Monday, April 14, 2014

இன்றைய சூழ்நிலையில் பசுமாடு வளர்ப்பது என்பது?.

கடந்தவாரம் வீட்டிற்கு அலைப்பேசியில் அழைத்துப் பேசிய போது அப்பா, அம்மா, அண்ணன் உட்பட‌ எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னது நம்முடைய‌ பசுமாடு கன்று ஈன்றுருக்கிற‌து என்பது தான். எங்கள் வீட்டில் பெரும்பாலும் பசுமாடு ஒன்று எப்போதும் இருக்கும், அதுவும் பால் கற‌க்கும் பசுமாடாகத் தான் இருக்கும். என்னுடைய‌ அப்பா சவுதியில் ஓர் ஆறு வருடங்கள் கட்டிட‌ வேலை செய்து இருப்பார்கள். அப்போது நான் பள்ளியில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்திருப்பேன். அதன் பிறகு அப்பா வெளிநாட்டிற்குப் போகவில்லை. ஊரில் ஏதாவது தொழில் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்துக் கொண்டு சவுதியை அப்போதே கைக் கழுவி விட்டார்கள். ஊரில் வந்தும் பல தொழில்களைச் செய்தார்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. ஆறு வருடங்கள் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் கடனாளியாகவும் ஆகிப் போனார்கள்.

அப்பா வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே வீட்டில் பசுமாடு வாங்கி வளர்க்க ஆரம்பித்திருந்தார்கள். எனக்கும் அண்ணனுக்கும் பள்ளி விடுமுறை நாட்களில் இதற்குப் புல் பறித்து வந்து போடுவது தான் வேலை. புல் பறிப்பதற்கு என்று இரண்டு, மூன்று மைல்கள் நடந்து போவதும் உண்டு. என்னுடைய‌ பெரியப்பா வீட்டில் ஆடுகள் வளர்ப்பார்கள், அதனால் அவைகளுக்கு வேண்டிய தழைகளை வெட்டுவதற்குப் பெரியப்பா வாரம் ஒருமுறை ஆணைக்கிடங்கு மலைக்குச் செல்வது உண்டு. நாங்களும் அவருடன்  புல்லறுப்பதற்கு மலைக்குச் செல்வது உண்டு.

1994‍-ஆம் ஆண்டு வாக்கில் அரசாங்கத்தால் சாண எரிவாயுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதை அமைப்பவர்களுக்கு மானியமும் வழங்கியது. எங்கள் வீட்டிலும் தொடர்ந்து பசுமாடுகள் இருந்து வந்ததால் சாண எரிவாயுக் குழாய் அடுப்பு எங்கள் வீட்டில் வைக்கப்பட்டது. இடையில் சிறிதுக் காலம் அம்மாவுக்கு உடல்நிலைச் சரியில்லாத போது எங்கள் வீட்டில் பசுமாடுகள் வளர்க்கப்படவில்லை. அந்த நேரத்தில் இந்தச் சாண எரிவாயுக் குழாயை மூடிவிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பசுமாட்டை எப்படிப் பராமரிக்க வேண்டும் மற்றும் அவைகளுக்குத் தேவையான உணவுகள் எவை மற்றும் எப்போது அவைகளைக் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் அறிந்துவைத்திருந்தோம்.

எங்கள் வீட்டில் நான், அண்ணன், அக்கா உட்பட அனைவருக்கும் பசுவின் பாலைக் கறப்ப‌தற்கும் தெரியும்.(இப்போதும் என்னால் முடியுமா?..) ராமராஜன் படத்தில் காட்டுவது போல் பால் கறப்பது என்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. எங்கள் வீட்டில் இருக்கும் பசுமாடு ஒரு நேரம் குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டர் பால் கறக்கும். ஒரு கையால் பால் கறந்தால் அரை லிட்டர் பாலைக் கறப்பத‌ற்குள் பெருவிரல் வலிக்கத் தொடங்கிவிடும். நான்கு காம்புகளையும் மாற்றி மாற்றித் தொடர்ச்சியாகக் கறக்க வேண்டும். ஒற்றைக் காம்பை மட்டும் கறந்து கொண்டே இருந்தால் மற்றக் காம்பில் இருக்கும் பாலை, பசு உள்ளே எக்கி இழுத்துக் கொள்ளும். அதனால் அதிகப் பால் கறக்கும் மாடுகளில் இரண்டு காம்புகளையும் ஒரு நேரத்தில் இரண்டு கைகளால் கறக்க வேண்டும்.

