Sunday, April 6, 2014

மல்லிகைப் பூ மணத்தில் மீன்குழம்பு!!

என்னவோ தெரியவில்லை, கன்னியாகுமரி எனது மாவட்டம் என்பதால் மீன் என்பது என்னுடைய வாழ்வியலில் ரெம்ப நெருக்கமான ஒன்று. இத்தகைய நெருக்கம் என்பது எனக்கு மட்டும் அல்ல, எனது மாவட்டத்தில் உள்ள பெரும்பாலனவர்களும் அப்படித் தான். கண்டிப்பாக வாரத்தில் ஆறு நாட்களும் மீன் குழம்பும், பொரித்த மீனும் எங்கள் வீட்டில் இருக்கும். அப்படியென்றால் ஒரு நாள் மட்டும் காய்கறி சாப்பிடுவீங்களா? என்று நீங்கள் கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது தான். ஞாயிறு விடுமுறை என்பதால் கடலிற்குப் பெரும்பாலானவர்கள் மீன் பிடிக்கச் செல்வது இல்லை, அதனால் அன்று எங்கள் ஊரில் இருக்கும் மீன் சந்தையில் மீன்கள் வருவது இல்லை. அதற்குப் பதிலாக‌ அன்று ஒரு நாள் மட்டும் அந்த மீன் சந்தையில் சிக்கன் அல்லது மட்டன் கடையைப் போடுவார்கள். ஞாயிற்றுக்கிழமை சர்ச்க்குப் போய்விட்டு விட்டு வீட்டிற்கு வரும் போதே அப்பா கையில் கறியுடன் தான் வருவார். காலையிலேயே டிபன் கறிக்குழம்புடன் தான் ஆரம்பம ஆகும். இந்த நிகழ்வு எங்கள் வீட்டில் மட்டுமே நடக்கும் என்பது இல்லை, எங்கள் ஊரில் இருக்கும் பெரும்பாலனவர்களில் வீட்டில் வாரம்தோறும் நடக்கும் நிகழ்வு இது தான்.

எங்கள் ஊரில் மீன் என்பது சென்னை போன்ற பெரு நகரங்களில் விற்பதை போல் எடைப் போட்டு விற்பனை செய்வது இல்லை. நெத்தலி, கூனி போன்ற சிறுமீன்களைக் கூறு(சிறுக்குவியல்) போட்டு விலையைச் சொல்லுவார்கள். சாளை, மத்தி போன்ற மீன்களை எண்ணம் வைத்து விற்பார்கள். அயிலை, நெய்மீன், வெங்கட, விளமீன், வாளை, பிள்ளை சுறா, சீலா போன்ற‌ பெரிய மீன்களை எல்லாம் தோரயமாக விலை சொல்லுவார்கள், நாம் அவற்றைப் பேரம் பேசி வாங்கவேண்டும். எங்கள் ஊரில் இருக்கும் மீன் கடையில் பேரம் பேசத் தெரியவில்லை என்றால் மீன் வாங்குவது என்பது குதிரைக்கொம்பு கதையை போல் தான், கண்டிப்பாக அதிகமான விலைக் கொடுத்து தான் மீன் வாங்கி வருவீர்கள்.

உள்ளுரில் இருக்கும் மீன் சந்தை என்பதால் இங்கு பெரும்பாலும் எங்கள் ஊரில் உள்ள‌ பெண்களைத் தான் அதிகமாகப் பார்க்க முடியும். இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, ஊரில் படிக்கும் போது விடுமுறை நாட்களில் இந்த மீன் சந்தைக்கு என்னுடைய பெரியம்மாவுடன் செல்வேன். பேரம் பேசுவது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இப்படியெல்லாம் பேரம் பேசலாமா? என்று வியந்து பார்த்தது எங்கள் ஊரில் உள்ள இந்த மீன் சந்தையில் தான். மீன் வியாபாரி இருபது ரூபாய் என்று சொல்லும் மீனை எந்தவித அலட்டலும் இல்லாமல் மூன்று ரூபாய் என்று கேட்பார்கள், அவரும் அவ்வளவுக்கு எல்லாம் வராது என்பார், அப்படியே பேரம் பேச்சு நடந்து ஐந்து ரூபாயில் விலை முடியும். பாருங்கள்! எவ்வளவு விலை சொன்ன மீனை எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினார்கள் என்று. இப்போதும் ஊருக்குச் செல்லும் போது இந்த மீன் சந்தைக்குச் சில நாட்கள் போவது உண்டு. இன்றைக்கும் இந்த மீன் சந்தையின் பேரம் பேசும் நிலை இதுதான் ஆனால் அன்று இருபது ரூபாய் என்று சொல்லிய‌ மீன் இன்று இருநூறு ஆகியிருக்கிற‌து.

