Tuesday, April 22, 2014

கண்களை மிரட்டும் மாம்பழங்கள்!!!

நான் இருக்கும் ஏரியாவில் இரு வாரங்களுக்கு முன்பே மாம்பழங்கள் வரத்துத் தொடங்கிவிட்டது. கடந்த சில மாதங்களாக‌ ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த நாக்கிற்கு மாம்பழத்தைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்று தோன்றியது. முழுமையான சீசன் ஆரம்பித்திருக்கவில்லை. நாங்கள் வழக்கமாக வாங்கும் பழக்கடைக்காரர் இன்னும் ஒரு வாரம் போனால் தான் சார் மாம்பழம் நல்லாயிருக்கும், இப்போது கிடைக்கிறத வாங்காதீங்க, கல்லைப் போட்டுப் பழுக்க வச்சுருப்பானுங்க! புளிக்கும்! என்று கூறியது மனதில் ஒரு மூலையில் ஒலித்தாலும், தெருவில் புதிதாக முளைத்திருந்த பழக்கடையில் மஞ்சள் கலரில் மாம்பழம் அடுக்கியிருந்தது கண்ணைப் பறித்தது. இங்குப் பழக்கடை மற்றும் காய்கறிக்கடை வைத்திருப்பவர்கள் அவைகளை அடுக்கி வைத்திருக்கும் நேர்த்தியே நம்மை வாங்குவதற்குத் தூண்டும். எதையும் குப்பையாகக் குவித்துப் போட மாட்டார்கள்.



மாம்பழம் வாங்குவதில் என்னைவிட மனைவி அதிக ஆர்வமாக‌ ஆர்வமாக இருந்தார். எல்லாப் பழமும் ஒரே அளவில் மஞ்சள் மூலாம் சீராகப் பூசியது போன்று இருந்தது. தோலில் பச்சை நிறத்தை எங்கும் பார்க்க முடியவில்லை. கிலோ எவ்வளவு என்று கேட்டேன் எண்பது என்று பழக்கடைக்காரர் சொன்னார். இப்போது எல்லாகடைகளிலும் மாம்பழங்கள் குவிந்து இருப்பதால், அதே அளவுள்ள மாம்ப‌ழம் கிலோ முப்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. ப‌ழக்கடைக்காரர் எடைப்போடும் போது சரியாக ஐந்து மாம்ப‌ழம் நின்றது. வீட்டிற்கு வந்தவுடன் மனைவி முதல் வேலையாக ஒரு மாம்பழத்தில் தோலை நீக்கி விட்டு அதிலிருந்து ஒரு தூண்டை வெட்டி என்னிடம் கொடுத்தார். பழத்தில் இருந்த புளிப்புசுவையால், கீழே படத்தில் உள்ள குழந்தை தனது கண்ணைச் சிமிட்டுவது போல்தான் நானும் சிமிட்டினேன்.


சில மாம்ப‌ழங்கள் புளிப்பாகத் தான் இருக்கும், அந்த மாம்பழங்களின் வெளித்தோற்றத்தை வைத்தே நாம் சொல்லிவிடலாம். புளிக்கும் மாம்பழங்களின் தோல்கள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இந்த மாழ்பழம் வெளித்தோற்றத்தில் முழுவதும் மஞ்சள் நிறம். எந்த வகையான மாம்பழத்தையும் இயற்கையாகப் பழுக்க வைத்தால் தோலில் பச்சை நிறம் கொஞ்சமாவது இருக்கும். நான் இப்போது வீடுகட்டியிருக்கும் நிலத்தில், ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு முழுவதும் மரமாகத் தான் இருந்தது. அதிலும் மாமரம் மட்டும் சுமார் இருப‌து வகையாவது நின்றிருக்கும். இந்த மரங்களில் காய்க்கும் மாம்பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. எனது தாத்தா அந்தக் காலத்தில் தேடிதேடி ஒவ்வொரு ரகங்களையும் கொண்டு வந்து நட்டதாக அப்பா சொல்லுவார்கள்.

எனது வீட்டில் நின்ற, ஒவ்வொரு வகையான மாமரத்தின் பெயரும், அதன் சுவையும், அந்த மரங்களில் நாங்கள் ஏறி ஆட்டம் போட்டததும் இப்போதும் மனதில் விட்டு நீங்காமல் இருக்கிறது. எனது பழைய வீட்டின் சுவரையொட்டிய‌வாறு இரண்டு மாமரங்கள் இருந்தது, ஒரு வகை மாங்காயின் காம்பின் பக்கம் ஆப்பிளில் இருப்பது போல் குழி விழுந்து உருண்டை வடிவில் இருக்கும், அதனால் இதை நாங்கள் குண்டுகண்ணி என்று அழைப்போம். இன்னொரு வகைக் கிளீமூக்கு மாங்காயின் தோற்றத்தில் சிறிது நீளமாக இருக்கும், இதன் சுவை மாவாகச் சீனியைப் போன்று மிகவும் தித்திப்பாக‌ இருக்கும், அதனால் இதைச் சீனி மாங்காய் என்று அழைப்போம்.

