Thursday, April 10, 2014

நீ சேமிக்க வேண்டாம்! இழக்காமல் இருந்தால் போதும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு அருகாமையில் இருக்கும் விமான நிலையம் என்றால் திருவனந்தபுரம் விமான நிலையம் தான். நான் அலுவலக வேலையாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்வது உண்டு. வெளிநாடுகளுக்குச் சென்று வரும் போது இந்தியாவில் நான் இப்போது பணிபுரியும் என்னுடைய ஹைதிராபாத் அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியது இருக்கும். ஹைதிராபாத்திலோ, வெளிநாட்டிலோ இருந்து நான் வந்தாலும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தான் வந்து இறங்குவேன். விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்குச் செல்வதற்கு, எனது வீட்டில் இருந்து அப்பா அல்லது அண்ணன் யாராவது ஒருத்தர் வாடகைக்குக் கார் எடுத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வந்து விடுவார்கள். நானும் அதில் ஏறி எந்த விதமான‌ பிரச்சனையில்லாமல் வந்து விடுவேன். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து எனது வீட்டிற்கு வருவதற்கு ஆயிரத்து அறுநூறு ரூபாய் வாடகை வாங்குவார்கள்.

என்னுடைய கல்யாணம் முடிந்த ஓரிரு மாதத்தில், ஹைதிராபாத் அலுவலகத்திற்கும், சவூதி அரேபியாவிற்கும் ஒரு புராஜெக்ட் வேலையாகத் தொடர்ச்சியாக வாரம் ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை ஒரு மாதத்திற்குள் பயணம் செய்ய வேண்டி வந்தது. அப்போது நான் ஹைதிராபாத்தில் வீடு எதுவும் எடுத்திருக்கவில்லை. எனவே ஹைதிராபாத் வந்தால் அலுவலகத்தில் இருந்து ஏற்பாடு செய்திருக்கு ஹோட்டலில் தங்குவேன். வேலை முடிந்தவுடன் திரும்பவும் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து ஊருக்கு சென்றுவிடுவேன்.

வாரம் ஒருமுறை என்று திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து இறங்கி வீட்டிற்குப் போவதற்கும், வீட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வருவதற்கும் மொத்தமாக மூவாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகும். நான் எப்போதும் ஹைதிராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் வருகிறேன் என்றால் ஒரு நாளைக்கு முன்னரே வீட்டில் சொல்லிவிடுவேன், அவர்களும் வாடகைக் காருக்குச் சொல்லிவிடுவார்கள். இவ்வாறு வாரம் ஒருமுறை வாடகைக் காருக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் செலவு செய்வது என்பது கொஞ்சம் ஓவராக எனக்குப் பட்டது. அதனால் ஒருமுறை வீட்டில் உள்ளவர்களிடம் நான் வருவதற்கு நீங்கள் கார் எதுவும் எடுத்து வர வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். எப்படி வரப் போகிறாய்? என்று அப்பா கேட்டார்கள், என்னிடம் ல‌க்கேஜ் எதுவும் இல்லை அதனால் நான் பஸ்ஸில் வருகிறேன் என்றேன். நான் ஏதாவது புதிதாகச் செய்கிறேன் என்று சொதப்பி வைப்பேன் என்பது அப்பாவிற்கு நன்றாகத் தெரியும். அதனால் அப்பா வேண்டாம்! நான் கார் எடுத்து வருகிறேன், அதிலேயே வந்துவிடு என்றார்கள், நான் கேட்கவில்லை.

ஹைதிராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வருவதற்கு விமான டிக்கெட்டிற்கு மட்டும் எட்டாயிரம் ரூபாய் செல‌வு செய்கிறவனுக்கு, ஆயிரத்து அறுநூறு ரூபாய் கார் வாடகைக் கொடுப்பதில் என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. விமான டிக்கெட் ஆபிஸிலேயே புக் செய்து கொடுத்துவிடுவார்கள். விமான நிலையத்தில் இருந்து ஊருக்குச் செல்வதற்கான கார் வாடகை மட்டும் தான் நான் எனது கையில் இருந்து செல‌வு செய்வேன். என்னுடைய திட்டம் ஹைதிராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து, விமான நிலையத்தில் இருந்து ஆட்டோ அல்லது கால் டாக்சி பிடித்துப் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து ஊருக்குப் பஸ்ஸில் செல்வது.