எங்கள் வீட்டில் அம்மா வைக்கும் மீன் குழம்பையே சாதத்தில் ஊற்றி சாப்பாட்டை முடித்து விடலாம், வேறு வகையான‌ குழம்பு எதுவும் தேவைப்படுவது இல்லை. வைக்கவும் மாட்டார்கள். அப்படியே குழம்பு என்று வைத்தால் அதன் பெயர் வெறங்கறி(வெறும் கறி: இதில் தேங்காய் அரைத்து மீன் மசாலா போட்டு வைப்பார்கள், வேறு எதுவும் போட மாட்டார்கள் அதனால் தான் அது வெறும் கறி). எனது மாவட்டத்தைத் தவிர வேறு எங்கும் நான் இந்தக் குழம்பை பார்த்தது இல்லை. மதியமும், இரவும் மீன் வைத்து தான் எங்கள் வீட்டில் சாப்பாடு இருக்கும். அம்மா மீன் குழம்பு வைப்பதற்கு என்று தனியாகவே மசாலா அரைத்து வைத்திருப்பார்கள். அந்த மசாலாவில் குறைந்தது பதினைந்தில் இருந்து இருபது பொருட்கள்(வத்தல், மல்லி, சீரகம், மஞ்சள், பால் காயம், அரிசி, மிளகு, வெந்தயம்.. போன்ற‌) சேர்த்து அரைத்து வைத்திருப்பார்கள். தேங்காய் அரைத்து விட்டு வைக்கும் எனது வீட்டின் மீன் குழம்பின் சுவையே தனிதான்.

தினமும் மதியம், இரவு என்று வாரத்தின் ஆறு நாட்களும் இந்த மீன் குழம்பை ஊற்றி சாப்பிடுவ‌தில் சலிப்பு என்பது வருவதே இல்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் இருப்பவர்களுக்குச் சலிப்படையாமல் சாப்பிட, தினமும் என்ன குழம்பு வைப்பது, என்ன பொரியல் பண்ணுவது என்பதை முடிவு செய்வதே ஒரு பெரிய போராட்டமாக இருக்கும். இப்போது நான் இருக்கும் ஹைதிராபத்திலும் எனது மனைவிக்கும், எனக்கும் இந்தப் பிரச்சனை வருவது உண்டு.

கட்டுரையின் தலைப்புக்கு வரவே இல்லையே என்று நினைக்காதீர்கள், மீனைப் பற்றிய அரிச்சுவடுத் தெரியாதவன் எல்லாம் பெருசா பேச வந்துட்டான் என்று கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதால் தான் மேலே உள்ள‌ விளக்கங்கள். இப்போது தலைப்பிற்கு வந்து விடலாம். மல்லிகைப் பூ மணத்தில் மீன் குழம்பு வைக்க முடியுமா? என்பது தான் இன்றைக்கு என்னுடைய குழப்பம். முடியும் என்று உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த சாரு அவர்கள் தனது வலைத்தளத்தில் எழுதியிருக்கிறார். உலக இலக்கியம் படித்தவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று மீன் உணவுடன் நெருங்கிய தொடர்புடைய என்னால் விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க முடியவில்லை.

மீனை சுத்தம் செய்வது என்பது கண்டிப்பாக ஒரு கலை தான். நன்றாகச் சுத்தம் செய்யவில்லை என்றால் ஒரு வகையான கவுச்சு நாற்றம் வருவது உண்மை. ஆனால் நன்றாகச் சுத்தம் செய்துவிட்டால் மல்லிகைப் பூ மணம் வந்துவிடும் என்று நம் காதில் இரண்டு பெரிய வாழைப்பூவை மாட்டிவிட நினைப்பதால் தான் இந்த சீற்றம்.

ஒரு காய்கறியை சமையல் செய்தாலே எத்தகைய மணம் வரும் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் இயற்கையான மணத்தை விட வேறு மணம் வருவதற்கு வாய்ப்பு உண்டா? என்றால் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இயற்கையாக மீனின் வாசம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த மீனைச் சமையல் செய்யும் போது மீனின் வாசம் வராமல் வேறு வாசம் வந்தால் அதில் போடப்பட்டது மீன் அல்ல, வேறு ஏதோ என்று தான் அர்த்தம்.

வத்தல் மற்றும் மல்லிப் பொடிகளுக்குப் பதிலாக, சந்தன‌மும் ஜவ்வாதும் கலந்து குழம்பு வைத்தாலும் மீனின் வாச‌ம் தான் வருமே தவிர, நம்ம ஊர் ஊதுபத்தியின் வாசம் வீசுவது இல்லை. எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு, பிறவிக் குணத்தைப் பேய்க்குக் கொடுத்தாலும் அது மாறுவது இல்லை என்பது. அதைப் போலத் தான் மீனின் குணத்தை மாற்ற முடியாது.

மீன் குழம்பை ரசித்து உண்பவர்களுக்குத் தெரியும், அந்தக் குழம்பில் மீனின் குணமும், மணமும் இல்லையென்றால் அதன் சுவை மீனின் சுவையாக இருக்காது வேறு ஏதாகவோ இருக்கும். அப்படியென்றால் மல்லிகைப் பூ வாசம் வீசும் மீன் குழம்பு என்று கவித்துவமாகச் சொல்வதில், ஒன்று இயற்கையாக வரும் மீனின் வாசனையைக் கொண்ட மீனால் அந்தக் குழம்பு செய்யப்படவில்லை அல்லது மீனின் வாசனையை மல்லிகைப் பூ வாசமாக எண்ணி நுகருகிறார். எதுவாக இருந்தாலும் இரண்டு பிரச்சனையிலும் "அவர் நமது காதில் சர்வ சாதரணமாக நாலு முழ பூவை சொருகி விட்டு செல்ல பார்க்கிறார்" என்று தான் முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

வீட்டிலேயே கருவாடு தயாரிக்கும் பேக்டரி வைத்திருக்கிறேன் என்றும் அளக்கிறார். அந்தப் பேக்டரி துவங்குவதற்குக் காரணம் வெளியில் கிடைக்கும் கருவாடுகளில் உப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார். ஒரு பொருளைப் பதப்படுத்துவதற்கு உப்பு என்ற மூலப் பொருள் இல்லாமல் முடியுமா என்றால், நான் முடியாது என்று தான் சொல்வேன். உப்புப் போடாமல் உலர்த்தப் பட்ட கருவாடு என்பது அழுகிய மீனை போன்றது. மீனில் தான் அழுகல் இருக்கும். கருவாட்டில் அழுகல் என்று ஒன்று இல்லை என்று வாதிட்டால் கருவாட்டைப் பற்றி முழுமையாக அறியாதவர் என்று தான் நான் சொல்வேன். குறைவான‌ அளவு உப்புச் சேர்த்து உலர்த்தப்படும் கருவாடு என்பது அழுகிய மீனை காய வைத்து சாப்பிடுவதைப் போன்றது. இத்தகைய கருவாடை குழம்பில் போட்டவுடன் முற்றிலும் கரைந்து காணமல் போய்விடும். நல்ல கருவாட்டு குழம்பிற்கும் இந்தக் குழம்பிற்கும் வாசம் முற்றிலும் வேறாக இருக்கும்.

உப்பு அதிகமாக‌ போட்டு உலர்த்தப்படும் கருவாடுதான் சுவையாக இருக்கும். கருவாட்டில் இருக்கும் உப்பின் தன்மையை எடுக்க வேண்டுமானால் இரண்டு முறை தண்ணீரில் கருவாடை சிறுது நேரம் ஊறவைத்துக் கழுவி சுத்தம் செய்து எடுத்தால் போதும்.

மீன் குழம்பு மல்லிகைப் பூ வாசம் வீசும் முறையை உங்களுக்கு என்னால் சொல்லித்தர முடியாது. அந்த அளவிற்கு உலக இலக்கியம் நான் படிக்கவில்லை ஆனால் மீன் குழம்பு மீனின் வாசம் வீச எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும் என்று என்னால் உங்களுக்குச் சொல்ல தர‌ முடியும். மீனின் செதில்களை எடுத்து துண்டுகளாக நறுக்கிய பின்பு கொஞ்சம் பரல் உப்பை(கல் உப்பு) மீன் துண்டுகள் இருக்கும் சட்டியில் போட்டு நன்றாகத் தோய்த்துக் கழுவினால் கவுச்சி நாற்றம் சுத்தமாக இருக்காது.

சிறிது மஞ்சள் தூளுடன் தயிர் சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற வைத்தால் வாத்துக் கறி மட்டும‌ல்ல எந்தக் கறியிலும் வரும் கவுச்சி நாற்றம் என்பது அறவே இருக்காது. தயிர் இல்லையென்றால் எழுமிச்சைப் பழச்சாறு பிழிந்தும் ஊறவைக்கலாம்.

.


11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அங்கேயே 200 என்றால் இங்கு இரண்டு மடங்கு...!

படிப்பை விடுங்க... அது வெறும் தகவல்... அனுபவித்தவர்களே சொன்னால் கூட சரியாகவும் இருக்க(கும்"கும்")லாம்...!!!

unmaiyanavan said...

இந்த பதிவிற்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியாது, ஏனென்றால் நான் ஒரு சைவன். அசைவம் சாப்பிட்டது கிடையாது. தலைப்பைப் பார்த்தவுடனே தெரிஞ்சு போச்சு. ஆனாலும் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவை படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

Anonymous said...


Great! I agree with you!

கோபிநாத் said...

அற்புதமான பதிவு. சாரு எழுதியதைப் படித்தபோது, எனக்கும் இதேதான் தோன்றியது. பிகு. நான் கடலூர்காரன்.

Unknown said...

அருமை..அருமை..கருவாடு ஒரு நுட்பமான உணவு..கொஞ்சம் மீன் /இடுபொருட்கள்/காயவைக்கும் பக்குவம் மாறினாலும் முற்றிலும் வேறு ஒரு தரத்தில் அது சுவைக்கும்..நுட்பமாக சொல்லி இருக்கிறீர்கள்..நன்றி ..

சாரு நிவேதிதாவின் இடம் இலக்கியத்தில் முக்கியம்..சர்க்கஸில் அந்தரத்தில் ஒருவர் ஆடி வாழ்வே ஒரு சாகசம் எனும் பிரமிப்பினை ஊட்டுகிறார்..கோமாளி ஒருவர் நம்மை நிகழ் உலகிற்கு திருப்புகிறார்...

அதுபோல ஜெயமோகனது விஷ்ணுபுரத்தை படித்து வாழ்வெனும் நதியோட்டத்தை நினைத்து சிலையாக நிற்கையில் நம் காதில் குசு விட்டு , நம்மை சிரிக்க வைத்து , நிகழ்காலத்திற்கு திருப்ப ஒருவர் தேவை..அவர்தான் சாரு ...:)

Anonymous said...

அம்மா மீன் குழம்பு செய்முறையை பகிரலாமே. நீங்கள் அதன் சுவையைப் பற்றி எழுதி எங்கள் ஆவலை தூண்டியதற்காக.

குலவுசனப்பிரியன் said...

என் ஆசிரியர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. தி.ஜானகிராமன் எங்கேயோ ”மீன் கூட்டு வைத்தாள்” என்று எழுதியதை, ”பட்டறிவு இல்லாத எழுத்து” என ஜெயகாந்தன் கிண்டல் செய்தாராம்.

அதையாவது மன்னிக்கலாம். இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் போடும் குப்பைகளால், அந்தப் பக்கம் போவதே இல்லை.

மீன் வியாபாரி, பூக்கூடை நாற்றம் தாங்காமல் சத்திரத்துக்கு வெளியே போய் தூங்கியதாக நாட்டுப்புற கதை உண்டு. அதுதான் யதார்த்தம்.

நாடோடி said...

@திண்டுக்கல் தனபாலன் said...
//அங்கேயே 200 என்றால் இங்கு இரண்டு மடங்கு...!

படிப்பை விடுங்க... அது வெறும் தகவல்... அனுபவித்தவர்களே சொன்னால் கூட சரியாகவும் இருக்க(கும்"கும்")லாம்...!!!//

வாங்க தனபாலன்,

சென்னையில் உள்ள மீனின் விலை நானும் அறிந்ததே!!.. அங்க நீங்க ஆறு நாளும் மீன் சப்பிட வேண்டும் என்றால் அதற்க்காக ஒரு பெரிய‌ தொகையை மாதம் வைக்க வேண்டும்.. :)

@Chokkan Subramanian said...
//இந்த பதிவிற்கு என்னால் ஒன்றும் சொல்ல முடியாது, ஏனென்றால் நான் ஒரு சைவன். அசைவம் சாப்பிட்டது கிடையாது. தலைப்பைப் பார்த்தவுடனே தெரிஞ்சு போச்சு. ஆனாலும் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவை படித்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.//

வாங்க சுப்பிரமணியன்,

வந்து படித்து உங்க கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி..

@Anonymous said...

//Great! I agree with you!//

Hi anoni,
Thanks for your comments

நாடோடி said...

@Anonymous கோபிநாத் said...
//அற்புதமான பதிவு. சாரு எழுதியதைப் படித்தபோது, எனக்கும் இதேதான் தோன்றியது. பிகு. நான் கடலூர்காரன்.//

வாங்க கோபிநாத்,

கடலூரிலும் மீனுக்கு பஞ்சம் இருக்காது, நானும் அங்கு வந்து இருக்கிறேன். கருத்துரைக்கு நன்றி..

@cristofur nolan said...
//அருமை..அருமை..கருவாடு ஒரு நுட்பமான உணவு..கொஞ்சம் மீன் /இடுபொருட்கள்/காயவைக்கும் பக்குவம் மாறினாலும் முற்றிலும் வேறு ஒரு தரத்தில் அது சுவைக்கும்..நுட்பமாக சொல்லி இருக்கிறீர்கள்..நன்றி ..

சாரு நிவேதிதாவின் இடம் இலக்கியத்தில் முக்கியம்..சர்க்கஸில் அந்தரத்தில் ஒருவர் ஆடி வாழ்வே ஒரு சாகசம் எனும் பிரமிப்பினை ஊட்டுகிறார்..கோமாளி ஒருவர் நம்மை நிகழ் உலகிற்கு திருப்புகிறார்...

அதுபோல ஜெயமோகனது விஷ்ணுபுரத்தை படித்து வாழ்வெனும் நதியோட்டத்தை நினைத்து சிலையாக நிற்கையில் நம் காதில் குசு விட்டு , நம்மை சிரிக்க வைத்து , நிகழ்காலத்திற்கு திருப்ப ஒருவர் தேவை..அவர்தான் சாரு ...:)//

வாங்க கிறிஸ்டோபர் நோலான்,

அப்படியே சந்துல ஜெமோக்கு கொடியை தூக்குறீங்க போல.. ஒருவரின் இழிசெயலை கடிந்துரைக்க இன்னொருவரை பாரட்ட வேண்டுமா?... எனக்கு யாருக்கும் கொடிபிடிக்க நேரம் இல்லை.. :)

நாடோடி said...

@Anonymous said...
//அம்மா மீன் குழம்பு செய்முறையை பகிரலாமே. நீங்கள் அதன் சுவையைப் பற்றி எழுதி எங்கள் ஆவலை தூண்டியதற்காக.//

வாங்க அனானி,

கண்டிப்பாக எழுதுகிறேன்.. :)

நாடோடி said...

@குலவுசனப்பிரியன் said...
//என் ஆசிரியர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. தி.ஜானகிராமன் எங்கேயோ ”மீன் கூட்டு வைத்தாள்” என்று எழுதியதை, ”பட்டறிவு இல்லாத எழுத்து” என ஜெயகாந்தன் கிண்டல் செய்தாராம்.

அதையாவது மன்னிக்கலாம். இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் போடும் குப்பைகளால், அந்தப் பக்கம் போவதே இல்லை.

மீன் வியாபாரி, பூக்கூடை நாற்றம் தாங்காமல் சத்திரத்துக்கு வெளியே போய் தூங்கியதாக நாட்டுப்புற கதை உண்டு. அதுதான் யதார்த்தம்.//

வாங்க குலவுசனப்பிரியன்,

எவரோ ஒருவர் சொல்லும் ஒரு சில விசயங்களை உள்வாங்கி இவர்களுடைய சொந்த கருத்துக்களை திணித்து உண்மைபோல் எழுதிவிடுகிறார்கள்.. சாரு சொல்லிருப்பவைகளும் இந்த வகையை தான் சேரும்... கருத்துக்கு நன்றி.

Related Posts with Thumbnails