பசுமாடுகள் தொடச்சியாகப் பால் தருவது இல்லை. எனவே எங்கள் வீட்டில் எப்போதும் இரண்டும் பசுமாடுகள் இருக்கும். ஒரு பசுமாடு சினையாக இருக்கும் போது இன்னொரு மாடு பால் கொடுக்கும். நம்மிடம் பால் வாங்குபவர்களுக்குத் தொடச்சியாகப் பால் கொடுக்க வேண்டுமானால் இரண்டு பசுமாடு வைத்திருப்பது தேவையாக இருக்கும். ஒரு பசுமாடு சினையாக இருக்கும் போது ஆறு முதல் ஏழு மாதம் பால் கறக்க முடியும், அதன் பிறகு கறக்க முடியாது. இந்தக் காலக் கட்டத்தில் நம்மிடம் பால் வங்குபவ‌ர்களுக்குப் பால் இல்லை என்று சொல்லிவிட்டால் அவர்கள் வேறு யாரிடமாவது வாங்குவதற்குத் துவங்கிவிட்டால் பின்பு நமது வீட்டில் உள்ள பசுமாடு கன்று ஈன்றபின்பு அவர்களைப் பால் வாங்க அழைக்க முடியாது. அந்தக் காரணத்திற்காவது எங்கள் வீட்டில் இரண்டு பசுமாடுகள் வைத்திருக்க வேண்டியது அவசியமாயிருந்தது.

எப்படியும் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டில் உள்ள இரண்டு பசுமாடுகளில் ஏதாவது ஒன்று கன்று ஈனும். அந்த‌ கன்றுகுட்டியை பாரமாரிப்பதற்கு வீட்டில் எங்கள் மூவருக்கும் போட்டிதான் நடக்கும். மேலும் கன்று ஈன்ற இரண்டு நாட்களில் பசுவிலிருந்து கிடைக்கும் பாலில் அம்மா செய்துதரும் சீம்பாலின் ருசியும் தனிதான்.

சில வருடங்களாக அப்பா, வீட்டில் இரண்டு பசுமாடுகள் வைத்துப் பராமரிப்பது கஷ்டம் என்று ஒரு பசுமாடு தான் வளர்த்து வருகிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. முன்பெல்லாம் பால் விற்பது என்பது எளிது, எவருக்கெல்லாம் வேண்டுமோ, அவர்களே எங்கள் வீடுகளுக்கு வந்து வாங்கிக் கொள்வார்கள். இப்போது அப்படியில்லை, பாக்கெட்களில் கிடைக்கும் பால்களை வீடுகளில் கொண்டு போடுவதால் அதைதான் விரும்புறார்கள். வீட்டில் வளர்க்கும் பசுமாடுகளின் பால்களையும் அப்படியே வீட்டிற்குக் கொண்டு வந்து கொடுக்கச் சொல்கிறார்கள். கறந்த நுரையுடன் கிடைக்கும் பசும்பாலுக்கும், பதப்படுத்தப்பட்டுப் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுக் கிடைக்கும் கவர் பாலுக்கும் உள்ள வித்தியாசம் இந்தக் காலத்து அர்ஜூன் அம்மாகளுக்கு எங்குத் தெரியப்போகிறது. மேலும் மாட்டுத் தீவனங்களின் விலையும், புண்ணாக்குகளின் விலையும் மிகப் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ள‌து.

இப்போது வயல்களில் மெஷின்களின் மூலம் அறுவடைச் செய்வதால் வைக்கோல்கள் எல்லாம் குறும்பாகத் தான் கிடைக்கிறது. அவைகளின் விலையும் பசுமாடுகளுக்கு முன்னால் போடுவது போல் இல்லாமல் பின்னால் போடுவது போல் தான் இருக்கிறது. முன்பெல்லாம் பசுமாடுகள் போடும் சாணங்களை விற்றுக் கிடைக்கும் பணத்திலேயே வைக்கோல் வாங்கிவிட முடியும். இன்று எவரும் இயற்கை உரங்களை வயல்களுக்குப் போடுவது இல்லை. எல்லோரும் செயற்கை உரங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். அப்படியே வயல் வைத்திருப்பவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வது வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டேங்கிறது. அப்புறம் எங்க, இந்தச் சாண உரங்களைக் கொண்டுபோய் வயல்களில் கொட்டுவது? என்பது தான். எனது வீட்டிலும் கடந்த ஒரு மாதமாக எருக்குண்டில் இருக்கும் சாணத்தை விற்க முடியவில்லை என்று அப்பாவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