எனது வீட்டின் தென் மூலையில் எலுமிச்சை அளவில் காய்கள் காய்க்கும் இரண்டு ரக மாமரங்களும் இருந்தன. இவை இரண்டிலும் உள்ள பழங்களில் நார்கள் அதிகமாகவும் இருக்கும். மேலும் இந்த மாங்காய் இரண்டும் பழுத்தாலும் காம்பில் இருந்து பால்(சுணை) அதிகமாக வரும், அதனால் அந்தப் பாலை கையால் பிழிந்து வெளியேற்றிவிட்டுதான் சாப்பிடுவோம். இந்த மாங்காய்கள் அளவில் சிறிதாக இருப்பதாலும் பாலின் தன்மை அதிகமாக இருப்பதாலும், மரத்திலிருந்து பறித்துப் பழுக்க வைப்பது கிடையாது. மரத்தில் இருந்து தானாகக் கனிந்து விழும் போது அதையெடுத்துக் கழுவிச் சாப்பிடுவோம்.

கற்கண்டு என்று ஒரு வகையான மாமரம் எனது பழைய வீட்டின் பின்புற வாசலில் நின்றது. அந்த மரத்தில் காய்க்கும் மாங்காயின் தோல் சற்றே தடிமனாக இருக்கும். வடிவில் மாங்காய் என்றால் படங்களில் என்ன அளவில் இருக்குமோ, அதுபோல் நீள அகலங்கள் அளவிட்டு செய்தது போல் இருக்கும். இதன் பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் இளம்சிவப்பாக இருக்கும், சுவைத்தால் உண்மையில் கற்கண்டு போல் அவ்வளவு தித்திப்பாக இருக்கும். இதன் தித்திப்பைப் போன்று இப்போது நான் வாங்கிச் சுவைக்கும் எந்த‌ மாம்பழங்களும் இருந்த‌தில்லை.

கப்பை மாங்காய் என்ற பெயருடன் சில மாமரங்கள் எங்கள் வீட்டில் நின்றது. அதில் மட்டுமே மூன்று வகையான ரகம் இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் இருக்கும் இதன் சிறப்புக் காயாக இருக்கும் போதே வெளித்தோல் சிவப்பும் பச்சையும் கலந்து இருக்கும். பழுத்தால் உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும். மரத்தில் இருந்து கனிந்து பழுத்தாலும் புளிப்புச் சுவையுடைய மாங்காயும் எனது பெரியம்மா வீட்டில் இருந்தது. வருக்கை, செங்க வருக்கை என்று இரண்டு வகை மாழ்பழங்கள். இப்படியான மாம்பழங்களின் பெயர்கள் எனது மாவட்டத்தைத் தவிர வேறு எவருக்குமாவது பழக்க பட்டிருக்குமா என்றும் தெரியவில்லை.



இப்போதும் எனது வீட்டில் இருக்கும் ஒரே மாமரம் தண்ணி மாங்காய் என்று எங்களால் அழைக்கப்படுவது மட்டும்தான். இதில் உள்ள மாங்காய் ஒவ்வொன்றும் தேங்காய் போன்று பெரிதாக இருக்கும். பச்சையாக இருக்கும் மாங்காயை வெட்டி வைத்தால் சிறிது நேரத்தில் தண்ணீர் ஊறிவிடும், அதனால் தான் தண்ணி மாங்காய் என்று அழைப்போம். பச்சையாகவும் பழமாகவும் சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும். கோடையில் காற்றுப் பலமாக அடிப்பதால், தேங்காய் போன்று பெரிதாக இருக்கும் இந்த மாங்காய், கனம் தாங்காமல் காம்பிலிருந்து அறுந்து கீழே விழுந்துவிடும். இதை விளையும் வரை மரத்தில் வைத்துப் பாதுகாப்பது ரெம்பப் பெரிய விசயம்.

மாங்காயை பறித்துப் பழுக்க வைப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை. மரத்தில் இருந்து பறிக்கும் போதே அவை கீழே விழாமல் வலையில் பறிக்க வேண்டும். அதன்பிறகு அவற்றின் காம்புகளை உடைத்துப் பால்(சுணை) வழிய‌ வைக்க வேண்டும். வழிந்த‌ பால் மாங்காயில் ஒட்டியிருந்தால் சுத்தமாகத் துணியால் நன்றாகத் துடைத்துவிட வேண்டும். இவைகளை அடியில் வைக்கோல் பரப்பிய‌ கடவத்தில் அடுக்க வேண்டும். ஒரு வரிசை மாங்காய் அடுக்கிய பின்னர், சிறிது வைக்கோல் வைக்க வேண்டும், அந்த வைக்கோல் மேல் அடுத்த வரிசை மாங்காயை அடுக்க வேண்டும் இவ்வாறு லேயர் லேயராக வைக்கோலும், மாங்காயும் கடவம் முழுவதும் அடுக்க வேண்டும். முழுவதும் அடுக்கியபின் கடவத்தைக் கோணிப்பையைக் கொண்டு மூடி இறுக்கமாகக் கட்டி வைத்துவிடுவார்கள். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்குள் எல்லா மாம்பழங்களும் பழுத்துவிடும். கோடைக்காலத்தில் எங்கள் வீட்டில் கடவம் கடவமாக மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பார்கள்.

எனது வீட்டில் இத்தனை வகையான மாம்பழங்களைப் பார்த்திருந்த போதும் இப்போது நான் காசு கொடுத்து வாங்கும் மாம்பழங்க‌ளைப் போல் வெளித்தோல் இவ்வளவு மஞ்சள் நிறமாக எந்தப் பழமும் இருப்பதில்லை. கலர் அதிகமாக வர வேண்டும் என்பதற்காக‌ கொன்றை மரத்தின் இலைகளைப் பறித்து வைக்கோலுடன் சேர்த்து வைப்போம் அப்போதும் மஞ்சள் நிறமாகத் தோன்றுவதில்லை, சிறிதாக‌ சிவப்பு நிறம் ஆங்காங்கே இருக்கும். கலர் நன்றாக வரவில்லையென்றாலும் தித்திக்கும் சுவை மட்டும் இரட்டிப்பாக இருக்கும்.

ஆனால் இப்போது நான் வாங்கும் மாம்பழங்களில் கலர் மட்டும் நன்றாக வர்ணம் பூசப்பட்டிருக்கிறது, ஆனால் சுவை?..

இவ்வளவு கலராக இருக்கிறது என்றால் மாம்பழங்கள் நன்றாகப் பழுத்திருக்கிறது என்று தான் நமக்கு நினைக்கத் தோன்றும், ஆனால் வீட்டில் சென்று சாப்பிட்டுப் பார்த்தால் புளிப்பாக இருக்கும். நன்றாக முதிர்ந்த மாங்காய்களைத் தான் இயற்கையாகப் பழுக்க வைக்க முடியும், அதனால் தான் இவற்றின் சுவை தித்திப்பாக இருக்கிறது. நான்றாக முதிராத மாங்காய்களைப் பறித்துச் செயற்கையாகப் பழுக்க வைப்பதால் தான், கலர் மட்டும் வந்துவிடுகிறது, சுவை புளிப்பாக இருக்கிறது.

இன்னும் சில அறிவாளி வியாபாரிகள் மாமரத்தின் பச்சை இலைகள் பறித்து வைத்து அதன் மீது மாம்பழங்களை அடுக்கிவைத்து, கார்பைடுகல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதில்லை இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டது என்று சொல்லி, வெளியில் விற்கும் மாம்பழங்களின் விலையை விட அதிக விலைக்கு விற்கிறார்கள். இயற்கையாகப் பழுக்க வைக்கப் பட்ட‌தென்றால் மாங்காய் மட்டும் பழமாக மாறும் போது இலைகள் மட்டும் பச்சையாக எப்படியிருக்கும்? யாரிடம் சொல்வது? யாரிடம் கேட்பது?

சாப்பிடும் பழங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட அழகாகவும், கலராகவும் இருக்க வேண்டும் என்று விரும்பும் மக்களின் மனநிலைகள் மாறத வரை எந்தவொரு மாற்றமும் சமூகத்தில் நிகழபோவதில்லை.

.

12 comments:

ராஜி said...

பழங்களின் ராஜாவான மாம்பழத்துல இம்புட்டு விசயம் இருக்கா?! கப்பை, கற்பூரம், தண்ணி மாங்கான்னு பேருலாம் புதுசா இருக்கு.

”தளிர் சுரேஷ்” said...

நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்! இப்போதெல்லாம் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள்தான் நிறைய விற்கப்படுகிறது! சித்திரை இறுதியில் நல்ல மாம்பழங்கள் கிடைக்கலாம்!

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தை படம் - ஆகா...

பணமே முக்கியம் + மக்களின் மனநிலை அறிந்த "வியாபாரி"...

unmaiyanavan said...

மாம்பழத்தைப் பற்றி இவ்வளவு விஷயங்களா!!!!

அந்த குழந்தை கண் சிமிட்டும் அழகே தனி அழகு தான்.

r.v.saravanan said...

சீசனுக்கேற்ற பதிவு அதிலும் மாம்பழ விற்பனை பற்றிய பதிவு தேவை தான். நீங்கள் சொல்வது போல் ஆரோக்கியத்திற்கு தான் பழங்கள் அழகுக்கு இல்லை என்பதை காலம் தான் உணர்த்தும் ஸ்டீபன்

வருண் said...

இனிமேல நாங்க மாம்பழம் வாங்கும்போது நாடோடிகள் ஒரு புன்னகையுடன் எங்களைப் பார்ப்பதுபோல் ஒரு "இம்ப்ரெஷன்" உருவாக்கிட்டீங்க!

தொடர்ந்து எழுதுங்கள்! உங்கள் சேவை தமிழ் பதிவுலகிற்கு தேவை! :)

sekar said...

சரியான நேரத்தில் சரியான தகவல்.
வருண் சொன்னது போல் இனி மாம்பழம் வாங்கும் போது கண்டிப்பாக நாடோடியின் ஞாபகம் வரும்.

அருணா செல்வம் said...

பதிவைப் படிக்கும் பொழுதே வாயில் நீர் ஊறுகிறது நாடோடி. இன்னும் படங்களைக் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்...

நாடோடி said...

@ராஜி said...
//பழங்களின் ராஜாவான மாம்பழத்துல இம்புட்டு விசயம் இருக்கா?! கப்பை, கற்பூரம், தண்ணி மாங்கான்னு பேருலாம் புதுசா இருக்கு.//

வாங்க சகோ!

ஆமா நிறைய வகைகள் இருக்கிறது. எனக்கு தெரிந்ததே குறைவு தான்.

@‘தளிர்’ சுரேஷ் said...
//நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்! இப்போதெல்லாம் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள்தான் நிறைய விற்கப்படுகிறது! சித்திரை இறுதியில் நல்ல மாம்பழங்கள் கிடைக்கலாம்!//

வாங்க சுரேஷ்!

ஆமாங்க, அவைகளை அடையாளம் கண்பதும் கஷ்டம் தான்..

@ திண்டுக்கல் தனபாலன் said...
குழந்தை படம் - ஆகா...

//பணமே முக்கியம் + மக்களின் மனநிலை அறிந்த "வியாபாரி"...//

வாங்க தனபாலன்!

உங்களுடைய கருத்துக்கும் ரெம்ப நன்றி.

நாடோடி said...

@Chokkan Subramanian said...
//மாம்பழத்தைப் பற்றி இவ்வளவு விஷயங்களா!!!!

அந்த குழந்தை கண் சிமிட்டும் அழகே தனி அழகு தான்.//

வாங்க சுப்பிரமணியன்!

அமாங்க ரெம்ப விசயஙக்ள் இருக்கிறது. உங்க‌களின் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

@ r.v.saravanan said...
//சீசனுக்கேற்ற பதிவு அதிலும் மாம்பழ விற்பனை பற்றிய பதிவு தேவை தான். நீங்கள் சொல்வது போல் ஆரோக்கியத்திற்கு தான் பழங்கள் அழகுக்கு இல்லை என்பதை காலம் தான் உணர்த்தும் ஸ்டீபன்//

வாங்க சரவணன்!

மக்களின் மன‌நிலை மாற வேண்டும், பார்ப்போம்!. உங்க‌களின் வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

நாடோடி said...

@வருண் said...
//இனிமேல நாங்க மாம்பழம் வாங்கும்போது நாடோடிகள் ஒரு புன்னகையுடன் எங்களைப் பார்ப்பதுபோல் ஒரு "இம்ப்ரெஷன்" உருவாக்கிட்டீங்க!

தொடர்ந்து எழுதுங்கள்! உங்கள் சேவை தமிழ் பதிவுலகிற்கு தேவை! :)//

வாங்க வருண்!

உங்க கோபமான பதிவுகளை பார்த்துவிட்டு, நீங்க வந்து காமெடியா கமெண்ட் போட்டாலும் ஏதோ உள்குத்து இருக்குமோனு தோணுது.. :)

கருத்துக்கு ரெம்ப நன்றி.

நாடோடி said...

@sekar said...
//சரியான நேரத்தில் சரியான தகவல்.
வருண் சொன்னது போல் இனி மாம்பழம் வாங்கும் போது கண்டிப்பாக நாடோடியின் ஞாபகம் வரும்.//

வாங்க சேகர்!

கருத்துக்கு ரெம்ப நன்றி.

@அருணா செல்வம் said...
//பதிவைப் படிக்கும் பொழுதே வாயில் நீர் ஊறுகிறது நாடோடி. இன்னும் படங்களைக் கொஞ்சம் சேர்த்திருக்கலாம்...//

வாங்க சகோ!

அடுத்த பதிவுகளில் படங்களை அதிகமாக் போடுகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

Related Posts with Thumbnails