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த திரு.பெலிக்ஸ் அவர்களின் விவசாய முறையைப் பற்றி படித்தேன். அவர் தன்னுடைய சாப்ட்வேர் வேலையை உதறித் தள்ளிவிட்டு ஊரில் வந்து தனக்கு சொந்தமான 34 சென்ட் நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செய்து வெற்றி கண்டுள்ளார். அவருடைய நிலத்திலிருந்து கிடைக்கும் விளைபொருட்கள் அவருடைய குடும்பத்தின் 80 சதவீத உணவு தேவையை நிவர்த்தி செய்வதாக சொல்லுகிறார்.இவரிடம் ஒரு பேட்டியில் உங்களின் உணவு தேவையை நீங்களே பூர்த்தி செய்து கொள்வது பற்றி அருகில் இருப்பவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டும் போது, அவர் சொல்லியது அருகில் இருப்பவர்களை விட நம்மை ஆளும் அரசு என்னை எப்படிப் பார்க்க போகிறது என்பது தான்!

இவரின் விகடன் கட்டுரை படிக்க:

34 சென்ட்...

இவரின் இனையதளதிற்கு செல்ல:

சுதந்திரமான வாழ்க்கை

உலகமயமாக்கல், தாரளமயமாக்கல் என்று எல்லா ஆக்கங்களையும் நம்மை ஆளும் அரசுகளே முன்னின்று விரிவாக்கம் செய்யும் போது சுயச் சார்புடன் ஒருவன் வாழ்கின்றான் என்றால் அவனை இந்த அரசுகள் எப்படிப் பார்க்கும்?.


.

Monday, June 6, 2016

மாப்ள! வண்டியில கடாரி இருக்கா?

நான் ஊருக்குப் போய் இருக்கிற பத்து நாட்களில் குறைந்தது ஒரு மாதம் ஊரில் இருந்து செய்யக் கூடிய வேலைகளைத் திட்டமிட்டு செல்வேன். இந்த முறை ஊருக்குச் சென்றிருந்த போது, எனக்குத் தனியாக குடும்ப அட்டை வாங்கும் வேலைக்காக இரண்டு மூன்று நாட்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியிருந்தது. முந்தின நாள் தாலுகா அலுவலகத்திற்குச் சென்றிருந்த போது என்னுடைய திருமண பத்திரிக்கை ஒன்று இருந்தால் கொண்டு வாருங்கள் என்று கேட்டிருந்தார். என்னுடைய வீட்டில் எவ்வளவு தேடியும் பழைய திருமண பத்திரிக்கை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மாமனார் வீட்டில் போன் செய்து கேட்டபோது, அவர்கள் வீட்டில் அச்சடிக்கப் பட்ட பழைய திருமண பத்திரிக்கை இருக்கிறது வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார்கள்.

காலையில் எழுந்து டிபன் சாப்பிட்டுவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்யும் போதே மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது, காலையில் பத்து மணிக்கெல்லாம் தாலுகா அலுவலகம் வருமாறு எனக்கு விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து தந்திருந்த மாற்றுத் திறனாளி பெரியவர் சொல்லியிருந்தார். அவசர அவசரமாக வண்டியை எடுத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்குக் கிளம்பினேன். போகும் வழியில் ஊரில் இருக்கும் குருசடி வளாகத்தைத் தாண்டி தான் செல்ல வேண்டும். அந்த வளாகத்தில் எப்போதும் ஒரு இளைஞர் கூட்டத்தை பார்க்க முடியும். வெளிநாடுகளிலிருந்து ஊருக்கு வந்திருக்கும் நண்பர்கள் மற்றும் ஊரில் வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் நண்பர்கள் பலரையும் அங்குப் பார்க்க முடியும்.

அந்தக் கூட்டத்தில் இருக்கும் மக்களில் பெரும்பாலான முகங்கள் எனக்குத் தெரிந்தவர்களாக தான் இருப்பார்கள். எப்போது சென்றாலும் அந்த இடத்தில் ஒரு சில நண்பர்களைப் பார்க்க முடியும், அன்று நான் அந்த வழியாகச் சென்ற போதும் பல நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்கள், தாலுகா அலுவலகம் செல்லுவதற்கு நேரம் ஆகிவிட்டதால் வண்டியை நிறுத்தாமல் அவர்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு வண்டியில் வளாகத்தைக் கடந்து சாலையில் சென்று கொண்டிருந்தேன். அதே சாலையின் சிறிது தொலைவில் இருக்கும் டீக்கடையில், எப்போதும் இந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் என்னுடைய பள்ளி தோழன் குமார் ஒரு கையில் தம் வைத்துக்கொண்டு, மற்றோரு கையால் டீக்கடை தூணைப் பிடித்துக்கொண்டு விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தான். ஏதேச்சையாக என்னைப் பார்த்தவன் கையில் தம்முடன் சாலையின் ஓரம் வந்து சிரித்தான்.

நானும் வண்டியை நிறுத்தி "மக்களே! நான் அவசரமாக மாமனார் வீட்டிற்குச் செல்ல வேண்டும், நான் திரும்ப வரும் போது பேசலாம்" என்று சொல்லிவிட்டு அவனுடைய பதிலுக்கு காத்திருக்காமல் வண்டியைச் சாலையில் செலுத்தினேன். வண்டியில் செல்லும் போது தான் ஞாபகம் வந்தது, தாலுகா அலுவலகம் போனால் கண்டிப்பா ஒரு 2 மணி நேரமாவது நம்மைக் காக்க வைத்து விடுவார்கள், இவனை அழைத்துச் சென்றால் ஊர் நிலவரங்களையும்,  பக்கத்து ஊர் கிசுகிசுக்களை பேசியது போலவும் இருக்கும், நம்முடைய வேலையும் நடந்தது போல இருக்கும் என்று மனதில் நினைத்து, வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று மாமனார் வீட்டிற்கு வண்டியைச் செலுத்தினேன்.

மாமனார் வீட்டிற்குச் சென்று, என்னுடைய பழைய திருமண பத்திரிக்கையை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும் போது, , நான் எந்த டீக்கடையில் என்னுடைய நண்பன் குமாரை பார்த்தேனோ, அதே டீக்கடையில் தூணைப்பிடித்துக் கொண்டு மற்றொரு தம்முடன் நின்றுகொண்டிருந்தான். எப்படியாவது இவனைத் துணைக்கு இழுத்துக்கொண்டு தாலுகா அலுவலகத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வண்டியைச் சாலையின் ஓரமாக நிறுத்தி, என்ன மக்களே! காலையிலேயே டீக்கடையில் வந்து நிக்குற, எப்படி இருக்கிற? இன்னைக்கு வேலைக்கு போகலியா? என்று கேட்டுவிட்டு, என் எதிரில் வந்து நின்ற அவனுடைய தோளில் வண்டியில் அமர்ந்து கொண்டே கையைப் போட்டேன்.

என்னவோ உயிரோட இருக்கேன் மாப்ள, வேலைக்கு எல்லாம் போய் ரெம்ப நாள் ஆச்சு, இப்ப சொந்தமா பிசினஸ் பண்ணுறேன் என்று ரெம்ப சலிப்பாக சொல்லிவிட்டு, நீ எப்ப வந்தாய்? இப்ப எங்க போற? என்று என் முகத்தைப் பார்த்து பேசாமல் சாலையின் இரு பக்கத்தையும் நோட்டம் விட்டுக்கொண்டே என்னிடம் கேட்டான். ரெம்பவே பதட்டமாக இருந்தான், அவனிடம் பொறுமையாக எனக்குப் பேச நேரமில்லை, ஏற்கனவே எனக்குத் தாலுகா அலுவலகம் செல்ல நேரம் ஆகி விட்டிருந்ததால், நான் அவனிடம் "மக்களே நான் வந்து ஒரு வாரம் ஆச்சு!, நீ சும்மா தான் இருக்கியா? வாயேன் தாலுகா அலுவலகம் வரைக்கும் போயிட்டு வரலாம்" என்று என்னுடைய அபிலாஷையை எதார்த்தமாகக் கேட்பது போல் கேட்டேன்.

சரி மாப்ள! போகலாம், வண்டியை எடுத்து ஓரம் வச்சுட்டு வரேன் என்று உடனடியாக சொல்வான் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இவ்வளவு வேகமாக "கூட வாறேன்!" என்று சொல்லும் போதே நான் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். நமக்குத் தான் அந்த யோசனை விளக்கெண்ணெய்யெல்லாம் பட்ட பிறகு தானே வரும்.  வேகமாக சாலையின் ஓரத்தில் சைடு ஸ்டாண்டு போட்டு நின்றுகொண்டிருந்த அவனுடைய வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக எடுத்து இரண்டு கட்டிடம் தள்ளிக் கொண்டு போய் ஒரு சந்தினுள் விட்டு வந்தான். என்ன மக்களே! வண்டியை இங்கேயே விட்டு லாக் பண்ணிட்டு வர வேண்டியது தானே! நம்ம ஊர்ல வந்து வண்டியை என்ன செய்ய போறாங்க? என்று கேட்டேன். இல்ல மாப்ள! ஊர்ல கொஞ்ச பேரு என்மேல கொலை வெறியில சுத்துறானுவ! என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே சொன்னான். என்ன மக்களே! காலையிலேயே காமெடி பண்ணிட்டு இருக்க! என்று சிரித்த என்னைப் பார்த்து, இல்ல மாப்ள! என்னை அடிப்பதற்கு வெளியூரில் இருந்தெல்லாம் ஆள் செட் பண்ணியிருக்காக! என்று சிரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். எனக்கு முன்பை விட இப்போது பலமாக சிரிப்பு வந்தது. அவனுடைய நடவடிக்கைகள் எல்லாம் வழக்கத்துக்கு மாறாக இருந்தது, எனக்கு வேறு தாலுகா அலுவலகம் செல்லுவதற்கும் நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.

சாலையின் இருபக்கமும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே, மாப்ள! நான் வண்டியை விட்டதை எவனும் பார்த்தானுவளா? என்று கேட்டான், அந்தச் சாலையில் வருவோர் போவோரை தவிர, இவன் கேட்பது போல் இவனை நோட்டம் விடுபவர் எவரும் இல்லை. இப்போதாவது நான் சுதாரித்து வண்டியைக் கிளப்பிக்கொண்டு என்னுடைய வேலையைப் பார்க்க சென்றிருக்க வேண்டும். "விதி வலியது" என்பது போல, மக்களே! வா வந்து வண்டியில் ஏறு! ரெம்ப நேரம் ஆகிடுச்சு! தக்கலை வரை போகனும் என்று சொல்லிக்கொண்டு என்னுடைய வண்டியை ஸ்டார்ட் பண்ணினேன், இப்போதும் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டுக்கொண்டு "மாப்ள! எவனும் பாக்கல இல்ல!" என்று சொல்லிக்கொண்டே மெதுவாக வண்டியில் ஏறினான். எவருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக காதலி நம்முடைய வண்டியில் ஏறும்போது பதறுவதை விட மோசமாக இவன் பதறினான்.

ஒரு வழியாக வண்டியை எடுத்துக் கிளம்பி சிறிது தூரம் போவதற்குள், மாப்ள! குருசடி வளாகம் வழியாகச் செல்ல வேண்டாம்! வேறு வழியாகச் செல்! என்று பின்புறத்திலிருந்து என் காதில் சொல்லிவிட்டு இடுப்பைப் பிடித்து இறுக்கினான். முன்பெல்லாம் அந்த குருசடி வளாகத்தில் கூடியிருக்கும் மக்களில் ஒருவனாகத் தான் இவனும் இருப்பான், இப்போது இவன் மட்டும் தனியாக டீக்கடையில் நின்றது எனக்குச் சந்தேகம் வரவழைக்க, என்ன மக்களே! நீ இப்பெல்லாம் குருசடி வளாகத்துக்கு போறது இல்லியா? என்று கேட்டேன். மாப்ள! நம்மள பாத்தா எல்லானுவளுக்கும் இப்ப பொறாமை! அதான் நாம அந்தப் பக்கம் போறது இல்ல! என்றான். அப்படியா! எல்லோரும் பொறாமை படுற அளவுக்கு. நீ என்ன பண்ணிட்ட? என்று கேட்டேன். அது ஒண்ணும் இல்ல மாப்ள! என்னோட பழைய வீட்டை இடுச்சு, புதுவீடு கட்டிக் கொண்டிருக்கிறேன்! அத நினைச்சா சிலருக்கு வயிறு எரியுது! என்றான்.

ஏண்டா! ஒரு புது வீடு கட்டினதுக்கெல்லாமா, நம்மூர்ல இப்ப ஆள் வச்சு அடிக்கிறானுவ! என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, சரி மக்களே! யாரு உன்னை அடிக்க போறதா சொன்னா? எதுக்கு இவ்வளவு பதட்டமா இருக்க? என்று கேட்டேன். அதை விடு மாப்ள! எல்லாம் நான் பார்த்துக்குறேன், நம்ம மேல அவ்வளவு சீக்கிரம் கை வைச்சுற முடியுமா? இல்ல வைச்சுட்டு தான் போயிட முடியுமானு! என்று கொக்கரித்தான். ஆகா! சரிதான்! வேலில போற ஓணான வேட்டிக்குள்ள தான் பிடிச்சு விட்டுருக்கேன்! என்று மனதிற்குள் நினைத்த வாறு, ஆமா! இப்ப வேலைக்கு போறது இல்லனு சொன்னியே? இப்ப என்ன பிஸினஸ் பண்ணுற? என்று கேட்டேன். அதுவா மாப்ள நான் இப்ப தாஸ் அண்ணன் கூட சேர்ந்து பழைய டூவீலர் வாங்கி விற்கிறேன் என்று சொன்னான்.

இவனிடம் பேசிக்கொண்டே என்னுடைய வீடு வந்து சேர்ந்தேன், வண்டியின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியில் வந்த மனைவியிடம், தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய டாக்குமென்டுகள் வைத்திருக்கும் பையை எடுத்துத் தருமாறு சொல்லிவிட்டு வண்டியிலிருந்து கீழே இறங்கினேன். எனக்கு முன்பாக வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த குமார் இறங்கி நாங்கள் வந்த சாலையை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். மக்களே! டீ ஏதும் குடிக்கிறியா? என்று கேட்டுவிட்டு வீட்டிற்குள் வருமாறு அழைத்தேன், டீ வேண்டாம் மாப்ள! குடிக்க தண்ணி ஒரு சொம்பு கொண்டு வா? என்று சொல்லிவிட்டு திரும்பவும் சாலையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் இருந்த பையை வாங்கிவிட்டு, ஒரு சொம்பு தண்ணீருடன் வெளியில் வந்தேன்.

இப்போது குமாரு, என்னுடைய வண்டியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு சைலன்சர் இடுக்கிலும், சீட்டிற்கு அடியிலும் ஏதோ தேடிக்கொண்டிருந்தான். நான் அவனிடம் என்ன மக்களே! தேடிட்டு இருக்கிற? என்று கேட்டேன். இல்ல மாப்ள! என்னோட வண்டியில் எப்போதும் பொருள் இருக்கும், அந்த நினப்புல நானும் உன்னோட வந்திட்டேன், சரி மாப்ள ஒண்ணும் பிரச்சனை இல்லை! உங்கிட்ட கடாரி இருக்கா? எதற்கும் ஒண்ணு எடுத்து வச்சுக்க என்றான். எனக்குப் பக்கென்று இருந்தது, இவனை காமெடி பீசுனு நினைச்சு வண்டில ஏத்தினா, ரெம்ப டெரர் பீஸா இருக்கும் போல! என்று நினைத்துக்கொண்டு, அந்தச் சூழ்நிலையை சமாளிக்கத் தொடங்கினேன்.

இப்போது தான் உண்மையில் இவனுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, மக்களே! என்ன பிரச்சனை! யாரு உன்னை அடிக்க வர்ற? எதுக்கு அடிக்க வர்றாங்க? எதுவா இருந்தாலும் சொல்லு, நான் கூட இருக்கிறேன் என்று தம் கட்டி அவன் அருகில் சென்று கேட்டேன். கண்டிப்பாக என் மனைவி பக்கத்தில் இருந்திருந்தால் சிரித்திருப்பாள். அவனும் நான் தம் கட்டியதைப் பார்த்து நம்பி, "ஒரு லவ்வு மேட்டரு மாப்ள!" என்றான். லவ்வா! யாரோட லவ்வு மக்களே! என்றேன். என்ன மாப்ள! "என்னோட லவ்வு தான்" என்றான். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

இவனை என்னுடைய பள்ளித்தோழன் என்று சொன்னேன் அல்லவா, என்னுடன் படித்தவர்களில் இவனைப்போல் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் திருமணமாகி, அவர்களுடைய குழந்தைகளும் பள்ளிக்கு போகத் தொடங்கிவிட்டார்கள், அதாவது எல்லோரும் அரை கிழடு ஆகிவிட்டோம் என்பதைத் தான் நாசூக்காகச் சொல்லுகிறேன். இப்பவும் இவன் லவ்வு மேட்டருக்கு கத்தி, கடாரி, ஆள் வைத்து அடிப்பதற்கு செட்டிங் என்று டாப் கியரில் போவதைப் பார்க்கும் போது ஒரு சுவாரஸ்யம் இருக்கவே செய்தது.

அவனுடைய லவ்வு மேட்டருக்கு போட்டியாக இருப்பவன் தான் இவனை ஆள் வைத்து அடிப்பதற்கு செட் செய்திருக்கிறானாம். கேட்கவே எனக்கு காமெடியாக இருந்தது, அவன் சிறிதும் பிசிரு இல்லாமல் என்னிடம் சீரியஸாக பேசிக் கொண்டிருந்தான். இவனுக்குப் போட்டியாக இருக்கும் பையனின் பெயரைச் சொன்னான், அவன் ஒரு முறையில் பார்த்தால் எனக்குத் தூரத்து உறவினராக வருவான். இப்போது தான் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது, இவன் கத்தி, கடாரி என்று டர் காட்டியது எனக்கும் கொஞ்சம் கிலியை ஏற்படுத்தியிருந்தது.

ஒருவழியாக அவனை சமாதான படுத்தி என்னுடன் தக்கலைக்கு தாலுகா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றேன், வண்டியில் போகும் போதும் பின்னால் இருவர் வேறு வண்டியில் வந்தால் போதும், மாப்ள! எதுக்கும் கொஞ்சம் உசாரா போ! நம்மள தான் முறைச்சு பார்த்திட்டு பின்னால வண்டியில வருகிறனுவ! என்று பீதியை காட்டிக்கொண்டே வந்தான். அவர்கள் எங்களைத் தாண்டி சென்றால், அடுத்து வருபவனை நினைத்துப் பயந்து கொண்டிருந்தான், வெளியூர் ஆட்களை செட் பண்ணிருக்கானுவ மாப்ள! எவன் எந்த ரூபத்தில் வந்து போடுவானு தெரியாது என்று எனக்கும் ஷாக் கொடுத்தான்.

ஏண்டா ஒரு தாலுகா ஆபிஸ்சில் ரெண்டு மணி நேரம் பேச்சு துணைக்கு ஆசைப்பட்டது அவ்வளவு பெரிய தப்பா!


.

Friday, June 3, 2016

நுனிப்புல் மேய்பவர்கள்!!

பள்ளியில் நான் பத்தாவது வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியர், முதல் நாள் வகுப்பில் எடுக்கும் பாடத்திலிருந்து, மறு நாள் முதல் பதினைந்து நிமிடம் கேள்விகள் கேட்டுவிட்டுத் தான் அன்றைய பாடத்தை துவங்கும் வழக்கம் உடையவர். அதனால் ஒவ்வொரு நாளும் அன்றைய பாடத்தை முடித்துவிட்டு, நாளைக்கு நான் எடுத்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பேன், எல்லோரும் படித்து விட்டு வாருங்கள், தேவையில்லாமல் என்னை இம்போசிசன் போட வைத்து விடாதீர்கள் என்று சொல்லிவிடுவார். மறு நாள் வகுப்பிற்கு வந்தவுடன் நேற்று எடுத்த பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்டு முதலில் அமர்ந்திருக்கும் மாணவனிடமிருந்து ஆரம்பித்து அனைத்து வரிசையாக எழுந்து நிற்கச் சொல்லுவார், எவருக்குப் பதில் தெரியுமோ அவர் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அமரலாம், பதில் தெரியாதவர்கள் எழுந்து நிற்க வேண்டும், அவர்களின் பெயர்கள் வகுப்பு தலைமை மாணவனால் குறித்து கொள்ளப்பட்டு பின்னர் அமர வைக்கப்படுவார்கள்.

கேள்விகளின் விரிவைப் பொறுத்து இம்போசிசன் எழுதும் எண்ணிக்கை ஆசிரியரால் முடிவு செய்யப்படும், பெரிய கேள்விகளாக இருந்தால் பத்து முறையும், சிறிய கேள்விக்கான விடைகள் என்றால் இருபதினைந்து முறையும் பொதுவாக இருக்கும், மறு நாள் அந்த இம்போசிசன் பேப்பர்களை மாணவர்களிடம் சேகரித்து ஆசிரியரிடம் கொடுப்பது வகுப்பு மாணவ தலைவனின் பொறுப்பு. இதில் இரு சுவாரசியம் என்னவென்றால் ஆசிரியர் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு வரிசையாக எழுந்து பதில் சொல்லச் சொல்லும்போது அந்தக் கேள்விக்கான முழு பதிலையும் எவரிடமும் நின்று பொறுமையாக கேட்க மாட்டார். ஒரு மாணவன் பதில் சொல்லும் தோரணையை பொறுத்து ஒரு பத்தி சொல்லிவிட்டால் போதும் அமர வைத்து விடுவார். இன்னும் சில மாணவர்கள் பதில் சொல்ல ஆரம்பித்தால் போதும், உடனே அமர வைத்துவிடுவார்.

ஐம்பதிற்கு மேல் மாணவர்கள் இருக்கும் வகுப்புகளில் பத்து மாணவர்களாவது ஆசிரியர் கேட்கும் கேள்விக்குப் பதில் தெரிந்தவர்களாக இருப்பார்கள், இந்தப் பத்து மாணவர்களும் முழுமையாகப் பதில் சொல்லும்வரை காத்திருந்து, பாடம் எடுக்கலாம் என்று நினைத்தால் ஒரு மணி நேர வகுப்பில் பாதி நேரம் அதற்கே போய்விடும் என்பதால் அந்த ஆசிரியர் சில மாணவர்கள் பதில் சொல்ல ஆரம்பிப்பதை வைத்தே அவர் அவர்களுக்குப் பதில் முழுமையாகத் தெரியும் என்றெண்ணி அவர்களை அமரச் சொல்லிவிடுவார். இதை சில வித்தகர் மாணவர்கள் அவர்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆசிரியர் கேள்வி கேட்டவுடன் ஆக்ரோசமாக ஒரு பத்தியை சொல்ல ஆரம்பிப்பார்கள் ஆசிரியரும் இவர்களின் செய்கையை பார்த்து அமர வைத்துவிடுவார். உண்மையில் அந்த மாணவர்களுக்கு ஆசிரியர் கேட்கும் கேள்விக்கான முழு பதிலும் படித்திருக்க மாட்டார்கள் முதல் பத்தியை மட்டும் படித்துவிட்டு இம்போசிசனிலிருந்து தப்பித்து விடுவார்கள்.

இந்த வித்தகர்களின் வித்தைகளைக் கண்டுபிடிப்பதற்கு ஆசிரியருக்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை, அடுத்த மாத தேர்வுக்கான விடைத்தாளிலேயே அந்த மாணவர்களில் குட்டு வெளிப்பட்டுவிட்டது. ஒரு நாள் அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டுபிடித்து வழக்கம் போல் கேள்விகள் கேட்பது போல் கேட்டு அமரவைத்துவிட்டு, பதில் தெரியாமல் நின்றவர்களுக்கு இம்போசிசன் கணக்கைச் சொல்லிவிட்டு, பதில் தெரியும் என்று சொல்லி அமர்ந்திருக்கும் மாணவர்களை வகுப்பின் முன்னால் வந்து முழுமையான பதிலை சொல்லும் படி சொல்லிவிட்டு வகுப்பில் போடப்பட்டிருந்த நாற்காலியில் ஆசிரியர் அமர்ந்துவிட்டார். அப்புறம் என்ன, வித்தகர்கள் எல்லாம் விழித்தார்கள்.

இன்றைய கால சூழ்நிலையில் எல்லோருடைய வாழ்க்கையிலும் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. பல போராளிகளை இந்தச் சமூக வலைத்தளங்களில் நீங்கள் பார்க்க முடியும். இந்தச் சமூக ஊடகங்களில் இருப்பவர்கள் எந்தவொரு அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளையும் உடனடியாக மீம்ஸ்களாகவும், குறுந்தகவல்களாகவும் தெறிக்க விடுகிறார்கள். இத்தகைய குறுந்தகவல்களும் மீம்ஸுகளும் சில மணிநேரங்களில் எல்லோருடைய பார்வைகளுக்கு வந்துவிடுகிறது, அந்த ஒருவரி செய்திகளை படித்தவர்களுக்கு அதில் இருக்கும் தகவல்களே அவர்களுக்கு அந்த நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு போதுமானதாக எண்ணித் திருப்தியடைந்து விடுகிறார்கள். அந்தச் செய்திகளை பற்றிய மேலதிக தகவல்களை பற்றிய தேடல் இருப்பதில்லை.

மீம்ஸ்களாகவும், குறுந்தகவல்களாகவும் பரப்பப்படும் செய்திகளை மேலோட்டமாகப் படித்தால் அதில் இருக்கும் அரசியல் உங்களுக்குத் தெரிவதில்லை, நீங்கள் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் அதில் இருக்கும் ஒரு பக்க சார்பு உங்களுக்குப் புலப்படும். கண்டிப்பாக எவரோ ஒருவரால் அரசியல் செய்யப்பட்டு, திட்டமிட்டுப் பரப்பப்படும் செய்திகளாகத் தான் இவை வலம் வரும். இப்படியான செய்திகளை படித்துவிட்டு அவற்றுக்கு ஒரு பொங்கல் வைத்துவிட்டு தன்னை ஊடக போராளிகளாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம்.

இப்போது பெரும்பாலான ஊடகங்களும், பத்திரிக்கைகளும் உண்மையான செய்திகளை கொடுப்பதில் இருக்கும் அக்கறைகளை விட சுவாரஸ்யமான செய்திகளைக் கொடுப்பதில் தான் அதிக அக்கறை காட்டுகின்றன. இன்றைக்கு விவாதம் என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்துத் தொலைக்காட்சி ஊடகங்களிலும் பின்வரும் நிகழ்வுகளை எல்லோராலும் கவனிக்க முடியும், கல்வி, பொருளாதாரம் மற்றும் சூழியல் தொடர்பான விவாதங்களில், அதற்காக அழைக்கப்படும் அந்த துறைசார்ந்த வல்லுநர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் மற்றும் முக்கியத்துவத்தை விட அதை வைத்து அரசியல் செய்யும் கட்சி பிரதிநிதிகளுக்கு நிகழ்ச்சி நெறியாளரால் கொடுக்கப்படும் நேரமும், முக்கியத்துவமும் அதிகம். எந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும், எப்படியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதிலெல்லாம் பலகட்ட அரசியல் இருக்கிறது. இவற்றையும் தாண்டி நாம் சரியானகோணத்தில் செய்திகளை புரிந்து கொள்வது தான் நமக்கான சவால்.



இந்தச் சவால்களை எதிர்கொள்ள நாம் ஏழு கடல், ஏழு மலைகளைத் தாண்டவேண்டியது இல்லை, கொஞ்சம் விசாலமான பார்வையும், தேடல்களும் இருந்தால் போதும். பெரிய ஊடகங்களால் மட்டுமே கட்டமைக்கப்படும் செய்திகளைத் தவிர, பல சிறிய முன்னணியில் இல்லாத ஊடகங்களிலும் நம்முடைய கவனங்களை செலுத்த வேண்டும். இணையங்களில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றிய விரிவான செய்திகளும், அதற்கான ஆய்வுகளும், விவாதங்களும் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை நாம் தேடி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும். ஆனால் நுனிப்புல்லை மட்டுமே மேயும் பெரும்பான்மையினர் ஒரு நீளமான கட்டுரையையோ, ஆய்வறிக்கையையோ படிக்க விரும்புவதில்லை.

ஒரு வாட்ஸ்அப் குழுமத்தில், கடந்த மாதம் நடந்த முடிந்த தேர்தலைப் பற்றிய ஒரு விவாதத்தில், யாருக்கு வாக்களிக்க வேண்டும்?, யாருக்கு வாக்களிக்கக் கூடாது?, அந்தக் கட்சியின் கொள்கைகள் சரியில்லை, இந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை சரியில்லை, முதல்வர் வேட்பாளருக்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார் என்றெல்லாம் பலரிடம் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த நண்பரிடம் உங்கள் மாவட்டத்தில் மொத்தம் எத்தனைத் தொகுதிகள்? என்று கேட்டேன், அதற்கு அவரிடம் சரியான பதில் இல்லை, உங்கள் மாவட்டத்தில் உள்ள முக்கியமான மக்கள் பிரச்சனைகள் என்ன? என்றும் கேட்டேன் அதுவும் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை. இந்தத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் கல்வியை மக்களுக்கு இலவசமாகத் தருவேன் என்று தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டாலும் “நான் எந்தவொரு கட்சியின் தேர்தல் அறிக்கையும் முழுமையாகப் படிக்கவில்லை” என்று தான் பதில் வந்தது. ஆனால் தேர்தலைப் பற்றியும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றியும் குழுமத்தில் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

உள்ளூரில் வசித்து, ஐரோப்பாவை உலக வரைபடத்தில் பார்த்துக்கொண்டே ஐரோப்பியர்களின் வாழ்க்கையையும், கலாச்சாரத்தையும் தனது சிஷ்ய கோடிகளுக்கு கற்றுக்கொடுத்து அதன்படி வாழ வைக்கும் பின்நவீனத்துவ எழுத்தாளர் சாருநிவேதிதாவின் வலைத்தளத்தில் ஒரு பக்கத்தை படிக்க நேர்ந்தது. அதில் அவருடைய தீவிர இலக்கிய வாசகர் ஒருவர், அவர் ஒரு பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை பற்றி விசாரித்ததை ஒரு கேள்வி பதில் உரை நடையில் எழுதியிருந்தார். நாங்களெல்லாம் என்றைக்கோ உள்ளூர் இலக்கியமும், அரசியலும் கரைத்து குடித்துவிட்டு ஐரோப்பிய இலக்கியத்தையும் அரசியலையும் சாருவிடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டும் சாருவின் வாசகர் ஒருவர் கேட்கிறார், அன்புமணி ராமதாஸ் என்றால் யார் என்று? இதைவிடக் கொடுமை பாமக தலித் கட்சியா என்ற விவாதம்.

அவருடைய வாசகர்கள், அவர்களுடைய விவாதம், இதில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்? என்ற கேள்வி எனக்கே வருகிறது, என்ன செய்வது நாளைக்கே இவர்கள் ஒரு 100 பக்க புத்தகத்தை எழுதி பெரிய எழுத்தாளர்கள் ஆகிவிடுவார்கள், மறு நாளே தொலைக்காட்சி விவாதங்களில் கலர், கலராகச் சட்டைகள் போட்டுவந்து சமூக ஆர்வலர், சூழியல் செயற்பாட்டாளர், டிராவலர் என்ற அடைமொழியுடன் வந்து நமக்கும், சமூகத்துக்கும் கருத்து சொல்வார்கள்.

.

Monday, May 30, 2016

இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!

இன்றுடன் ஐபிஎல் போட்டிகள் முடிந்துவிட்டது, கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் படி என்னை மாற்றியமைத்தது இந்த ஐபிஎல் போட்டிகள். அதுவரையிலும் இந்தியா மட்டுமே ஜெயிக்க வேண்டும், எதிர் அணி எவ்வளவு வலுவாக இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலையில்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக உலகத்தில் உள்ள அத்தனை கடவுளையும் வேண்டிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி ரசிகன். பள்ளியில் விடுமுறை விட்டுவிட்டால் போதும் பேட்டைத் தூக்கி கொண்டு கிரவுண்டுக்கு ஓடி விடுவேன். சோறு தண்ணி இல்லாமல் 10 ரூபாய் பெட் மேட்சுக்கு ஊர் ஊராகச் சுற்றிய வரலாறு கூட உண்டு.

இப்படி எல்லாம் எழுதியவுடன் பெரிய ஒரு ஆல் ரவுண்டரை இந்தியா டீம் இழந்திடுச்சோ! என்று நீங்கள், நினைத்தால் கம்பெனி பொறுப்பல்ல. பேட்டிங் என்றால் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பது தெரியும், பவுலிங் என்றால் பந்தை மாங்கா எறிவது போல் எறியாமல் கையை சுற்றிப் போட தெரியும். எனக்கு அந்த அளவிற்குத் தெரிந்திருப்பதே என்னுடைய டீமிற்கு பெரிய தகுதியாக இருந்தது என்றால் எங்களுடைய டீம் எவ்வளவு பெரிய டீம் ஆக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள், வாரம்தோறும் ஊரில் பல இடங்களில் நடக்கும் பெட் மேட்சுகளில் எங்க டீம் போய் அடி வாங்காத இடமே கிடையாது, எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருந்துவிட்டு, அடுத்த வாரமும் அடி வாங்கிய டீமிடம் போய் பெட் மேட்சு கேட்போம்.



நான் விளையாடும் போது எட்டு ரூபாய்க்கு ரப்பர் பந்து வாங்குவதே பெரிய கஷ்டம், அதற்கு வாரம் தோறும் தலைக்கு 50 காசு, 1 ரூபாய் என்று டீமில் வசூலிக்க வேண்டும், அந்த 50 காசுக்கும் 1 ரூபாய்க்கும் கடன் சொல்லுறவங்களே டீமில் அதிகம் பேர் இருப்பார்கள். இது இப்படி இருக்க வாரம்தோறும் 10 ரூபாய் பெட் மேட்சு போட்டுத் தோற்பதற்கு எவரிடமும் பணம் இருக்காது, அதற்கு என்று சில புரவலர்களை வைத்திருப்போம். நம்ம புரவலர்கள் எல்லாம் உள்ளுரில் வேலை செய்பவர்களாக தான் இருப்பார்கள். மாலையில் வேலை முடித்து கிரவுண்டுக்கு வரும் புரவலர்களிடம், அண்ண! இந்த வாரம் அந்த ஊர் டீமோட பெட் மேட்சு போடுறோம், தோத்த காசை வாங்குறோம் அண்ண! நீங்க, தான் ஒப்பனிங் பேட்டிங்! கெத்து காட்டுறோம்! மறந்திறாதீங்க! என்று உசுப்பேற்ற சில பேர், நம்ம டீம்ல ரெடியா இருப்பாங்க.

அண்ணா! நீங்களும் நானும் தான் ஒப்பனிங் பேட்டிங் இறங்குகிறோம்! நான் அடிக்கவே மாட்டேன் அண்ணேன், ஸ்டிரோக் மட்டும் வச்சு ஓடி வந்து உங்களுக்கு வாய்ப்பு தருவேன், நீங்க தான் பேட்டை சுத்தணும்! இன்னைக்கு நாம் யாருன்னு, அந்த டீமுக்கு காட்டுறோம்! அண்ண, ஆனா ஒண்ணு, நீங்க பேட்டை சுத்தும் போது மட்டும் பந்தை பார்த்து சுத்துங்க! ஏன்ன, நீங்கப் பேட்டை நல்லா தான் சுத்துறீங்க, என்ன ஒண்ணு பந்து தான் பேட்டில் பட மாட்டேங்குது, ஆனா ஒண்ணு அண்ணே! பந்து மட்டும் பேட்டில் பட்டால் போதும் கிரவுண்டுக்கு வெளிய தான்னேன் என்று தன்னை கலாய்க்கிறானா, பாராட்டுறானா! என்று தெரியாமல் பெட் மேட்சுக்கு வந்து நிற்கும் புரவலர் அண்ணனிடம் பெட் மேட்சுக்கான பணம் வாங்கி விட்டால் போதும், “ஒப்பனிங் பேட்டிங் நீங்க தான்!!” என்று சொன்னவன் அவர் கண்ணிலிருந்து காணாமல் போயிருப்பான்.

இப்ப மற்றொருவன் வந்து, அண்ணா! நாம தான் டாஸ் ஜெயித்திருக்கிறோம், பெட் மேட்சுக்கு காசு வேற, நீங்க தான் கொடுத்து இருக்கிறீர்கள், எதிரணியில் பவுலிங் நல்லா போடுறவன் பேரை சொல்லி, அவன் வேற முதல் ஓவரே பவுலிங் போட இருக்கிறான், உங்க விக்கெட் போச்சுன்னா டீம்ல எவனும் அப்புறம் ஒழுங்க ஆட மாட்டன், நீங்க தான் அண்ணே! மேட்சை நடத்தணும், வாண்ணே! வந்து அம்பயரா நில்லுன்னு! என்று அடிக்கிற வெயிலுல கொண்டு மண்டைக் காய விட்டுடுவானுங்க.

ஊர்ல விளையாடும் போது அம்பயர் எல்லாம் சும்மா தான், பேட்டிங் பண்ணுறவன் சொல்லுறது தான் அம்பயர் சொல்லுவார், பேட்டிங் பண்ணுறவன் வைடு என்று சொன்னால் அம்பயர் வைடு கொடுப்பார், விக்கெட் இல்லையென்றால் விக்கெட் இல்லை, எதிரணியில் உள்ளவன் சண்டை போடுவது மட்டும் அம்பயரிடம், பெட் மேட்சில் அம்பயராக நிற்பதற்கும், தெருவில் குழாயடியில் நிற்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.

அம்பயரா நிற்கும் புரவலர் அண்ணன், ஒவ்வொரு விக்கெட் விழும்போதும், நான் போகலாமா என்று டீம் நண்பர்களை பார்த்தால், அண்ணே! நல்ல டார்கெட் வைக்கணும், இப்ப ரன்ரேட் ரெம்ப கம்மிண்ணேன், நீங்க வேற பெட் மேட்சுக்கு பணம் கொடுத்து இருக்கீங்க! என்று அப்பப்ப பீதியை காட்டி, நாம ஜெயிக்கணும் அண்ணே! அவன் போகட்டும், இவன் போகட்டும், கடைசி ரெண்டு ஓவர் அண்ணேன், நீங்க தான் பேட்டை சுத்துறீங்க்க, நாலு சிக்சர் போகும், ரன்ரேட்டும் நல்லா இருக்கும், என்று வாயிலேயே வடை சுட்டுவிட்டு கடைசி வரைக்கும் பேட்டை கையில் கொடுக்க மாட்டார்கள்.

இப்படி ஊர்க் கதை பேசினால் அப்படியே நீண்டு விட்டுப் போகும், நான் சொல்ல வந்தது சொல்ல முடியாமல் போகும். பேச்சுலராக சவுதியில் இருக்கும் போது, என்னுடன் ப்ராஜெக்ட்க்கு வந்த மூன்று பேருடன் சேர்ந்து தங்கியிருந்த வில்லாவிற்குள் கிரிக்கெட் விளையாடுவோம். நான்கு பக்கமும் இரண்டு ஆள் உயரத்திற்குச் சுவர் இருக்கும், அதற்குள் தான் நாங்கள் நான்கு பேரும் வெளியில் தூக்கி அடித்தால் அவுட் என்று வைத்து விளையாடுவோம். நாங்கள் அப்போது தான் முதல் முறையாகச் சவுதிக்கு வந்திருந்தோம், வெளியில் யாரையும் அறிமுகம் கிடையாது, கொஞ்ச நாட்களில் எங்கள் ப்ராஜெக்ட்லில் ஒரு சிறிய பகுதியை அவுட்சோர்சிங் கொடுத்திருந்தோம், அந்த அவுட்சோர்சிங் கம்பெனிலிருந்து இரண்டு மலையாளி நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது.

அந்த மலையாளி நண்பர்களும் லீவு நாட்களில் எங்களுடன் வந்து கிரிக்கெட் விளையாடுவார்கள், அவர்கள் இருவரும் சவுதி வந்து நான்கு வருடங்களுக்கு மேல் இருக்கும். அதனால் நாங்கள் தங்கியிருந்த இடத்தை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார்கள், நாங்கள் தங்கியிருக்கும் வில்லாவிற்கு பக்கத்தில் ஒரு காலியிடம் இருப்பதாகவும், அதில் கிரிக்கெட் விளையாடலாம், பலர் லீவு நாட்களில் விளையாடுவார்கள் என்றும் அந்த மலையாளி நண்பர்கள் சொன்னார்கள். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு நாள் எங்கள் நால்வரையும் வற்புறுத்தி அந்தக் காலியிடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்களுடைய நண்பர்கள் சிலரும் இருந்தார்கள், பவுலிங் போடுவதற்கு ஒரு தளம் போல் போட்டு விளையாடுவதற்கு நன்றாக இருந்தது. நான்கு சுவருக்குள் விளையாடிய எங்களுக்கு அந்த இடத்தில் விளையாடியது ரெம்பவே ஜாலியாக இருந்தது.



மறு வாரமும் அந்த மலையாளி நண்பர்களுடன் விளையாட அந்தக் காலியிடத்திற்கு சென்றோம், ஆனால் அன்று அந்த இடத்தில் நமது பக்கத்து நாட்டு மக்கள் (பாகிஸ்தான்) விளையாடிக் கொண்டிருந்தார்கள். மலையாளி நண்பர்கள் அவர்களிடம் போய் பேசினார்கள், நாங்கள் இப்ப தான் விளையாட வந்தோம், விளையாடி முடிப்பதற்கு ரெம்ப நேரம் ஆகும், உங்களுக்கு விளையாடனும் என்றால் வாருங்கள்! ஒரு மேட்சு போடலாம் என்று அந்தப் பக்கத்து நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என்று மலையாளி நண்பர்கள் எங்களிடம் வந்து சொன்னார்கள். பின்னர் அவர்களே இவங்க! கூட விளையாட வேண்டாம் நாம அடுத்த வாரம் வந்து விளையாடலாம் என்று சொன்னார்கள், கிரகம்! என்னோட வாயிதான் சும்மா இருக்காம, ஊர்லயே பெரிய பெரிய டீம் கூடவே விளையாடி ஜெயித்துருக்கோம், இவங்க என்ன பெரிய பிசாத்து டீம், வாங்க ஒரு மேட்சு போடுவோம் என்று நண்பர்களை உசுப்பேற்றினேன்.

மலையாளி நண்பர்கள் என்னிடம் மட்டும், மலையாளத்தில் பேசுவார்கள், அவர்கள் என்னிடம், "வேண்டாம் ஸ்டீபன்! நமக்கு இவிட பந்து பொறுக்கும் சோலி மாட்டும் தான் கிட்டும்" என்று சொன்னார்கள், நான் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், என்னுடைய நண்பர்களிடம் வாங்க விளையாடுவோம் என்று சொல்லியது தான் தாமதம், பக்கத்து நாட்டு மக்கள் டாஸ் போட அழைத்தார்கள், போட்ட டாஸில் அவர்கள் தான் ஜெயித்தார்கள், பேட்டிங் என்று சொல்லி, இரண்டு பேர் பேட்டிங் இறங்கினார்கள். மலையாளி நண்பர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

நம்ம நண்பர் ஒருவர், கொஞ்சம் நல்லா பவுலிங் பண்ணுவார்கள், அவரை தான் ஓபனிங் பவுலிங் போட அழைத்தோம், பந்தைப் பக்கத்து நாட்டு மக்கள் தான் கொடுத்தார்கள், டென்னிஸ் பாலில் செல்லோடேப் சுற்றி இருந்தார்கள், அதை வைத்துத் தான் விளையாட வேண்டும் என்று சொன்னார்கள், நார்மலா நாம விளையாடும் டென்னிஸ் பால் கொஞ்சம் கனமாக இருக்கும், இது ரெம்ப லைட் வெயிட், சரி என்று சொல்லிக்கொண்டு பவுலிங் போட ரெடியானோம்.

நாங்கள் ஆறு பேரும் பில்டிங் நிற்க தயாரானோம், மிட்விக்கெட், மிட்ஆன், மிட்ஆப் என்று நின்று கொண்டிருந்த எங்களை, பேட்டிங் பண்ணுவதற்கு நின்று கொண்டிருந்த பக்கத்து நாட்டுக்காரர் கோ லாங்! கோ லாங்! என்று சொல்லிக்கொண்டிருந்தார். எனக்குப் புரியவில்லை, இவன் ஏண்டா பில்டிங் செட் பண்ணுறான், நாம் தானே பீல்டிங் செட் பண்ணனும்! இவனுக்கு என்ன வந்தது? என்று அவன் சொல்வது புரியாது போலவே நிற்க, என்னிடம் வந்து கையை பிடித்து அழைத்துக்கொண்டு சிக்ஸ் லைனில் நிற்க வைத்தான். நான் அவனிடம் "எனக்குத் தெரியும் போடா, போய் ஒழுங்கா பேட்டிங் புடிடா" என்று மனதில் நினைத்துக் கொண்டு திரும்பவும் வந்து மிட்ஆப் ல் வந்து பீல்டிங் நின்றேன், அவன் திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று சொன்னான், எல்லாம் எனக்குத் தெரியும், பேட்டிங் புடிடா என்று சொல்லிக்கொண்டே நண்பரை பவுலிங் போடச் சைகை காட்டினேன்.

பேட்டிங் பண்ணுவதற்க்கு நின்ற பக்கத்து நாட்டுக்காரர் ஸ்டைல் ஒரு மார்க்கமாக இருந்தது, நம்ம ஊரில் டீம் பிரிக்கும் போது கடைசிவரை எவரும் எடுக்காமல் ஒருத்தனை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, கடைசியில் எடுத்து டபுள் சைட் பேட்டிங்டா நீ! என்று நாசூக்காகப் போடுவோம் தானே, அவன் பேட்டை எவ்வாறு பிடிப்பானோ! அதுபோல் தான் பக்கத்து நாட்டுக்கார ஓபனிங் பேட்ஸ்மேன் பேட்டைப் பிடித்திருந்தான். நம்ம நண்பர் ஓடி வந்து முதல் பாலை போட்டார், போட்டது தான் தெரியும், பந்து பேட்டில் பட்டு சிக்ஸ் லைன் தாண்டி விழுந்தது. பந்து விழுந்த திசை சரியாக என் கையை பிடித்துக் கொண்டு பக்கத்து நாட்டுக்காரர் கொண்டு விட்ட இடம். இப்போது அந்தப் பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மேன் சிரித்துக்கொண்டே "மேர போலேனா! போலேனா! என்றான்.

எல்லாம் எங்களுக்குத் தெரியும்! போடா டேய்! ஒரு பால் ஏதோ குருட்டாம் போக்கில் பேட்டில் பட்டு சிக்ஸ்ர் போயிட்ட நீ பெரிய ஆளா! ஓடிப்போய் மணலில் அழுந்தியிருந்த பந்தை எடுத்து வந்து, பவுலிங் போடும் நண்பரிடம் கொடுத்து, அடுத்த பாலை போடு நண்பா! என்று சொல்லிவிட்டு திரும்பவும், மிட்ஆப் பொசிசனில் பீல்டிங் வந்து நின்றேன், திரும்பவும் கோ லாங்! கோ லாங்! என்று பக்கத்து நாட்டுக்கார பேட்ஸ்மென் கத்தினான், இப்போதும் எல்லாம் தெரியும் நீ மூடு! என்று சைகை செய்துவிட்டு பவுலிங் போட சொன்னேன்.

இந்தப் பந்தும் சிக்ஸர் பறந்தது, நண்பரும் எல்லா வியூகத்திலும் பந்தை போட்டார், பந்து மிட் ஏரியாவை தாண்டி தான் விழுந்தது, அடுத்த ஓவரே நான் பவுலிங் போட வந்தேன், நம்ம பாலும் நாலு திசைக்கும் பறந்தது, எவ்வளவு தான் ஓடி வந்து போட்டாலும் பந்து ஸ்லோவாக தான் போனது, லைட் வெயிட் பந்தில் ரெம்ப பாஸ்ட்டா வீச முடியவில்லை. அப்புறம் என்ன? மொத்தம் எட்டு ஓவர் கதறக் கதற ஓட விட்டார்கள், பந்தைப் பொறுக்குவதற்கு நாலு திசையிலும் ஓடியே களைத்திருந்தோம். இப்போது தான் மலையாளி நண்பர்கள் சொன்ன "சோலி" யும், பக்கத்து நாட்டுக்காரர் சொன்ன "கோ லாங்!" க்குமான அர்த்தம் புரிந்தது.

எட்டு ஓவரில் ஒரு ரன் அவுட் தவிர வேறு எந்த விக்கெட்டும் எடுக்க முடியவில்லை, ரிட்டய்ர்டு ஹெர்டு முறையில் ஒருவர் பின் ஒருவர் வந்து பந்தை துவம்சம் செய்தார்கள். இப்போது தான் அப்ரடியின் சிக்ஸ்ர் மகிமை புரிந்தது. எல்லோரும் நல்ல ஹேண்ட்பவர் வைத்திருக்கிறார்கள், அவர்கள் பேட்டில் பட்டால் பந்து தெறிக்கிறது. ஒருவழியாக பவுலிங் முடித்து பேட்டிங் பிடித்தால் இன்னும் கொடுமையாக இருந்தது, நாங்களும் அதே பந்தில் தான் பவுலிங் போட்டோம், ஆனால் அவர்கள் வீசும் பந்து சொயிங்! சொயிங்! என்று இடுப்புக்கு வந்தது. எப்படியோ மூணு ஓவர் வரை மொத்த விக்கெட்டும் சமாளித்ததே பெரிய விசயம்.

நான்காவது ஓவரில் எல்லா விக்கெட்டையும் இழந்துவிட்டு நொந்து நூடில்ஸ் ஆகி நண்பர்கள் அனைவரும் வீட்டிற்குக் கிளம்பும் போது, எங்களுடன் விளையாடிய‌ பக்கத்து நாட்டுக்காரர் ஒருவன் வந்து "அடுத்த வாரமும் இதே டைம் நாங்க இங்க தான் விளையாட வருவோம், கண்டிப்பா வாங்க!! என்று எங்களிடம் கைக்கொடுத்தார். எதற்கு வைச்சு செய்யவா? அதான் செஞ்சுட்டீங்களே! இனி இந்தப் பக்கம் வந்தால் தானே!!!


.
Related Posts with Thumbnails