இரவு பதினொரு மணிக்கு ஹைதிராபாத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து சென்னையில் இருந்து டிரான்சிட் விமானம் பிடித்துக் காலையில் ஆறு மணியளவில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தேன். எனது வீட்டில் இருக்கும் அண்ணன் மற்றும் அக்கா குழந்தைகளுக்காக எப்போதும் நான் ஹைதிராபாத்தில் இருந்து வீட்டிற்குப் போகும் போது இங்குள்ள கராச்சி பேக்கரியில் இருந்து பாதாம், பிஸ்தா, சாக்லெட் என்று வித விதமான பிஸ்கட் வாங்கிச் செல்வது உண்டு. இந்தமுறை நேரம் இல்லாததால் எதுவும் வாங்கவில்லை, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும் போது சரவணப் பவன் கடையில் புதிய ரக இனிப்பு வகைகளைக் கொண்டு வந்து அடுக்கிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது, உடனாடியாக அங்குச் சென்று கொஞ்சம் இனிப்புகளை வாங்கிக் கொண்டேன். சரவணப் பவனின் விலை அனைவருக்குத் தெரியும் மொத்தமாக எழுனூற்று ஐம்பது ரூபாய் ரூபாய் பில் வந்தது.

விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்து ஆட்டோ ஏதாவது கண்ணில் படுகிறாதா என்று தேடிய போது, ஒருவர் என்னிடம் வந்து, சென்னையில் இருந்து வர வேண்டிய‌ பிளைட் வந்திடுச்சா? என்று கேட்டார். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு திரும்புவதற்குள், பிளைட்டில் இருந்து வந்தவங்க எல்லாம் வெளியே வந்திட்டாங்களா? என்று அடுத்தக் கேள்வியை வைத்தார். நான் அவரைப் பார்த்து மெல்லிய புன்னகையுடன் இல்லைங்க, லக்கேஜ் போட்டவங்க வெளியே வந்து இருக்க மாட்டாங்க, கொஞ்சம் நேரம் ஆகலாம் என்றேன். நீங்களும் இந்தப் பிளைட்டில் தான் வந்தீங்களா? என்று அடுத்தக் கேள்வியை வைத்தார். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு, யாருக்காக வெய்ட் பண்ணுறீங்க என்றேன், என்னோட தம்பி சென்னையில் இருந்து வரான், அவனுக்காகத் தான் கார் கொண்டு வந்திருக்கிறேன் என்றார். நீங்க எங்குப் போகனும் என்று என்னிடம் கேட்டார், நான் வில்லுக்குறி என்றேன். அவர் எனது ஊரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் குளச்சல் என்ற ஊர் தான் தங்களுடைய‌ சொந்த ஊர் என்றும் அங்கிருந்து தான், தன்னுடைய தம்பியை அழைத்துச் செல்ல கார் எடுத்து வந்திருப்பதாக விவரித்தார்.

நீங்க எப்படிப் போகப் போறீங்க? என்று என்னிடம் கேட்டார், நான் பஸ்ஸில் போகலாம் என்று இருக்கிறேன் என்றேன். அதற்கு அவர் எதுக்கு நீங்க பஸ்ஸில் போகனும், நாங்க அழகியமண்டபம் வழியாகத் தான் குளச்சலுக்குப் போவோம், நீங்கள் அங்கு இறங்கி கொள்ளுங்கள் என்றார். நான் உங்களுக்கு எதுக்குச் சிரமம் என்று சொல்லிவிட்டு நகரப் பார்த்தேன். அதற்குள் அவருடைய தம்பி வெளியில் வந்து இவரைப் பார்த்து தனது கையைக் காட்டினார். இவர் என்னிடம் கொஞ்சம் நில்லுங்கள், என்று சொல்லிவிட்டுத் தம்பியிடம் சென்று லக்கேஜ் இருந்த வண்டியை வாங்கிக் கொண்டு இருவரும் என்னை நோக்கி வந்தார்கள்.

