Saturday, April 19, 2014

பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்! அப்ப பெண் வேட்பாளர்கள்?

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பதில் எவருக்கும் மறுப்பு இருக்காது. சுதந்திரம் அடைந்து அறுபத்தி ஏழு ஆண்டுகள் கடந்து வந்துவிட்டோம். பெண்களின் சமூக‌ உரிமைகளையும், அரசியலில் அவர்களின் பங்களிப்பின் அவசியத்தையும் சுதந்திரபோராட்டக் காலத்திலேயே காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் பேசியுள்ளனர். பதினைந்து முறை நாடாளுமன்ற தேர்தல்களையும் நடத்தி முடித்துவிட்டோம். கடந்தமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த‌ பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 61/543. சதவீத எண்ணிக்கையில் பார்க்கும் போது 11.23%. 39 தொகுதிகள் கொண்ட‌ தமிழ்நாட்டில் இருந்து கடந்தமுறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்திடுக்கப்பட்ட பெண் எம்பி ஒருவர் மட்டும் தான், அவரும் எனது மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்தமுறை அந்த ஒன்றாவது வருமா? என்பது கேள்விக்குறி தான்.



இந்தமுறை பதினாறாவது நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள‌ மொத்தமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் 40. இந்தத் தொகுதிகளுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்து, தேர்தல் ஆணையத்தால் உறுதிச் செய்யப்பட்ட வேட்பளர்கள் எண்ணிக்கை 875. அதில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 55. அதிலும் சொல்லும் படியாக உள்ள ஆறு பெரும் கட்சிகளால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை வெறும் 11. மீதம் உள்ளவர்கள் சுயேட்சையாகப் போட்டியிடுபவர்கள். கட்சிகள் வாரியாகப் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் கீழே.

அதிமுக: 2/40
திமுக கூட்டணி: 2/40
பிஜேபி கூட்டணி: 1/40
தேமுதிக: 0/14
பமக: 1/8 (கணவரின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது)
மதிமுக: 0/7
பிஜேபி: 0/7
காங்கிரஸ்: 2/40
இடதுசாரிகள் கூட்டணி: 3/17
சிபிஎம்: 2/9
சிபிஐ: 1/9
ஆம் ஆத்மி: 1/25

தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலுக்கான‌ தனது வேட்பாளர்களை அறிவிக்கும் போது, அந்தக் கட்சியில் உள்ள பெண் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் எங்களுக்கான உரிமைகளை, வாய்ப்புகளைக் கட்சிகள் தரவில்லை என்று கூச்சல் இட்டார்கள். அப்புறம் என்ன நடந்தது என்று தெரிய‌வில்லை. அதற்கான தொடர்ச்சியான போராட்டங்களோ, குரல்களோ எங்கும் ஓங்கி ஒலிக்கவில்லை. பாரதியஜனதா கட்சியில் உள்ள பெண் தலைவர்கள் சிலர் தங்களுக்குள்ளே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள். இந்தமுறை நாங்கள் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்புகள் அமையவில்லை என்று.

இந்தவருடம் தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட அதிக எண்ணிக்கையில் பெண் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்க இருக்கிறார்கள் என்று சில வாரங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் இங்குப் போட்டியிடும் பெண் வேட்பாளார்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தான் அதிர்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அல்லது அதிகாரத்திற்கு வந்தால் 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடுச் சட்டம் அமுல்படுத்தபடும் என்று மேடைதோறும் முழங்கும் கட்சிகள் கூட, தேர்தல் என்று வந்துவிட்டால் வேட்பாளர்களை நிறுத்தும் போது தங்களுக்கு வசதியாகப் பெண் வேட்பாளர்களைப் பற்றி மறந்துவிடுகிறார்கள்.

பெண் வாக்காளர்களின் ஓட்டுகள் மட்டும் வேண்டும் ஆனால் அவர்களும் அரசியலில் நுழைவதற்குத் தேவையான வசதிகள் செய்துக்கொடுக்க மாட்டேன் என்பதை என்னவென்று சொல்வது? பெண்கள் அரசியலில் வந்தால் ஊழல் குறையும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. பெண்கள் பணியாற்றும் அரசு அலுவலக‌ங்களில் ஊழல் குறைவாக இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் உறுதிசெய்துள்ளன.

இவை ஏதோ நம்முடைய மாநிலத்தில் ம‌ட்டும் தான் இவ்வளவு குறைவாகப் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுருக்கிறார்கள் என்று இல்லை. இந்தியாவில் உள்ள‌ எல்லா மாநிலங்களிலும் இந்த நிலைமை தான். தேர்தல் ஆணையம் நம்முடைய நாடாளுமன்ற தேர்தலை பல பகுதிகளாகப் பிரித்து வாக்குபதிவு நடத்தி வருகிறது. இதில் வாக்குபதிவு முடிந்த‌ நான்கு பகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையும், அதில் போட்டியிட்டப் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் கீழே உள்ள அட்டவணையில் உள்ளது. பெண் வேட்பாளர்களின் மொத்த சதவிகிதம் 7.83% மட்டுமே. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பத்து முதல் ஐம்பது வேட்பாளர்கள் வரை போட்டியிடுகிறார்கள். அதில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லாமல் இருப்பது வேதனையே.


உலகளவில் நாடளுமன்றங்களில் பெண்களின் பங்களிப்பு எத்தனை சதவீதம் இருக்கிறது என்ற கணக்கெடுப்பில் இந்தியாவிற்கு(11.4%) 111 வது இடம். கியுபா(48%), ஸ்வீடன்(44%), தென் அமெரிக்கா(42%) இவை வரிசையாக முதல் மூன்று இடங்களைப் பிடிக்கிறது. உலகளவில் தரவரிசைப் பற்றிய‌ எந்தக் கணக்கெடுப்பு என்றாலும் பாகிஸ்தான் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பதைத் தான் முதலில் அறிய ஆசைப்படுவோம். அவர்களில் நாட்டில் கூட நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்களிப்பு நம்மைவிடத் தோரயமாக‌ இரண்டு மடங்கு அதிகம் தான். அவர்களின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 20.7 சத‌வீதம் பெற்று 73 வது இடத்தில் இருக்கிறார்கள். இவ்வளவு ஏன் பெண்ணுரிமை, பெண்ணுரிமை என்று கூவும் போது முதலில் இழுக்கும் நாடு சவுதிஅரேபியாவில்(19.9) கூட நம்மைவிட அதிகமான சதவீதத்தில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது.

இந்தியாவில் பெண்களை, பெண்மையை பெருமை படுத்துவதற்கு வைத்திருக்கும் அடையாளங்களுக்கு குறைவேயில்லை. எல்லோரும் ஒன்றாக‌ சொல்லுங்கள் பாரத மாதக்கி ஜெய்!! இன்னும் புஜங்களை உயர்த்தி வலுவாக சொல்லுங்கள் பாரத மாதக்கி ஜெய்!!

சுட்டிகள் இணைப்பு:

percentage of women in national parliaments.

Lok Sabha polls: Will real women's day dawn in 2014?

Women missing in 2014 Lok Sabha elections


.

3 comments:

unmaiyanavan said...

அரசியல்வாதிகள் பெண்களுக்கு 33% சதவீதம் வழங்குவோம் என்று சொல்வது எல்லாம் அரசியல் செய்வதற்கு தான்.

வருண் said...

இதுபோல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எல்லாம் கொடுத்து கேள்வி கேட்டு அவங்களுக்கு வக்காலத்து வாங்குவதும் நம்ம பொறுப்பா ஆயிடுச்சு பாருங்க. இதெல்லாம் என்ன கொடுமை? :)))

பெண்ணியவாதகளெல்லாம் "நான் ஹையங்கார்"னு ஏதோ அரைவேக்காட்டுத்தனமாப் பிதற்றிக்கொண்டு திரியுதுகள் போல!

நாடோடி said...

@Chokkan Subramanian said...
//அரசியல்வாதிகள் பெண்களுக்கு 33% சதவீதம் வழங்குவோம் என்று சொல்வது எல்லாம் அரசியல் செய்வதற்கு தான்.//

வாங்க சுப்பிரமணியன்,

உண்மைதான், இவர்களை நம்பி தான் நாம் ஓட்டளிக்க வேன்டியிருக்கு!!

@வருண் said...
//இதுபோல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எல்லாம் கொடுத்து கேள்வி கேட்டு அவங்களுக்கு வக்காலத்து வாங்குவதும் நம்ம பொறுப்பா ஆயிடுச்சு பாருங்க. இதெல்லாம் என்ன கொடுமை? :)))

பெண்ணியவாதகளெல்லாம் "நான் ஹையங்கார்"னு ஏதோ அரைவேக்காட்டுத்தனமாப் பிதற்றிக்கொண்டு திரியுதுகள் போல!//

வாங்க வருண்,

நம்முடைய ஆத்ம திருப்த்திக்கு சிலபதிவுகள் எழுத வேண்டியிருக்கு... :)

Related Posts with Thumbnails