காலை ஐந்து மணிக்கு எல்லாம் அப்பா எழுந்து பால் எடுத்துவிடுவார்கள். பின்பு அந்தப் பசுமாட்டைக் கழுவுதற்குக் குளத்திற்கு அழைத்துச் செல்வார்கள். வரும்போது அம்மா காபிப் போட்டு ரெடியாக வைத்து இருப்பார்கள். அதைக்குடித்து விட்டு, பசுமாட்டுக்குத் தேவையான புண்ணாக்கு மற்றும் தீவனங்கள் கலந்து தண்ணீர் கொடுத்து, மாட்டுத்தொழுவத்திலுள்ள சாணங்களைச் சுத்தம் செய்து, அவைகளுக்குத் தேவையான புல் மற்றும் வைக்கோல் வைத்துவிட்டு வீட்டிற்கு டிபன் சாப்பிட வரும் போது மணியானது பத்தைத் தாண்டியிருக்கும். அவசர அவசரமாக டிபனைச் சப்பிட்டுவிட்டு உடனடியாகச் சைக்கிளை எடுத்துக்கொண்டு புல்ல‌றுப்பதற்குக் கிளம்பி விடுவார்கள். வைக்கோல் மட்டுமே போட்டு வளர்க்க வேண்டுமானால் கணிசமான தொகையை வைக்கோலுக்குச் செலவு செய்ய வேண்டிவரும். மேலும் பசும்புல் உணவாகப் பசுமாடுகளுக்குக் கொடுத்தால் நமக்குக் கொஞ்சம் அதிகமாகப் பால் கொடுக்கும். அதனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அப்பா புல்ல‌றுக்கக் கிளம்பிவிடுவார்கள்.

காலையில் புல்லறுக்கச் சென்ற அப்பா மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் வருவார்கள். அப்பா வீட்டிற்கு வருகிறார் என்பதைப் பசுமாடுகளே குரலெழுப்பிக் காட்டிக்கொடுத்துவிடும். இத்தகைய‌ மோப்ப சக்தி மாடுகளுக்கும் உண்டு. அவை குரலெழுப்பிச் சமிக்ஞைச் செய்வது மதிய உணவிற்கு தான். அவைகளுக்குத் தேவையான புல் மற்றும் வைக்கோல் வைத்துவிட்டுதான் மதியச் சாப்பாட்டில் அப்பா கை வைக்கமுடியும். சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிநேரம் தூங்குவார்கள். திரும்பவும் மாலையில் பால் எடுப்பது மற்றும் மாட்டுத்தொழுவத்தைச் சுத்தம் செய்வது என்று காலையில் செய்த‌ எல்லா வேலையும் திரும்பவும் இருக்கும்.

சில வருடங்களாக எங்கள் வீட்டில் பசுமாடுகள் கன்றுகள் ஈனும் வரை வைத்துருப்பது கிடையாது. வத்தும் பால்(கன்று ஈன்று சில மாதங்கள் ஆகியது) பசுமாட்டைத் தான் சந்தையில் இருந்து அப்பா வாங்கிவருவார்கள். அதைச் சில மாதங்கள் வளர்ப்பார்கள். அந்தப் பசுமாட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கும், வெளியில் சிலருக்கும் கொடுக்குமள‌விற்கும் பால் கிடைக்கும். சந்தையில் இருந்து வாங்குவதால் அது சினையாக இருக்கவும் வாய்ப்பு உண்டு, வாங்கிய சில மாதங்களிலேயே டாக்டரை அழைத்து வந்து பரிசோதனை செய்வார்கள், சினையாக இருந்தால் எத்தனை மாதம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்வார்கள். சினையில்லை என்றால் சினைக்கு அழைத்துச் செல்வார்கள். சினையிட்டு ஒன்பது மாதம் வரை வளர்ப்பார்கள்.

பசுமாடுகள் சினையிடப்பட்ட ஐந்து அல்லது ஆறு மாதங்களிலிருந்து பால் எடுக்க முடியாது. எனவே அப்பா இந்த இடைப்பட்ட காலத்தில் பாலுக்காக இன்னொரு வத்தும் பால் பசுமாட்டை வாங்கி வைத்துக் கொள்வார்கள். சினையாக இருக்கும் மற்றொரு பசுமாட்டைச் சரியாக ஒன்பதாவது மாதத்தில் நல்ல விலைக்கு விற்றுவிடுவார்கள். ஒன்பதாவது மாதத்தில் பசுமாட்டை நல்லவிலைக்கு விற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. என்ன கன்று ஈனும் என்பதும், எவ்வளவு பால் கொடுக்கும் என்பதும் நாம் உறுதி செய்து கொடுக்க வேண்டியது இல்லை. அதனால் பெண் கன்றாக இருக்கும், அதிகமாக‌ பால் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பை சொல்லி அதிக விலை விற்க முடியும். கன்று ஈன்ற பின்பென்றால் இவையிரண்டையும் பொறுத்து விலையின் ம‌திப்பு குறையும்.