வ‌ரும் போதே என்னைப் பற்றி அவருடைய தம்பியிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன், இருவரும் என்னை நெருங்கி வந்தவுடன், அவருடைய தம்பியும் என்னிடம் வந்து கையைக் குலுக்கி தன்னை அறிமுகப் படுத்திவிட்டு, நீங்க எதுக்குப் பஸ்ஸில் போகணும், நாங்க அந்தப் பக்கம் தான் போகிறோம், எங்களுடம் வாங்க என்றார். அதற்கு மேலும் அவர்களிடம் மறுப்பு ஏதும் சொல்ல முடியாமல் அவர்கள் கொண்டு வந்திருந்த காரில் ஏறினேன். அண்ணன், தம்பி இருவரும் பின்னால் அமர, நான் டிரைவரின் பக்கத்தில் உள்ள இருக்கையில் முன்னால் அமர்ந்து கொண்டேன். என்னுடைய கையில் இருந்த சிறிய டிராவல் பேக்கை அவர்களின் லக்கேஜை வண்டியின் டிக்கியில் போடும் போது நானும் போட்டுக் கொண்டேன். கையில் சரவணப் பவனில் வாங்கிய இனிப்பு கவர் மட்டும் இருந்தது.

விமான நிலையத்தில் இருந்து நாங்கள் கிளம்பும் போதே காலை மணி ஏழு தாண்டியிருந்தது. காரில் ஏறிய பிறகு தான் ஒருவர், ஒருவருடைய பெயர்களையே அறிமுகம் செய்து கொண்டோம், நான் ஸ்டீபன் என்றேன், அவர்களில் அண்ணன் தன் பெயர் ராபின் என்றும், தம்பி ரூபன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். அப்படியே அவர்களின் வேலைகளைப் பற்றியும் பேசினோம், சென்னையில் இருந்து வருபவர் கப்பலில் பணி செய்வதாகவும், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணிமுடித்து ஊருக்கு வந்து போவதாகவும் சென்னார். நானும் என்னுடைய புராஜெக்ட்கள் பற்றி அவர்களுக்கு விளக்கினேன்.

கொஞ்சம் நேரம் எங்களுக்குள் பேசிக் கொண்டிருதோம். பேசிக் கொண்டிருக்கும் போதே சென்னையில் இருந்து வந்தவர் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தார். இதற்குள் எனக்கு வீட்டில் இருந்து இரண்டு முறை போனில் அழைப்பு வந்துவிட்டது, எங்கு வருகிறாய், எப்படி வருகிறாய் என்று, நான் காரில் வருவது பற்றிச் சொன்னேன். திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் செல்லும் சாலை என்பது ஒரு வழிச்சாலை மற்றும் குண்டும் குழியும் அதிகம். அதனால் அந்தச் சாலையில் நாற்பது தாண்டி வேகத்தில் செல்வது கடினம். காலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் அதிகமாக‌ செல்வதால் டிராபிக் வேறு அதிகமாக இருந்தது. நான் எனது மொபைலை எடுத்து இணையத்தைத் திறந்து செய்திகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

கார் மார்த்தாண்டம் நெருங்கிய போது மணி ஒன்பது ஆகியிருந்தது. தூங்கி கொண்டிருந்தவர் எழுந்து வண்டியை நல்ல ஹோட்டலில் நிறுத்துங்கள் டிபன் சாப்பிட்டுப் போகலாம் என்றார். நான் வீட்டில் போய் டிபன் சப்பிடலாம் என்ற ஐடியாவில் தான் இருந்தேன். அம்மா போனில் பேசும் போதும் நான் வீட்டிற்கு வந்து டிபன் சாப்பிடுகிறேன் என்று தான் சொல்லியிருந்தேன். நம்முடன் இருப்பவர்கள் சாப்பிடப் போகும் போது நான் மட்டும் வரவில்லை என்று சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் நானும் அவர்களுடன் சாப்பிடவத‌ற்கு தயாரானேன்.

மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு முன்பே, வலதுப் பக்கத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் புதிதாகத் திறந்திருக்கும் ஹோட்டலுக்குள் நுழைந்தோம். எங்கள் ஏரியாவில் பெரும்பாலான ஹோட்டல்களில் காலையிலேயே புரோட்டா கிடைக்கும், அதற்குச் சால்னாவாகப் பீப், முட்டை அல்லது கடலை கறி என்று வைத்திருப்பார்கள். இந்த ஹோட்டலில் பீப்க்கு பதிலாக மட்டன் கறி இருக்கிறது என்றார்கள். அவர்களில் டிரைவர் உட்பட‌ மூன்று பேரும் புரோட்டா வித் மட்டன் என்று சொன்னார்கள். நான் பெரும்பாலும் டிராவல் செய்யும் போது நான்வெஜ் அதிகமாக‌ சாப்பிடுவது இல்லை, அதனால் நான் ஆப்பம் வித் கடலை என்று ஆர்டர் பண்ணினேன்.