கடந்த சில வருடங்களாக எங்கள் வீட்டில் பசுமாட்டைக் கன்று ஈனும் வரை வைத்திருப்பது கிடையாது என்று சொல்லியிருக்கும் நான், முதல் பத்தியில் கடந்த வாரம் எங்கள் வீட்டில் பசுமாடு கன்று ஈன்றிருக்கிறது என்று சொல்லிருக்கும் முரண்பாட்டிற்குக் காரணம் அம்மா தான்.



எப்போதும் சரியாகப் பசுமாட்டின் சினை மாதங்களைக் குறித்து வைத்துக் கொள்ளும் அம்மா இந்தமுறை கோட்டை விட்டுவிட்டார்கள். ஒரு மாதம் குறைத்துக் கணக்கு வைத்து விட்டார்கள். அதனால் நாங்கள் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பசுமாடு கன்று ஈன்றுவிட்டது, அதுவும் பெண் கன்றுக்குட்டி. சில வருடமாக எங்கள் வீட்டில் உள்ள பசுமாட்டைக் கன்று ஈன்று விடுவதற்கு முன்பாகவே விற்றுவிடுவதால் கன்று வளர்ப்பு என்பது சில வருடங்கள் இல்லாமல் இருந்தது. அதனால் இந்தமுறை இந்தப் பசுமாட்டையும், கன்றையும் விற்க வேண்டாம், வளர்க்கலாம் என்று எல்லோரும் முடிவெடுத்துவிட்டோம்.

இன்றைய சூழ்நிலையில் பசுமாடு வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன‌?.

.

14 comments:

சேக்காளி said...

//பசுவின் பாலைக் கறப்ப‌தற்கும் தெரியும்.(இப்போதும் என்னால் முடியுமா)//
யோவ் ஒம்ம கண்ணால ஒம்ம கால் விரலை பார்த்தே பல வருசம் ஆகி போச்சு.இந்த லெட்சணத்துல "முடியுமா" னு ஒரு கேள்வி.

நாடோடி said...

யோவ் சேக்காளி,

இதுக்காகவே பத்துகிலோ எடையை குறைச்சு படம் எடுத்து பதிவு போடுறேன் ஓய்.... நீரும் படிக்க/பாக்க தான் போறீரு.. :)

சேக்காளி said...

//எடையை குறைச்சு படம் எடுத்து பதிவு போடுறேன் ஓய்...//
அப்டியே அந்த சாப்ட்வேர் பேரையும் போட்டுருங்க.உபயோகமா இருக்கும்.

நாடோடி said...

சேக்காளி,

தொழில் ரகசியத்தை சொல்லிட்டா அப்புறம் எப்படிதாம் வண்டியை ஓட்டுறது?..

ஹுஸைனம்மா said...

அர்ஜூன் அம்மாவுக்கு மட்டுமல்ல, எல்லா அம்மாக்களுக்கும் கறந்த நுரை பொங்க பால் வாங்கிக் கொடுக்க ஆசைதான். ஆனால், மாடு வளர்க்கத் தேவையான இடம் உள்ள வீடு இருப்பதே அரிது இக்காலத்தில்!!

// கடந்த ஒரு மாதமாக எருக்குண்டில் இருக்கும் சாணத்தை விற்க முடியவில்லை //

அப்படியா? ’வயலில் போட சாண உரம் தேடியலைகிறேன், கிடைக்க மாட்டேங்குது’ என்று ஒரு உறவினர் சில மாதங்களுக்குமுன் புலம்பிக் கொண்டிருந்தார். ம்ம்ம்...

”தளிர் சுரேஷ்” said...

ரொம்பவே கஷ்டம்தான் மாடு வளர்ப்பது! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

நாடோடி said...

@ஹுஸைனம்மா said...
//அர்ஜூன் அம்மாவுக்கு மட்டுமல்ல, எல்லா அம்மாக்களுக்கும் கறந்த நுரை பொங்க பால் வாங்கிக் கொடுக்க ஆசைதான். ஆனால், மாடு வளர்க்கத் தேவையான இடம் உள்ள வீடு இருப்பதே அரிது இக்காலத்தில்!!