தண்ணீர் பாட்டில், டீ, காபி என்று அவரவருக்குத் தேவையானவற்றை ஆர்டர் பண்ணினோம், நாம் வருவதோ ஓசியில் கார் பயணம், இதில் நம்முடைய‌ சாப்பாட்டிற்கு வேறு அவர்கள் பணம் கொடுக்க வேண்டுமா என்று நினைத்துக் கொண்டு சர்வரிடம் பில்லை என்னிடம் கொடுக்குமாறு கூறினேன். அவரும் என்னிடம் கொண்டு பில்லை தந்தார். பக்கத்தில் இருந்த அண்ணன் தம்பி இருவரும் நாங்கள் கொடுக்கிறோம் என்று என்னிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள், நான் கேட்கவில்லை அவர்கள் சாப்பிடுவதற்கு முன்பே நான் முடித்துவிட்டதால் நேராகக் கேஷியரிடம் சென்று பில்லை பார்த்துவிட்டு ஓர் ஐநூறு ரூபாய் தாளைக் கொடுத்தேன். பில்லில் நானூற்று இருபது ரூபாய் என்று இருந்தது.

சென்னையில் இருந்து வந்தவருக்குப் புகைப் பழக்கம் இருக்கும் போல, என்னிடம் கேட்டார், நான் இல்லை என்றேன், டிரைவர் அவருக்குக் கம்பெனி கொடுக்க இருவரும் ஹோட்ட‌லுக்கு வெளியில் வந்து ஊதினார்கள். நானும் இன்னொருவரும் காரில் சென்று வெயிட் பண்ணினோம். இருவரும் புகைத்து முடித்துவிட்டு, பின்பு வந்து காரில் ஏறி பயணத்தைத் தொடந்தோம். காரில் ஏறியவுடன், நாங்கள் உங்களை வில்லுக்குறியிலேயே டிராப் செய்து விடுகிறோம், அங்கிருந்து திங்கள் சந்தை வழியாக நாங்கள் குளச்சம் போய் விடுவோம் என்றார்கள். அழகிய மண்டபத்தில் இருந்து இவர்கள் குளச்சல் சென்றால் ஒரு நான்கு கிலோ மீட்டர் டிராவல் குறைவாக வரும். ஆனால் என்னை டிராப் செய்ய எனது ஊருக்கு வந்தால் இவர்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பதால் நான் வேண்டாம் என்றேன், அவர்கள் கேட்கவில்லை. வண்டியை நேராக வில்லுக்குறிக்கு விடுங்கள் என்று டிரைவரிடம் சொன்னார்கள்.

வில்லுக்குறி மெயின் சாலையில் இருந்து பத்து மீட்டர் இடைவெளியில் தான் என்னுடைய வீடு இருக்கிறது. சரியாக வில்லுக்குறியை நெருங்கும் போது வீட்டில் இருந்து மனைவியின் போன் அழைப்பு, நான் போனை எடுத்துக் காதில் வைத்து "பக்கத்தில் வந்துவிட்டேன்" என்று சொல்லுவதற்குள் கார் வில்லுக்குறியில் நிறுத்தியாகிவிட்டது. டிரைவரும் என்னுடன் இறங்கி பின்னால் இருந்த லக்கேஜை எடுக்க உதவினார். நான் காதில் போனை வைத்துக் கொண்டே நன்றி சொன்னேன். அவர் தலையைச் சொறிந்தார். நான் யூகித்துக் கொண்டு பாக்கெட்டில் கையை விட்டால் எல்லாம் ஐநூறு ரூபாய் தாள். சில்லறைக் கேட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்துக் கொண்டே ஓர் ஐநூறு ரூபாய் தாளை கையில் திணித்து விட்டுப் பின்னால் இருந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனில் மனைவியுடன் பேசிக் கொண்டே வீட்டிற்கு நடந்தேன்.

மனைவியிடம் போனில் "இதோ இறங்கி நடந்து வந்து கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனை கட் செய்துவிட்டு என்னிடம் இருக்கும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கும் போது, விமான நிலையத்தில் உள்ள சரவணபவன் கடையில் வாங்கிய‌ இனிப்பு கவரை எடுக்க மற‌ந்து காரில் விட்டு வந்திருந்தேன். திரும்பி சாலையைப் பார்த்தால் கார் கிளம்பியிருந்தது. அவர்களுடைய போன் நம்பர் கூட வாங்கியிருக்கவில்லை. அவர்களுடைய பெயர் மற்றும் ஊர் குளச்சல் என்று மட்டும் தான் தெரியும். குளச்சல் என்பது சிறிய கிராமம் கிடையாது, அதைச் சுற்றியும் பல ஊர் உண்டு. எவரிடமும் சென்று விசாரிக்கவும் முடியாது. ஒருவேளை அவர்கள் அந்த இனிப்பை எனக்குத் தர வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களுக்கும் என்னுடைய போன் நம்பரோ, முகவரியோ தெரியாது.

எப்படியோ, ஆயிரத்து அறுநூறு ரூபாய் சேமிக்கப் போகிறேன் என்று, இனிப்பு கவர் எழுனூற்றி ஐம்பது, ஹோட்டல் பில் ஒரு நானூற்றி இருபது மற்றும் டிரைவரின் டிப்ஸ் ஐநூறு, ஆக மொத்தம் ஆயிரத்து அறுநூற்று எழுபது ரூபாய் இழந்து வந்திருந்தேன். இதில் கொடுமை என்னவென்றால் நான் வீட்டிற்கு வந்தவுடன் அண்ணன் மற்றும் அக்காவின் குழந்தைகள் இருவரும் என்னுடைய டிராவல் பேக்கை பிரித்துச் சாக்லெட் தேடியது தான். அவர்கள் இருவரின் ஏமாற்றத்திற்கு என்ன விலைக் கொடுப்பது என்று தெரியவில்லை.

.

9 comments:

Prathap Kumar S. said...

எவ்ளோ தான் ஆயில் தேய்சிட்டு உருண்டாலும் ஒன்லி ஒட்ற மண்ணுதான் ஒட்டிங்கி....:)

ஒரு சின்ன டிப்பு....ஒரு பி.பதிவருக்கே டிப்பு கொடுக்கறது தப்புதான்....இருந்தாலும் சொல்றேன்... பதிவு சூப்பர் ஆனால் கொஞ்சம் எடிட் பண்ணுங்க... நம்ம தமிழ்படம் மாதிரி விசம் பாட்டில்ல விசம்னு எழுதி வைக்கறமாதிரி நிறைய விளக்கம் தேவையில்லை. படிக்கும்போது ஒருவேளை ஆயாசமா இருக்கும்.... சுண்டக்காய்ச்சின பால்தான் தல ருசி.... :)

Where r u now? Villukuri or Hyd?

வருண் said...

எல்லாம் சரிங்க, குளச்சல் காரருக்குத்தான் உங்க வீடு தெரியுமே? கொண்டு வந்து திரும்பக் கொடுக்க வேணாமா? பக்கத்து ஊருனு வேற சொல்றீங்க?

பாஷால நம்ம ரஜினி செய்வதுபோல?

இன்னொருவர் வாங்கி வந்த பலகாரத்தை எப்படிங்க சாப்பிடுறது?

கவனக்குறைவால் தவறவிட்டது நீங்க என்றாலும், எனக்கு கோவம் வருவது டாக்ஸிக்காரர் மேலேதான்.

என்னவோ போங்க! அடுத்தவன் பலகாரம்னா என்ன? பகவானுக்கு கொஞ்சம் படச்சுட்டு மீதிய சாப்பிட்டால் தப்பில்லைனு பாலிஸியோ என்னவோ போங்க!

Unknown said...

குழந்தைகளுக்கு ஏமாற்றம் என்றாலும் ,எதையும் எதிர்ப்பார்க்காமல் உதவிய அந்த நண்பர்களுக்கு நீங்கள் தந்த நன்றி காணிக்கையாக அந்த ஸ்வீட் கொடுத்ததாக மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் !
த ம +1

திண்டுக்கல் தனபாலன் said...

(ஓசி) நேரம் சரியில்லை என்றாலும் இப்படித்தான்...

unmaiyanavan said...

சில சமயம் நாம் பணத்தை மிச்சப் படுத்துகிறோம் என்று எண்ணி, ஏகப்பட்ட செலவு செய்துவிடுவோம். அது மாதிரி தான் உங்கள் அனுபவமும். பகவான்ஜீ சொன்னதுபோல் அவர்களுக்கு நன்றி காணிக்கை என்று தேற்றிக்கொள்ள வேண்டும் தான்.
என்ன!! வெறுங்கையோடு குழந்தைகள் முன் நிற்கும்போது, மனது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்.

நாடோடி said...

@நாஞ்சில் பிரதாப்™ said...
//எவ்ளோ தான் ஆயில் தேய்சிட்டு உருண்டாலும் ஒன்லி ஒட்ற மண்ணுதான் ஒட்டிங்கி....:)

ஒரு சின்ன டிப்பு....ஒரு பி.பதிவருக்கே டிப்பு கொடுக்கறது தப்புதான்....இருந்தாலும் சொல்றேன்... பதிவு சூப்பர் ஆனால் கொஞ்சம் எடிட் பண்ணுங்க... நம்ம தமிழ்படம் மாதிரி விசம் பாட்டில்ல விசம்னு எழுதி வைக்கறமாதிரி நிறைய விளக்கம் தேவையில்லை. படிக்கும்போது ஒருவேளை ஆயாசமா இருக்கும்.... சுண்டக்காய்ச்சின பால்தான் தல ருசி.... :)

Where r u now? Villukuri or Hyd?//

வாங்க தல,

எப்படி இருக்கீங்க?.. நீங்களும் பதிவை எழுத ஆரம்பீங்க.. நான் ஹைதிராபாத்தில் தான் இருக்கிறேன்.

சுருங்க எழுதனும் என்று தான் நினைக்குறது, ஆனா அனுபவமா எழுதும் போது அது கொஞ்சம் டீடெயிலா போயிடுது, எழுதியவுடன் போஸ்ட் பண்ணிவிடுவதாலும் இந்த தவறு நடக்கிறது, எடிட் பண்ண நேரம் ஒதுக்குவது இல்லை... :) அடுத்த முறை இதை சரி செய்ய பார்க்கிறேன் தல..

நாடோடி said...

@வருண் said...
//எல்லாம் சரிங்க, குளச்சல் காரருக்குத்தான் உங்க வீடு தெரியுமே? கொண்டு வந்து திரும்பக் கொடுக்க வேணாமா? பக்கத்து ஊருனு வேற சொல்றீங்க?

பாஷால நம்ம ரஜினி செய்வதுபோல?

இன்னொருவர் வாங்கி வந்த பலகாரத்தை எப்படிங்க சாப்பிடுறது?

கவனக்குறைவால் தவறவிட்டது நீங்க என்றாலும், எனக்கு கோவம் வருவது டாக்ஸிக்காரர் மேலேதான்.

என்னவோ போங்க! அடுத்தவன் பலகாரம்னா என்ன? பகவானுக்கு கொஞ்சம் படச்சுட்டு மீதிய சாப்பிட்டால் தப்பில்லைனு பாலிஸியோ என்னவோ போங்க!//

வாங்க வருண்,

எனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நீங்கள் சொல்லியதை தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.... ;)

நாடோடி said...

@Bagawanjee KA said...
//குழந்தைகளுக்கு ஏமாற்றம் என்றாலும் ,எதையும் எதிர்ப்பார்க்காமல் உதவிய அந்த நண்பர்களுக்கு நீங்கள் தந்த நன்றி காணிக்கையாக அந்த ஸ்வீட் கொடுத்ததாக மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் !
த ம +1//

வாங்க பகவான்ஜி,

நீங்கள் சொல்வது போல் தான் மனதை தேற்றிக் கொண்டேன்.. கருத்துக்கு ரெம்ப நன்றி..

@திண்டுக்கல் தனபாலன் said...
//(ஓசி) நேரம் சரியில்லை என்றாலும் இப்படித்தான்...//

வாங்க தனபாலன்,

வருகைக்கும், கருத்துக்கு ரெம்ப நன்றி..

நாடோடி said...

@Chokkan Subramanian said...
//சில சமயம் நாம் பணத்தை மிச்சப் படுத்துகிறோம் என்று எண்ணி, ஏகப்பட்ட செலவு செய்துவிடுவோம். அது மாதிரி தான் உங்கள் அனுபவமும். பகவான்ஜீ சொன்னதுபோல் அவர்களுக்கு நன்றி காணிக்கை என்று தேற்றிக்கொள்ள வேண்டும் தான்.
என்ன!! வெறுங்கையோடு குழந்தைகள் முன் நிற்கும்போது, மனது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்.//

வாங்க சுப்பிரமணியன்,

உங்களுக்கும் அனுபவம் இருக்கும் போல,, வருகைக்கும், விரிவான‌ கருத்துக்கு ரெம்ப நன்றி..

Related Posts with Thumbnails