// கடந்த ஒரு மாதமாக எருக்குண்டில் இருக்கும் சாணத்தை விற்க முடியவில்லை //

அப்படியா? ’வயலில் போட சாண உரம் தேடியலைகிறேன், கிடைக்க மாட்டேங்குது’ என்று ஒரு உறவினர் சில மாதங்களுக்குமுன் புலம்பிக் கொண்டிருந்தார். ம்ம்ம்...//

வாங்க சகோ,

ஊர்ல தானே இருக்கீங்க, டீலை சரியா முடித்துவிடலாம்.. உங்களுக்கு எத்தனை %னு மட்டும் சொல்லுங்க...:)

ஊரில் உண்மையில் சாணங்களை விற்பது ரெம்ப சிரமம் சகோ.. நமக்கு சொந்தமாக நிலம் இருந்தால் பிரச்சனையில்லை.. ):

பாலும் அப்படிதான், எவரும் வீடுகளுக்கு வந்து வாங்க மாட்டேன் என்கிறார்கள், வீட்டிற்கு கொண்டு தர சொல்லுகிறார்கள்.. அடுத்தவர் வீட்டிற்கு கொண்டு கொடுக்கும் பழக்கம் எங்கள் வீட்டில் இல்லாததால் யாரையும் அணுகுவது இல்லை..

நாடோடி said...

@‘தளிர்’ சுரேஷ் said...
//ரொம்பவே கஷ்டம்தான் மாடு வளர்ப்பது! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

உண்மை தான் சுரேஷ், உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

உறவினர் இருப்பது நெல்லையில். நீங்கள் நாகர்கோவில். அப்புறம் ‘சாணம் எட்டணா, சுமைக்கூலி 16 அணா’ கதையாகிடும்!! :-)

எங்கம்மா இன்னிக்கும் ‘கறந்த பால்’தான் (என்று நம்பி) தெருவில் கேனில் பால் கொண்டு வரும் பால்காரரிடம்தான் வழக்கமாக வாங்குறாங்க. இதுபோல வீடுகளில் கிடைக்கும் பால் என்றால், என்ன விலைன்னாலும் கொடுக்க ரெடியாருக்காங்க. ஆனா பாருங்க, மறுபடியும் நாங்க நெல்லை; நீங்க நாகர்கோவில்!! ஹா.. ஹா...

இராஜராஜேஸ்வரி said...

க்கறந்ட்தபால் போல் அருமையான பகிர்வுகள்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு முடிவு...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

unmaiyanavan said...

நல்ல பதிவு. அதுவும் என்னை மாதிரி ஆட்களுக்கு பால் கறப்பது எப்படின்னு அழகா சொல்லியிருக்கீங்க.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நாடோடி said...

@ஹுஸைனம்மா said...
//உறவினர் இருப்பது நெல்லையில். நீங்கள் நாகர்கோவில். அப்புறம் ‘சாணம் எட்டணா, சுமைக்கூலி 16 அணா’ கதையாகிடும்!! :-)

எங்கம்மா இன்னிக்கும் ‘கறந்த பால்’தான் (என்று நம்பி) தெருவில் கேனில் பால் கொண்டு வரும் பால்காரரிடம்தான் வழக்கமாக வாங்குறாங்க. இதுபோல வீடுகளில் கிடைக்கும் பால் என்றால், என்ன விலைன்னாலும் கொடுக்க ரெடியாருக்காங்க. ஆனா பாருங்க, மறுபடியும் நாங்க நெல்லை; நீங்க நாகர்கோவில்!! ஹா.. ஹா...//

நானும் சும்மா தான் கேட்கேன் சகோ..:)

அப்புறம் வெக்கேசன் முடிஞ்சு வந்தாச்சு போல.. பதிவு ஒன்றையும் காணோம்.. கருத்துக்கு ரெம்ப நன்றி சகோ.. :)

நாடோடி said...

@இராஜராஜேஸ்வரி said...
//க்கறந்ட்தபால் போல் அருமையான பகிர்வுகள்..

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

வருகைக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி சகோ!

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

@திண்டுக்கல் தனபாலன் said...
//நல்லதொரு முடிவு...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...//

வாங்க தனபாலன்,

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

@Chokkan Subramanian said...
//நல்ல பதிவு. அதுவும் என்னை மாதிரி ஆட்களுக்கு பால் கறப்பது எப்படின்னு அழகா சொல்லியிருக்கீங்க.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

வாங்க சுப்பிரமணியன்,

அப்படியா! இதை படிச்சுட்டு, பசுமாடு பக்கதில போயி காம்புல கையை வச்சுறாதீங்க.. கழுதையை விட மோசமா உதைக்கும்.. :)

உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails